
அனில் அம்பானிக்கு தொடரும் சிக்கல்!
என்ன செய்தும் அனில் அம்பானியின் நிதிச் சிக்கல் மட்டும் குறையவே இல்லை. ரிலையன்ஸ் இன்ஃப்ராவுக்குச் சொந்தமாக மும்பை சான்டாகுரூஸில் இருக்கும் மத்திய அலுவலகத்தை வாடகைக்கு விட முடிவு செய்தார் அனில். இதன் மூலம் எவ்வளவு பணம் கிடைக்கும், அதைக்கொண்டு எந்தக் கடனை அடைப்பது என்பதையெல்லாம் ரகசியமாகவே வைத்திருக்கிறார் அனில். ஆனால், மும்பை மின்சார வாரியம் ஆட்சேபம் தெரிவித்தி ருப்பதால், வாடகைக்கு விடும் திட்டத்தையும் செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார் அனில்!
#பாவம் அனில்!
சந்திராவின் பிளான்!

டாடா நிறுவனத்தின் சி.இ.ஓ சந்திரசேகரனின் மெகா பிளான் இந்த ஆண்டு நிறைவேறப் போகிறது. டாடா நிறுவனங்களில் ரூ.10,000 கோடி புதிதாக முதலீடு செய்யப்பட வேண்டும் என முடிவெடுத்திருந்தார் சந்திரா. டாடா கேப்பிட்டல், டாடா ஏ.ஐ.ஜி ஜெனரல் இன்ஷூரன்ஸ், டாடா ஹவுஸிங், விஸ்தாரா, ஏர் ஏசியா, டாடா டெலி சர்வீசஸ் என டாடா நிறுவனங்களில் இப்போது முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. இந்த நிறுவனங் களின் லாபத்தை அதிகரிக்கவே இந்தக் கூடுதல் முதலீட்டுத் திட்டமாம்!
#சக்ஸஸ் சந்திரா!
இ.சி.பி-யின் தலைவி லெகார்ட்!

உலக வர்த்தக நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் கிரிஸ்டின் லெகார்ட்-ன் பதவிக்காலம், வரும் அக்டோபர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் லெகார்ட். ஐரோப்பிய நாடுகள் பலவும் நிதிச் சிக்கலைச் சந்தித்துவரும் நிலையில், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது!
#பிரெக்ஸிட் பிரச்னையை முடிச்சு வையுங்க மேடம்!
சும்மா கிடக்கும் ரூ.32,000 கோடி!

வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் பணத்தின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2018 செப்டம்பர் மாத நிலவரப்படி, வங்கிகளில் ரூ.14,578 கோடி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் ரூ.16,887 கோடி என்கிற அளவில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இது கடந்த 2016-ம் ஆண்டில் வங்கிகளில் ரூ.8,929 கோடியாகவும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் ரூ.10,527 கோடியாகவும் இருந்தது. இரண்டு ஆண்டுகளில் சுமார் 50% அளவுக்கு கேட்பாரற்றுக் கிடக்கும் தொகை அதிகரித்திருப்பது ஆச்சர்யம்!
#பணம்... கவனம்!
உலகம் சுற்றும் சீனர்கள்!

சுற்றுலா செல்வதில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறார்கள் சீனர்கள். இவர்கள் ஓர் ஆண்டுக்கு 277 பில்லியன் டாலரை சுற்றுலா செல்வதற்காகவே செலவு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் ஓர் ஆண்டுக்கு 144 பில்லியன் டாலர் அளவுக்கு மட்டுமே செலவு செய்கிறார்கள். ஜெர்மனி (94 பில்லியன்), இங்கிலாந்து (75 பில்லியன்), பிரான்ஸ் (47 பில்லியன்), ஆஸ்திரேலியா (36 பில்லியன்), ரஷ்யா (34 பில்லியன்) கனடா (33 பில்லியன்) ஆகிய நாடுகள் சுற்றுலாவுக்குச் செலவு செய்வதில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
#இந்தியாவின் இடம்..?
வால்மார்ட்டுக்குக் கிடைத்த பரிசு!

வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப் கார்ட் நிறுவனத்தை வாங்கியபோது, அதனிடம் இருந்த போன் பே-வைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், அது கிடைத்தற்கரிய பரிசு என்பதை இப்போது உணர்ந்தி ருக்கிறது. ஒரு மாதத்துக்கு சராசரியாக ஐந்து கோடி பேர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். என்பதுதான் காரணம். கடந்த ஆண்டு வரை இதில் 68,000 வர்த்தகர்கள் மட்டுமே இருந்தனர்; தற்போது இந்த எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்திருக்கிறதாம். கிட்டத்தட்ட ரூ.56,000 கோடி வரை பணப் பரிவர்த்தனை ஆகி யிருக்கிறதாம்!
#பே டிஎம்-க்கு போட்டி!
ஊட்டச்சத்து: நிதியைப் பயன்படுத்தாத மாநிலங்கள்!
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக மத்திய அரசாங்கம் அளித்த நிதியை, பல்வேறு மாநிலங்கள் பயன் படுத்தாமலேயே இருக்கின்றன. `போஷன் அபியான்’ என்ற திட்டத்துக்காக மத்திய அரசாங்கம் 2,555 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருந்தது. இதில் வெறும் 568 கோடி ரூபாயை மட்டுமே பல்வேறு மாநில அரசாங்கங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளன.பஞ்சாப் மாநிலம் மிகக் குறைவாக, அதாவது வெறும் 30 லட்சம் ரூபாயை மட்டுமே பயன்படுத்திக்கொண்டுள்ளது. இந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட தொகை 60 கோடி ரூபாய்க்குமேல். இதேபோல கேரளாவும் 1.37 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட தொகை 64 கோடி ரூபாய்.
#தமிழகம் இதில் எத்தனை கோடிகளை செலவு செய்திருக்கிறதோ!
ஜி.எஸ்.டி: குறைந்துவரும் மோசடி!
கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி மூலமான வருமானம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூலாகியிருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த வரியை வசூலிப்பதில் கறாராக இருக்கிறது நிதி அமைச்சகம். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் 2,500 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரி அளவுக்கு 535 போலி இன்வாய்ஸ்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 1,620 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. ஏறக்குறைய 11,250 கோடி ரூபாய் மதிப்பில் வரி ஏய்ப்பு செய்ய நினைத்த 154 பேர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் 74.38 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர் 3பி தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
#கீப் இட் அப் ஆபீசர்ஸ்!