தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வேகமெடுக்கும் AI... என்னென்ன நன்மைகள், என்னென்ன தீமைகள்..?

செயற்கை நுண்ணறிவு...
பிரீமியம் ஸ்டோரி
News
செயற்கை நுண்ணறிவு...

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!

ஊடகங்களில் இன்று அனைவராலும் பேசப்படும் ஒரு விஷயம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). ‘இதைப் பயன்படுத்துவதால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்படுமா, தீமை ஏற்படுமா?’ என்கிற விவாதம் சூடாகப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த ‘செயற்கை நுண்ணறிவு’ விஷயத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்.

எஸ்.ராமச்சந்திரன்
முதன்மை ஆலோசகர்,
இன்ஃபோசிஸ் நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட்.
எஸ்.ராமச்சந்திரன் முதன்மை ஆலோசகர், இன்ஃபோசிஸ் நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் AI...

இன்று செயற்கை நுண்ணறிவால் ஏற்படக் கூடிய நன்மைகள் நிறைய இருக்கின்றன. முக்கியமான சாலைகளில், சந்திப்புகளில் இன்று சிசிடிவி (CCTV) புகைப்படக் க‌ருவிகள் பொருத்தப்பட்டு, விதிகளை மீறுபவர்களின் புகைப்படம் உடனுக்குடன் எடுக்கப்பட்டு அவர்கள் கைபேசிக்கு அனுப்பப்படுகிறது. போக்குவரத்துக் காவலர்கள் இல்லை, சிவப்பு விளக்கு விழுந்த பின் வேகமாகச் சென்றால் என்ன வந்துவிடப் போகிறது என அலட்சியமாக எந்த நேரமும் சாலை விதிகளைப் பின்பற்றாதவர்களின் புகைப்படங்களை உடனுக்குடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தால் அனுப்பப்படுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் புகைப்படங்களை ஆராய்ந்து, சீட்பெல்ட் அணியாதவர்கள் யார், தலைக்கவசம் பயன்படுத்தாதவர்கள் யார் என்பது குறித்து துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிடுகிறது செயற்கை நுண்ணறிவு.

வேகமெடுக்கும் AI... என்னென்ன நன்மைகள், என்னென்ன தீமைகள்..?

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஒரு வாக்குச் சாவடியில் சோதனை அடிப்படையில் வாக்காளர்களின் முகத்தை அடையாளம் கண்டு அவர்கள் வாக்களித்தது சமீபத்திய வளர்ச்சி ஆகும்.

சமீபத்தில் ஒரு வீடியோ இணையதளங்களில் மிகவும் வைரலானது. இந்த வீடியோவில் பேசிய கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, நமக்கு வரும் ஜி-மெயில்களுக்கு பதில் அனுப்பும் வேலையை ஏ.ஐ மூலம் எளிதாகச் செய்ய முடியும் என்பதை எடுத்துச் சொன்னார். உதாரணமாக, நீங்கள் செல்ல வேண்டிய விமானம் ரத்தாகிறது; அதற்கான கட்டணத்தைத் திரும்பப் பெறும் மின்னஞ்சலை எப்படி அனுப்ப வேண்டும், இதற்கு செயற்கை நுண்ணறிவு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த அந்தக் வீடியோ பலரது கவனத்தையும் பெற்றது.

ஸ்கேன், எக்ஸ்ரேக்களை மருத்துவர்களைவிட திறமையாக, துல்லியமாக ஆராய்வது, இயந்திரங்களில் பழுது ஏற்படும் முன்னரே எச்சரிக்கை கொடுப்பது, வாகனங்களில் பாதுகாப்புக்காக தானே இயங்கும் அம்சங்கள் (Autonomous driving) எனப் பல நல்ல செயல்பாடுகள் செயற்கை நுண்ணறிவின் பயன் பாட்டால் விளைந்துள்ளன.

தவறான பயன்பாடுகள்...

அதே சமயம், இந்தத் தொழில்நுட்பத்தைப் பார்த்து பயப்பட என்ன காரணம்?

செயற்கை நுண்ணறிவைத் தவறான வழிகளில் பயன்படுத்தவும் பல வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, பிரபலமாகிவரும் சாட் ஜி.பி.டி (ChatGPT) மூலம் மாணவர்கள் தாங்கள் எழுதியது போல கட்டுரைகளை, கலைப் படைப்புகளை விரைவாகத் தயாரித்துவிட‌ முடியும். ஒருவரின் புகைப்படங்கள், கடந்த காலக் குரல், காணொளி களை வைத்து அவர் என்ன வேண்டுமானாலும் பேசும்படியான‌ புது காணொளிகளைத் தயாரிக்கலாம். போர்க்களங்களில் எதிரியைத் துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்கள் தயாரிக்கலாம். மனிதர்களை விஞ்சும் வேக‌த்தில் பங்குச் சந்தையில் பரிவர்த்தனை செய்து நியாயமற்ற வழிகளில் லாபம் பார்க்கலாம்.

இன்றைய சமூகத்தில் நாம் பலரும் பயப்படுவது, அடிப்படை வேலைகளைக் கணினிகள் மூலம் செய்வது. இதனால் வேலைவாய்ப்புகள் பலவற்றை இழ‌க்கும் நிலை உருவாகும் என்கிற பயம் பரவலாகவே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவில் மறைந்திருக்கும் ஓர் ஆபத்து நெறிமுறைகளை வரையறுத்து அவற்றைக் கடைப் பிடிக்க வைப்பது.

உதாரணமாக, அமேசான் நிறுனவத்தில் வேலைக்கு ஆள்களை எடுக்கும்போது ‌ஆண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை கொடுக்கும்படி அல்காரிதம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தபோது அந்த நிறுவனத்துக்கு சங்கடமான‌ ஒரு சூழ்நிலை உருவான‌து. உடனே அந்தச் செயற்கை நுண்ணறிவு அல்காரிதம் கைவிடப்பட்டது. செயற்கை நுண்ணறிவைக் கடந்த காலத் தகவல் கொண்டு பயற்சி அளிக்கும்போது ‌ஒரு பக்கம் சாய்ந்துவிடாமல் நடுநிலையாக இருப்பது முக்கியம்.

இவை எல்லாவற்றையும்விட ஆப‌த்தான கம்ப்யூட்டர் வைரஸ் களை செயற்கை நுண்ணறிவின் மூலம் தயாரித்து சேதம் விளை விக்கலாம்.

அஸிமோவின் மூன்று சட்டங்கள்...

இது போன்ற சூழ்நிலைகளைத் தடுக்க விதிகள் வகுக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு அரை நூற்றாண்டுக்கு முன் அறிவியல் சார்ந்த கதைகள் எழுதிய ஐசாக் அஸிமோவ் இயந்திர மனிதர்களுக்காக மூன்று முக்கியமான சட்டங்களை உருவாக்கினார். அந்தச் சட்டங்கள் இன்றும் ரோபோக்களை வடிவமைத்து இயக்க அடிப்படை யாக இருக்கிறது. அவற்றில் முதல் சட்டம், மிக முக்கியமானது. அதாவது, ஒரு ரோபோ எந்த சூழ்நிலையிலும் ஒரு மனிதனைக் காயப்படுத்தும்படி செயல்படக் கூடாது.

இந்த விதியானது செயற்கை நுண்ணறிவுக்கும் நிச்சயம் பொருந்தும். ரோபோக்களைப் போல இல்லாமல், செயற்கை நுண்ணறிவு போன்ற மென்பொருள் களைப் பொறுத்தவரை, உடல் அளவில் காயப்படுத்துவது அரிது. ஆனால், அவை மற்ற வகைகளில் பெரும் சேதத்தை விளைவிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் எப்படிப்பட்ட ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தெரியாமல் தவிக்கலாம்.

அப்படிப்பட்ட நிலைக்கு ஓர் உதாரணம், ‘Trolley problem’ என்று அழைக்கப்படும் பிரச்னை. அதாவது, வேகமாகச் சென்று கொண்டிருக்கும் டிரைவர் இல்லாத வாகனம் ஒன்று, டிரைவர் ஓட்டும் ஒரு வாகனத்தின் மீது மோதப் போகிறது. இந்த நிலையில், கார் ஓட்டுநர் விபத்துக்கு உள்ளாக வேண்டும். அல்லது, அந்த விபத்தில் இருந்து பாதுகாக்க சாலை ஓரத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் ஐந்து பேர் மேல் வாகனம் மோத வேண் டும். இது போன்ற நிலைமைகளை ஓட்டுனர் ஒருவர் சமாளிப்பது போல செயற்கை நுண்ணறிவால் இப்போதைக்குக் கையாள முடியாது.

வேகமெடுக்கும் AI... என்னென்ன நன்மைகள், என்னென்ன தீமைகள்..?

செயற்கை நுண்ணறிவு - வேலை வாய்ப்பில் தாக்கம்...

செயற்கை நுண்ணறிவால் உலக அளவில் லட்ச‌க்கணக்கான வேலைகள் பறிபோகும் என மக்களை மிக மிக அதிகமாகப் பயமுறுத்தி, அவர்களை யோசிக்க வைத்திருக்கிறது. ஓர் அலுவலகத்தில் தொடங்கி, மருத்துவமனை, தொழிற்சாலை என்று பல துறைகளிலும் மனிதர்கள் செய்யும் வேலைகளை ஒரு கணினி மூலம் கட்டுப்படுத்தி, ஒரு ரோபோ அல்லது மற்ற இயந்திரங்கள் கொண்டு துல்லியமாக 24 மணி நேரமும் ஓய்வே எடுக்காமல், செய்யும் நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவை இல்லை என்பதால், இது சீக்கிரத்தில் நிச்சயம் நடக்க வாய்ப்புண்டு.

மனிதர்கள் இல்லாமல், தானே இயங்கும் இயந்திரங்கள் மூலம் வேலை செய்து முடிப்பது இன்று அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாகவும் காலத்தின் கட்டாய மாகவும் கருதப்படுகிறது. அதைத் தடுக்க முடியாது. ஆனால், மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒரு கணினி செய்துவிட முடியுமா எனில், கண்டிப்பாக இல்லை. ஒரு நிறுவனத்தில் செய்யப்படும் அனைத்து வேலைகளையும் இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கலாம். ஒன்று, சூழலைப் பொறுத்து செய்ய வேண்டிய பல முடிவுகள். இவற்றை கணினியால் செய்ய முடியாது. இரண்டாவது, அடிக்கடி ஒரே மாதிரி செய்யப்படும் வேலைகளைப் ‍படிப்படியாக வரையறுத்து, ஒரு கணினி புரோகிராம் மூலம் செய்வது. ஒரு வேலையை எந்த மாறுதலும் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி செய்தால், அந்த வேலைகளை ஒரு புரோகிராம் மூலம் இயந்திரமே செய்யக்கூடியதாக மாற்றி, ஒரு தானியங்கி (Automation) மூலம் செய்யும் காலம் விரைவிலேயே வரும்.

இப்படிப்பட்ட வழக்கமான வேலைகள் செய்யும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ஆபத்தாக மாறிவிடாமல் இருக்க, பொறுப்பான நிறுவனங்கள்தான் முயற்சி செய்யவேண்டும். மற்றமற்ற வேலைகளை செய்யும் அளவுக்கு திறன் உள்ளவர்களாக அந்த ஊழியர்களை, அந்நிறுவனங்கள் வளர்தத்தெடுக்க வேண்டும் (Reskilling). குறிப்பிட்ட தொழில்துறையில் ஆழமான அனுபவம், படைப்புத்திறன், புதிதாக யோசிப்பது போன்ற வற்றை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும். இவற்றில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும்.

செயற்கை நுண்ணறிவின் தேவையை உணர்ந்து, பல நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ள நிலையில், அதில் இருந்து பின்வாங்குவது அல்லது ஒரு தேக்கநிலை உருவாவது அவ்வளவு சாத்தியமாகத் தெரியவில்லை. புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகமானபோது மோச‌மான தாக்கங்களை நீக்கி, நல்லவற்றைப் பயன்படுத்த நாம் எப்படிக் கற்றுக்கொண்டோமோ, அது போல செயற்கை நுண்ணறிவையும் கையாள வேண்டும். இது நாம் இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தின் கட்டாயம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!