ஸ்பெஷல் 1
Published:Updated:

பிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்!

மாதம் 1,40,000 வருமானம்...வே.கிருஷ்ணவேணி, படங்கள் : என்.ஜி. மணிகண்டன்

திருச்சி, அயிலாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டாள் மனோகரன் பற்றிய கட்டுரை, 23.04.2010 தேதியிட்ட அவள் விகடனில் வெளியாகிஇருந்தது.

''வாழ்க்கை நமக்கு வலிமையைக் கொடுக்கறதுக்காகவே சில வலிகளைக் கொடுக்கும். என் வாழ்க்கையில நான் அனுபவிச்சுட்டிருக்கற வலிதான், வெற்றிகளை நோக்கி என்னை நடக்க

பிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்!

வெச்சுக்கிட்டே இருக்குது!'' என்று, 'உடைத்துப் போட்ட விதி... உயர வைத்த பாசம்’ என்று தலைப்பிட்ட அக்கட்டுரையில் சொல்லியிருப்பார் ஆண்டாள். தலைப்புக்கேற்ப, இன்றும் விதியும், பாசமும் அவர் வாழ்க்கையில் தடைகளையும், வெற்றிகளையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.

நம் உழைப்பைத் தவிர, சுற்றுப்புறக் காரணிகளும் ஒரு தொழிலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதாக இருப்பதால், அப்படி ஒரு சூழலில் ஆண்டாளின் தொழில் படுத்துவிட்டது. இனி எழுந்திருக்கவே முடியாது என்று அவர் சோர்ந்திருந்தால், இன்று நாம் அவரை தேடிப் போயிருக்க மாட்டோம். அதிலிருந்து மீண்ட மாற்று யோசனைதான், அவரை மீண்டும் நம்முன் வெற்றியுடன் நிறுத்தியிருக்கிறது. இதோ ஆண்டாள் பேசுகிறார்...

''அவள் விகடனில் என்னைப் பற்றிய கட்டுரை வந்தப்போ, ஏறுமுகமா போயிட்டிருந்தது என் வாழைநார் பொருட்கள் தொழில். ஆனா... தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தினால் ஏற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறைனு, பல பிரச்னைகளால தொழில் முடங்கிடுச்சு. வாழைநார் தொழிலைக் கைவிடவேண்டிய கட்டாயம். பல வருஷ உழைப்பால உருவாக்கின என் தொழிலும், வேலையாட்களும் விட்டுப்போன துக்கத்தை தாங்கவே முடியல. ஆனாலும், அடுத்து என்னனு யோசிச்சு... பேப்பர் கப், பிளேட் மற்றும் பேப்பர் லேமினேஷன் பிசினஸை கையில் எடுத்தேன்.

ஆரம்பிச்ச தருணத்துல, 'எந்த முகாந்திரமும் இல்லாம இந்தத் தொழிலை எப்படிக் கொண்டு செல்வது?’னு பலர் கேட்டாங்க. 'அவள் விகடன் எனக்குத் தந்த அடையாளமும், அங்கீகாரமும் இருக்குங்கற தைரியம்தான். அதன் மூலமா கிடைச்ச தொடர்புகளைப் புது தொழிலுக்குப் பயன் படுத்திக்குவேன்’னு சொன்னேன். அதேமாதிரி, போன முறை அவள் விகடன் பார்த்து எனக்கு வாழ்த்தும் வழிகாட்டலும் சொன்னவங்களை எல்லாம், இந்த முறையும் தொடர்புகொண்டு உதவி கேட்க, சிலர் ஆலோசனைகளும், சிலர் விற்பனைக்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தாங்க. வாழை நார் பிசினஸ் செஞ்சப்போ, மாசம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சிட்டு இருந்தேன். இன்னிக்கு பேப்பர் கப், பிளேட் மற்றும் லாமினேஷன் பிசினஸ்ல ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் வருமானம்  கிடைக்குது!'' என்ற ஆண்டாள், தன் சொந்த வாழ்க்கை பற்றியும் பகிர்ந்தார்.

பிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்!

''மஞ்சள் காமாலை பாதிப்பால 15 வருஷமா படுத்த படுக்கையா இருக்கான் மகன் ஹரி பிரசாத். இதைப் பற்றி ஏற்கெனவே வெளியான கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீங்க. அவன் குணமாகிடுவான் என்கிற நம்பிக்கையில்தான் என் வாழ்க்கையோட அச்சாணியே சுத்துது. அதுக்கு வலு சேர்க்கும்விதமா, 'அவள் விகடன்’ கட்டுரையைப் பார்த்துட்டு, என்னைத் தொடர்புகொண்டு, அவனுக்காக பிரார்த்தனை பண்ணினவங்க, அவனை ஆசீர்வாதம்

பிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்!

பண்ணினவங்க நிறைய பேர். 'உன் பையன் குணமாகிடுவான்’னு சொல்லிக்கிட்டே இருங்காங்க. இப்படி பலரையும் சொல்ல வெச்சு எனக்கு 'அவள் விகடன்' தந்த ஆதரவில் ரொம்பவே நெகிழ்ந்து போனேன்'' என்றவர்,

''என் பொண்ணு பூர்ணிமா பேர்ல நான் ஆரம்பிச்சுருக்கிற இந்த 'பூர்ணிமா பேப்பர் கப்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி’யின் வெற்றியில், என் தம்பி ராஜமகேந்திரவர்மனுக்கும் பங்கிருக்கு. அவரும், நானும் சேர்ந்து இப்போ பேப்பர் கப் மற்றும் பிளேட் செய்யறதுக்கான மெஷின்க¬ளையும் தயார் செய்து விற்பனை பண்ணிட்டு இருக்கோம். என் கணவர் மனோகரனோட ஒத்துழைப்பும், ஆலோசனைகளும், தொழிலில் என்னை தைரியமா செயல்பட வைக்குது'' என்றவர், தன் தொழில் பற்றி அ முதல் ஃ வரை பேசினார்.

அவரிடம், ''டீக்கடைகளில் பயன்படுத்தும் பேப்பர் கப் உட்புறம் பூசப்படும் மெழுகு, டீயோட சூட்டால உருகி, உடலுக்கு தீமை தரும்னு சொல்றாங்களே...?'' என்று கேள்வியை முடிக்கும் முன்,

''உண்மைதான். அந்த மெழுகு நம் உடல்நலத்தை கெடுக்கக் கூடியதுதான். ஆனா, நாங்க பாதுகாப்பான 'லோ டென்சிட்டி பாலித்தீன்’ பயன்படுத்துறோம். இது 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கக் கூடியது (டீயின் வெப்பம் 100 டிகிரி செல்சியஸ்). இதுதான் எங்களோட தனிச்சிறப்பு. தவிர, பெண்கள் செய்யும் தொழிலில் சமூக பொறுப்பும் வேணும் இல்லையா?!'' என்று அக்கறையோடு சொன்னார் ஆண்டாள்!

பிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்!