பெட் ஜார் டெடி பியர்... பெட்டரான பிசினஸ்!வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்
''பொ துவா எல்லோரும் செய்ற மாதிரி டெடி பியர் செய்யாம, அதில் என்ன வித்தியாசமா பண்ணலாம்னு யோசிச்சப்போ கிடைச்சதுதான், இந்த 'பெட் ஜார் டெடி பியர்'. இதை பொம்மையாவும் வெச்சுக்கலாம், கல்யாண சீருக்கு கற்கண்டு, முந்திரி, பாதாம் வெச்சு எடுத்துப் போய் டிஸ்பிளேயில் வைக்கலாம். வீட்டு வார்ட்ரோபில் ஹேர்பின், பிந்தி, சேப்ஃடி பின் எல்லாம் போட்டு வைக்கிற பாக்ஸாவும் வெச்சுக்கலாம். இன்னும் உங்க விருப்பம் போல பயன்படுத்தலாம்!''
- உற்சாகம் பொங்கி வழிகிறது... சென்னை, சைதாப்பேட்டை, மரகதசுபஸ்ரீயின் வார்த்தைகளில்!
''சின்ன வயசுல இருந்தே ஆர்ட்ல அதி ஆர்வம்ங்கிறதால... எந்த விழாவுக்கும் நானே செய்த பரிசுப்பொருளை கொடுக்கணும்னு விரும்பினேன். ஒரு கட்டத்துல இதையே தொழிலாவும் ஆக்கிக்கிட்டேன். ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட் வகுப்புகளும் எடுக்கிறேன். ஆரம்பத்துல கணவர் இன்பஹாசன், என்னோட ஆர்ட் வேலைகளில் இருக்கும் ப்ளஸ், மைனஸ் பார்த்து சொல்வார். இப்போ, அவர் தன்னோட பிசினஸ்ல பிசியா இருக்கார் அதனால, எம்.ஏ., ஃபிரெஞ்ச் படிக்கிற என் மூத்த பொண்ணு தீப்தி வீணா, இன்ஜினீயரிங் படிக்கிற சின்ன பொண்ணு ஷிவானி ரெண்டு பேரும் அந்த வேலையைப் பார்க்கிறாங்க'' எனும் மரகதசுபஸ்ரீ, அபாகஸ் டீச்சர் பணியையும் கையில் எடுத்திருக்கிறார்.

''டெடி பியரைப் பொறுத்தவரைக்கும் முக்கியமா கவனிக்க வேண்டியது, கலர் காம்பினேஷன். அதேபோல, பொம்மைக்குள்ள வைக்கிற காட்டன் நிறைய இருக்கணும். இல்லைனா... கொஞ்ச நாள்ல வெலவெலத்து போயிடும். பார்க்கறதுக்கு நல்லாவே இருக்காது'' என்ற மரகதசுபஸ்ரீ, பெட் ஜார் டெடி பியர் ஒன்றை செய்துகாட்டினார்.
தேவையான பொருட்கள்:
ஷார்ட் ஃபர் (Short fur) துணி, வெள்ளை நிற சாட்டின் (Satin) துணி, பெட் ஜார், நம்பர் 10 காட்டன் நூல், ஊசி, கத்தரிக்கோல், கறுப்பு ஸ்கெட்ச், ஃபேப்ரிக் க்ளூ, ஃபெவிபாண்ட், டெடி பியர் கட்டிங் பேட்டர்ன் (Cutting pattern- குறிப்பிட்ட கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும்), ஸ்டஃபிங் காட்டன் (Stuffing cotton), டெடிபியருக்கு வைக்கக்கூடிய கண் - 2, மூக்கு 1.
செய்முறை:
(முதலில், பேட்டர்ன்களை, செய்தித்தாளில் கட் செய்து பார்த்து, தவறுகளைத் திருத்திக்கொண்டு, அதன் பிறகு செய்ய ஆரம்பிப்பது நல்லது)
படம் 1, 1a: படத்தில் காட்டியுள்ளது போல் ஷார்ட் ஃபர் துணியின் பின்புறமாக கட்டிங் பேட்டர்னை வைத்து பிளாக் கலர் ஸ்கெட்ச் கொண்டு வரைந்துகொள்ளவும்.
டெடியின் காது - 2, மூக்கு, நடு நெற்றி - 1, பேக் ஃபேஸ் - 1, கன்னம்- 2 என தனித்தனியாக வரைந்து எல்லாவற்றையும் கட் செய்யவும்.
படம் 2: காது மற்றும் மூக்குக்கான கட்டிங் பேட்டர்ன்களை, வெள்ளை நிற சாட்டின் துணியிலும் வரைந்து கட் செய்துகொள்ளவும்.

படம் 3, 3 a: காதுகளுக்காக வெட்டி எடுத்த சாட்டின் மற்றும் ஃபர் துணி கட்டிங்குகளை இணைத்து, படத்தில் காட்டியுள்ளது போல் தைத்துக்கொள்ளவும் (வெள்ளை நிற சாட்டின் துணி உள்பக்கமாக இருக்க வேண்டும்).
முகத்தின் மற்ற பாகங்களையும் படத்தில் காட்டியுள்ளபடியே இணைத்துத் தைக்கவும். வெளிப்புறம் எதுவும் நீட்டிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்.
படம் 4: படத்தில் காட்டியுள்ளதுபோல் தைத்து முடித்திருக்க வேண்டும்.
படம் 5, 5a: நெற்றிப் பகுதியின் இரு ஓரங்களிலும் காதுகளை இணைத்துத் தைக்கவும். பிறகு, பின்பகுதிக்காக வெட்டி வைத்திருக்கும் பாகத்தை படத்தில் காட்டியுள்ளபடி, தைக்கவும் (முழுமையாக தைப்பதற்கு முன், நான்கு புறங்களிலும் நூல் கொண்டு முடிச்சிட்டுக் கொண்டால், தைக்கும்போது துணி நகராமல் இருக்கும்).
படம் 6: முழுமையாக தைத்து முடித்த பிறகு, துணியை அப்படியே திருப்பிப் பார்த்தால், இந்த வடிவம் கிடைக்கும்.

படம் 7: டெடியின் கழுத்துப் பகுதியில் இருக்கும் ஓப்பன் பார்ட் வழியே, ஸ்டஃப்பிங் காட்டனை நுழைக்கவும். முக்கியமாக சாட்டின் துணி கொடுக்கப்பட்டுள்ள டெடியின் மூக்குப் பகுதியில் நிறைய காட்டனை அடைக்க வேண் டும். பிறகு, கழுத்துப் பகுதியை நூல் கொண்டு ரன் னிங் தையல் போட்டு முடித்து இழுத்தால், ஓப்பன் பார்ட் அடைபட்டுவிடும். இதையும் முடிச்சிட்டுக் கொள்ளவும்.
படம் 8, 8a: கத்தரிக்கோல் கொண்டு கண் மற்றும் மூக்குப் பகுதிகளை துளையிடவும். கவனம்... அளவாக வெட்ட வேண்டும், பெரியதாகிவிடக் கூடாது. துளையினுள் கண்கள் மற்றும் மூக்கினை ஒரு முறை செருகி, உள்ளே போகிறதா என்று பார்க்கவும். பிறகு, க்ளூவை தடவிக் கொண்டு, துளைகளில் வைத்து நன்றாக அழுத்தினால், ஓட்டிக் கொள்ளும்.
படம் 9: டெடியின் கழுத்துப் பகுதியில் நிறைய ஃபெவிபாண்ட் தடவி, பெட் ஜாரின் மீது நன்றாக அழுத்தி ஒட்டவைக்கவும். குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நன்றாக அழுத்திய நிலையில் பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக ஒட்டும். தேவைப்பட்டால் ஷார்ட் ஃபர் துணியில் டெடியின் கைப்பகுதியை கட் செய்து ஒட்டி முடித்தால்... 75 ரூபாய்க்கும் மேல் விலைபோகக் கூடிய பெட் ஜார் டெடி, ரெடி!
நிறைவாக பேசிய மரகதசுபஸ்ரீ, ''இப்போ திருமண விசேஷங்களுக்கு சிவப்பு, மஞ்சள் நிறங்கள்ல இதுமாதிரியான டெடி ஜார்களை அதிகமாக பயன்படுத்துறாங்க. பிறந்த நாள் பார்ட்டிகளில் சாக்லேட் வைத்துக் கொடுக்கக்கூடிய சைஸில் பெரிய பெட் ஜார் டெடி பயன்படும்.
சாதாரண டெடி பியர் கள் மேல மக்களுக்கு ஆர்வம் குறைஞ்சிட்டிருக்கு. இந்த நிலையில், இப்படிஎல்லாம் புதுமையை புகுத்தும்போது, மார்க்கெட்டில் வரவேற்பும், தொழிலில் வருமானமும் கியாரன்டி!'' என்றவர், அலமாரியில் தான் உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை டெடி பியர்களையும் அள்ளி வந்து காண்பித்தார்!
கிராஃப்ட் கிளாஸ் தொடரும்...