40 வயதில் கோடீஸ்வரர் ஆக்கும் 4 தங்க விதிமுறைகள்! - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர் 16

பங்குச் சந்தை முதலீட்டில் குறுகிய காலத்தில் மூலதனத்துக்கு இழப்பு வந்தால்கூட இளைஞர்கள் பதற்றமோ பீதியோ அடையக் கூடாது...
இளைஞர்கள் இந்த நான்கு வழிமுறை களைப் பின்பற்றினால் கூடிய விரை விலேயே கோடீஸ்வரர் ஆகிவிடலாம். பொதுவாக, பண நிர்வாகத்தில் காணப்படும் வித்தியாசம்தான், ஒருவர் பணக்காரராக மாறு வதற்கும் ஏழையாக நீடிப்பதற்கும் முக்கியமான காரணமாக இருக்கிறது. ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்து, அவருக்குப் பண நிர்வாகம் பற்றிய சரியான வழிமுறைகள் தெரியவில்லை எனில், அவர் ஒரு மாதத்தில் அந்தப் பணத்தை வீணாக்கிவிடுவார்.

ஒருவர் ஏதோ காரணத்தால் அவரிடம் இருக்கும் எல்லாப் பணத்தையும் இழந்தாலும் கூட பண நிர்வாகம் அவருக்கு நன்றாகத் தெரிந்தால், இழந்த பணத்தைவிட அதிக தொகையை ஓரிரு ஆண்டுகளில் சேர்த்து விடுவார். இத்தகைய சிறப்புமிக்க நிதி நிர்வாகம் தொடர்பான நான்கு தங்க விதிமுறைகளைத் தெரிந்துகொண்டு, அதன்படி செயல்பட்டால் இளைஞர்கள் தங்களின் 40 வயதிலேயே கோடீஸ்வரர்கள் ஆகிவிடலாம். அந்தத் தங்க விதிமுறைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. முதலீடு தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்...
நீங்கள் பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் எனில், உங்களிடம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் எனப் பலரும் பலவிதமான கருத்துகளைச் சொல்லி வருவார்கள். இவர்கள் முதலீடு தொடர்பாக சொல்லும் ஆலோசனைகள் சரியா, தவறா என எப்படி உங்களுக்குத் தெரியும்? பல இளைஞர்கள் அவர்களின் நண்பர்கள், உறவினர்களைப் பார்த்துதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதில் முதலீடு செய்கிறார்களோ, அதில்தான் இவர்களும் முதலீடு செய்கிறார்கள். இது சரியான அணுகுறை அல்ல. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பணத் தேவைகள், நிதி இலக்குகள் இருக்கும். நமக்கு என்ன தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
எந்த முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும், அது நமக்கு சரியாக இருக்குமா என முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும். இதற்கு அது சார்ந்த அறிவு நமக்கு இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த அறிவு என்பது ஒருவருக்கு மூன்று விதமாக வரும். ஒன்று, படிப்பறிவு. அதாவது, அந்த விஷயம் குறித்து படித்துத் தெரிந்து கொள்வதாகும். இரண்டாவது, அனுபவ அறிவு. இந்த அனுபவ அறிவைப் பெற சில நேரங்களில் லட்சக்கணக்கான பணத்தை இழக்க நேரிடும். மூன்றாவதாக, அந்தத் துறை சார்ந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேட்டு நடப்பது. முதலீடு தொடர்பான முடிவு களை எடுக்கும்போது நிதி ஆலோசகர் ஒருவருடன் கலந்தாலோசிப்பது அவசியம். ஆனால், முதலீடு தொடர்பான ஒவ்வொரு விஷயத்துக்கும் நிதி ஆலோசகரைத் தேடிச் செல்வது கடினம். எனவே, இளைஞர்கள் முதலீடு குறித்த அறிவை ஓரளவுக் காவது வளர்த்துக்கொள்வது அவசியம். இப்படி செய்யும்போது முதலீடுகள் குறித்து முடிவெடுப்பது மிகவும் சரியாகவும் சுலபமாகவும் இருக்கும்.
2. பேராசை பெரு நஷ்டம்...
முதலீட்டின் மூலம் மிகவும் அதிக ஆதாயம் கிடைக்க வேண்டும் என எப்போதும் எதிர் பார்ப்பது பேராசைதான். யாரோ ஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துவிட்டு குறுகிய காலத்தில் 30% லாபம் பார்த்துவிட்டார். இன் னொருவர் கிரிப்டோகரன்சியில் பணம் போட்டு, 100% லாபம் பார்த்துவிட்டார் என்பதற்காக நீங்களும் பணம் போட்டால், அது சூதாட்டம் தவிர வேறு எதுவும் இல்லை. ஃபாரக்ஸ் டிரேடிங், ஆப்ஷன் டிரேடிங்கில் 50% வருமானம் தருகிறார்கள் என்ப தால் மட்டுமே அதில் பணம் போடுவது புத்தி சாலித்தனமான முடிவாக இருக்காது. இப்படி பேராசையைத் தூண்டுகிற பல விஷயங்களைக் கேள்விப்படும் போது இளைஞர்கள் நிதான மாகச் செயல்படுவது அவசியம்; இல்லையெனில், பெரும் பணத்தை இழப்பது நிச்சயம்.
யாராவது ஒருவர் ஒரு முதலீட் டில் 50% லாபம் பார்த்திருக் கிறேன் அல்லது தருகிறேன் என்று சொன்னால், அந்த லாபத்தை அவர் தொடர்ந்து எத்தனை ஆண்டுகளாகப் பெற்று வருகிறார் அல்லது தருகிறார் என்று கேளுங்கள். அந்த வகை யான வருமானம் கடந்த ஐந்து, பத்தாண்டுகளில் எப்படி கிடைத் திருக்கிறது எனக் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு அதன்பிறகு அந்தத் திட்டத்தில் பணத்தைப் போடுங்கள்.
மேலும், அந்த அளவுக்கு அதிக வருமானம் தர, முதலீட் டாளர்களிடமிருந்து பெறும் பணத்தை எந்தத் தொழிலில் முதலீடு செய்கிறார்கள் எனக் கேட்டு உறுதிப்படுத்திக்கொள் ளுங்கள். அந்தத் தொழிலில் 50% அளவுக்கு லாபம் கிடைக்குமா என்பதை விவரம் தெரிந்த வர்களிடம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.
அண்மையில் விரைவாக பணக்காரர் ஆக வேண்டும் எனப் பேராசைப்பட்டு பலரும் ஆருத்ரா கோல்டு போன்ற நிறுவ னங்களில் முதலீடு செய்தார்கள். இன்னும் பலர் பங்குச் சந்தை வர்த்தகம் மூலம் மாதத்துக்கு 2% அதாவது, ஆண்டுக்கு 24% வருமானம் தருகிறார்கள் என வேலூரை சேர்ந்த ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் லட்சக்கணக்கான பணத்தைப் போட்டார்கள். ரூ.10,000 கோடிக்குமேல் மோசடி செய்துவிட்டு, அதன் உரிமை யாளர்கள் இப்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திவருவதைப் பார்க்க முடிகிறது.
உண்மை என்னவெனில், பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானத்தைப் பலரும் பெற்று வருகிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் கிரிப்டோகரன்சியில் 50 சதவிகிதத்துக்குமேல் பலரும் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் பணம் சம்பாதித்தவர் களைவிட மூலதனத்தை இழந்த வர்கள் எண்ணிக்கைதான் அதிகம் என்பதை செபி அமைப்பு வெளி யிட்ட தகவல் மூலம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம்.
எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்தையும் தேர்வு செய்யும்போது அது கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுகளில் நிலையாக நல்ல வருமானத்தைத் தந்திருக்கிறதா என்பதைப் பார்ப்பது அவசியம். மேலும், வருமான எதிர்பார்ப்பு என்பது பணவீக்க விகிதத்தைவிட சுமார் 5% - 6% கூடுதலாக வைத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக, பணவீக்க விகிதம் 6% எனில், முதலீடு மூலம் நீண்ட காலத்தில் சுமார் 12% வருமானத்தை எதிர்பார்ப்பது சரியாக இருக்கும்.

3. பொறுமை மிக முக்கியம்...
பங்குச் சந்தை முதலீட்டில் உண்மையில் என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொண்டால், நிச்சய மாக அதில் லாபமீட்ட முடியும். பங்குச் சந்தையில் பொறுமை இல்லாத முதலீட்டாளர்களிடம் இருக்கும் பணம், பொறுமையாக இருக்கும் மற்றும் தொடர்ந்து பங்குச் சந்தை முதலீட்டைத் தொடரும் நீண்ட கால முதலீட்டாளர்கள் வசம் மாறிவிடுகிறது.
உலகில் முதலில் 1602-ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை (Amsterdam Stock Exchange) ஆரம்பிக்கப்பட்டது. அது முதல், கடந்த 420 வருடங்களாக இப்படிதான் நடந்துவருகிறது. இந்தியாவின் பாம்பே பங்குச் சந்தை (BSE) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். இது 1875-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 148 ஆண்டுகளாக இந்தியாவிலும் பொறுமை இல்லாத பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பணம் மாறிவருகிறது. பங்குச் சந்தையில் இளைஞர்கள் நல்ல லாபத்தைப் பார்க்க வேண்டும் எனில், பொறுமையாகக் காத்திருக்கும் குணம் மிக முக்கியமாகும்.
ஏற்ற, இறக்கம் என்பது பங்குச் சந்தையின் இயற்கை குணம். பங்குச் சந்தை முதலீட்டில் குறுகிய காலத்தில் மூலதனத்துக்கு இழப்பு வந்தால்கூட இளைஞர்கள் பதற்றமோ பீதியோ அடையக் கூடாது. குறிப்பாக, பயத்தில் நஷ்டத்துக்கு விற்றுவிட்டு வெளியேறக் கூடாது. நல்ல நிறுவனப் பங்குகளின் விலை ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையின் வீழ்ச்சியின்போது மிகவும் அதிகமாக இறக்கம் காணக்கூடும். அதற்காக கலங்கக்கூடாது. கோவிட் 19 பாதிப்பின்போது 2020 மார்ச்சில் பல நல்ல நிறுவனப் பங்குகளின் விலை 40% - 50% அளவுக்குக்கூட சரிந்தன. ஆனால், அதன்பிறகு சுமார் ஓராண்டுக் காலத்துக்குள் விலை ஏற்றம் கண்டு 20%, 30% லாபத்துக்குத் திரும்பியது.
4. ரொக்கப் பணம் கையிருப்பு...
பங்குச் சந்தை முதலீடு என்பது அடிக்கடி நல்ல முதலீட்டு வாய்ப்புகளைத் தந்துகொண்டிருக்கும். அதாவது, நல்ல நிறுவனப் பங்குகளின் விலை அடிக்கடி அதிக இறக்கம் காணும். அண்மையில்கூட அதானி குழுமப் பங்குகள் மீது ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் இந்தியப் பங்குச் சந்தை தொடர் சரிவை சந்தித்தது. அப்போது பல நல்ல நிறுவனப் பங்குகள் இறக்கம் கண்டன. அப்போது நல்ல நிறுவனப் பங்குகளை வாங்க இளைஞர்களின் கையில் காசு இருந்திருக்காது. எனவே, முதலீட்டுத் தொகையில் சுமார் 15% - 20% எப்போதும் ரொக்கப் பணத்துக்கு இணையான வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்திருப்பது நல்லது. சந்தை இறங்கிவரும் காலத்தில் இந்தப் பணத்தை பயன்படுத்தி நல்ல நிறுவனப் பங்குகளை மலிவாக வாங்கலாம்.
இந்த நான்கு தங்க விதிமுறைகளை இளைஞர்கள் கடைப்பிடித்தால் 40 வயதில் கோடீஸ்வரர் ஆகலாம்!
(கோடீஸ்வரர் ஆவோம்)