தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கல்லூரிக் கட்டணம், கல்யாணச் செலவுகள்... கடன் வாங்காமல் சமாளிக்க கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டம்!

முதலீட்டுத் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டுத் திட்டம்

பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கான திட்டமிடலும் முதலீடும் எப்படி இருக்க வேண்டும்..?

ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ், சென்னை

நம் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்; ஊரே மெச்சும்படி அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற ஆசை இல்லாத பெற் றோர்களே இருக்க முடியாது. இந்த ஆசை களைப் பல பெற்றோர்கள் கடன் வாங்கிதான் நிறைவேற்றுகிறார்கள்.

ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ், சென்னை
ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ், சென்னை

உயர்கல்விக்கு வாங்கிய கடனை ஒருவழியாகக் கட்டிவரும் வேளையில், பிள்ளையின் திருமணம் வந்துவிடுகிறது. கையில் இருக்கும் பணத்தை வைத்து முக்கியமான செலவுகளைச் செய்துவிட, மேற்கொண்டு தேவைப்படும் பணத்துக்கு பர்சனல் லோன் உட்பட ஏதாவது ஒரு வகையில் கடன் வாங்கிதான் சமாளிக்கிறார்கள்.

இப்படி வாங்கும் கடனைத் திரும்பக் கட்டவே 10, 15 ஆண்டுகள் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இதனால், ஓய்வுக் காலத்துக்காகச் சேர்க்க வேண்டிய தொகுப்பு நிதியை அவர்களால் சேமிக்க முடியாமலே போய்விடுகிறது. கடைசிக் காலத்தில் கையில் இருக்கும் மிகக் குறைந்த பணத்தை வைத்தோ, மகனோ மகளோ தரும் பணத்தை நம்பியோ வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, தவிக்கும் பெற்றோர்கள் இன்றைக்குப் பல ஆயிரம் பேர் உள்ளனர்.

கல்லூரிக் கட்டணம், கல்யாணச் செலவுகள்... கடன் வாங்காமல் சமாளிக்க கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டம்!

இன்றுள்ள நிலையில், பணத் தேவைகளுக்காக மகனையோ, மகளையோ நம்பி இருக்க முடியாது என்பதே உண்மை. காரணம், அவர்களின் குடும்பச் சூழல் பெற்றோர்களுக்கு உதவுகிற மாதிரியும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். அதற்காக அவர்களைக் குறை சொல்வதைவிட, அது மாதிரியான சூழல் வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

திட்டமிடல்தான் சிறந்த தீர்வு...

இந்தப் பிரச்னைக்கு மிகச் சிறந்த தீர்வு, பிற்பாடு வரும் இந்த முக்கியமான செலவு களுக்கு முன்கூட்டியே பணத்தை முதலீடு செய்து, சேர்க்கத் தொடங்குவதுதான். இந்தத் திட்டமிடலை சரியாக நிறைவேற்றும் பெற்றோர்கள் யாரும் தங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்காகவோ, திருமணத்துக் காகவோ, தங்களின் ஓய்வுக் காலத்துக்காகவோ கடன் வாங்க வேண்டிய அவசியமே இருக்காது என்பது நிச்சயம்.

பிள்ளைகளின் படிப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றுக்கான திட்டமிடலும் முதலீடும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கும்முன், பணவீக்கம் என்கிற முக்கியமானதொரு விஷயத்தைப் பார்த்துவிடுவோம்.

பணவீக்க விகிதத்துக்கேற்ப சேமிப்பு...

பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான பணத்தைச் சேமிப்பதில் நம்மவர்களுக்கு இணையாக உலகில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் போட்டு வைத்திருப்பது, ரெக்கரிங் டெபாசிட் கணக்கில் பணம் சேர்ப்பது, தங்க நகை வாங்கி வைப்பது, நகைச் சீட்டு கட்டுவது என நம்மவர்கள் செய்யும் முதலீடுகள் பலப்பல.

ஆனால், இந்த மாதிரியான வகையில் எல்லாம் பணம் சேர்ப்பது சரியானதா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். இந்த வகையான சேமிப்புகள் எல்லாம் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை அளிப்பவையாக இல்லை. காரணம், இன்றைக்கு நம் நாட்டில் பணவீக்க விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பணவீக்கம் என்பது வேறு ஒன்றுமல்ல, விலைவாசி உயர்வுதான். இந்தப் பணவீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கல்லூரிக் கட்டணம், கல்யாணச் செலவுகள்... கடன் வாங்காமல் சமாளிக்க கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டம்!

எகிறிவரும் கல்விச் செலவு....

நம் நாட்டில் நுகர்வோர் பணவீக்க விகிதம் சுமார் 6% - 7 சதவிகிதமாக இருக்கும் நிலையில், கல்விச் செலவுக் கான பணவீக்க விகிதம் 10% - 12 சதவிகிதமாக இருக்கிறது.

இனிவரும் காலத்திலும் இந்தச் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகும். உதாரணமாக, கல்விப் பணவீக்க விகிதம் 10% எனில், 2016-ம் ஆண்டில் இந்தியாவில் பொறியியல் படிப்புக்கான செலவு சுமார் ரூ.8 லட்சமாக இருந்தது. அது 2020-ல் ரூ.12 லட்சமாக அதிகரித்தது. 2023-ல் சுமார் ரூ.17 லட்சமாக அதிகரித்து உள்ளது. இது 2025-ல் ரூ.20 லட்சமாகவும் 2030-ல் ரூ.30 லட்சமாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பிள்ளைகளின் உயர்கல்வி செலவுகளுக்குத் திட்டமிடுபவர்கள் பணவீக்க உயர்வையையும் கணக்கில் கொண்டு அதற்கேற்ப அதிக தொகையை முதலீடு செய்வது அவசியம்.

கல்விக் கடன் வாங்கினால்...

பிள்ளைகளின் உயர்கல்வி செலவுக்கு கல்விக் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் பலரும் இருக்கவே செய்கிறார்கள். ரூ.25 லட்சத்தை கல்விக் கடனாக ஒருவர் வாங்குகிறார். அந்தக் கடனை 10 ஆண்டு களில் திரும்பக் கட்டுகிறார் எனில், மாதத் தவணையாக ரூ.35,870 கட்ட வேண்டி இருக்கும். அதாவது, 10 ஆண்டுகளில் மொத்தம் கட்டும் தொகை ரூ.43 லட்சமாக இருக்கும். இதில் வட்டியாகக் கட்டியது மட்டும் ரூ.18 லட்சம் ஆகும். மாதம்தோறும் ரூ.3,275 முதலீடு செய்வது சரியா அல்லது மாதம்தோறும் ரூ.35,870 கடன் தவணை செலுத்துவது சரியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும், கல்விக் கடன் என்று வரும்போது, நமக்குத் தேவைப்படுகிற அளவுக்கு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறிதான். உதாரண மாக, ரூ.25 லட்சம் தேவை என்கிறபோது, ரூ.15 லட்சம் மட்டுமே கல்விக் கடன் கிடைக்கும் எனில், மீதம் தேவைப்படும் பணத்தை எப்படித் திரட்டுவது என்கிற நெருக்கடியை நாம் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இதேபோலத்தான், திருமணத்துக்கான செலவும். ஒரு திருமணத்தை நடத்த இன்றைக்கு ஆகும் செலவைத் தான் நாம் மனதில் கொள் கிறோம். ஆனால், 8% பணவீக்கம் இருக்கும்பட்சத்தில், நாம் இன்றைக்கு செய்யவிருக்கும் செலவைவிடப் பல மடங்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். சரியான திட்டமிடல் மற்றும் முதலீட்டின்மூலம் இந்த செலவுகளுக்கான பணத்தை நம்மால் சேர்க்க முடியும்.

கல்லூரிக் கட்டணம், கல்யாணச் செலவுகள்... கடன் வாங்காமல் சமாளிக்க கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டம்!

முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?

சில குடும்பங்களில் பிள்ளைகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்போதுதான் உயர்கல்விச் செலவு பற்றி சிந்திக்க ஆரம்பித்து, முதலீட்டை செய்யத் தொடங்குகிறார்கள். இது மகா தவறு. இரண்டு ஆண்டுகளில் கல்லூரிப் படிப்புக்குத் தேவையான பணத்தைப் பெரும்பாலானோரால் சேர்ப்பது கடினம்.

பிள்ளைகள் பிறந்தவுடனே அவர்களின் உயர்கல்வி செலவுக்கான முதலீட்டை ஆரம்பிப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். அப்போதே முதலீட்டைத் தொடங்க முடியவில்லை எனில், பிள்ளைகள் முதல் வகுப்புக்கு செல்லும்போதாவது ஆரம்பித்துவிடுவது நல்லது. அப்படி செய்தால்தான், குறைவான முதலீட்டுத் தொகையை முதலீடு செய்வதுடன், நீண்ட காலத்தில் கூட்டு வளர்ச்சி என்கிற ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ மூலம் கிடைக்கும் பலனை நீங்கள் முழுமையாக அடைய முடியும். வட்டிக்கு வட்டி அல்லது வருமானத்துக்கு வருமானம் கிடைப்பதுதான் கூட்டு வளர்ச்சி ஆகும்.

தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்படும் சுமை...

பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்துக் கான முதலீட்டை எவ்வளவுக்கு எவ்வளவு தாமதமாக ஆரம்பிக் கிறீர்களோ, அந்தளவுக்கு அதிக தொகையை முதலீடு செய்யவேண்டி வரும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

இன்னும் 18 ஆண்டு கள் கழித்து பிள்ளை களின் உயர்கல்விக்கு சுமார் ரூ.25 லட்சம் தேவை. இதற்காக செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். பிள்ளை பிறந்தவுடன் முதலீட்டை ஆரம்பித்தால், மாதம் ரூ.3,275 முதலீடு செய்தால் போதும். பிள்ளையின் 3 வயதில் இதை ஆரம்பித்தால், 15 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டியிருக்கும். (பார்க்க, அட்டவணை - 1) காலதாமதம் செய்யச் செய்ய நீங்கள் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆண்டுகள் குறையக் குறைய முதலீட்டின் மூலம் 12% வருமானம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகிவிடும்.

கைகொடுக்கும் ஸ்டெப்அப் முதலீடு...

மாதச் சம்பளக்காரர்களில் பலருக்கு பிள்ளைகள் பிறந்தவுடன் அதிக தொகையை முதலீடு செய்ய முடியாது. அவர்கள் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் ஆரம்பித்து, ஸ்டெப்அப் முறையில் முதலீட்டை தொடரும்பட்சத்தில் தேவையான தொகை அதிகமாக சேரும். அதாவது, ரூ.25 லட்சம் பெற மாதம்தோறும் ரூ.3,275 முதலீடு செய்ய வேண்டும் என்று பார்த்தோம். இதுவே ஸ்டெப்அப் எஸ்.ஐ.பி முறையைப் பயன்படுத்தி, ஆண்டுக்கு 3% முதலீட்டுத் தொகையை அதிகரித்து வந்தால், ஆரம்பத்தில் 2,950 ரூபாயை மாதம்தோறும் முதலீடு செய்தாலே போதும். இதையே ஆண்டுக்கு 5% அதிகரித்தால், ஆரம்ப எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை ரூ.2,600ஆக இருக்கும். ஆண்டுக்கு 10% அதிகரித்தால், ஆரம்ப எஸ்.ஐ.பி தொகை ரூ.1,850-ஆக இருக்கும். (பார்க்க, அட்டவணை - 2)

ரூ.25 லட்சம் திரட்ட ஆரம்பத்தில் ரூ.3,275 முதலீடு செய்யக் கஷ்டப்படுபவர்கள், ஆரம்பத்தில் ரூ.1,850 முதலீடு செய்துவிட்டு ஆண்டுக்கு முதலீட்டுத் தொகையை 10% அதிகரித்து, எளிதாக இலக்கை நிறைவேற்றலாம். இதுவே ரூ.50 லட்சம் வேண்டுமெனில், ஆரம்ப முதலீடு 3,275 ரூபாயை இரண்டாலும், ரூ.1 கோடி தேவை எனில், நான்காலும் பெருக்கி வரும் தொகையை முதலீடு செய்யத் தொடங்கலாம்.

எதில் முதலீடு செய்ய வேண்டும்?

அடுத்து மிக முக்கியமான கேள்வி, இந்த முதலீட்டை எதில் செய்வது என்பதாகும். இது முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலத்தைப் பொறுத்திருக்கிறது.

பிள்ளைகளின் உயர்கல்விக் கான தொகை இன்னும் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்டுத்தான் தேவைப்படும், முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கத் தயார் எனில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்து வரலாம்.

குறிப்பாக, ஈக்விட்டி ஃபண்டு களில் ரிஸ்க் கொஞ்சம் குறை வான லார்ஜ்கேப் ஃபண்டுகள், மல்ட்டிகேப் ஃபண்டுகள், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இந்த ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் எதிர்பார்க்கலாம்.

முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில், முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுக்குமேல் ஏழு ஆண்டுக் குள் இருக்கிறது எனில், நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங் களில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டு களில் குறிப்பாக, கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகிய வற்றில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்கலாம். இந்த நிலை யில், முதலீட்டுத் தொகையை அதிகரித்தால்தான் குறிப்பிட்ட ஆண்டுகளில் தேவையான தொகையைச் சேர்க்க முடியும்.

உதாரணமாக, 18 ஆண்டு கழித்து ரூ.25 லட்சம் (ஆண்டு தோறும் 10% வருமானம்) தேவை எனில், மாதம்தோறும் முதலீடு செய்ய வேண்டிய தொகை ரூ.4,100-ஆக இருக்கும்.

இதுவே முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இந்த முதலீட்டில் ஆண்டுக்கு 8% வருமானம்தான் எதிர்பார்க்க முடியும் என்பதால், மாத முதலீட்டுத் தொகையை ரூ.5,050-ஆக அதிகரிக்க வேண்டும்.

பொதுவாக, முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும்பட்சத்தில், மூலதனத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. அப்போது கடன் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிடுகள் போன்றவற்றில்தான் முதலீடு செய்ய வேண்டும்.

கல்லூரிக் கட்டணம், கல்யாணச் செலவுகள்... கடன் வாங்காமல் சமாளிக்க கைகொடுக்கும் முதலீட்டுத் திட்டம்!

செல்வமகள் சேமிப்புத் திட்டம்...

பெண் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில், முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை (80சி பிரிவு) அளிக்கும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து வரலாம். பெண் பிள்ளைகள் 10 வயதுக்குக்கீழ் இருந்தால், இந்தத் திட்டத்தில் சேரலாம்.

தற்போது ஆண்டுக்கு 7.6% வட்டி வருமானம் கிடைக்கிறது. குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு ரூ.250, ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்தான் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் முதிர்வுத் தொகைக்கும் வருமான வரிச் சலுகை இருப்பதால், பெண் பிள்ளை பிறந்தவுடன் இந்தத் திட்டத்தில் முதலீட்டை ஆரம்பிப்பது லாபகரமாக இருக்கும்.

பொன்மகன் திட்டம்...

முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத ஆண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள், பொன்மகன் சேமிப்புத் திட்டத்தில் (இது பொது சேமநல நிதித் திட்டம்தான்) சேர்ந்து பயன் பெறலாம். தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 7.1% வட்டி வருமானம் கிடைக்கிறது. இந்த முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை இருக்கிறது. மேலும், கிடைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது என்பதால், இதில் முதலீடு செய்வது லாபகர மாகத்தான் இருக்கும்.

தங்க நகை வாங்கும்போது....

பெண் பிள்ளைகளின் திருமணத்துக்காக பலர் தங்க நகை களாக வாங்கி வருகிறார்கள். நகை என்கிறபோது செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி என ஆரம்பரத்திலே சுமார் 15 - 20% தொகை போய்விடுகிறது. சேதாரம் இல்லை என்பதற்காக சிலர் தங்க நாணயங்களாக வாங்கி வைக்கிறார்கள். இதில் பாதுகாப்பு பெரிய பிரச்னையாக உள்ளது. தங்க நகைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வங்கி லாக்கர் கேட்டுப் போனால், கணிசமான தொகையை டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள். தவிர, முன் பணம் மற்றும் ஆண்டுதோறும் கட்டணம் என பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது.

இப்படி செய்வதற்கு பதிலாக, டிஜிட்டல் கோல்டு என்கிற சேவிங்க்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப், கோல்டு பாண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்துவரலாம். இந்த முறையில் திருட்டு பயம் கிடையாது. மாதம்தோறும் சிறிய தொகைகூட முதலீடு செய்ய முடியும். இவற்றில் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்கும். நகை தேவைப் படும்போது டிஜிட்டல் தங்கத்தை விற்றால், கிடைக் கும் பணத்தைக் கொண்டு லேட்டஸ்ட் மாடலில் நகை வாங்கிக்கொள்ளலாம்.

குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்துக்கான செலவுத் திட்டத்தை சொல்லி விட்டோம். இந்தத் திட்டத்தை நீங்கள் பின்பற்றி பயனடைய வாழ்த்துகள்!

காக்கும் காப்பீடுகள் கட்டாயம்..!

பெற்றோருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கான முதலீட்டைத் தொடர முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் பிள்ளைகளின் உயர்கல்வி கெடாமல் காக்கும் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்திருப்பது அவசியம்.

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் போன்றவை அதற்குரிய வயதில் நடக்க அந்தக் காப்பீட்டின் இழப்பீட்டுத் தொகை கவசம் போல் காக்கும்.

மருத்துவக் காப்பீட்டு பாலிசியை குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எடுத்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் ஏதாவது பெரிய மருத்துவச் செலவுகள் வரும்போது உயர் கல்விக்காக சேர்த்துவரும் பணம், செலவாகாமல் தப்பிக்கும். குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் கவரேஜ் அளிக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் அடிப்படை மருத்துவக் காப்பீடு பாலிசியான ஃபேமிலி ஃப்ளோட்டர் (Family Floater) பாலிசி ஒன்று எடுத்துக்கொண்டு, அதன் மீது டாப்அப் பாலிசி ஒன்றை எடுத்துக்கொள்வது லாபகரமாக இருக்கும்.

குழந்தைகள் பெயரில் பாலிசி, ஃபண்ட்..!

குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்துக்காக சேமிக்க நினைக்கும் பலரும் குழந்தைகள் பெயரில் உள்ள காப்பீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இது தவறான தேர்வாகும்.

காரணம், இந்தத் திட்டங்கள் பணவீக்க விகிதம் அளவுக்கே அதாவது, ஆண்டுக்கு சுமார் 5% மட்டுமே வருமானம் தந்து வருகின்றன. எனவே, சில்ட்ரன் இன்ஷூரன்ஸ் பாலிசி, சில்ட்ரன் எஜுகேஷன் ஃபண்ட் போன்ற திட்டங்களைத் தேர்வு செய்யாமல், அதிக வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வுசெய்து, பிள்ளைகளின் உயர் கல்வி மற்றும் திருமணச் செலவுக்கான பணத்தைச் சேர்க்கத் தொடங்கலாமே!