மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிசினஸ் தந்திரங்கள்

இ-பே உருவாக்கிய பாதை! ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.

ஸ்ட்ராடஜி 42

 கம்பெனிகள் ஜெயித்த கதை

 விற்பனை மற்றும் சந்தைப் படுத்துதலின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இ-காமர்ஸ் தவிர்க்க முடியாத இடத்தை அடைந்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்வதில் அமெரிக்காவின் இ-பே நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

இணையத்தைப் பயன்படுத்திச் சந்தைப்படுத்துதலில் அடுத்தகட்டத்தை எட்ட முடியும் என்பதை முதன்முதலில் நடைமுறையில் செய்துகாட்டியது இந்த நிறுவனம்தான்.

1995-ம் ஆண்டுவாக்கில் இ-பே தொடங்கப்பட்டது. அப்போது இணையப் பயன்பாடு பரவலாக இல்லை என்பதும், இணையம் வழி சந்தைப்படுத்துதல் என்பது கவனம் பெறாமல் இருந்தது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இ-பே கண்ட வெற்றிதான், அடுத்தடுத்து பிற ஆன்லைன் நிறுவனங்கள் இந்தச் சந்தைக்கு வர தூண்டுகோலாக இருந்தது.

இ-பே நிறுவனத்தைத் தொடங்கியவர் பியர் மொராட் ஒமிடியர் (றிவீமீக்ஷீக்ஷீமீ விஷீக்ஷீணீபீ ளினீவீபீஹ்ணீக்ஷீ). இவர் ஓர் ஈரானியர். குடும்பச் சுழல் காரணமாக பிரான்ஸிலும் பின்னர் அமெரிக்காவிலும் வசித்துவந்தார்.  

கணினி அறிவியலில் பட்டப்படிப்பு படித்ததுடன் சில நிறுவனங்களில் பணியாற்றிவந்த இவருக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் வரவே, இந்த இ-பே நிறுவனத்தைத் தொடங்கினார்.

பிசினஸ் தந்திரங்கள்

இ-பே நிறுவனத்தைப் பொறுத்தவரை, சொந்த பொருட்களையோ அல்லது வெளியிலிருந்து பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு விற்கும் நிறுவனமோ கிடையாது. வாங்குகிறவருக்கும் விற்பவருக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தும் ஒரு சந்தைப்படுத்துதல் இடம் மட்டுமே... அதாவது, இது ஒரு பிளாட்பாரம் மட்டுமே!

இன்றைக்கு உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், இ-பே-யின் முதல் விற்பனை என்ன என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆம், அந்த நிறுவனத்தின் முதல் விற்பனை உடைந்த ஒரு லேசர் சுட்டி.

புதுப்பொருட்கள் மட்டுமல்ல, பழைய பொருட்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இவை யாவற்றையும் இணைய உலகில் விற்பனை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது இந்த விற்பனைதானாம்.

பிசினஸ் தந்திரங்கள்

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சந்தைப்படுத்துவது என்பது அந்தக் காலகட்டத்தில் முக்கியமான உத்தி என்று சொல்லலாம். இதை முழுக்கமுழுக்க ஒரு தொழில் வாய்ப்பாகவே பார்த்தார் ஒமிடியர்.

ஆனால், வித்தியாசமான ஓர் உத்தியை புதிதாகப் பயன்படுத்தினார். ஒரு பொருளை சந்தைப்படுத்தும்போது, அதுதொடர்பான விவரங்கள், பயன்பாடுகள் மற்றும் விலையைக் குறிப்பிடுவது மட்டும்தான் ஆன்லைன் வர்த்தகத்தில் இதர நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் நடைமுறையாக இருந்தது.

ஆனால், ஆரம்பம் முதலே இ-பே இந்த நடைமுறையை மீறியது. பொருளின் விவரங்கள் மற்றும் விலையைக் குறிப்பிடும்போதே, விலையை இறுதி செய்யும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்கள் கையில் வழங்கியது.

அதாவது, பேரம் பேசும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்தது. விற்பவர் குறிப்பிடும் விலையிலிருந்து விலையைக் குறைத்து வாங்குபவர் கேட்கலாம்.

இந்தப் பேரம் பேசும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் ஷோரூம் விற்பனைக்கும், ஆன்லைன் விற்பனைக்குமான இடைவெளியை குறைக்க முடிந்தது. வாடிக்கையாளர்கள் ஷோரூம் விற்பனையில் பேரம்பேசி வாங்கும் உணர்வை இ-பேயில் வாங்கும்போது அனுபவித்தனர்.

பிசினஸ் தந்திரங்கள்

இ-பே, அமெரிக்காவைத் தலைமை யிடமாகக்கொண்டு செயல்பட்டாலும் உலகம் முழுவதும் தனக்கான சந்தையை உருவாக்கிவைத்துள்ளது. இதனால் உலகம் முழுக்க உள்ள நுகர்வோர்களை போய்ச் சேர்ந்திருக்கிறது இ-பே.

ஒரு பொருள் தேவைப்படுகிறது. அதை இ-பே வழி வாங்கவேண்டும் என்றால், உங்களுக்கு அருகாமையில் அந்தப் பொருளை விற்பவரை தேடி அவரிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். எங்கிருந்தோ யாரோ அனுப்புவார்கள் என்று காத்திருக்கவேண்டிய தேவை இல்லை. விற்பவர் - வாங்குபவரை நேரடியாகச் சந்தித்துகூடப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.

இ-பே தனக்கென்று உருவாக்கிய இன்னொரு விஷயம், நம்பகத்தன்மை. ஆன்லைன் வர்த்தகத்தில் வெற்றி பெற அடிப்படை தகுதி பொருட்களின் நம்பகத்தன்மைதான். இந்த விஷயத்தில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நிறுவனமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

ஒரு பொருளை சந்தைப்படுத்துகிறது என்றால், உள்ளதை உள்ளபடிதான் காட்சிபடுத்துவார்கள்.

பிசினஸ் தந்திரங்கள்

உதாரணத்துக்கு, கால் உடைந்த ஒரு கட்டிலை விற்கவேண்டும் என்றால், அதன் விவரங்களைக் குறிப்பிட்டுதான் காட்சிபடுத்துவார்கள். இருப்பதை மறைத்தோ, குறிப்பிடாமலோ காட்சிபடுத்த மாட்டார்கள்.

தவிர, ஒரே மாடலில் பல பொருட்கள் இருக்கிறது என்றால், எல்லாவற்றையும் குறிப்பிடுவார்கள். இப்படியான வெளிப்படைத்தன்மை வாடிக்கை யாளர்களுக்குத் தேர்ந்தெடுப்புச் சுதந்திரத்தை வழங்குகிறது.

இ-பே நிறுவனத்துக்கு ஆன்லைன் விற்பனைதான் அடிப்படை என்றாலும், விற்பவர் வாங்குபவரை

பிசினஸ் தந்திரங்கள்

இணைக்கும் பிளாட்பாரமாகவும் இ-பே இயங்குகிறது. கூடுதலாகப் பேரம் பேசி வாங்குவது, ஏலம் கேட்பு போன்ற முறைகளும் பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நெருக்கமாகவும் இருக்கிறது.

இ-பே போட்டுக்கொடுத்த பாதையில்தான் இதர ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வந்தன என்று குறிப்பிட முடியும். இன்றைக்கு சீனாவில் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனமாக இருக்கும் அலிபாபா இந்த நிறுவனத்தின் இன்னொரு அவதாரம்தான்.

ஆனால், மக்கள்தொகை அதிகம் உள்ள சீனாவில் அலிபாபா வேறு சில உத்திகளைப் பயன்படுத்தியதன்மூலம், சீன மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெற்றிகரமான ஒரு நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது அலிபாபா.

இப்போதும் ஆயிரம் ஆன்லைன் வர்த்தக இணையதளங்கள் இருந்தாலும், ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால், அமெரிக்காவில் அனைவரும் அனிச்சையாகத் தேடும் இணையதளம் இ-பேதான்!

(வியூகம் வகுப்போம்)