
பங்கு முதலீடு
அஷ்வின் பட்னி, தலைவர் (திட்டங்கள் & மாற்று முதலீடுகள்), ஆக்ஸிஸ் ஏ.எம்.சி
நம் அன்றாட வாழ்க்கையில் பல பொருள்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துகிறோம். உடுத்தும் ஆடை முதல் ஓட்டும் கார் வரை நாம் பல பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். நுகர்வோரின் வசம் எல்லையற்றத் தேர்வுகள் இருக்கும்போது, ஒரு சில பொருள்கள் மற்றும் சேவைகள் மட்டும் ஏன் தனித்து நிற்கின்றன, இந்தப் பொருள்களை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்துவது எது?
இந்தக் கேள்விகளுக்கான பதில் எளிது. நுகர்வோர்களாகிய நாம் சில பண்புகளைக் கொண்ட பொருள்களை விரும்புகிறோம், அந்தப் பண்புகளாக நம்பிக்கை, செயல்பாட்டில் நிலைத்தன்மை, புதுமை, செயல்திறன் (Trust, Consistency in performance, Innovation, Efficiency) போன்றவையாக இருக்கலாம். நுகர்வோர் மனம் கவர்ந்த, தரமான தயாரிப்பின் கலவையை நாம் பிராண்ட் (Brand) என்று குறிப்பிடுகிறோம்.

பிராண்டுகள் நம்மைச் சுற்றி உள்ளன. ஆனால், மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டாக மாறுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளும். நுகர்வோர் மனதில் ஒரு பிராண்ட் ஆழமாகப் பதிய பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும்.
ஒரு பிராண்ட் பொதுவாக, அதன் வாழ்க்கைச் சுழற்சியில் (Life-cycle) நான்கு நிலைகளைக் கடந்து செல்கிறது. இந்த நிலைகளைக் கவனித்து, அந்த நிறுவனப் பங்குகளில், முதலீடு செய்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும். இனி, அந்த நான்கு நிலைகளைப் பார்ப்போம்.
குழந்தைப் பருவம் (Emerging brand: The Infancy)
இது ஒரு பிராண்டின் வாழ்க்கைச் சுழற்சியின் ஆரம்பகட்டமாகும், இதில், நிறுவனத்தின் நிறுவனர்கள் சிறிய அளவிலான திட்டங்கள் அல்லது சேவைகளுடன், பொதுவாக, தங்கள் சொந்த மாநிலத்தில் தொடங்குகிறார்கள். போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வேறுபடுகின்றன.
இந்த பிராண்டுகள் சிறியவையாக இருந்தாலும் உள்ளூர் பிராண்டுகள் என்பதால், அதில் வெற்றியும் பெறுகின்றன. அந்தப் பகுதி அல்லது அந்த மாநிலத்தின் ஆரம்ப வாடிக்கை யாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அதன் வாடிக்கையாளர் தளத்தை அதிகரிக்க பெரிய விரிவாக்கத்தைத் தொடங்குகிறார்கள்.
நிறுவனத்தின் செயல்திறன் முடுக்கிவிடப் படுகிறது. நிறுவனமானது அதன் தயாரிப்பு பொருள்களுக்கு ஒரு பிராண்டை உருவாக்கு வதற்கான முதல்கட்டப் பணிகளை இந்த நிலையில் மேற்கொள்கிறது. இதை ஒரு பிராண்டின் குழந்தைப் பருவம் எனக் குறிப்பிடலாம்.
நிறுவப்பட்ட பிராண்ட்
இந்தக் காலகட்டத்தில், பிராண்ட், ஒரு நட்சத்திர நற்பெயரைப் பெறுகிறது. அதன் முக்கிய வணிகப் பிரிவில் சந்தைப் பங்களிப்பை அதிகமாகக் கொண்டிருக்கும் மற்றும் நிறுவனத்தின் பங்கு, பங்குச் சந்தைகளில் நன்கு மதிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், பிராண்ட் பரந்த வாடிக்கையாளர் தளத்துடன் வலுவான விலை நிர்ணய சக்தியை வெளிப்படுத்துகிறது.
பிராண்டுகள் நீண்ட காலமாக இருப்பதால், நுகர்வோர் மனதில் பதிந்து அவர்களின் விருப்பமான பிராண்டாக மாறுகிறது. இந்த நிலையில், நிறுவனப் பொருள்களைப் பெரிதாக விலை பார்க்காமல், நுகர்வோர் வாங்குவதைக் காணலாம். இது மாதிரியான ஒரு பிராண்டின் நிறுவனப் பங்கில் முதலீட்டை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம்.
பிராண்ட் பெயர் மறைதல்...
இந்த நிலையானது பொதுவாக, வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து அந்தக் குறிப்பிட்ட பிராண்ட் பொருள்களை வாங்கத் தயங்கும்போது ஏற்படுகிறது. நிறுவனம் சார்ந்த நடவடிக்கைகள், தொழில்துறை மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் / ஒழுங்குமுறை மாற்றங்கள் போன்றவற்றாலும் பிராண்ட் பெயர் நுகர்வோர் மத்தி யிலிருந்து மறையக்கூடும்.
கவனக் குறைவான மூலதன ஒதுக்கீடு, பிராண்டில் போதிய முதலீடு இல்லாமை, வெற்றியின் உச்சக்கட்டத்தில் புதுமை இல்லாமை, நிறுவனமானது பிற தொழில் பிரிவுகளில் சம்பந்தமில்லாத பல்வகைப்படுத்தல் உள்ளிட்ட நிறுவனம் சார்ந்த செயல்களால் பிராண்ட் மதிப்பு குறைந்து அது மக்கள் மனதிலிருந்து மறையத் தொடங்கும்.
தொழில்துறை மாற்றம், மக்களின் தேவையானது புதிய பொருள்கள் / பிராண்டுகளுக்கு மாறுவது, நிறுவனம் காலத்துக்கேற்ப தன்னை மேம்படுத்திக்கொள்ளாதது போன்ற காரணங்களால் பிராண்ட் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், இது போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

திருப்பம் அல்லது பிராண்ட் மதிப்பு இழத்தல்...
பிராண்ட் மதிப்பு குறைந்து நிறுவனத்தின் விற்பனை குறையும்போது, நிறுவனம் சில கடினமான முடிவுகளை எடுக்கிறது. நிர்வாகக் குழு அல்லது நிறுவன நிறுவனர்கள், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, பணத்தைச் சேமிப்பதற்காகக் கடுமையான முடிவுகள் எடுக்கிறார்கள். முக்கியம் அல்லாத வணிகங்கள் நிறுத்தப்படுகின்றன. பெரும் பாலான சந்தர்ப்பங்களில், இவை மேலாண்மை சிக்கல்கள், ஒழுங்குமுறை மாற்றங்கள் போன்றவற்றால் வணிக வேகத்தை இழந்த பிராண்டுகளாக மாறியிருக்கும்.
சில நேரங்களில் நிறுவனர்கள் பிரச்னையைச் சரியாக அடை யாளம் கண்டு, இழந்த பிராண்ட் மதிப்பை மீட்பது நடக்கிறது. இந்த நிலையில் இது போன்ற நிறுவனப் பங்குகளை முதலீட்டுக் குக் கவனிக்கலாம்.
பிராண்ட் மதிப்பும் பங்கு முதலீடும்...
நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்கக்கூடிய நிறுவனப் பங்குகளை அடையாளம் கண்டு, முதலீட்டுக்குத் தேர்வு செய்யும் முதலீட்டுத் தத்துவத்துக்கு பிராண்டுகள் அடிப்படையாக இருக்கின்றன.
ஒரு முதலீட்டாளர் கவனிக்க வேண்டிய பொதுவான குணாதிசயங்கள், சேவையின் தரம், வாடிக்கையாளர்களுடன் வலுவான தொடர்பை பிராண்ட் மதிப்பு அடையாளம் காட்டி விடுகிறது. பங்கு முதலீட்டுக் கோணத்தில் பார்த்தால், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதன் பிராண்ட் மதிப்பால் அளவிடப் படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு பிரபல பிராண்ட் என்பது ஒரு லார்ஜ்கேப் நிறுவனப் பங்குக்கு இணையான மதிப்பைக் கொண்டிருக்கும். ஒரு நல்ல பிராண்டைக் கொண்ட நிறுவனப் பங்கு ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவுக்கு நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது. ஒரு பிரபல பிராண்ட் மற்றும் ஒரு லார்ஜ்கேப் நிறுவனப் பங்கு இரண்டும் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டுள்ளன. அவை சந்தைப் பங்களிப்பு, நுகர்வோர் / முதலீட்டாளர் விருப்பம், நன்கு அங்கீகரிக்கப்பட்டவை போன்ற ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன.
ஒரு நல்ல பிராண்டைக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு அதிகமாக இருக்கும்; மேலும், லாப வரம்பு அதிகமாக இருக்கும்.
பங்குச் சந்தை மொழியில், பிரபல பிராண்டுகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை போர்ட்ஃபோலியோவின் நிலையான வருமானத்துக்கு வழிவகுப்பவை என்று சொல்லலாம். வளர்ந்துவரும் பிராண்ட் எனில், அது மிட்கேப் நிறுவனப் பங்காக இருந்தாலும் ஒரு நம்பிக்கைக்குரிய பங்கு முதலீடாக இருக்கும்; இந்த நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களுக்கு சவால் விடுபவையாக இருக்கும். இந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் பிரபல பிராண்ட் / லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளாக மாறும் எனலாம்.
ஒரு நிறுவனத்தின் பிராண்ட் ஓரளவுக்கு பிரபலமாக மாறத் தொடங்கியிருக்கும்பட்சத்தில், அதை நிலை நிறுத்த குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படும். அப்படிச் செய்யும்பட்சத்தில் அந்த நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிச் சொல்லும்.
ஒரு மிட்கேப் நிறுவன வணிகத்தில், லாபத்தின் பெரும்பகுதி தொழில் வளர்ச்சிக்காக மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. இழந்த பிராண்ட் மதிப்பை மீண்டும் பெறும் நிறுவனப் பங்கை நாம் ஏற்கெனவே சொன்னதுபோல் முதலீட்டுக்குக் கவனிக்கலாம். இந்த நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில், மங்கிவரும் பிராண்ட் மற்றும் மீண்டுவரும் பிராண்டு்க்கு இடையிலான வேறுபாட்டை அறிந்துகொள்ளும் திறமை பங்கு முதலீட்டாளர்களுக்குத் தேவை. இந்த நிறுவனங்களை நன்கு அடையாளம் கண்டு, அவற்றின் பங்குகளை முதலீட்டுக் கலவையில் (Portfolio) சேர்த்தால் இவை போர்ட்ஃபோலியோவில் ஆல்பாவை (Alpha) உருவாக்குபவையாக இருக்கும். இந்த நிறுவனப் பங்குகள் ஒட்டுமொத்த போர்ட் ஃபோலியோவின் வருமானத்தைக் கணிசமாக அதிகரிக்கக்கூடும்.
பொதுவாக, பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் காலத்தில், நல்ல பிராண்ட் மதிப்பு கொண்ட நிறுவனங்கள் அதிக சந்தைப் பங்களிப்பு மற்றும் மதிப்பு பெறுவதைக் காணலாம்.
இது போன்ற நல்ல பிராண்ட் மதிப்பு கொண்ட நிறுவனங்கள் போர்ட் ஃபோலியோவில் இருக்கும்பட்சத்தில் முதலீட்டாளர்களுக்கு அவை நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்கிக் கொடுக்கும்.
முதலீட்டுக்குப் பங்குகளைத் தேர்வு செய்பவர்கள் இனி பிராண்ட் மதிப்பை யும் கவனித்து செய்தால், அந்த முதலீட்டின் மூலம் நல்ல லாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்பது நிச்சயம்!