Published:Updated:

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மீது இன்னொரு மோசடி புகார்... சிவகாசியில் கோடிகளில் சுருட்டிய ஏஜென்ட்!

ஐ.எஃப்.எஸ் சபரிவாசகன் உடன்

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் செய்த மோசடி வேலைகள் ஓராண்டு கழிந்தாலும் தொடர்ந்து ஊடகத்தில் வெளிவந்துகொண்டிருகின்றன. மேலும், பல கோடிகளில் ஐ.எஃப்.எஸ் ஏஜென்டுகள் மக்களிடம் பணத்தை வாரி சுருட்டியுள்ளதாகப் புகார்கள் வந்துகொண்டிருகின்றன.

Published:Updated:

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மீது இன்னொரு மோசடி புகார்... சிவகாசியில் கோடிகளில் சுருட்டிய ஏஜென்ட்!

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் செய்த மோசடி வேலைகள் ஓராண்டு கழிந்தாலும் தொடர்ந்து ஊடகத்தில் வெளிவந்துகொண்டிருகின்றன. மேலும், பல கோடிகளில் ஐ.எஃப்.எஸ் ஏஜென்டுகள் மக்களிடம் பணத்தை வாரி சுருட்டியுள்ளதாகப் புகார்கள் வந்துகொண்டிருகின்றன.

ஐ.எஃப்.எஸ் சபரிவாசகன் உடன்

இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சர்வீஸஸ் என்கிற IFS நிறுவனம் செய்த மோசடி வேலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது... ஓர் ஆண்டு கழிந்தாலும் அந்த நிறுவனத்தின் பெயரில் செய்யப்பட்ட மோசடிகள் தொடர்ந்து ஊடகத்தில் வெளிவந்து கொண்டிருகின்றன.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றப்பட்ட பலகோடி பணத்துக்கு விடை தெரியாமல், பணம் கட்டிய மக்கள் புலம்பித் தவித்து வருகின்றனர். யாரால் நாம் ஏமாற்றப்பட்டோம் என்ற விவரம்கூட அவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் வேதனை.

IFS நிறுவனம் ஏமற்றியதோடு, அந்த சாக்கில் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ஏஜென்ட்கள் பணத்தை வசூல் செய்து ஏமாற்றி உள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.

சபரிவாசகன்
சபரிவாசகன்

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் ஏஜென்டுகள் வேலூர், காஞ்சிபுரம் என வட தமிழகத்தைத் தாண்டி, மதுரை, சிவகாசி, விருதுநகர் எனத் தென் தமிழகத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு மக்களிடம் பணம் வசூலித்துள்ளனர்.

அதிக லாபம் கிடைக்கும் என்கிற ஆசைவார்த்தையில் மயங்கிய தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் அதில் பணத்தைக் கொட்டினர்.

ஒருகட்டத்தில் அவர்கள் போட்ட பணம் எதுவும் திரும்பக் கிடைக்காத நிலையில் இப்போது காவல் நிலையத்தில் புகார் செய்து போராடத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களில் சிலரை நாங்கள் சந்தித்துப் பேசினோம். எங்களின் பெயரை வெளியிட வேண்டாம் என்கிற வேண்டுகோளுடன் அவர்கள் எங்களிடம் பேச ஆரம்பித்தனர்.

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்
ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

``விருதுநகர் மாவட்டத்தில் என் உறவினர் மூலமாக அறிமுகமானவர்தான் சிவகாசியைச் சேர்ந்த சபரிவாசகன். தனியார் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். சபரிவாசகன் எங்களிடம், ``நான் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ஏஜென்டாக செயல்படுகிறேன். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மிகக் குறுகிய காலத்திலேயே லாபம் சம்பாதிக்கலாம். மேலும், கூடுதல் தொகையை முதலீடு செய்து ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் பங்குதாரராக இணையலாம். இதன் மூலம் கார், வீடு என அனைத்துக்கும் சொந்தக்காரர் ஆகிவிடலாம்'' என ஆசை வார்த்தை கூறினார்.

நாங்கள் கொடுக்கும் பணம் ஒரு லட்சம் ரூபாய்க்கு 6% முதல் 8% வரை மாதம்தோறும் வட்டி கிடைக்கும் என்றார் சபரிவாசகன். அவரது பேச்சை நம்பி நாங்கள் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்தோம். எங்கள் மூலமாகக் கிடைக்கும் ஒவ்வொரு புதிய முதலீட்டுக்கும் கூடுதலாக கமிஷன் தொகை தருவதாகவும் சொன்னார்.

அதற்கு ஆசைப்பட்டு எங்களில் சிலர், அவர்களின் மனைவியின் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் பல்வேறு தவணைகளாக முதலீடு செய்தோம். மேலும், நட்பு பழக்க வழக்கத்தைப் பயன்படுத்தி நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்களையும் இதில் முதலீடு செய்ய வைத்தோம். இப்படிப் பலரும் சபரிவாசகன் மூலம் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் போட்டிருக்கிறோம்'' என்றனர்.

அதில் ஒரு இளைஞர்‌, ``நான் மொத்தம் 64.50 லட்சம் ரூபாய் சபரிவாசகனிடம் முதலீடு செய்தேன். இதில் ஒரு சில முதலீடுக்கு மட்டும் என்னிடம் பாண்டு பத்திரம், செக் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளன. அவர் சொன்னபடி, சிறிது காலம் முதலீடு செய்த தொகைக்கு வட்டி கொடுத்து வந்த அவர், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாகத் திடீரென வட்டிப்பணம் கொடுப்பதை நிறுத்தினார்.

 ஐ.எஃப்.எஸ் மோசடி
ஐ.எஃப்.எஸ் மோசடி

இது குறித்து கேட்டதற்கு, ``கம்பெனியில் நிதிநிலை ஆடிட்டிங் நடக்கிறது. எனவே, அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள்'' எனக் கூறி சமாதானப்படுத்தினார். அச்சமயம் எனக்கிருந்த குடும்பச் சூழல்களாலும், வேலை அழுத்தங்களாலும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள முடியவில்லை. பின்பு, தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் வட்டிப்பணம் கொடுக்காததால் சந்தேகம் அடைந்து சபரிவாசகனை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டேன். அப்போதும் அவர் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாரே தவிர, அடுத்தடுத்து நான்‌ செய்த முதலீட்டுக்கான ஆவணங்கள் எப்போது கிடைக்கும் என்பது பற்றியோ, வட்டிப்பணம் தராமல் நிறுத்தப்பட்டது ஏன் என்பது பற்றியோ எந்த விளக்கத்தையும் தரவில்லை.

இந்த நிலையில் எனக்கு வட்டிப்பணமே வேண்டாம். முதலீடு செய்த தொகையாவது திருப்பி தந்துவிடுங்கள் என அவரிடம் மன்றாடிக் கேட்டேன். அதற்கும் அவரிடம் எந்தப் பதிலும் இல்லை. வீட்டில் நிதி நெருக்கடியான சூழலில் மருத்துவத் தேவைக்காக எனது பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும்கூட, அவர் பணம் தரவில்லை.

இதன்பிறகு, ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடிகள் குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அப்போதுதான் நான் மோசடி செய்யப்பட்டிருப்பதை உணர்ந்தேன். உடனடியாக சபரிவாசகன் மோசடி செய்தது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல துறைகளுக்கும் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் என்னை அழைத்து காவல் துறையினர் விசாரித்தனர். ஆனால், சபரிவாசகனை‌ அழைத்து விசாரிக்கவே இல்லை. சபரிவாசகனுக்கு பணபலமும், ஆள் பலமும் இருப்பதால் போலீஸார் அவருக்கு சாதகமாக நடந்துகொள்கிறார்களோ என சந்தேகமாக உள்ளது.

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மீது இன்னொரு மோசடி புகார்... சிவகாசியில் கோடிகளில் சுருட்டிய ஏஜென்ட்!

இதன்பிறகு, நேரடியாக சபரிவாசகனின் வீட்டுக்குச் சென்று பணத்தைத் தரும்படி கேட்டேன். அவருடைய சகோதரர் பூரண நடேசன் என்னைத் தரக்குறைவாகப் பேசியதுடன் எனக்கு கொலை மிரட்டலையும் விடுத்தார்.

குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுமென நினைத்துதான் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால், எனது மொத்த சேமிப்பு அனைத்தும் திரும்ப எடுக்க முடியாதபடிக்கு ஆகிவிட்டது. தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்களுக்கான பணத்தைத் திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

சபரிவாசகனிடம் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை சுமார் 120-க்கும் அதிகமானோர் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதாக அந்த இளைஞர்கள் சொன்னார்கள்.

மக்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தைக் கோயில் கொடை போன்ற பொதுகாரியங்களுக்கு அன்பளிப்பு தருவது, ஆடம்பர சொகுசு கார் வாங்குவது, கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து நிலம் வாங்குவது என்று எக்கச்சக்கமான சபரிவாசகன் செலவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

``ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் மோசடி வெட்டவெளிச்சமான பிறகு சபரிவாசகனின் அணுகுமுறை மாற ஆரம்பித்தது. முன்புபோல அவரைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ரசீதுகளைக் கேட்டால், தர மறுத்துவிட்டார். ஆபீஸில் அவர் இல்லை என்று அவரது வீட்டுக்குத் தேடிப்போனால், வீட்டுக்குள் இருந்துகொண்டே தான் வெளியில் சென்றிருப்பதாக பொய் சொல்கிறார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

மோசடி நிறுவனங்கள்
மோசடி நிறுவனங்கள்

நடந்ததை எல்லாம் பார்க்கும்போது, நாங்கள் தந்த பணம் உண்மையில் ஐ.எஃப்.எஸ்ஸிடம் அவர் தந்தாரா அல்லது நிதி நிறுவனத்தின் பெயரைச் சொல்லி சபரிவாசகனே எடுத்துக் கொண்டுவிட்டாரா என்கிற சந்தேகம்தான் வருகிறது. காவல் துறையினர் அவரை அழைத்து விசாரித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரிய வரும்.

ஆனால், காவல் துறையினரோ அவரை அழைத்து விசாரிக்கத் தயாராக இல்லை. எங்களை மட்டும் அழைத்து விசாரித்துவிட்டு, ``ஐ.எஃப்.எஸ் மோசடியா, அப்ப சென்னைக்கு போய் கம்ப்ளைன்ட் கொடுங்க'' என்று சொல்லிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறார்கள்'' என்று தங்கள் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தனர் மக்கள்.

மக்களின் இந்த புகார் குறித்து மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் நாகலட்சுமியிடம் கேட்டோம். "ஐ.எஃப்.எஸ்.நிதி நிறுவன மோசடி வழக்கு சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக தனியாக நாம் வழக்குப்பதிவு செய்ய முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட அனைவரும் ஐ.எஃப்.எஸ். வழக்கை விசாரிக்கும் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம்" என்றார்.

 ஐ.எஃப்.எஸ் மோசடி
ஐ.எஃப்.எஸ் மோசடி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாளை அணுகி, கேட்டோம். அவர் நம்மை நேரில் சந்திக்க மறுத்ததுடன், பொருளாதாரக் குற்றப்பிரிவிடம் புகார் செய்து தீர்வு பெறுமாறு மட்டும் சொன்னார்.

தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவரின் கல்லூரியின் முதல்வராக சபரிவாசகன் இருந்ததை வைத்து, எம்.எல்.ஏ.வின் பெயரைப் பயன்படுத்தி, சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பித்து வருவதாக பலரும் சொல்கிறார்கள். இது அந்த எம்.எல்.ஏ.வுக்குத் தெரியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

சபரிவாசகன் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் என்ன விளக்கம் தருகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவர் வீட்டுக்குப் போனோம். அவருடைய வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. ''சபரிவாசகன் வீட்டில் இல்லை'' என்கிற பதிலை மட்டும் சொல்லிவிட்டு, கதவை மூடிக்கொண்டனர்.

 ஐ.எஃப்.எஸ் மோசடி
ஐ.எஃப்.எஸ் மோசடி

சபரிவாசகனின் போன் நம்பரில் அவருடன் பேசி விளக்கம் கேட்பதற்கு பலமுறை முயற்சி செய்தும் அவரிடம் இருந்தும் எந்தவித விளக்கமும் கிடைக்கவில்லை. மக்களிடம் இருந்து அவர் வாங்கிய பணத்தை ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் செலுத்தினாரா? அல்லது அவரே பணத்தை எடுத்துக் கொண்டுவிட்டாரா? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் தர அவர் ஏன் முன்வரவில்லை. அவர் எந்த மோசடியையும் செய்யவில்லை எனில், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து பணம் வாங்கியவர்களிடம் விளக்கி இருக்கலாமே அல்லது நம் மூலமாகவும் விளக்கம் தரலாமே! அப்படி அவர் விளக்கம் தரும்பட்சத்தில் அந்த விளக்கத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

இனியாவது அதிக வருமானம் கிடைக்கும் என்கிற ஆசையில் மோசடித் திட்டங்களில் மக்கள் பணம் போடாமல் இருந்தால் சரிதான்!