பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

குழந்தைகளின் படிப்புக்கும் திருமணத்துக்கும் சுலபமாகப் பணம் சேர்க்கும் வழிகள்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

குழந்தைகள் தின ஸ்பெஷல்

பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான முதலீடு என்கிறபோது நம்மில் பலருக்கு உடனே நினைவுக்கு வருவது சில்ட்ரன் இன்ஷூரன்ஸ் பிளான்கள்தான். இந்தத் திட்டங்களை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இந்த சில்ட்ரன் பிளான்கள் ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு கலந்த திட்டமாக உள்ளன. நாம் எப்போதும் ஆயுள் காப்பீட்டையும் முதலீட்டையும் ஒன்றாகச் சேர்த்து எடுப்பதால், எந்தப் பலனும் (காப்பீடு, முதலீடு) முழுமையாகக் கிடைக்காது. மேலும், இந்த பாலிசிகளில் வருமானம் ஈட்டாத பிள்ளைகளின் பெயரில் ஆயுள் காப்பீடு இருக்கும். இது வருமானம் ஈட்டும் நபருக்குதான் ஆயுள் காப்பீடு தேவை என்கிற கருத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்பதால், அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

என்.விஜயகுமார் 
நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார் நிதி ஆலோசகர்,  https://www.vbuildwealth.com/

இதேபோல் மணிபேக் பாலிசிகள், யூலிப் பாலிசிகளையும் தவிர்ப்பது நல்லது. இந்த பாலிசிகளில் கட்டணம் மிக அதிகம். அடுத்து மணிபேக் பாலிசிகளின் மூலம் நீண்ட காலத்தில் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 3.5% முதல் 5 சதவிகிதமாகத்தான் இருக்கும்.

அடுத்து யூலிப் பாலிசிகளில் ஏகப்பட்ட கட்டணங்கள் இருக்கின்றன. இதுவும் ஆயுள் காப்பீடு மற்றும் முதலீடு கலந்த பாலிசி என்பதால் தவிர்ப்பது நல்லது. அடுத்து மிக முக்கியமாக இந்த காப்பீடு பாலிசிகளின் மூலம் கிடைக்கும் தொகை பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் கல்யாணத்துக்குத் தேவையான தொகையைத் திரட்டித் தராது.

அடுத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சில்ட்ரன்’ஸ் ஃபண்ட் (Children’s Fund) ஆகும். இந்த ஃபண்டின் முதலீட்டு லாக் இன் காலம் (Lock-in) குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது பிள்ளைகள் மேஜர் வயதை அடையும் வயது எது முந்துகிறதோ அது எடுத்துகொள்ளப் படுவதாக இருக்கிறது. இதன் லாக் இன் காலத்தைக் கருத்தில்கொண்டு, இந்த ஃபண்டை பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கு எனத் தேர்வு செய்வதைத் தவிர்க்கலாம்.

லாக் இன் பீரியட் காலத்தில் அபரிமிதமான வருமானம் கொடுத்திருந்தால் அதை வெளியே எடுத்து பாதுகாப்பான முதலீட்டுக்கு மாற்றுவது இயலாத காரியமாக இருக்கும் என்பதால் இந்த ஃபண்டை பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கு தவிர்க்கலாம்.

பெற்றோருக்கு ஆயுள் காப்பீடு அவசியம்...

பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்கான முதலீட்டை ஆரம்பிக்கும் முன் முதலில் பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் மற்றும் குடும்பத்தின் இதர நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆயுள் காப்பீட்டுத் தொகை, குடும்பத்தின் ஆண்டு மொத்த செலவைப் போல் 15 முதல் 20 மடங்கு வரைக்கும் இருக்கலாம். இங்கே மொத்த செலவு என்பது குடும்பச் செலவு, முதலீடு, கடன் தவணை போன்றவற்றுக்குச் செல்லும் எல்லா தொகையும் சேர்ந்தது ஆகும்.

உதாரணத்துக்கு, ஒரு குடும்பத்தின் மொத்த மாதச் செலவு ரூ.60,000 என வைத்துக் கொள்வோம். ஆண்டுச் செலவு ரூ.7.2 லட்ச மாக இருக்கும். இதன் 15 மடங்குக்கு சுமார் ரூ.1 கோடிக்கு டேர்ம் பிளான் எடுப்பதாக வைப்போம். இந்த நிலையில் ஏதாவது அசம்பாவிதத்தில் குடும்பத் தலைவர் இல்லை என்றாலும், இந்தக் காப்பீட்டுத் தொகை, குடும்பச் செலவு மற்றும் பிள்ளைகளின் எதிர்கால செலவைச் சமாளிக்க உதவும்.

இந்தியாவில் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்வதற்கு எனப் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றன. கூடியவரைக்கும் பிள்ளை பிறந்த உடன் அதன் கல்வி மற்றும் கல்யாணச் செலவுக்கு முதலீட்டை ஆரம்பித்துவிடுவது நல்லது. சீக்கிரமாக முதலீட்டை ஆரம்பிக்கும்போது மாதம் குறைவாக முதலீடு செய்தால் போதும்.

உதாரணமாக, பிள்ளைகளின் உயர்கல்விக்கு பிள்ளையின் 18-வது வயதில் ரூ.25 லட்சம் தேவை என வைத்துக்கொள்வோம். பிள்ளை பிறந்ததும் முதலீட்டை ஆரம்பித்தால் மாதம் ரூ.3,270 முதலீடு செய்து வந்தால் போதும். இதுவே உயர்கல்விக்கு 10 ஆண்டுகள் இருக்கும் நிலையில் முதலீட்டை ஆரம்பித்தால் மாதம் ரூ.10,750 முதலீடு செய்ய வேண்டும்.

பிள்ளைகளை வெளிநாடுகளில் எம்.பி.ஏ, மருத்துவம் படிக்க வைக்க திட்டமிடுபவர்கள் வெகு சீக்கிரமாக முதலீடுகளை ஆரம்பிப்பது நல்லது. (விரிவான விவரத்துக்கு பார்க்க அட்டவணை 1)

குழந்தைகளின் படிப்புக்கும் திருமணத்துக்கும் சுலபமாகப் பணம் சேர்க்கும் வழிகள்!

முதலீட்டுக் காலமும் திட்டங்களும்..!

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் எனில், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்து வரலாம்.

முதலீட்டுக் காலம் நடுத்தரமாக (ஐந்து முதல் 8 ஆண்டுகள்) இருக்கிறது என்றால் ஹைபிரிட் ஃபண்ட், லார்ஜ்கேப் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். இவற்றின் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 11% - 12% வருமானம் எதிர்பார்க்கலாம்.

இவர்கள் திரட்டப்படும் முதலீட்டுத் தொகையில் 65% வரை பங்குச் சந்தை சார்ந்து முதலீடு செய்யப்படும் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்/ டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட், மல்ட்டி அஸெட் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளின் மூலம் ஆண்டுக்கு சுமார் 9% முதல் 11% வரை வருமானம் எதிர்பார்க்கலாம்.

இப்படிச் செய்யும்போது பிள்ளைகளின் உயர்கல்வி செலவுக்கு பணம் எடுக்கும் நிலையில் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் (முதலீடு செய்து ஓராண்டு மற்றும் அதற்கு மேல்) நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கு வரி கிடையாது. மீதி ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும். கல்விச் செலவுக்கு ஆண்டுதோறும் பணம் எடுக்கும்போது ஒவ்வோர் ஆண்டும் ரூ.1 லட்சம் வரி விலக்கைப் பெற முடியும்.

நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மல்ட்டி கேப் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். லார்ஜ்கேப், மல்ட்டி கேப், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டு களில் முதலீடு செய்வதாக இருந்தால் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அனைத்திலும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி இல்லை. அதற்கு மேற்படும் லாபத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.

முதலீட்டுக் காலம் மிக அதிகமாக 15, 20 ஆண்டுகள் இருக்கிறது என்றால் உயர்கல்விக் கான முதலீட்டுத் தொகையில் ஒரு பகுதியை மிட் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வரலாம். இந்த ஃபண்டுகளின் மூலம் 15% அளவுக்கு வருமானம் எதிர்பார்க்கலாம்.

குழந்தைகளின் படிப்புக்கும் திருமணத்துக்கும் சுலபமாகப் பணம் சேர்க்கும் வழிகள்!
குழந்தைகளின் படிப்புக்கும் திருமணத்துக்கும் சுலபமாகப் பணம் சேர்க்கும் வழிகள்!

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்

இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெறலாம். வட்டி வருமானத்துக்கும் வரி கட்ட தேவையில்லை. இந்த பி.பி.எஃப் திட்டம் மத்திய அரசின் ஓய்வுக்காலத் திட்டமாகும். அதனால் ரிஸ்க் கிடையாது.

தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப் படுகிறது. இது ஆண் பிள்ளை களின் கல்விச் செலவுக்கு முதலீடு செய்ய ஏற்றத் திட்டமாக இருப்பதால், இது பொன் மகன் சேமிப்புத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கணக்கை தபால் அலுவலகம் மற்றும் முன்னணி வங்கிகளில் ஆரம்பிக்க முடியும். இதன் முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இடையில் முழுப் பணம் எடுக்க முடியாது. இடையில் பகுதி பணம் எடுக்கும் வசதி மற்றும் கடன் வாங்கும் வசதி இருக்கிறது.

தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் ஆளுக்கு ரூ.1.5 லட்சம் என நிதி ஆண்டில் ரூ.3 லட்சம் வரைக்கும் முதலீடு செய்யலாம்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

மத்திய அரசு பெண் பிள்ளை களின் எதிர்காலத்துக்கு முதலீடு செய்வதற்கு என பிரத்யேகத் திட்டமாகச் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை (Sukanya Samriddhi) வைத்திருக்கிறது. பத்து வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் பெற முடியும். அதாவது, பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குள்ளான பிள்ளைகளின் பெயரில்தான் இந்தச் சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்க முடியும்.

பெண் பிள்ளையின் 21 வயதில் தான் படிப்பு அல்லது கல்யாணச் செலவுக்கு பணம் கிடைக்கும். அரசு திட்டம் என்பதால் மூலதனம் மற்றும் வட்டியில் ரிஸ்க் இல்லை. இந்தத் திட்டத்தில் முன்னணி வங்கிகள், தபால் அலுவலகம் மூலம் சேர முடியும்.

இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு பெற்றோருக்கு நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும்; வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

குறுகிய காலத் தேவைக்கு...

பிள்ளையின் கல்வி, கல்யாணத்துக்கு குறுகிய காலம் அதாவது, மூன்று ஆண்டுகளுக்குள்தான் இருக்கிறது என்றால் நாம் மேலே குறிப்பிட்ட எந்தத் திட்டமும் கைகொடுக்காது. அது போன்ற நிலையில் குறுகிய கால கடன் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட்களில் பணத்தைச் சேர்த்து வருவதுதான் பாதுகாப்பானது.

குறுகிய காலத் தேவைக்கு ஆர்.டி அல்லது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். வரிக்கு பிந்தைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கும். அதற்கு முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

கடன் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகான நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு, 20% வரி கட்டினால் போதும். ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீட்டுக் காலம் எவ்வளவாக இருந்தாலும் வட்டி வருமானத்துக்கு அவரவர் எந்த வருமானப் பிரிவில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டி வரும்.

எப்போது எஸ்.ஐ.பி, எப்போது மொத்த முதலீடு?

ரிஸ்க் இல்லாத திட்டங்களில் மொத்த முதலீடு செய்தால் தப்பில்லை. ஆனால், பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கு ஏற்ப வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்யும் போது மாதம்தோறும் குறிப்பிட்டத் தொகை முதலீடு செய்யும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீட்டை மேற்கொண்டு வருவது லாபகரமாக இருக்கும்.

மொத்தத் தொகை கையில் இருக்கிறது; பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது என்றால், கடன் ஃபண்ட் ஒன்றில் மொத்த முதலீட்டை செய்துவிட்டு அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஃஸ்பர் பிளான் (எஸ்.டி.பி) முறையில் ஈக்விட்டி ஃபண்டுக்கு 12 முதல் 18 கால அளவுக்கு முதலீட்டை மாற்று வது லாபகரமாக இருக்கும்.

சந்தை தொடர்ந்து ஏறுமுக மாக இருக்கும் காலத்தில் மட்டுமே மொத்த முதலீடு லாபகரமாக இருக்கும். ஆனால், இந்தியப் பங்குச் சந்தை இது வரைக்கும் அப்படி இருந்தது இல்லை.

பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணத்துக்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, முதலீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை எதிர்பார்ப்பவர்கள், பங்குச் சந்தை சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.

இனி ஏன் தயக்கம்? இன்றைக்கே பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணத்துக்கான முதலீட்டை ஆரம்பிக்க வேண்டியதுதானே?

திருமணத்துக்கும் திட்டமிடுங்கள்..!

பெண் பிள்ளைகள் என்கிறபோது, சீர் செய்ய வேண்டியது இருக்கலாம். தங்க நகை அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டியிருக்கலாம். இந்தத் தேவைக்கு கல்விக்கு திட்டமிட்டதுபோல் முதலீடு செய்து வரலாம். பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள், தங்க நகையாக வாங்கி சேர்ப்பதற்குப் பதில் கோல்டு பாண்ட், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் போன்ற காகித தங்க முதலீடுகளை மேற்கொண்டு வரலாம். இப்படிச் செய்வதால் கல்யாணத்தின்போது இந்த முதலீடுகளை விற்று அப்போதுள்ள மாடலில் புதிய நகையை வாங்கிக்கொள்ள முடியும். நகையாக வாங்கி வைத்திருக்கும்பட்சத்தில் மாடல் மாறி போயிருக்கும்; பழைய நகையாக மாறியிருக்கும். இதை மாற்றி புதிய நகை வாங்குவது என்றால் மீண்டும் சேதாரம், செய்கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.