சாதிக்கும் சமூக நிறுவனங்கள்!
ஸ்ட்ராடஜி 44
ஸ்ரீராம், செயல் இயக்குநர்,
கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.
தொழில்நுட்பங்களும், விஞ்ஞானமும், பொருளாதார வளர்ச்சியும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றுசேர வேண்டும் என்கிற நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்களையே சமூக நிறுவனங்கள் (சோஷியல் என்டர்பிரைசஸ்) என்கிறோம்.
உதாரணமாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று வைத்துக்கொள்வோம். இந்த வசதி உடனடியாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. நகர்ப்புறங்களில் ஓரளவு வசதி கொண்டவர்களுக்கே இது சாத்தியம். ஆனால், கிராமப்புறங்களில் இருப்பவர் களுக்கோ அல்லது வாழ்க்கை வசதி குறைவாக இருப்பவர்களுக்கோ இது சாத்தியமில்லை. குடிதண்ணீருக்கே இப்படி என்றால், மருத்துவம் மற்றும் இதர வசதிகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நவீன மருத்துவ வசதிகள் பெரிய பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், இந்த வசதிகளை அனைத்துத்தரப்பு மக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கும் முனைப்பில் செயல்படுகிற நிறுவனங் களைத்தான் சமூக நிறுவனங்கள் என்கிறோம்.

இந்த நிறுவனங்களுக்கு சேவை ஒரு முக்கியமான நோக்கமாக இருந்தாலும், முழுக்க முழுக்க சேவை மட்டுமே நோக்கம் என்று சொல்லிவிட முடியாது. இந்த நிறுவனங்கள் குறைவான லாப வரம்பைவைத்து செயல்படுகிறவை என்று வேண்டுமானாலும் சொல்ல லாம். வளரும் நாடுகளில் இந்தவகை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதும், சமூக ஏற்றத்தாழ்வுகளை இந்தவகை நிறுவனங்கள் சமச்சீராக்கு கின்றன என்பதுவும் முக்கியமான விஷயம்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கண் மருத்துவத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இணையாக செயல்பட்டுவரும் நிறுவனம் இது. நவீன மருத்துவ வசதிகளைக் கிராமப்புற மக்களுக்கு தேடிச் சென்று வழங்குகிறது இந்த நிறுவனம். ஆனால், அரவிந்த் கண் மருத்துவமனையின் நோக்கம் சேவை மட்டுமே அல்ல; குறைவான லாபத்துடன் சேவை மனப்பான்மையோடு இயங்கும் ஒரு மருத்துவமனை. அதேசமயம், கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இணையாக மருத்துவம் வழங்குகிறது.
சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி செய்யும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகளைக்கூட சமூக நிறுவனங்களின் வரையறைக்குள் கொண்டு வந்துவிட முடியும். சிறிய அளவில் இயங்கும் முறைப்படுத்தப் படாத தொழில்களுக்கு வங்கிகள் கடன் அளிக்கத் தயாராக இல்லாதபோது, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள்தான். இதற்கு ஈடாக இந்த நிறுவனங்கள் மிகக் குறைந்த லாபத்தையே திரும்பப் பெறுகின்றன. இவர்களது நோக்கம் அதிக லாபம் அல்ல என்றாலும், தாங்கள் தொடர்ந்து இயங்க குறைந்தபட்சம் நஷ்டமில்லாமல் இருக்க வேண்டும். இதுதான் இந்த நிறுவனங்களின் அடிப்படை எதிர்பார்ப்பு. ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா போன்ற நிறுவனங்களை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
சமூக நிறுவனங்கள் லாப நோக்கத்தோடு செயல்படவில்லை என்றாலும், முறையான நிர்வாக அமைப்புமுறையும் மேலாண்மைத் திறமையும் அவசியம் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து இயங்குவதற்கான பிசினஸ் உத்திகளைக் கடைப்பிடிக்கும்போதுதான் இந்த நிறுவனங்கள் இன்னும் அதிகமான மக்களுக்கோ அல்லது தேவைகள் உள்ள இடங்களுக்கோ விரிவாக்கம் செய்ய முடியும்.
சமூக நிறுவனங்களின் நோக்கம் சரியாக இருந்தாலும், தொடர்ந்து இயங்குவதற்கான ஆர்வத்தை இந்த நிறுவனங்கள் காலப்போக்கில் விட்டுவிடுகின்றன; அல்லது மாறிவரும் சமூகத் தேவைகளைக் கவனிக்காமல் விட்டுவிடுகின்றன. தங்களது நோக்கத்தைத் தாண்டி சிந்திப்பதில்லை. அதிகரித்துவரும் போட்டிகளைக் கண்டுகொள்வது கிடையாது. நிதி சார்ந்த விஷயங்களில் தெளிவான திட்டம் வைத்துக்கொள்வதில்லை. தங்களது முதலீட்டுக்கு அதிகபட்ச ஆதாயம் வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிடக் குறைந்தபட்ச லாபம் கிடைத்தால்தான் இயங்க முடியும் என்பதில் தெளிவு இருப்பதில்லை.

ஒரு சமூகத் தொழில் நிறுவனம் 10 ரூபாய் செலவு செய்கிறது எனில், கூடுதலாக 2 ரூபாய் ஆதாயம் வைத்து அந்தப் பொருளை விற்கலாம்; அல்லது 10 ரூபாய் திரும்பக் கிடைத்தால்கூட அந்த நிறுவனத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால், 8 ரூபாய்தான் திரும்பக் கிடைக்கிறது எனில், அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கான முதலீடு இல்லாமல் சுருங்க ஆரம்பித்துவிடும். அதேநிலை தொடரும்பட்சத்தில், தொழிலை மேற்கொண்டு தொடரமுடியாத நிலையில் ஒதுங்கிவிடுகிறார்கள். இதுதான் சமூக நிறுவனங்களின் நிலையாக இருக்கிறது.

இந்தவகைப் போக்குகளை எல்லாம் தாண்டி நிற்க வேண்டும் எனில், தொழில்ரீதியாக புதிய புதிய உத்திகளை ஒரு நிறுவனம் தொடர்ந்து கையாள வேண்டும். உலகம் முழுவதும் சமூக நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் இது மிகப் பெரிய துறையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. நம் நாட்டிலும் மக்களுக்கு சேவை செய்து, அதன் மூலம் நியாயமான லாபத்தையும் சம்பாதிக்கும் சமூக நிறுவனங்கள் நிறைய வரவேண்டும் என்பதே என் ஆசை.
(வியூகம் வகுப்போம்)