
கடன் பத்திரங்கள்
கஜேந்திர மணவாளன், ஃபண்ட் மேனேஜர், Composite Investments Pvt Ltd, Bangalore
ரிசர்வ் வங்கி தரும் புள்ளிவிவரங்களின்படி, 16 செப்டம்பர் 2022 நிலவரப் படி, வங்கிகளில் இருக்கும் மொத்த டெபாசிட் ரூ.169 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ரூ.20 லட்சம் கோடி டிமாண்ட் மற்றும் நடப்புக் கணக்கு டெபாசிட்டுகள் ஆகும். மீதமுள்ள ரூ.149 லட்சம் கோடி டெபாசிட் டேர்ம் / ஃபிக்ஸட் டெபாசிட்டுகள்தான்.

மிகக் குறைவான வட்டி கிடைக்கக்கூடிய வங்கி வைப்பில் ரூ.149 லட்சம் கோடி டெபாசிட் செய்யப் பட்டிருப்பது மிகவும் ஆச்சர் யமாக இருக்கிறது. வங்கி டேர்ம் டெபாசிட்டுகளை விட முதிர்வுக் காலத்தில் அரசு கடன் பத்திரங்களுக்குக் கிடைக்கும் வட்டி வருமானம் அதிகம் (பார்க்க அட்ட வணை) என்பதை அட்ட வணையைப் பார்த்தால் நன்கு விளங்கும். அப்படி இருக்க, முதலீட்டாளர்கள் வங்கி வைப்புத் திட்டங்களுக்குப் பதிலாக அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு ஏன் செய்ய முன்வருவதில்லை? அதற்கு சில காரணங்கள் உள்ளன.
1. அரசு கடன் பத்திரங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.
2. அனுபவம் இல்லாத காரணத்தால் புதிய முயற்சி களில் இறங்க விருப்பமில்லை.
3. சோம்பல் காரணமாக ஃபிக்ஸட் டெபாசிட்டுகளிலிருந்து வேறு மாற்று முதலீட்டுத் திட்டங்களை முயற்சி செய்ய விரும்புவ தில்லை. ஆனால், அரசு கடன் பத்திரங்களில் இருக் கும் சில முக்கியமான அம்சங்களைப் புரிந்து கொண்டால் யாரும் அதில் முதலீட்டை மேற்கொண்டு நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். சிறு முதலீட்டாளர் களும் அரசு கடன் பத்திரங் களில் எளிதாக முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசு ‘நேரடி ரீடெய்ல் திட்டத்தை’ நவம்பர் 2021-ல் கொண்டு வந்தது.

குறைந்தபட்ச முதலீடு ரூ.10,000...
ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் ‘டைரக்ட் ரீடெய்ல் கில்ட்’ என்ற கணக்கைத் தொடங்கி இந்தக் கடன் பத்திரங்களை முதலீட் டாளர்கள் வாங்கலாம். குறைந்தபட்சம் ரூ.10,000 இருந்தால் போதும், அரசு கடன் பத்திரங்களில் எளிதாக முதலீடு செய்யலாம்.
இந்த டைரக்ட் ரீடெய்ல் கில்ட் கணக்கை இலவச மாகத் தொடங்கலாம். இதில் எந்தவித இடைத்தரகர்களின் குறுக்கீடுகளும் இருக்காது. இந்தக் கணக்கின் மூலம் வாங்கப்படும் கடன் பத்திரங் கள் நேரடியாக ரிசர்வ் வங்கியின் ‘சப்சிடைரி ஜெனரல் லெட்ஜர்’ வடிவில் பாதுகாக்கப்படும் என்பதால், இதற்கு டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்டணம் ஏதுமில்லாமல் இலவசமாகக் கணக்கைத் தொடங் கலாம் என்பதால், சிறு முதலீட்டாளர்களுக்கு ஒட்டுமொத்த பரிவர்த்தனை செலவு என்பது கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
இதே அரசுக் கடன் பத்திரங்களை புரோக்கிங் நிறுவனங்கள் மூலமாக வாங்கினால், குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனைக் கட்டணமோ, மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது ஃபண்ட் நிர்வகிப்புக் கட்டணமோ செலுத்த வேண்டியிருக்கும்.
‘டைரக்ட் ரீடெய்ல் கில்ட்’ கணக்கு மூலம் தனிநபர்கள் நேரடியாக அரசு கடன் பத்திரங்களைப் புதிதாக வெளியிடும்போது முதன்மைச் சந்தையிலிருந்தே வாங்கிக்கொள்ளலாம். மேலும், முதலீட் டாளர்கள் ரிசர்வ் வங்கியின் பிளாட்ஃபார்ம் மூலமாக மனிதர்களின் நேரடி தலையீடு ஏதுமில்லாமல் எலெக்ட்ரானிக் ஆர்டர் மேட்சிங் சிஸ்டம் மூலம் தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை ‘இரண்டாம் நிலை சந்தையில்’ விற்கவும், அவ்வாறு விற்கப்படும் பத்திரங்களை வாங்கவும் செய்யலாம். சுருக்கமாக, அரசு கடன் பத்திரங்களை ஆன்லைன் மூலமாகவே எளிதில் வாங்கவும் விற்கவும் முடியும்.
தேவையான ஆவணங்கள்
ரீடெய்ல் டைரக்ட் கில்ட் கணக்குத் தொடங்க வங்கிக் கணக்கு, பான் எண், ஆதார் எண், முகவரி சான்று உள்ளிட்டவை அவசியமாகும். அதன்பிறகான அத்தனை தகவல் தொடர்புகளுக்கும் உங்களுடைய ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அவசியமாகும்.
முதலீட்டாளர்கள் இந்திய அரசின் கருவூலப் பத்திரங்கள், இந்திய அரசின் தேதியிட்ட கடன் பத்திரங்கள், மாநில மேம்பாட்டு கடன் பத்திரங்கள் மற்றும் அரசின் தங்கப் பத்திரங்கள் ஆகிய அனைத் திலும் ரீடெய்ல் டைரக்ட் திட்டம் மூலம் முதலீடு செய்யலாம்.
ரிஸ்க் இல்லாத முதலீடு...
அரசு கடன் பத்திரங்கள் ரிஸ்க் இல்லாத, உத்தர வாதமான வருமானம் தரக்கூடிய, கிரெடிட் ரிஸ்க் இல்லாத முதலீடாக உள்ளது.
தற்போதைய நிலையில், அரசு கடன் பத்திரங்கள் நீண்டகால அடிப்படையில் சிறப்பான வருமானத்தைத் தருவதாக இருக்கிறது. ஏனெனில், கடன் பத்திரங்களின் முதிர்வுக் காலம் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை உள்ளது. அரசு வெவ்வேறு முதிர்வுக் காலங்களில் புதிது புதிதாகக் கடன் பத்திரங்களை வெளியிடும். எனவே, ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இவை மிகக் கவர்ச்சிகரமான முதலீடாக உள்ளது.
நீண்டகால அடிப்படை யிலான முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஓய்வூதியதாரர்கள், ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லாத நிலையில் வட்டி வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு அரசு கடன் பத்திரங்கள் முதலீடு செய்ய ஏற்றதாக இருக்கிறது.
10 வருடங்கள் முதல் 40 வருடங்கள் வரையிலான முதிர்வுக் காலத்தை இந்தக் கடன் பத்திரங்கள் கொண்டிருப்பதால், அவரவர் நிதி இலக்குக்கு ஏற்ப திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடுகளை மேற்கொள்ளலாம். அரசு கடன் பத்திரங்களில் இருக்கும் இன்னொரு சிறப்பான அம்சம், இதில் முதலீட்டுக் காலத்தையும் முதலீட்டுக்கான வட்டியும் அவரவர் வயது, நிதி இலக்கு ஆகியவைப் பொறுத்து நிர்ணயித்துக் கொள்ளலாம். இந்த வசதி ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட எந்தத் திட்டத்தி லும் இல்லை. 26 செப்டம்பர் 2022 நிலவரப்படி, 2051-ல் (29 ஆண்டுகளில்) முதிர்வடை யும் கடன் பத்திரத்துக்கு 7.53% வருமானம் வழங்கப்படுகிறது.
வேண்டும்போது விற்கலாம்...
அரசு கடன் பத்திரங்களின் மொத்த மதிப்பு 12 செப்டம்பர் 2022 நிலவரப்படி, ரூ.86,12,490 கோடியாக இருக்கிறது. தினசரி சராசரி வர்த்தக மதிப்பு ரூ.25,000 கோடி. எனவே, செயல்பாட்டில் உள்ள கடன் பத்திரங்களைத் தினசரி வர்த்தகத்தில் வாங்கவோ, விற்கவோ கஷ்டப்படத் தேவை யில்லை.
வழக்கமாக, அரசு கடன் பத்திரங்களில் நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5 கோடி மதிப்பிலான லாட்டுகளாக வர்த்தகம் செய்வார்கள். சிறு முதலீட்டாளர்கள் குறைந்த பட்சமாக ரூ.10,000 முதல் முதலீடு செய்யலாம் என்றாலும், மாற்றுச் சந்தையில் இதைவிடக் குறைவான லாட்டுகளிலும் வர்த்தகமாகும். ரீடெய்ல் டைரக்ட் திட்டம் இது போன்ற பிரிவுகளிலும் நேரடி யாக வர்த்தகம் செய்வதற்கு வழிவகை செய்கிறது. எனவே எளிதில் வர்த்தகம் செய்ய லாம். ஃபிக்ஸட் டெபாசிட்டு களை முதிர்வுக்கு முன்பே குறிப்பிட்ட அபராதக் கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ளலாம்.
அரசு கடன் பத்திரங் களைப் பொறுத்தவரை, அதிகபட்ச லிக்விட்டி உள்ள அல்லது துடிப்பான செயல்பாட்டில் உள்ள பத்திரங்களில் மட்டுமே வர்த்தகம் செய்ய முயற்சி செய்யலாம் என்பதை முதலீட்டாளர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல சமயங்களில் தற்சமயம் நன்கு செயல் பாட்டில் உள்ள பத்திரங்கள் குறிப்பிட்ட காலம் கழித்து லிக்விட் செய்ய முடியாத நிலைக்குப் போகலாம்.
கடன் பத்திரங்களை விற்கும்போது இது போன்ற சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. ஆனாலும் முதலீட்டாளர்கள் ‘ஆட் லாட்’ பிரிவில் வர்த்தக ஸ்கிரீன் மூலம் விற்பனை செய்யலாம் அல்லது கோட் செக்மென்ட் வசதிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வழிகளில் முயற்சி செய்யும்போது சில நாள்களில் கடன் பத்திரங்களை விற்று விட முடியும். ஆனால், கடன் பத்திரங்களை அதன் முதிர்வுக் காலம் வரைக்கும் வைத்திருக்கவும், வட்டி வருமானத்தை மட்டும் பெற்றுக்கொள்ளவும் விரும்பினால் எந்தக் கடன் பத்திரங்களையும் தாராள மாக வாங்கலாம்.

கடன் பத்திரங்களில் உள்ள சவால்கள்...
அரசுக் கடன் பத்திரங்களில் கிரெடிட் ரிஸ்க் மற்றும் திவால் ரிஸ்க் இரண்டும் இல்லை. ஆனாலும் சந்தை சார்ந்த ரிஸ்க்குகள் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, முதிர்வுக் காலத்துக்கு முன்பே கடன் பத்திரங்களை விற்கும்பட்சத்தில் சந்தை சார்ந்த காரணிகளால் வரும் சிக்கல் அதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சந்தை நிலவரத்தைப் பொறுத்து கடன் பத்திரங் களின் மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகும். மேலும், வட்டி விகிதம் மற்றும் கடன் பத்திரங்களின் மதிப்பு இரண்டுக்கும் இடையில் எதிர்மறையான தொடர்பு உள்ளது. அதாவது, வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது கடன் பத்திரங்களின் மதிப்பு உயரும். அப்போது அதில் லாபம் பார்க்கும் வாய்ப்பு உருவாகும். அதேபோல் வட்டி விகிதம் உயரும்போது கடன் பத்திரங்களின் மதிப்பு குறையத் தொடங்கும். இதனால் கடன் பத்திரங்கள் முதலீட்டில் நஷ்டத்தைப் பார்க்கும் நிலையும் வரக்கூடும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால், நீண்டகால அடிப்படையில் முதிர்வுக் காலம் வரையில் தொடர்ந்து கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவர்கள் நஷ்டம் குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில், கடன் பத்திரங் களை ரூ.100-க்கு வாங்கி யிருந்தால் முதிர்வு காலத்துக்குப் பிறகு, அதே 100 ரூபாயைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் பத்திரங்களின் மீதான முதலீட்டுக்கான வட்டி ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படும். இது முதலீட்டாளரின் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தப்பட்டு விடும். எனவே, பாதுகாப்பான, நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டைத் தேர்ந்தெடுப்பவர்கள் அதற்குப் பதிலாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதிக வருமானம் கிடைக்கும்.
தமிழில்: ஜெ.சரவணன்