
டெபாசிட் செய்தால் 10.08% வட்டி தருவோம் என்று சொன்னதை நம்பி 400-க்கும் மேற்பட்டவர்கள் பல கோடி ரூபாயை டெபாசிட் செய்தனர்...
பணம், முதலீடு தொடர்பான விஷயத்தில் மக்கள் எவ்வளவு உஷாராக இருந் தாலும் அதையும் மீறி சில மோசடி நிறுவனங்களிடம் சிக்கி அல்லல்படும் நிலையைத் தினம் தினம் பார்த்து வருகிறோம். அப்படியொரு நிறுவனமாக தற்போது செய்திகளில் அடிபடுகிறது பெரம்பூர் பரஸ்பர சகாய நிதி நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தால் 10.08% வட்டி தருவோம் என்று சொன்னதை நம்பி 400-க்கும் மேற்பட்டவர்கள் பல கோடி ரூபாயை டெபாசிட் செய்தனர். இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்கள் வர, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் சிலரை கைது செய்து விசாரித்ததில், தற்போதைக்கு ரூ.28 கோடி மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
பரஸ்பர சகாய நிதி நிறுவனங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் கடன் வாங்க முடியாத சாதாரண மக்களுக்கு சொத்து அடமானக் கடன், தங்கநகை அடமானக் கடன் அளிப்பதுதான் இந்த நிதி நிறுவனங்களின் பணி. தவிர, மக்களிடம் இருந்து டெபாசிட் பணம் பெற்று, வங்கிகளைவிட கொஞ்சம் கூடுதலாக வட்டியைத் தருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
1990-களில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் மிக அதிகமான வட்டி தருவதாக சொல்லி பல்லாயிரம் பேரிடம் பல நூறு கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றியதால், பலரும் பாதிப்படைந்ததை யாரும் மறக்க முடியாது.
பரஸ்பர நிதி நிறுவனங்களை வர்த்தக விவகாரத்துறை (MCA) அமைப்புதான் அனுமதி தந்து, கண்காணித்து வருகிறது. வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கவனித்து கண்காணிப்பது போல, வர்த்தக விவகாரத் துறை இந்த நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. இந்தக் கண்காணிப்பில் குறைகள் நேரும்போதுதான் இது மாதிரியான முறைகேடுகள் நடக்கின்றன. மக்களிடம் இருந்து டெபாசிட்டாகப் பணத்தைப் பெறும் எந்த அமைப்பாக இருந்தாலும், அதை மத்திய, மாநில அரசாங்கங்கள் கட்டாயம் கண்காணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த நிதி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும்.
இந்த நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசியல்வாதிகள் தலையிடுவதால்தான் குளறுபடி நடக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகள் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் தலையீடு செய்தால், அதை உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். இது மாதிரியான தலையீடுகள் நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கையை நேர்மையுடன் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் செயல்படும் எல்லா பரஸ்பர நிதி நிறுவனங்களும் மோசமானவை என்று சொல்ல முடியாது. சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், இந்த நிதி நிறுவனங்களில் மோசடி எதுவும் நடக்காதபடிக்கு விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இவற்றுக்கு மூடுவிழா நடத்தப்படும் நிலை வெகு விரைவிலேயே உருவாகும்!
- ஆசிரியர்