வால் ஹேங்கிங் தயாரிப்பு... கொள்ளை அழகு... கைநிறைய காசு! க.அபிநயா, படங்கள்: தே.தீட்ஷித்
''பையனோட ஸ்கூல்ல, பெற்றோர்கள் கூட்டத்துக்காக என்னைக் கூப்பிடும்போதெல்லாம், 'நிறைய படிச்ச அம்மாக்கள் எல்லாம் கலந்துக்கற இந்தக் கூட்டத்துல, பத்தாவதை தாண்டாத நாம போய் ஒண்ணும் தெரியாம நிக்கக்கூடாது'ங்கற தாழ்வு மனைப்பான்மை என்னை வாட்டும். அதனால, அங்க போகவே மாட்டேன். ஆனா, ஒரு நாள் அந்தப் பள்ளிக்கூடம் மட்டுமில்ல... பெற்றோர்களும் என்னை பாராட்டித் தள்ளுற அளவுக்கு நான் முன்னேறினது... ஆச்சர்யம்தான்''
- பெருமை பொங்கப் பேசுகிறார்... 'கிராஃப்ட்' தொழிலில் கலக்கிக்கொண்டிருக் கும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சுதா...
''ஒரு தடவை, பையனோட ஸ்கூல்ல, 'சில்வர் டே’னு ஒரு விழா கொண்டாடினாங்க. பெற்றோர்கள் தங்களோட திறமையை வெளிப்படுத்தும் விதமா போட்டி வெச்சாங்க. 'வாயால பேசத்தான் சங்கடப்படுறே. இதுல உன் கைதானே பேசப்போகுது? எப்பவும் கிராஃப்ட்டில் ஏதாவது செய்வியே, அதை இப்போ செய். தைரியமா கலந்துக்கோ!’னு கணவர் ஊக்கப்படுத்தினார்.
சின்ன வயசுல இருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வமா இருந்த நான், 15,500 சமிக்கி, கற்கள் வெச்சி, மூணரை அடி உயரத்துக்கு, பெருமாள் போட்டோ ஃப்ரேம் செய்து, வெச்சேன். 67 நாட்கள் ராத்திரி, பகலா வேலை செய்து உருவாக்கினதுக்கு பலனா, முதல் பரிசு கிடைச்சுது!

என் வாழ்க்கையில முதல்முறையா பாராட்டுகளை சந்திச்ச தருணம் அது. சகபெற்றோர்கள் எல்லாரும் சந்தோஷமா வாழ்த்துச் சொன்னாங்க. தலைமை ஆசிரியர் கீதா பார்த்தசாரதி மேடம், 'உங்களுக்குள்ள அபார திறமை இருக்கு. அதைத் தொழிலா வெளிக்கொண்டு வாங்க’னு அக்கறையா அறிவுரை சொன்னாங்க.
ஏற்கெனவே தெரிஞ்சு வெச்சிருந்த கைவினைப் பொருட்கள் தயாரிப்பு தவிர, போட்டோ ஃப்ரேம், ஆரத்தி தட்டுகள், 36 வகை ஃப்ளவர் மேக்கிங், எம்போஸ் பெயின்ட்டிங், ஐஸ்க்ரீம் குச்சியில் பென் ஸ்டாண்ட், வால் ஹேங்கிங்னு ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன். கூடவே கிராஃப்ட் பிசினஸையும் ஆரம்பிச்சேன். பொருட்களை நேரடியா விற்பனை செய்யாம, கேட்லாக்கோட கடைகள்ல கொடுத்தேன். லாபத்தில் கடைக்கு 10 பர்சன்ட் கொடுத்தேன். எனக்கும் நஷ்டம் வரல. இப்போ மாதம் 10,000 ரூபாய் லாபம் கிடைக்குது. மூணு வருஷமா கிராஃப்ட் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன்.
'கிராஃப்ட் தொழில்ங்கற பேர்ல கண்டதையும் வாங்கிப் போட்டு வீண் செலவு செய்யுறே’னு ஆரம்பத்துல பேசின உறவினர்கள் பலரும் இப்போ ஆச்சர்யப்படுறாங்க. என் பையன் நிவாஸோட படிப்பு செலவை என்னால் பார்த்துக்க முடியுது. 'நீதாம்மா என் ரோல் மாடல்... வாழ்க்கையில எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உன்னை மாதிரி நின்னு ஜெயிச்சுக் காட்டுவேன்!’னு என் பையன் சொல்லும்போது சந்தோஷமா இருக்கு!'' என்று பூரித்த சுதா, நம் வாசகிகளுக்கு வால் ஹேங்கிங் செய்ய கற்றுத்தருகிறார்.

மயில் உருவம் கொண்ட வால் ஹேங்கிங் செய்யத் தேவையான பொருட்கள்:
ஃபேப்ரிக் ஃக்ளூ, கெமிக்கல் க்ளே (ஷில்ட்கர் க்ளே), நீல நிற திலகம் ஸ்டோன்ஸ் - 25, நீலம், மயில் பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற மெட்டாலிக் பெயின்ட், கோல்டன் கலர் க்ளூ (Glitter glue), மஞ்சள் நிற பிளாஸ்டிக் மகரந்தம் - 10 பீஸ், அட்டை -1 (மிகவும் தடிமனாக இருக்கக் கூடாது. ரெடிமேட் சட்டையுடன் வரும் அட்டை போல் இருக்கலாம்).
செய்முறை:
படம் 1: 7 தோகை வருமாறு பென்சிலால் மயில் உருவத்தை அட்டையில் வரைந்து கொள்ளவும். அதன்மீது டார்க் கலர் ஸ்கெட்ச் கொண்டு அவுட்லைன் கொடுத்து, படத்திலிருப்பது போல் மயில் உருவத்தை கத்தரியால் வெட்டி எடுக்கவும்.
படம் 2: அந்த மயிலின் தலை முதல், தோகை ஆரம்பிக்கும் பகுதிவரை நீல நிற மெட்டாலிக் பெயின்ட் அடிக்கவும்.
படம் 3: தோகை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து தோகை முழுக்க மயில்பச்சை நிற மெட்டாலிக் பெயின்ட் அடிக்கவும்.
படம் 4: உடல் பகுதி முடிவுக்கும், தோகை பகுதி ஆரம்பத்துக்கும் இடையே வேறுபாடு தெரியாமல் இருக்க, நீலம் மற்றும் மயில் பச்சை நிற பெயின்ட் இரண்டையும் சரியான அளவில் கலந்து, இடைப்பட்ட பகுதியில் அடிக்கவும்.
படம் 5: மயிலின் கழுத்துப் பகுதிக்கு கொஞ்சம் கீழே, சின்னச் சின்னதாக மீன் செதில் போல், கோல்டன் நிற க்ளூவால் வளைவுகள் போடவும்.
படம் 6: திலகம் ஸ்டோன்களை மேல் பகுதி கூராகவும், கீழ்பகுதி வளைவாகவும் இருக்குமாறு தோகையில் ஒட்டவும்.
படம் 7: மஞ்சள் நிற மெட்டாலிக் பெயின்ட்டால் அந்த ஸ்டோன்களைச் சுற்றி அவுட்லைன் போடவும்.
படம் 7a: அந்த மஞ்சள் நிற அவுட்லைனைச் சுற்றி, கோல்டன் நிற க்ளூவால் மெல்லிய வளையம் போடவும்.
படம் 8: கோல்டன் நிற க்ளூ கொண்டு, தோகையில் இருக்கும் ஸ்டோன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சின்னச் சின்னதாக கோடுகள் போடவும்.
படம் 9: கெமிக்கல் க்ளேயில் இரண்டு பீஸ்கள் இருக்கும். இரண்டையும் நன்றாகப் பிசைந்து, சின்னதாக வட்ட வடிவம் செய்து, அதன் முடிவில் கொஞ்சம் க்ளேவை இழுத்து மாடுகளின் கொம்புபோல் வடிவம் கொண்ட வளைவு செய்து, தோகையின் முடிவில் ஒட்டவும். இதை 'ஹூக்’ என்பர். எத்தனை தோகை இருக்கிறதோ, அத்தனை 'ஹூக்’ செய்து ஒட்டவேண்டும்.
படம் 10: மயிலின் கண்ணுக்கு வெள்ளை (அடியில்) மற்றும் சிவப்பு (விழியில்) நிற பெயின்ட் அடித்து, மூக்குக்கு சிவப்பு நிற பெயின்ட் அடிக்கவும். பிளாஸ்டிக் மகரந்தத்தை மயிலின் தலையில் ஃபேப்ரிக் க்ளூவால் ஒட்டவும்.
படம் 11: மயிலின் பின்புறம் தலைப்பகுதியில் கெமிக்கல் க்ளே மூலம் ஒரு வளைவு செய்து ஒட்டவும்.
மயில் கீ ஸ்டாண்ட் ரெடி!
இதை சுவரில் ஒட்டி, சாவிகள் மாட்டி வைக்கலாம். இதைச் செய்வதற்கு அரை மணி நேரம்தான் ஆகும். 100 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யலாம்!
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...