
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அவசியத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர நினைக்கும் அனைத்துப் பெற்றோர்களும் கொஞ்சம் பணத்தையாவது இனி தங்களின் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யத் தொடங்கலாம்!
குழந்தைகள் மீது நாம் காட்டும் அக்கறை அலாதியானது. அவர்களுக்கு நல்ல கல்வியைத் தருவது தொடங்கி, அவர்களுக்காக நிறைய சொத்து சேர்ப்பது வரை நாம் செய்யும் பல விஷயங்கள் குழந்தைகளை மையமாக வைத்தே செய்கிறோம்.
குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்காக வீடு வாங்குவது, தங்க நகைகளை வாங்கி வைப்பது எல்லாம் கடந்த காலங்களில் எல்லோரும் செய்யக்கூடிய முக்கியமான முதலீடாக இருந்தது. ஆனால், கடந்த 10, 20 ஆண்டுகளாக குழந்தை களின் பெயரில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இப்படி முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு உதவுகிற மாதிரி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அமைப்பும் முக்கியமான விதிமுறையை மாற்றி இருக்கிறது. அதாவது, பெற்றோர்கள் தங்கள் வங்கிக் கணக்கின் மூலமாகவே மியூச்சுவல் ஃபண்டில் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறது. இதனால், இனி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பெயரில் எந்தத் தடையும் இல்லாமல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும்.
குழந்தைகள் பெயரில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். முதல் நன்மை, நீண்ட காலத்தில் முதலீடு செய்ய முடியும். குழந்தை பிறந்தவுடன் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் ரூ.3,000 என 240 மாதம் முதலீடு செய்து, அதற்கு 12% லாபம் கிடைத்தால், குழந்தையில் 20-வது வயதில் ரூ.27 லட்சத்துக்குமேல் கிடைக்கும். இந்தப் பணத்தைக் குழந்தையின் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல இன்னொரு 3,000 ரூபாயை மாதம்தோறும் சேர்த்தால், குழந்தை வளர்ந்து, திருமணம் செய்யும்போது அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்யும்போது சரியான ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்து, அதில் தொடர்ந்து முதலீடு செய்வதுடன், ஃபண்டின் போக்கைத் தொடர்ந்து கண்காணிப்பதையும் பெற்றோர்கள் அவசியம் செய்ய வேண்டும்!
குழந்தைகள் பெயரில் பெற்றோர்கள் செய்து வரும் இந்த முதலீடு குறித்து அவர்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லி வளர்ப்பதன்மூலம் அவர்களால் இந்த முதலீடு குறித்து நன்கு புரிந்துகொள்ள முடியும். இப்படி வளரும் குழந்தை களுக்கு நிதி நிர்வாகம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களும் படித்து முடித்து, வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கியவுடனே தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்யத் தொடங்கிவிடுவார்கள். இதனால் அவர்கள் தேவையில்லாத செலவுகளைச் செய்வதைத் தவிர்க்க முடியும். பணம் சேர்க்கும் கலையைக் குழந்தைகள் சிறுவயது முதலே கற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் கடன் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாக மாட்டார்கள். தன் எதிர்காலத் தேவைகளுக்கான பணத்தைத் திட்டமிட்டு சேர்த்து, நிதிச் சுதந்திரத்துடன் நிம்மதியாக வாழ்வார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் அவசியத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர நினைக்கும் அனைத்துப் பெற்றோர்களும் கொஞ்சம் பணத்தையாவது இனி தங்களின் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யத் தொடங்கலாம்!
- ஆசிரியர்