ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ்
ஸ்ட்ராடஜி 45
கம்பெனிகள் ஜெயித்த கதை லாபநோக்கமற்ற நிறுவனங்கள்!
இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.
லாபநோக்கமற்ற நிறுவனம் என்கிற கான்செப்ட்டின் தோற்றம் தொன்றுதொட்டு இருந்து வருவதுதான். இந்த லாபநோக்கமற்ற நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வடிவம் கிடைத்தது கடந்த நூற்றாண்டில்தான்.
பொதுவாக, லாபநோக்கமற்ற நிறுவனங்களை சேவை நிறுவனங்கள் என்றும் குறிப்பிடலாம். உலக அளவில் பல ஆயிரம் சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்தந்தப் பகுதிகளின் நிலைமைக்கேற்ப சேவை அளித்தும் வருகின்றன. ஆனால், பகுதி, தேவைகள், நாடுகள் எல்லைகள் என எல்லாவற்றையும் தாண்டி, சேவை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல் களையும் களைந்து உலக அளவிலான சேவை நிறுவனமாக இயங்கிவரும் நிறுவனம்தான் வேர்ல்டு விஷன்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்பற்றும் உத்திகளை இந்த நிறுவனம் பயன்படுத்தியதால் பெரிய அளவில் வெற்றிகண்டது இந்த நிறுவனம். நம் நாட்டில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் போன்ற அமைப்புகளும் இந்த கான்செப்ட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன.
சேவை நிறுவனத்தின் தேவை என்பது ஒருபகுதி மக்களுக்கு அல்லது மாநிலம், நாடு என நின்றுவிடும் நிலையில், இந்த வரையறைகளைக் கடந்து ஒரு சேவை நிறுவனம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் நான் மேலே சொன்ன வேர்ல்டு விஷனும், ராமகிருஷ்ணா மிஷன் நிறுவனமும்.

நாம் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவாகப் பார்ப்பதைவிட லாப நோக்கமற்ற நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? அதற்கேற்ப இந்த நிறுவனங்கள் கடைப்பிடித்த உத்திகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக, லாபநோக்கமற்ற நிறுவனங்களின் நிதித் தேவைதான் அவர்களது செயல்பாடுகளை ஒரு வரம்புக்குள் வைத்திருக்க நிர்பந்திக்கிறது. ஒரு குறிப்பிட்ட செயலைத் தாண்டியோ அல்லது பகுதியில் உள்ள மக்களைத் தாண்டியோ பணியாற்ற லாபநோக்கமற்ற நிறுவனங்களால் வளர முடியாமல் போவதற்குக் காரணம் நிதிப் பிரச்னைதான்.
இரண்டாவது, லாபநோக்கமற்ற நிறுவனத்தில், நடத்துகிறவர்களின் மனநிலை சார்ந்து மட்டுமே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எந்தப் பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயல்படுவதில்லை. தங்களது திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பதைத்தான் முதன்மையான நோக்கமாக வைத்துள்ளனர்.

பொதுவாக, ஒரு நிறுவனம் தொடர்ந்து இயங்க வேண்டும் எனில், அந்த நிறுவனம் உபரி வருமானத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், சேவை நிறுவனங்கள் இந்தக் கருத்துக்கு எதிர்கருத்து வைத்துக்கொண்டு செயல்படுகின்றன. லாபம் என்கிற கருத்தாக்கம் தவறானது என்கிற மனநிலையோடு இயங்குவதால் கையில் இருக்கிற பொருளாதாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு இயங்குகின்றன. இதன்காரணமாக அந்த நிறுவனம் தரும் சேவையை வேறு பகுதி மக்களுக்கு நீட்டிக்க முடியாமலோ அல்லது விரிவாக்கம் செய்வதோ இயலாமல் போகிறது.
லாபநோக்கமற்ற சேவை நிறுவனங்கள் தங்களை ஒரு நிறுவனமாகவே கருதிக்கொள்வதில்லை. அதாவது, முறையான நிர்வாகமுறை, மேலாண்மைத் திறன், கணக்குகளைப் பராமரிப்பது, சந்தையில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்திகளைப் பயன்படுத்துவது போன்ற நிறுவன ஒழுங்குமுறைகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதில்லை.
சேவை நிறுவனங்களில் துறை சார்ந்த திறமைகொண்ட பணியாளர்களோ, நிர்வாக அமைப்பு முறையாக இயங்க மேலாண்மை பணியாளர்களோ அல்லது கணக்குகளைப் பராமரிக்க அதுதொடர்பான தகுதி கொண்டவர்களோ இருப்பதில்லை. சேவை நோக்கம் இருந்தால் போதும், எந்தப் பணியையும் யாரைவைத்து வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற போக்குதான் இருக்கிறது.
ஆனால், இதிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டு நிற்கிறது வேர்ல்டு விஷன். சர்வதேச அளவில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் இந்த நிறுவனம் தனது நிதித் தேவைகளை உலக அளவில் பல வழிகளிலும் திரட்டுகிறது.
பெரிய நிறுவனங் களிடமிருந்து தங்களது தேவைகளை, திட்டங்களைக் குறிப்பிட்டு உதவி பெற்றுக் கொள்ளும் அதேவேளையில், பொதுமக்களிடமிருந்தும் நேரடியாகப் பங்களிப்பைக் கோரிப் பெறுகின்றது. இதனால் பொருளாதாரரீதியாக வலுவான நிலையில் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட திட்டத்தோடு தங்களது பணிகளை முடக்கிக்கொள்வதில்லை.
2004-ல் சுனாமியால் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டபோது, வேர்ல்டு விஷன் நிறுவனம் அந்தப் பகுதி மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு மீட்பு பணியில் இறங்கியது.

ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு தேவைகள் என்கிறபோது ஒரே முடிவுகளைக் கையாளாமல் அந்தந்தப் பகுதிக்கேற்ப சேவைகளை நீட்டித்தது. இதற்கேற்ப சேவை மனபான்மை கொண்டவர்களையும், சேவை நோக்கம் அற்ற திறமையான பணியாளர்களையும் பயன்படுத்திக் கொண்டது.
லாபநோக்கமற்ற நிறுவனங்கள் தங்களால் முடிந்த குறிப்பிட்ட பணிகள் என்று வரையறை வைத்துக்கொள்ளக்கூடாது என்பதை வேர்ல்டு விஷன் தனது செயல்பாடுகளில் நிரூபித்துள்ளது. சுனாமியில் ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு செயல்திட்டம் முன்வைக்கும் அதேவேளையில், மலைவாழ் மக்களுக்கும், ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களுக்கும் உதவுகிற மாதிரி வெவ்வேறு செயல்பாடுகளை தருகிறது. இதுதான் இந்த நிறுவனத்தைத் தொடர்ச்சியாக இயங்கவைக்கிறது. இதுபோன்று ஒவ்வொரு பகுதி மற்றும் தேவைகளுக்கேற்ப தனது உத்திகளை மாற்றிக்கொண்டதும், முறையான நிர்வாகத்தின் கீழ் இயங்குவதன் மூலமும் இந்த நிறுவனம் உலக அளவில் இயங்கும் சேவை நிறுவனமாக தன்னை வளர்த்துக்கொண்டுள்ளது.
சேவை நிறுவனம் என்றால் லாபமே சம்பாதிக்கக்கூடாது என்று நினைக்கத் தேவையில்லை. அளவுக்கதிகமான, அநியாயமான லாபம் தேவையில்லை. ஆனால், நியாயமான லாபம் இருந்தால் மட்டுமே எந்தச் சேவை நிறுவனமும் தொடர்ந்து இயங்க முடியும். எப்படிப்பட்ட சேவை நிறுவனமாக இருந்தாலும், அது தொடர்ந்து இயங்கினால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும்!
(அடுத்த இதழில் முடியும்)