மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எந்தத் தேவைக்கு எவ்வளவு செலவு? இளைஞர்களுக்கான பட்ஜெட் ஃபார்முலா! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 18

பட்ஜெட் ஃபார்முலா...
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் ஃபார்முலா...

இன்றைய இளைஞர்கள் கொஞ்சம் திட்டமிட்டு செயல்பட்டால், நிறைய பணத்தை மிச்சப்படுத்த முடியும்!

‘நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்றுவிட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்’ என்று சொல்லிச் சொல்லியே சின்ன வயதிலிருந்தே நம் பெற்றோர் நம்மை வளர்த்திருக்கிறார்கள்.

எம்.சதீஷ் குமார்
நிறுவனர்,
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

சவால்களை சமாளிப்பது எப்படி?

படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்தாகி விட்டது. மாதம் சுமார் 25,000 ரூபாய் சம்பளம் வரத் தொடங்கிவிட்டது. அலுவலகம் ஒரு திசையில் இருக்கும்; தங்கி இருக்கும் இடம் இன்னொரு திசையில் இருக்கும். தங்கி இருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். அலுவலகம் வந்துசெல்ல போக்கு வரத்துச் செலவுக்கென கணிசமான தொகை யைச் செலவிட வேண்டும். தினம் குறைந்தது இருவேளை தேநீர் அல்லது காபி குடிக்க வேண்டும். மூன்று வேளை உணவு சாப்பிட வேண்டும். இவை எல்லாம் போக சினிமா, டிவி எனப் பொழுதுபோக்கு செலவுகள் வேறு இருக்கிறது. கடைசியாக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைப் பெற்றோருக்கு அனுப்ப வேண்டும்.

இதுபோன்ற நிறைய செலவுகளை, சவால்களை 25,000 ரூபாய் சம்பளத்தில் எப்படி சமாளிப்பது?

எந்தத் தேவைக்கு எவ்வளவு செலவு? இளைஞர்களுக்கான பட்ஜெட் ஃபார்முலா! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 18

திட்டமிடுவதே முதல் படி...

நீங்கள் கொஞ்சம் திட்டமிட்டு செயல் பட்டால், இந்தச் சம்பளத்தில் செலவுகள் போக ஓரளவு சேமிக்க முடிவதுடன், வாழ்க்கையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு திட்டமிடவும் முடியும். அதை எப்படி செய்வது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தூரத்திலிருந்து அலுவலகத்துக்கு வர அதிக தொகை செலவிடுவது, வீட்டு வாடகை, ஊரில் இருக்கும் பெற்றோருக்குப் பணம் அனுப்புவது போன்ற செலவுகளை சமாளிக்க முடியாமல், பலரும் மிகச் சுலபமாக எந்த விதமான கேள்வியும் கேட்காமல், எந்த ஜாமீனும் இல்லாத தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற மோசமான கடனைகளை வாங்கி கடன் வலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இன்றைய இளைஞர்களில் பலர், தனிநபர் கடன் லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் நிலையில், கிரெடிட் கார்டிலும் அதிக நிலுவைத் தொகை வைத்திருக்கிறார்கள்.

சமைத்து சாப்பிட்டால் செலவு குறையும்...

பொதுவாக, சொந்த ஊரை விட்டுவிட்டு, நீண்ட தொலை வில் இருக்கும் வெளியூர் சென்று வேலை பார்க்கும்போது, இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி சமைத்து சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவை சமமாகப் பிரித்துக்கொள்கிறார்கள். செலவைக் குறைக்க இது ஒரு சூப்பர் திட்டம் ஆகும்.

ஆனால், சிறிது காலத்தில் வேலைப்பளு காரணமாக சமையல் செய்வதற்குப் பதில், ஹோட்டலில் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். பிற்பாடு, அதைச் செய்யவும் முடியாமல், ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் உணவை ஆர்டர் செய்து, வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால், செலவு என்பது கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்குப் பதில், பேயிங் கெஸ்ட் (Paying Guest) வசதி யுள்ள அறைகளைத் தேடிச் செல்லலாம். ஐ.டி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இது மாதிரியான அறைகள் பல இருப்பதைப் பார்க்கலாம். எல்லா ஊர்களிலும் இது மாதிரியான பேயிங் கெஸ்ட் வசதி, எங்கு இருக்கிறதோ, அங்கு தேடிப் போய், அந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டால், வீட்டுச் சாப்பாடு போல, உணவு கிடைப்பதுடன், கணிசமான பணத்தையும் மிச்சப் படுத்தலாம்.

எல்லா ஊர்களிலும் ஆண்கள், பெண்களுக்கு தனித் தனியாக தங்கும் விடுதிகள் உண்டு. எனவே, இளைஞர்கள் ஹாஸ்டல் வசதியைப் பயன் படுத்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்.

ஹாஸ்டல்களில் அலுவலகம் அருகிலேயே தங்கி வேலைக்குச் செல்லும்போது போக்குவரத்து செலவு, உணவுச் செலவு, தங்கும் செலவு எல்லாம் குறைவாக இருக்கும். அலைச் சலும் மிச்சம். இதனால், உடல் மற்றும் மனச்சோர்வு ஏற்படாது.

இப்படிச் செய்வதன் மூலம் மிச்சமாகும் பணத்தை நம் வாழ்க்கையின் எதிர்கால இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள சேமிக்கலாம்; முதலீடு செய்யலாம்.

எந்தத் தேவைக்கு எவ்வளவு செலவு? இளைஞர்களுக்கான பட்ஜெட் ஃபார்முலா! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 18

எப்படி பட்ஜெட் போடலாம்?

இன்றைய இளைஞர்கள் எப்படி பட்ஜெட் போடலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

25,000 ரூபாய் சம்பளத்தில் தங்கும் இடம் மற்றும் உணவுக்கு ரூ.8,000 ஒதுக்கிக்கொள்ளலாம். போக்குவரத்துச் செலவுக்கு (பெட்ரோல்) ரூ.1,000 வைத்துக் கொள்ளலாம்.

ஊரில் இருக்கும் பெற்றோர் களுக்கு மாதம்தோறும் ரூ.5,000 அனுப்பலாம். பொழுதுபோக்கு செலவுகளுக்கு ரூ.2,000 செல விடலாம். காரணம், வீட்டை விட்டுப் பிரிந்து இருக்கும் நிலையில் பொழுதுபோக்கு எதுவும் இல் லாமல் இருப்பது சற்றுக் கடினம் தான். எனவே, மன மகிழ்ச்சிக்கு கட்டாயம் ஒரு சிறிய தொகையைக் செலவிடத்தான் வேண்டும்.

மேலும், மாதம் ஒரு முறை ஊருக்குச் சென்று வர போக்கு வரத்துச் செலவு ரூ.1,000 மற்றும் வீட்டுக்கு ஏதாவது தின்பண்டங்கள், பொருள்கள் வாங்கிச் செல்வதற்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2,000 ஒதுக்கி வைத்துக்கொள்ளலாம்.

சொந்த ஊருக்குச் செல்வது என்று முடிவு செய்துவிட்டால், எப்போது போகிறீர்கள், எப்போது திரும்ப வரப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்டு, அதற்கேற்ப உங்கள் பயணத்தை அமைத்துக்கொள்வது அவசியம். பயணம் என்று வரும் போது ரயில் மூலம் சென்று வருவது செலவைக் குறைக்க உதவும். உடல் அலுப்பும் இருக்காது.

அவசரச் செலவுகளுக்கு என மாதம் ரூ.1,000 சேர்த்து வர வேண் டும். இது போக, மாதம் ரூ.5,000 மிச்சமாகும். இந்தத் தொகையை எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்து வருவது அவசியம்.

எந்தத் தேவைக்கு எவ்வளவு செலவு? இளைஞர்களுக்கான பட்ஜெட் ஃபார்முலா! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 18

என்ன லாபம்?

இப்படி பட்ஜெட் போட்டு செலவு செய்வதால் என்ன லாபம் எனக் கேட்கிறீர்களா? முதலில் எந்தத் தேவைக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்கிற தெளிவு பிறக்கும். வரவு மற்றும் செலவுகளை ஒரு நோட்டில் அல்லது கம்ப்யூட்டர், லேப்டாப் எக்ஸெல் ஷீட்டில் குறித்து வருவது அவசியம். அப்போதுதான் எந்தத் தேவைக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறோம், சேமிப்பை அதிகரிக்க எந்தச் செலவுகளைக் குறைக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

முக்கியமாக, அடுத்துவரும் ஆண்டுகளில் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும்போது, செலவுகளை இதே நிலையில் செய்யும்போது கூடுதல் தொகையை மிச்சப் படுத்தி சேமிக்க முடியும்; இதனால், முக்கிய நிதித் தேவை களுக்குக் கடன் வாங்க வேண்டியிருக்காது. மாதக் கடைசியில் செலவுக்கு பணமில்லை என்கிற பிரச்னை வராது.

பட்ஜெட் போட்டு செலவு செய்வது சில மாதங்களுக்கு கஷ்டமாகத் தெரியலாம். பழகிவிட்டீர்கள் எனில், உங்கள் வாழ்க்கை விரைவிலே வளமாகிவிடும். இன்றைய தேதியில் அதிக சம்பளம் வாங்கி வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வாங்கியவர்களைவிட, குறைவான சம்பளத்தில் அதிகமாக மிச்சப்படுத்தி, அதை முதலீடு செய்து பெருக்கி வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டவர்கள்தான் அதிகம் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்!

(கோடீஸ்வரர் ஆவோம்)