
பிசினஸ் கிளினிக்...
நான் மத்திய அரசாங்கத்தின் சி.ஜி.டி.எம்.எஸ்.இ (CGTMSE - Credit Guarantee Fund Trust for Micro and Small Enterprises) திட்டத்தின் கீழ் கடன் பெற்று, சிறுதொழில் நிறுவனம் ஒன்றைத் தொடங்க உத்தேசித்திருக்கிறேன். இந்தக் கடன் எந்த வங்கியில் கிடைக்கும்?
ஆர்.அசோக் குமார், அருவங்காடு.

ஆர்.சுகுமார், உதவிப் பொது மேலாளர், சிட்பி (SIDBI)
‘‘சி.ஜி.டி.எம்.எஸ்.இ திட்டம் மத்திய அரசு மற்றும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி யினால் (SIDBI) குறு மற்றும் சிறுதொழில்முனைவோர் புதிதாகத் தொழில் தொடங்க / ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுபடுத்த மற்றும் நவீனப்படுத்தத் தேவைப்படும் நிதியைக் கடனாகத் தருகிறது. பிணையம் (collateral security) மற்றும் மூன்றாம் நபர் உத்தரவாதம் (ஜாமீன்) ஏதுமின்றி வழங்க உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கடன் என்பதே இதன் சிறப்பம்சம்.
இந்தத் திட்டத்தின்கீழ் கடன்பெறத் தகுதியுள்ள குறு மற்றும் சிறுதொழில்முனைவோருக்கு ரூ.2 கோடி வரை தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட மண்டல ஊரக வங்கிகள் (Regional Rural Bank) மூலமாகத் தவணைக்கடன் (Term loan) மற்றும் தொழில்ரீதியான அன்றாடச் செலவினங்களுக்குத் தேவைப்படும் நடப்புக் கடன்கள் (working capital) வழங்கப் படுகின்றன.
மும்பையைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கிவரும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கிக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது. இந்தத் திட்டத்தின்கீழ் கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேலே சொன்ன வங்கிகளை அணுகி, தங்கள் வணிகத் திட்டத்தைக் குறித்து விளக்கி கடனுக்கான அனுமதியைப் பெறும் பட்சத்தில், பிணையத்திற்கான விண்ணப்பத்தைத் தொடர்புடைய வங்கி அதிகாரிகளே பெற்றுக் கொள்வார்கள்.
இதற்காகத் தொழில்முனைவோர் தனியாக விண்ணப்பம் ஏதும் சமர்ப்பிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், மேற்படி பிணையத்தைப் பெறுவதற்காகக் கடன்பெறும் பயனாளிகள், அவர்களுக்கு அனுமதிக்கப்படும் கடனின்மீது ஒவ்வோர் ஆண்டு மார்ச் 31-ம் தேதி, அவர்கள் கணக்கில் நிலுவையிலிருக்கும் தொகைமீது 2% வரை உத்தரவாதக் கட்டணத்தைக் கடன் நிறை வடையும் காலம் வரை சி.ஜி.டி.எம்.எஸ்.இ-க்கு செலுத்தவேண்டும். இந்தக் கட்டணத்தையும் வங்கிகளே கடன் வாங்கிய வாடிக்கையாளரிட மிருந்து பெற்றுச் செலுத்திவிடும்.’’
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். 12-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். நான் சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் உறுதியாக இருக்கிறது. இதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று வழிகாட்ட முடியுமா?
ஜெயராஜ், காரிமங்கலம்.

பி.மோகன்ராம், இயக்குநர், தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம், தருமபுரி.
‘‘சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்று சொல்லியிருக் கிறீர்களே தவிர, என்ன மாதிரியான தொழில் என்று நீங்கள் சொல்லவில்லை. என்றாலும், நீங்கள் விற்பனையை மையமாகக்கொண்ட தொழிலைத் தாராளமாகத் தொடங்கலாம். அதாவது, ஒரு பொருளை அல்லது பல பொருள்களை வாங்கி, 10 முதல் 15% லாபத்துக்கும் விற்கும் தொழிலை நீங்கள் செய்யலாம்.
இதற்கு நீங்கள் முதலில் செய்யவேண்டியது, மார்க்கெட் சர்வே. நீங்கள் தொழில் செய்ய விருக்கும் பகுதியில் என்ன மாதிரியான பொருளாதார வசதிகொண்ட மக்கள் வசிக்கிறார்கள், இவர்களுக்கு என்ன பொருள்கள் தேவை, மற்றவர்கள் என்னென்ன பொருள்களை விற்கிறார்கள், புதிதாக வேறு என்னென்ன பொருள்களைக் கொண்டுவந்து விற்கமுடியும் என்பது குறித்தெல்லாம் ஒரு சர்வே செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
விற்பனை என்று வரும்போது அதனை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று, வெளி யிலிருந்து பொருள்களை வாங்கிக்கொண்டுவந்து விற்பது; இன்னொன்று, உள்ளூரில் கிடைக்கும் பொருள்களை வெளியூர்களுக்குக் கொண்டு சென்று விற்பது. என்ன பொருளுக்கு எங்கே தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
தொழில் செய்வதற்கான கடையை அல்லது கிடங்கினை முதலில் வாடகைக்குப் பிடியுங்கள். இதில் அதிகம் முதலீடு தேவைப்படாது. உங்கள் தொழிலுக்கான மொத்த முதலீட்டினையும் உங்களால் மட்டுமே செய்ய முடியாது எனில், உங்கள் நண்பர் அல்லது உறவுக்காரரை பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் தொழிலுக்கு வங்கிகளில் கடன் கிடைக்கும். ஆனால், வங்கிக் கடன் பெறுவதற்கு உங்கள் தொழில் திட்டத்தை வங்கியிடம் சரியாக எடுத்துச் சொல்லவேண்டும். வாங்கிய கடனை நிச்சயமாகத் திரும்பத் தந்துவிடுவேன் என்கிற நம்பிக்கையையும் வங்கி அதிகாரிகளிடம் உருவாக்க வேண்டும்.
தொழில் தொடங்கி ஜெயிக்க வாழ்த்துகள்!’’
தமிழகம் முழுக்க உள்ள லட்சக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இதுமாதிரி பல கேள்விகளும் சந்தேகங்களும் வருவது இயற்கையே. இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய பதிலை நிபுணர்களிடமிருந்து தருவதே இந்தப் பகுதியின் நோக்கம். நீங்கள் செய்துவரும் தொழில் பற்றி உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தால், businessclinic@vikatan.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கான பதில் நாணயம் விகடன் இதழில் இடம்பெறும்!