தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... நம் நாடு சந்திக்க வேண்டிய சவால்கள் என்னென்ன?

பொருளாதாரம்...
பிரீமியம் ஸ்டோரி
News
பொருளாதாரம்...

1993-ல் இந்திய ஜி.டி.பி 283 பில்லியன் டாலர். 2023 மார்ச்சில் 3.5 டிரில்லியன் டாலர். இது கிட்டத்தட்ட 12 மடங்கு வளர்ச்சி ஆகும்..!

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மிகப் பெரிய இலக்கை வைத்திருக் கிறது இந்தியா. இந்த இலக்கை எட்ட இன்றைக்கு நம் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது, சர்வதேச அளவில் உள்ள சவால்களையும் நெருக்கடிகளையும் எப்படி சமாளிக்கப்போகிறோம், எந்த வகையில் நாம் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் பேச மிகச் சரியான நபர் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்தான். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர் இது பற்றி விளக்கமாகப் பேசினார். அவர் பேசியதாவது...

அனந்த நாகேஸ்வரன்
அனந்த நாகேஸ்வரன்

பணவீக்கமும், வட்டி உயர்வும்...

“உலக அளவில் தற்போது பொருளாதாரம் நிலையற்றதாக இருக்கிறது என்றே புள்ளிவிவரங் களும், கணிப்புகளும் சொல்கின்றன. சர்வதேச அளவில் நிலவும் நிலையற்றத்தன்மைக்கான குறியீட்டைப் (Uncertainty index) பார்க்கும்போது, அது ஏற்றத்தின் போக்கிலேயே இருக்கிறது.

இந்த நிலையற்றத்தன்மைக்கு முதல் காரணம், பணவீக்கம். அனைத்து நாடுகளும் பணவீக்கத்தைக் குறைவாக வைத்திருக்க முயற்சி செய்தன. ஆனாலும், அவற்றின் சராசரி பணவீக்கம் உச்சத்தில்தான் இருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் உயர்ந் திருக்கிறது. வளர்ந்த நாடுகளின் பணவீக்கம் 2 சதவிகிதமாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தன. ஆனால், அவற்றின் பணவீக்கமானது 8% - 9% என்னும் அளவில் உச்சத்தில் இருக்கிறது. இந்தியாவின் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, கடந்த 60 ஆண்டுகளாக இருந்த சராசரி விகிதமான 7% என்கிற நிலையைவிட, 2022-ல் நாட்டின் பணவீக்கம் 5.9 சதவிகிதம் எனும் அளவில் குறைவாகவே இருக்கிறது.

சர்வதேச பணவீக்கம் இந்த அளவுக்கு உயர ஒரு முக்கியமான காரணம், ரஷ்ய - உக்ரைன் போர். ஆனால், அது உடனடிக் காரணம் மட்டுமே. உண்மையான நீண்ட கால காரணம், வளர்ந்த நாடுகள் சந்தையில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க மிகப் பெரிய அளவில் பணத்தை அச்சிட்டு, புழக்கத்துக்கு விட்டதுதான். கோவிட் பெருந்தொற்று காலத்துக்கு முன்பே அதாவது, 2008 உலகப் பொருளாதார நெருக்கடி வந்ததில் இருந்தே வளர்ந்த நாடுகள் ஊக்குவிப்பு நிதியாகப் பெருமளவில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டன. அவற்றிலிருந்து பல்வேறு நாடுகள் வெளிவருவதற்கு முன்பாகவே கோவிட் பெருந்தொற்று வந்ததால், முன்பைவிட அதிகமான பணத்தை அச்சிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மக்களிடம் அதிக அளவில் பணம் புழங்க ஆரம்பித்தது. வட்டி விகிதமும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருந்தது. சந்தையில் அதிகரித்த பணப் புழக்கத்துடன், விநியோக சங்கிலியில் உண்டான நெருக்கடி, எண்ணெய், உணவு, உரம் உள்ளிட்டவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தியது. இவை எல்லாம் சேர்ந்து தான் சர்வதேச அளவில் வரலாறு காணாத பணவீக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பணவீக்க உயர்வானது அவ்வளவு சீக்கிரம் பழைய நிலைக்குத் திரும்பாது என்பது இந்தியா வின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கு எதிராக இருக்கும் முதன்மை சவால்.

இரண்டாவது முக்கியமான சவால், வட்டி விகித உயர்வு. உலகம் முழுவதுமுள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் 2022-ல் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தின. இந்த வட்டி விகித உயர்வு 2023-லும் தொடரும் என்பதே நிதர்சனம். இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்கிற பாரபட்சம் இல்லை.

வட்டி விகித சுழற்சியில் எல்லா நாடுகளும் ஒரு போக்கில் செல்கிறது எனில், சீனா மட்டும் தனி வழியில் செல்கிறது. எல்லா நாடுகளும் வட்டி விகிதத்தை உயர்த்திவரும் சூழலில், சீனா வட்டி விகிதத்தைக் குறைத்திருக் கிறது. மேலும், கோவிட்டுக்குப் பிறகு பொருளாதார நெருக்கடி யில் இருந்து மீண்டுவருவதற் கான அத்தனை முயற்சிகளிலும் சீனா ஈடுபட்டிருக்கிறது.

சாதகமான அம்சங்கள்...

2023-ல் சர்வதேச உற்பத்தி இண்டெக்ஸ் சரிவின்போக்கில் இருக்கிறது. அதே போல, சர்வ தேச பொருள்கள், சேவைகள் வர்த்தகமும் 2023-ல் குறையும் எனத் தெரிகிறது. சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும் போது, இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகமும் நிச்சயம் குறையும். ஆனால், இந்தியாவுக்கான வளர்ச்சி சரிவு என்பது இறக்கத் தின் போக்கில் இருக்காது. காரணம், சர்வதேச பொருளா தார வளர்ச்சி குறையும்போது, வட்டி விகிதம் உயர்த்துவது நிறுத்தப்பட்டு, வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படும் நிலை உருவாகும். அப்போது, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிக வருமானம் தரக்கூடிய சந்தை களை நோக்கி கவனத்தைத் திருப்புவார்கள். அப்படித் திரும்பும்போது, அவர்களின் தேர்வில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்கும். சீனாவில் பொருள்களை உற்பத்தி செய்து வந்த பல சர்வதேச நிறுவனங்கள் ஏற்கெனவே அங்கிருந்து வெளி யேறி, இந்தியாவில் தங்களது உற்பத்தி நிலையங்களை அமைக்கும் முயற்சிகளில் இருக் கின்றன.

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை வரும்போது கச்சா எண்ணெய், கமாடிட்டிகளின் விலை உயர்வும் முடிவுக்கு வந்து விலை குறையவும் வாய்ப்புள்ளது. எனவே, ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் இந்தியாவுக்குச் சாதகமான விஷயங்கள் நடக்கும்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... நம் நாடு சந்திக்க வேண்டிய சவால்கள் என்னென்ன?

கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டோம்...

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உண்டான பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா முழுமையாக மீண்டுவிட்டதைப் பல்வேறு புள்ளி விவரங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இதைப் பொருளாதார ஆய்வறிக்கையில் (Economic survey - 2023) விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். தனிநபர் நுகர்வு நாட்டின் மொத்த ஜி.டி.பி-யில் 2019-ல் 56.4 சதவிகிதமாக இருந்தது. 2023-ல் 59.9 சதவிகிதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜி.டி.பி வளர்ச்சி அடையும்போது தனிநபர் நுகர்வும் வேகமாக வளர்ச்சி அடைவது நாட்டின் வளர்ச்சிக்குச் சாதகமான அம்சம். நுகர்வு அதிகரிக்கும்போது அதற்கேற்ப சந்தையில் முதலீடுகள் அதிகரிக்கும். அதன் விளைவாக, வேலை வாய்ப்பு உருவாக்கமும் மேம்படும். இதற்கான செயல்பாடு களை இந்தியச் சந்தையில் பார்க்கமுடிகிறது.

மேலும், ஏற்றுமதி வர்த்தகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2022-23 ஏப்ரல் முதல் பிப்ரவரியிலான காலத்தில் சேவைத் துறையில் 296.94 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்று மதியும், பொருள்கள் ஏற்றுமதி 405.9 பில்லியன் டாலர் ஏற்றுமதியும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 2020-21-ல் சேவைகள் ஏற்றுமதி 170 பில்லியன் டாலராகவும், பொருள்கள் ஏற்றுமதி 228.9 பில்லியன் டாலராகவும் இருந்தது.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் தொழில்துறை நடவடிக்கையும் நன்றாகவே மேம்பட்டிருக் கிறது. இந்திய உற்பத்தித் துறையின் செயல்பாடு கடந்த 20 மாதங்களாகத் தொடர்ந்து வளர்ச்சியின் போக்கில் இருக்கிறது. இதன்மூலம் உற்பத்தி தொழிலில் மற்ற நாடுகளைவிட இந்தியாவின் செயல்பாடு முன்னிலையில் இருக்கிறது.

அதே போல, சேவைத் துறையின் வணிகமும் இதற்குமுன் இல்லாத அளவில் வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்தியாவின் சர்வதேச வர்த்தகப் பங்களிப்பு ஜி.டி.பி-யில் 45% அளவுக்கு இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சர்வதேச சந்தையில் இந்தியாவின் இடம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அதிகரித்த அரசு செலவினம்...

சமீபத்திய பட்ஜெட்டில் அரசு செலவினங் களுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இந்த ஒதுக்கீடானது 2018 நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2018-ல் 12.3 சதவிகிதமாக இருந்த அரசு செலவினம், தற்போது 22.2% என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், நீண்ட காலமாகத் தனியார் துறை மூலதன செலவினமானது வளர்ச்சி அடையாமலே இருக்கிறது என்கிற கேள்வி பரவலாக எழுப் பப்பட்டு வருகிறது. சமீபத்தில் 3,000 நிறுவனங்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபிக்கு சமர்ப்பித்த அறிக்கை களின்படி பார்க்கும்போது, தனியார் துறை ஏற்கெனவே மூலதன செலவினத்தை அதிகப் படுத்தத் தொடங்கிவிட்டது தெரிகிறது. 2022-23-ல் இந்தியத் தனியார் துறை மூலதன உள்ளீடு ரூ.3.3 லட்சம் கோடியாக இருக் கிறது. மேலும், தொடர்ந்து இது அதிகரித்துவரும் என்பதும் தெரிகிறது. குறிப்பாக, ஃபார்மா, சிமென்ட், டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், கெமிக்கல், கேப்பிடல் கூட்ஸ், சுரங்கம், கட்டுமானம், ஆற்றல், இரும்பு உள்ளிட்ட 10 முன்னணி துறை களில் தனியார்துறை முதலீடு அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டின் வரி வருமானமும் வெகுவாக வளர்ச்சி கண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி வசூல் சராசரியாக மாதம் ரூ.1.2 லட்சம் கோடி என்றிருந்த நிலையில், சமீப மாதங்களாக ரூ.1.5 லட்சம் கோடி யாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் 2023-ல் குறைய ஆரம்பிக்கும். இந்தியாவில் வேளாண் உற்பத்தி 2021-22-ஐ விடவும் 2022-23-ல் 2.5% உயர்ந்து, 323.6 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2023-ல் எல் நினோ (El Nino) சூழல் கொண்டுவரும் சவால்கள் உள்ளன. மார்ச் மாதத்திலேயே வெப்பநிலை அதிகரிப்பை உணர முடிகிறது. இந்த எல் நினோ சூழலால் உணவுப் பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அவற்றின் விலை உயரவும், இதனால் பொருளாதாரத்தில் சிக்கல்கள் வரவும் வாய்ப்புள்ளன. எனவே, இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவுக்கு வேளாண் பொருள்களின் உற்பத்தி மற்றும் இருப்பைத் திட்டமிட வேண்டும்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... நம் நாடு சந்திக்க வேண்டிய சவால்கள் என்னென்ன?

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மாற்றங்கள்...

சர்வதேச மற்றும் உள்நாட்டு சவால்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இவையெல்லாம் குறுகிய காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்கலாம். ஆனால், 2014 முதல் 2020 வரையிலான காலத் தில் பல்வேறு கட்டுப்பாடான நடவடிக்கைகளை நாம் எடுத்து வந்திருக்கிறோம். கடந்த ஆண்டு களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகள், வரும் ஆண்டுகளில் சவால்களை எதிர்கொண்டு இந்தியப் பொரு ளாதார வளர்ச்சியை உறுதி செய்ய உதவியாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக வளர்ச்சிக்குச் சாதகமாக உள்ள துறைகளில் அரசின் கவனம் இருந்து வரு கிறது. முக்கியமாக, புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உற்பத்தியின் இலக்கு 500 ஜிகாவாட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக நடைமுறைகள் அனைத்தையும் நம்பிக்கையின் அடிப்படையில் டிஜிட்டல் மயமாகவும், நேரடி மனிதத் தலையீடுகள் எதுவும் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக், இ-கே.ஒய்.சி (e-KYC), ஃபேஸ்லெஸ் அசெஸ்மென்ட், செல்ஃப் அசெஸ்மென்ட் உள்ளிட்ட பல முன்னெடுப்புகள் மூலம் நிறுவனம் மற்றும் தனிநபர் சார்ந்த அரசு நடைமுறைகள் விரைவாகவும் எளிதாகவும் மாறியிருக்கிறது. யு.பி.ஐ பரிவர்த் தனையில் சாதனைகளைப் பதிவு செய்துவருகிறது. பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் மூலம் தனியார் துறையின் பங்களிப்பு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் சாலைகள், மேம்பாலங்கள், ரயில்வே வழித்தடங்கள், மின் விநியோகம் என அனைத்தும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டுவருகிறது.

கடன் வளர்ச்சி அதிகரிக்கும்...

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியத் தொழில் துறையின் கடன் சுழற்சியைப் பார்க்கும்போது, 2000-லிருந்து 2010 வரையிலான காலத்தில் கடன் வளர்ச்சி அதிக ஏற்றத்தைச் சந்தித்தது. 2011-க்குப் பிறகு கடன் வளர்ச்சி குறைந்தது. 2011 - 2020 இடைப்பட்ட காலத்தில் நிறுவனங்களின் நிதிநிலையும், வங்கிகளின் நிதிநிலையும் கடன்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே விரும்பின. இதனால் சந்தையில் கடன் வளர்ச்சி இல்லை; முதலீடுகளும் இல்லை. தற்போது மீண்டும் கடன் வளர்ச்சி அதிகரிக்க உள்ளதால், முதலீடுகள் அதிகரிக்க உள்ளன. தற்போதைய சூழலில் கனிமங்கள் மற்றும் ரேர் எர்த் மினரல்ஸ் போன்றவை உலகில் நான்கு நாடுகளில் மட்டுமே இருக்கின்றன. அவற்றைப் பயன்பாட்டுக்கு மாற்றும் பணியில் இருக்கும் ஒரே ஒரு நாடு, சீனா. மற்ற 185 நாடுகளும் நுகரும் நாடுகளாகவே உள்ளன. எனவே, முழுமையாக ஆற்றலுக்காக வேறு நாட்டை நம்பியிருக்கும் சூழல் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்க வாய்ப்புள்ளது. அந்தச் சூழலில் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவது சவாலாகவே இருக்கும்.

30 ஆண்டுகளில் 12 மடங்கு வளர்ச்சி...

ஐ.எம்.எஃப் கணிப்பின்படி, மார்ச் 2023-ல் இந்தியாவின் ஜி.டி.பி 3.5 டிரில்லியன் டாலராக இருக்கும் எனக் கூறுகிறது. 2026-27-ல் இந்திய ஜி.டி.பி 4.9 டிரில்லியன் டாலராகவும், 2027-28-ல் 5 டிரில்லியன் டாலரைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 1993-ல் இந்திய ஜி.டி.பி 283 பில்லியன் டாலர். 2023 மார்ச்சில் நமது ஜி.டி.பி 3.5 டிரில்லியன் டாலர். இது கிட்டத்தட்ட 12 மடங்கு வளர்ச்சி. கடந்த 30 ஆண்டு களில் இந்தியா சாதித்திருக்கிறது. எனவே, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கையும் இந்தியா நிச்சயம் இந்தியா எட்டும் எனலாம். ஆனால், எண்களைவிட, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்றார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் சவால்களையும் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் பேச்சிலிருந்து நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது!

எப்படி இருக்கிறது நம் கரன்சி செயல்பாடு?

“நமது கரன்சியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்த்தால், வட்டி விகிதம் ஏற்றத்தின்போக்கில் இருக்கும்போது நம் நாணயத்தின் மதிப்பு பலவீனமாக இருக்கிறது. அதிக வட்டி விகிதம், டாலரை இருப்பு வைப்பதை ஊக்குவிப்பதாக அமைகிறது. நம்முடைய கரன்சி பலவீனமாகும்போது குறுகிய காலத்தில், ஏற்றுமதித் துறைக்குப் பலன் தரும். ஆனால், வெளிநாடுகளிலிருந்து டாலர்களை நம் நாட்டுக்கு அனுப்பத் தயக்கம் காட்டுவார்கள். ரூபாய் மதிப்பு அதிகபட்சமாகக் குறையும் வரை காத்திருப்பார்கள். மேலும், டாலர் வலுவடையும்போது நம் இறக்குமதி செலவும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் போன்ற பொருள்களை இறக்குமதி செய்ய அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ரூபாய் மதிப்பு பலவீனமடைவது நல்லதா, கெட்டதா என்பதை நம்முடைய ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் நாம் தரக்கூடிய பரிவர்த்தனை மதிப்பை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும்.

அமெரிக்காவில் 2023-ல் பொருளாதார மந்தநிலை வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பெரும்பான்மையான கணிப்புகள் கூறுகின்றன. இந்தக் கணிப்புகள் உண்மையானால், டாலர் மதிப்பு குறைய ஆரம்பிக்கும்; அப்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதை ஃபெடரல் வங்கி நிறுத்தும். இதனால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்காது. ஆக, அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வந்தால், அதனால் இந்தியாவுக்கு பல சாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. மேலும், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்வதற்கான அத்தனை திறன்களையும் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை” என்றார் அனந்த நாகேஸ்வரன்.