மூன்று உத்திகள்! ஸ்ரீராம், செயல் இயக்குநர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.
ஸ்ட்ராடஜி 46
கம்பெனிகள் ஜெயித்த கதை
கடந்த 45 வாரங்களாக உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் தொழில் உத்திகள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். தொழில் உத்திகள் மூலம் வெற்றிகண்ட நிறுவனங்கள், புதிய உத்திகளை உருவாக்கிய நிறுவனங்கள் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நஷ்டப் பாதைக்குத் திரும்பாமல் இருக்கவும், போட்டிகளைச் சமாளிக்கவும் ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், எந்த உத்தியாக இருந்தாலும் அதை நிறுவனங்கள் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கும் சில உத்திகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.
எந்தவொரு தொழில் உத்தியாக இருந்தாலும் அதை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் மூன்று முக்கிய உத்திகள் உள்ளன. இந்த உத்திகளைப் புரிந்துகொள்ளவில்லை எனில், நீங்கள் கடைப்பிடிக்கும் உத்தி எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் பயன்தராது. அந்த மூன்று உத்திகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1 உள்ளார்ந்த திறமை:
ஒரு நிறுவனம் ஒரு தொழிலில் பலமாக இருக்கிறது. சிறந்த பணித் திறமைகள் கொண்டிருக்கிறது என்றாலும், வெளியில் உள்ள சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்துவதைப் பொறுத்துதான் வெற்றி பெறும். இதைக் கவனிக்காமல் தொழில் உத்தியை அமல்படுத்த முடியாது. எப்படி திட்டமிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் தொழில் உத்தியின் விளைவுகள் இருக்கும். நிறுவனம் பலமாக இருந்து சந்தை சரியில்லாதபோது எந்த உத்தியைப் பயன்படுத்தினாலும் வெற்றிதராது. நிறுவனத்தின் திறமை மற்றும் சந்தை வாய்ப்பு இவை இரண்டும் கச்சிதமாக ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து இருக்கவேண்டும்.
ஃபங்ஷனல் ஃபிட்: சந்தை சாதகமாக உள்ளது, சந்தையைக் கைப்பற்றும் அளவுக்கு நிறுவனமும் பலமாக உள்ளது என்பதற்காக, ஒரு தொழில் உத்தியை கொண்டுவந்துவிட முடியாது. இதன் ஃபங்ஷனல் ஃபிட்டையும் கவனிக்க வேண்டும். அதாவது, நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் உத்திகளும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். தொழில் நிறுவனம் என்றால் உற்பத்தி, சந்தைப்படுத்துதல், மனிதவளம், ஃபைனான்ஸ் என சகல துறை உத்திகளும், நாம் செயல்டுத்த திட்டமிடும் உத்தியோடு ஒத்துப்போக வேண்டும். அவைகளைக் கணக்கில் எடுக்காமல் ஒரு தொழில் உத்தியை பயன்படுத்தும்போது நிறுவனத்துக்குள் குழப்பங்கள் ஏற்படலாம். எனவே, ஃபங்க்ஷனல் ஃபிட் என்பதையும் ஓர் உத்தியாகப் பார்க்க வேண்டும்.

சூழல் மாறுவது: நிறுவனத்தின் திறனும் சந்தையும் சாதகமாக உள்ளது. அனைத்துத் துறைகளின் தொழில் உத்திகளும் ஒத்துழைப்பாக இருக்கிறது என்கிற நிலையிலும், நாம் நடைமுறைக்குக் கொண்டுவரப்போகும் உத்தியின் நிலைத்தன்மை என்ன என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இப்போது இருப்பது போலவே சந்தை தொடர்ந்து இருக்கும் என்று சொல்லமுடியாது. தேக்கம் அடையலாம், போட்டி அதிகரிக்கலாம் அல்லது உடனடி பலனை கொடுக்காமல் இருக்கலாம். இதுபோன்ற நிலைமை களிலும் நாம் பின்பற்றும் தொழில் உத்தி தாக்குபிடிக்க வேண்டும். தொழில் உத்தியை நடைமுறைக்குக் கொண்டுவரும்முன் மேற்கண்ட இந்த மூன்று முக்கிய விஷயங்களும் ஓர் உத்தியாகப் பார்க்கப்பட வேண்டும்.
2 தனித்தன்மை!

இரண்டாவதாக, நாம் கொண்டுவர திட்டமிடும் உத்திகள், தனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். சந்தைப் போட்டி எப்படி இருந்தாலும், தொடர்ந்து சந்தையைத் தக்கவைத்துக்கொள்ள அல்லது புதிய சந்தையை உருவாக்க பொதுத்தன்மையான திட்டமாக இருக்கவேண்டும். சந்தையில் பத்து வாய்ப்புகள் இருந்தாலும், நம்மிடம் உள்ள திறமை என்ன, சந்தைக்கு என்ன தேவை, எதில் தாக்குபிடிக்க முடியும் அல்லது எதில் நமது தனித்திறமை உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பதான் தொழில் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். பத்து வாய்ப்புகளில் மூன்று தனித்திறமையோடு (core competency) செயல்படுத்த முடியும் எனில், அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
3 புத்தாக்கம் (Innovation)
மூன்றாவதாக, தொழில் உத்திகளை நடைமுறைபடுத்தும் போது கிடைக்கும் அனுபவங்களிலிருந்து புதியவற்றை உருவாக்குவதும் முக்கியம். நமது ஸ்ட்ராடஜி என்ன விளைவை தந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளாமல் தொடர்ந்து செயல் படுவது பாதகமான விளைவுகளையே கொடுக்கும். நடைமுறை செயல்பாடுகள் ஒத்துழைப்பாக இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். மிக முக்கியமான தொழில் உத்தியாக இருந்தாலும், கீழ் மட்டம் வரை தெளிவாகச் சென்று சேரவில்லை என்றால் அந்த உத்தி சரியான பலனை தராது.
இதுதவிர, ஒவ்வொரு நிறுவனமும் தனக்கென்று தனி உத்திகளை உருவாக்குவதும் நடக்கும். அதை அப்படியே வேறு நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது. செம்கோ நிறுவனம் தனது ஊழியர்களைப் பயன் படுத்திய விதமும், 3எம் நிறுவனம் பயன்படுத்திய விதமும் வேறுவேறு. ஆனால், வேறு நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துவதில் ரிஸ்க் அதிகம். தவிர, நீலக் கடல் உத்தி போன்றவை புதிய சந்தையை உருவாக்கும் விதத்தைப் பேசக்கூடியது.

உலக அளவில் பல நிறுவனங்கள் பலவிதமான தொழில் உத்திகளைப் பயன்படுத்தினாலும், நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் உங்களின் தொழில் வளர்ச்சிக்கேற்ப என்ன மாதிரியான தொழில் உத்திகளைப் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். உங்களுக்கு நிச்சயம் வெற்றிதரும் என்று நினைக்கிற உத்திகளைக் கலந்தாலோசித்து அதை நடைமுறைப்படுத்துங்கள். இதன்மூலம் உங்கள் பிசினஸ் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும். உங்கள் பிசினஸ் தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கவேண்டுமெனில், புதுப்புது தொழில் உத்திகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம்!
(முற்றும்)
தொகுப்பு: நீரை.மகேந்திரன்