மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி !

ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.

 ஸ்ட்ராடஜி 43

இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கனவாக இருக்கும் சொந்த வீட்டை நிஜமாக்கியதில்  ஹெச்டிஎஃப்சி நிறுவனத்துக்குப் பெரும்பங்குண்டு. வீட்டுக் கடன் விஷயத்தில் இந்த நிறுவனம் செய்ததெல்லாம் சாதனை என்றுதான் குறிப்பிடவேண்டும்.

ஒரு வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது சராசரி வருமானப் பிரிவினருக்குச் சாதாரணக் காரியமல்ல. இப்போதுள்ள நடைமுறைகள் யாவும் முப்பது வருடங்களுக்கு முன்பு நினைத்துக்கூடப்  பார்க்க முடியாது. ஒருசில பொதுத்துறை வங்கிகள் மட்டுமே வீட்டுக் கடன் தந்தன. அதிலும், அரசு வேலையில் இருந்தால் மட்டுமே பணத்தை ஒழுங்காகத் திரும்பக் கட்டுவார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே வீட்டுக் கடன் தருகிற நிலை.

தவிர, தற்போது இருப்பதுபோல் பெரும்பாலான  வங்கிகள், வீடு கட்ட கடன் தரவும் இல்லை. இந்தத் தடைகளை எல்லாம் உடைத்தது, ஹெச்டிஎஃப்சி நிறுவனம்தான்.  

இருபது ஆண்டுகளுக்குமுன், தொழில் தொடங்க கடன் தந்த அளவுக்கு, வீடு கட்ட வங்கிகள் கடன் தரவில்லை. நீண்ட கால அடிப்படையில் கடன் தந்துவிட்டு, தனிநபர்களிடம் வசூலிப்பது வங்கிகளுக்குத் தேவையில்லாத வேலை என்கிற கருத்து நிலவிய காலகட்டத்தில் ஹெச்டிஎஃப்சி-யைத் தொடங்கினார் ஹஸ்முக்பாய் பரேக். ஹெச்டிஎஃப்சி-யின் நிறுவனரான இவர் வங்கித் துறை குறித்த ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தவர்.  

வீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி !

குறிப்பாக, ஐசிஐசிஐ நிறுவனத்தில் இவர் பணியாற்றியபோது இவரது வழிகாட்டுதலில்தான் அந்த வங்கி சிறந்த வளர்ச்சியைக் கண்டது. 1977-ல் ஓய்வுபெற்றவுடன் வீட்டில் ஓய்வு எடுக்காமல், ஹெச்டிஎஃப்சி என்கிற வீட்டுக் கடன் தரும் நிறுவனத்தைத் தொடங்கினார். தனது வங்கித் தொழில் அனுபவத்தைக்கொண்டு, வீட்டுக் கடனுக்கு என்றே தனியாக இயங்கும் நிறுவனமாக இதை வளர்த்தார்.  வீட்டுக் கடன் வழங்குவதில் மிக எளிய நடைமுறைகளும், சிங்கிள் விண்டோ சிஸ்டம் என்று சொல்லப்படுகிற, ஒரே இடத்தில் அனைத்து வேலைகளும் முடித்துக்கொள்ளும் நடைமுறைகளைத் தனது நிறுவனத்துக்குள் கொண்டுவந்தார். வீட்டுக் கடன் வாங்க ஒருவர் வருகிறார் என்றால், அவரை அலையவிடாமல் நடைமுறைகளை விரைவில் முடித்துக்கொடுத்தது இந்த நிறுவனம்.

வீட்டுக் கடன் மட்டுமில்லாமல், கட்டிய வீட்டை வாங்கவும், இருக்கிற சொத்துக்கு ஈடாகக் கடன்கள் பெறவும் வழிவகைச் செய்ததும் இந்த நிறுவனம்தான். சராசரி வருமானப் பிரிவினரும் வீடு கட்ட

வீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி !

முடியும் என்கிற நம்பிக்கையை இந்த நிறுவனம்தான் விதைத்தது. வீட்டுக் கடன் என்கிற விஷயத்தில் இந்த நிறுவனம் ஏற்படுத்திய மாற்றங்களைத் தொடர்ந்துதான், பல வங்கிகளும் வீட்டுக் கடன் தரும் நிறுவனங்களும் இந்தச் செக்மென்டில் தங்களது பார்வையைச் செலுத்தின.

இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்குப் பின்னால் ஹெச்டிஎஃப்சியின் மிகப் பெரிய உழைப்பும், ரிஸ்க்கும் இருக்கவே செய்தது. ஆரம்பத்தில் வீட்டுக் கடன் வாங்குவதற்கென்றே முக்கிய நகரங்களில் கண்காட்சி நடத்தி, மக்களிடத்தில் தங்களது எளிய நடைமுறைகளைக் கொண்டுபோய்ச் சேர்த்தனர். இணையதளம் வந்த ஆரம்ப வருடங்களில் அதைத் தங்களது விரைவான சேவைக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதாவது, 89-ம் ஆண்டிலேயே ஆன்லைன் மூலமான பரிவர்த்தனைகளுக்குப் பழகினார்கள். வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கான வீட்டுக் கடன் வழங்குவதிலும்,  மாற்றிக்கொள்ளத்கக்க வட்டி விகிதங்களைஅமல்படுத்தியது போன்ற எல்லா விஷயங்களிலும் ரிஸ்க் எடுத்தது ஹெச்டிஎஃப்சிதான். 1984-ம் ஆண்டிலேயே 100 கோடி கடன் கொடுத்தது போன்ற ரிஸ்க் டேக்கிங் நடைமுறைகள்தான் இன்றளவும் ஹெச்டிஎஃப்சியை முன்னணி வீட்டுக் கடன் நிறுவனமாக வைத்துள்ளது.

ஒவ்வொரு விஷயத்திலும் வாடிக்கை யாளர்களின் தேவைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுத்தியதோடு, சொந்த வீடு என்கிற தேவையை உருவாக்கியதும் ஹெச்டிஎஃப்சிதான். இந்த செக்மென்டில் தனக்கான போட்டியாளர்களைத் தானே உருவாக்கியபின்பும் முன்னணி நிறுவனமாக இருக்கக் காரணம், வீட்டுக் கடன் வழங்குவதில் இந்திய அளவில் மட்டுமல்ல, ஆசிய அளவில் ஹெச்டிஎஃப்சி முன்மாதிரி நிறுவனமாக இருப்பதுதான். புத்திசாலித்தனமான புதிய உத்திகள் வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்பதை ஹெச்டிஎஃப்சி நிருபித்திருக்கிறது.

(வியூகம் வகுப்போம்)