மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களே, வேண்டாம் ‘கிரெடிட் கார்டு மயக்கம்’! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 21

குரோர்பதி
பிரீமியம் ஸ்டோரி
News
குரோர்பதி

சம்பளதாரர் ஒருவர் வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளப் பணத்தில் அதிகபட்சம் 40% வரை கடன்களுக்கான மாதத் தவணையாக (EMI) கட்டி வரலாம்...

அண்மையில் சுமார் 28 வயது இளைஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறார். மாதம் 40,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்தத் தொகை என்பது வருமான வரி, பிராவிடென்ட் ஃபண்ட் உள்ளிட்ட இதர பிடித்தங்கள் எல்லாம் போக ஆகும்.

பொதுவாக, இவரை போன்ற இளைஞர்கள் பிள்ளைகளின் உயர்கல்வி செலவுக்கு முதலீடு செய்ய வேண்டும், வருமான வரியை மிச்சப் படுத்தி முதலீடு செய்ய வேண்டும் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக எஸ்.ஐ.பி (SIP) ஆரம்பிக்க வேண்டும் என வருவார்கள். ஆனால், தன் நிதி மேலாண்மை நிர்வாகத்தை மாற்றி அமைப்பதற்கான ஆலோசனை வேண்டும் என வித்தியாசமாகக் கேட்டு வந்தார்.

எம்.சதீஷ் குமார்
நிறுவனர்,
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

அதிகக் கடன் தவணை...

அவரின் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு எனப் பார்த்தேன். பொதுவாக, சம்பளதாரர் எனில், அவர் வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளப் பணத்தில் அதிகபட்சம் 40% வரை கடன் களுக்கான மாதத் தவணையாகக் (EMI) கட்டிவரலாம். ஆனால், இந்த இளைஞர் அவரின் கையில் கிடைக்கும் சம்பளத்தில் 70% இ.எம்.ஐ கட்டி வருவதைப் பார்த்து நான் அதிர்ந்துபோனேன்.

அவர் இந்த நிலைக்கு எப்படி வந்தார் எனப் பார்த்தால், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன்களைக் கண்டபடி வாங்கியிருக்கிறார். அதுவும் கிரெடிட் கார்டு மூலம் மிக அதிகமாகப் பொருள்களை வாங்கி, அதை இ.எம்.ஐ கடன்களாக மாற்றி கட்டி வருகிறார். இந்தக் கடன்களை சரியான தேதியில் கட்டாததால், அவரின் கிரெடிட் ஸ்கோர் 500-க்கும்கீழ் என மிகவும் மோசமாக இருக்கிறது. பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் என்பது 300 தொடங்கி 900-ல் முடியும். இது எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. 300-லிருந்து 550 வரை மோசம்; 551-லிருந்து 750 வரை சராசரி; 750-க்குமேல் நல்ல ஸ்கோர் எனவும் சொல்லாம்.

இந்த இளைஞர் போலவே, இன்றைய இளைஞர்கள் பலரும் இருக்கிறார்கள். கடனை சரியான நேரத்தில் திரும்பச் செலுத்த வேண்டும் என்பது ஒருவரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். கடன் தவணைத் தேதி வரும்முன்பே அதற்கான பணத்தைக் கட்டிவிடுவது நல்லது. குறைந்தபட்சம் தவணைத் தேதி அல்லது கெடுதேதி அன்றைக்காவது செலுத்திவிட வேண்டும்.

பொதுவாக, இளைஞர்களுக்குக் கடன் என்கிற போது வாகனக் கடன் (மோட்டார் சைக்கிள், கார்), தனிநபர் கடன் (தன் சகோதரி கல்யாணத் துக்கு வாங்கியது, தன் கல்யாணத்துக்கு வாங்கியது என்பதுபோல), வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவை இருக்கும்.

இந்தக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் கட்டிவிடுவதே மிக மிக சரியான காரியம். இல்லை எனில், அபராதம், வட்டிக்கு வட்டி எனக் கூடுதல் தொகை கட்ட வேண்டி வரும். கூடவே, கிரெடிட் ஸ்கோரும் கணிசமாகக் குறைந்துவிடும். இதனால், பிற்காலத்தில் வேறு கடன் வாங்கும்போது அதற்கு அதிக வட்டி நிர்ணயம் செய்யப்படும் அல்லது சில நேரங்களில் கடன் மறுக்கப்படலாம்.

இளைஞர்களே, வேண்டாம் ‘கிரெடிட் கார்டு மயக்கம்’! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 21

கிரெடிட் கார்டு கடன் பயன்பாடு...

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்களாக இருக்கிறார்கள். சம்பளக் கணக்குத் தொடங்கும் போதே வங்கிகள் கூடவே கிரெடிட் கார்டுகளையும் கொடுத்துவிடுகின்றன.

ஒவ்வொரு கிரெடிட் கார்டுக் கும் ஒரு கடன் வரம்பு (Credit limit) இருக்கும். இதை இளைஞர்கள் சுமார் 90% - 95% வரைக்கும் பயன்படுத்தி வரு கிறார்கள். அதாவது, கிரெடிட் லிமிட் ரூ.50,000 எனில், சுமார் ரூ,45,000 வரைக்கும்கூட அதைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் போக்கு மிகவும் ஆபத் தானது; சிக்கலில் மாட்ட வைத்து விடும். கிரெடிட் வரம்பில் 30-40% அளவுக்குப் பயன்படுத்துவதே ஆரோக்கியமானதாக இருக்கும்.

கிரெடிட் கார்டு என்பது ஓர் அவசரத் தேவைக்குப் பயன் படுத்துவதற்கான நிதிச் சாதனம் ஆகும். அதாவது, திடீர் அவசர செலவு; கையில் பணம் எதுவும் இல்லை என்கிறபட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட பொருளை வாங்க அல்லது குறிப்பிட்ட சேவையைப் பெற உதவி செய் வதாக உள்ளது.

இந்தக் கடன் அட்டையில் எப்போதுமே 90% - 95% அளவுக்கு செலவு செய்திருப்பது மிகவும் ஆபத்தானது ஆகும். அதாவது, ஓர் அவசரத் தேவை என்கிற போது கிரெடிட் கார்டு வரம்பு முழுமையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும் நிலையில், அதனால் எந்த லாபமும் இல்லை. இப்படி கிரெடிட் கார்டை மேற் கொண்டு பயன்படுத்த முடியாத நிலையில், புதிதாக கடன் பெற வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் கேட்டு விசாரிக்கும்போது, கடன் கிடைக்காமல் போவ துடன், கிரெடிட் ஸ்கோரும் குறைந்துவிடுகிறது.

கடன் கேட்டு அல்லது கிரெடிட் கார்டு கேட்டு பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொள்ளும்போது, கிரெடிட் ஸ்கோர் மேலும் குறைகிறது.

ஒரே மாதத்தில் ஒருவர் 10, 15 வங்கிகளிடம் கடன் கேட்டு விசாரிக்கும்போது, அந்த நபர் எவ்வளவு மோசமான நிதி நிலையில் இருக்கிறார் என்பது தொடர்புடைய வங்கிகள், நிதி நிறுவனங்கள் அனைத்துக்கும் அப்பட்டமாகத் தெரிந்துவிடும். அந்த நிலையில், யாரும் அவருக்கு கடன்தர முன்வர மாட்டார்கள்.

இளைஞர்களே, வேண்டாம் ‘கிரெடிட் கார்டு மயக்கம்’! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 21

நிறைய பேர் கிரெடிட் கார்டு மூலம் கண்டபடி பொருள்களை வாங்கிவிட்டு, அதைக் கட்டாமல் விட்டுவிடுகிறார்கள். சிலர், கிரெடிட் கார்டில் குறைந்தபட்ச தொகையை மட்டும் தொடர்ந்து கட்டி வருவார்கள். இப்படி செய்யும்போது மீதியுள்ள தொகைக்கு ஆண்டுக்கு 36% - 45% வரைக்கும் வட்டி கட்ட வேண்டி வரும்.

பொதுவாக, ஒரு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி வரும் போது, வேறு ஒரு நிறுவனம் சில கூடுதல் சலுகைகளைத் தருவதாக வேறு ஒரு கார்டைத் தரும். மேலும், ஆன்லைன் நிறுவனங்களில் பொருள்களை வாங்கும்போது 10% தள்ளுபடி என சில புதிய கிரெடிட் கார்டுகளைத் தரும். இப்படியே 30 - 35 வயதில் வேலை பார்க்கும் இளைஞர்களிடம் 4, 5 கிரெடிட் கார்டுகள் சேர்ந்துவிடும். இதனால் செலவு அதிகரித்து, சரியான நேரத்தில் பணத்தைக் கட்ட முடியாமல்போய், கடன் வலையில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் ஒரே ஒரு கிரெடிட் கார்டை மட்டும் பயன்படுத்துவதுபோல் மாற்றிக்கொள்வது நல்லது. அப்போதுதான் சரியான நேரத்தில் பணம் கட்ட முடியும். கிரெடிட் ஸ்கோரிலும் சிக்கல் வராது.

கிரெடிட் கார்டுகளை கண்டபடி பயன்படுத்தி, ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் மிகவும் மோசமாக இருந்தால், ஒரே ஒரு கார்டாக மாற்றி அதில் பொருள்களை வாங்கி சரியான நேரத்தில் திரும்பக் கட்டுவது மூலம் இழந்த கிரெடிட் ஸ்கோரை மீண்டும் அதிகரிக்க முடியும்.

அதிகம் பேர் கிரெடிட் கார்டில் அதிக பாக்கி வைத் திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் மொத்த பணத்தைக் கட்ட முடியாத சூழலில் வங்கி, நிதி நிறுவனம் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் செட்டில்மென்ட்டுக்கு செல்கிறார்கள். அவர்களும் ரூ.1 லட்சம் கட்ட வேண்டிய இடத்தில் ரூ.75,000 கட்ட சம்மதிக்கிறார்கள். இங்கே பொருள்கள் வாங்கியது என்னவோ 50,000 ரூபாய்தான். மீதி எல்லாம் அபராதம், வட்டிக்கு வட்டியாகப் போடப்பட்ட தொகை ஆகும்.

இதே போல, சிலருக்கு ரூ.50,000 மொத்த பாக்கி கிரெடிட் கார்டில் இருக்கும். இதில் ரூ.40,000 கட்டி செட்டில்மென்ட் செய்வார்கள். இப்படி செட்டில்மென்ட் செய்வதால், கிரெடிட் கார்டு நிறுவனமோ, தொடர்புடைய வங்கியோ மேற்கொண்டு அவரைத் தொந்தரவு செய்யாது. ஆனால், இது வாழ்நாள் பிரச்னையாக பின்னர் உருவெடுக்கும். இது அவரின் கிரெடிட் ஸ்கோரில் கட்டாயம் பிரதிபலிக்கும். அதாவது, ரூ.50,000 கடனில் ரூ.10,000 பாக்கி இருப்பதுபோல் காட்டிக்கொண்டே இருக்கும். பின்னர் வீட்டுக் கடன், கார் கடன் போன்றவை மறுக்கப்பட இந்தக் கடன் செட்டில்மென்ட் காரணமாக இருக்கும். இப்படி செய்வதற்குப் பதில், செட்டில்மென்டுக்கு செல்லாமல் முழுப் பணத்தையும் கட்டிவிட்டு, அதிலிருந்து விடுதலை பெறுவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.

கிரெடிட் ஸ்கோர் 600, 650 என்பதுபோல் இருந்தால், எந்தவொரு கடனும் வங்கிகள் குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளில் கிடைப்பது கடினம். தனியார் துறை வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில்தான் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியது இருக்கும். கடனுக் கான வட்டி 16% முதல் 22 சதவிகிதமாக இருக்கும். கடன்களை சரியாக மேலாண்மை செய்தால்தான் மேற்படிப்புக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் ஆகிய ஆக்கபூர்வமான கடனை சுலபமாகவும் குறைந்த வட்டி யிலும் வாங்க முடியும்.

ஒருவர் 40 வயதில் கோடீஸ்வரராகத் திட்டமிடும் பட்சத்தில் நிதி நிர்வாகத்தில் ஒழுங்கு முக்கியம். கிரெடிட் கார்டை சரியாக நிர்வகிப்பது மிக முக்கியம்!

(கோடீஸ்வரர் ஆவோம்)