மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்கள், எந்த வகை முதலீட்டாளராக இருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம்? - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர்: 25

கோடீஸ்வரர்...
பிரீமியம் ஸ்டோரி
News
கோடீஸ்வரர்...

பணம் சேர்க்கும்போது இரண்டு விஷயம் தொடர்ந்து நடந்துகொண்டே இருகிறது. அவற்றில் ஒன்று, பேராசை, மற்றொன்று பயம்...

பணம் என்பது மனிதர்களாகிய நாம் இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற் காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி ஆகும். எந்தக் கருவியாக இருந்தாலும் அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் அந்தக் கருவியால் ஏற்படக் கூடிய நன்மையும் தீமையும் இருக்கும் இல்லையா? இது பணத்துக்கும் நன்றாகவே பொருந்தும்.

எம்.சதீஷ் குமார்
நிறுவனர்,
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

பணம் என்ற கருவியைப் பொறுத்தவரை, இரண்டு விஷயம் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவற்றில் ஒன்று, பேராசை, மற்றொன்று பயம்.

பணம் நிறைய வேண்டும் என்ற பேராசை வரும்போது நம்முடைய பகுத்தறிவையும் மீறி நிறைய விஷயங்களைச் செய்யத் தொடங்கு கிறோம். அதனால் பல தவறான விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். அதே போல, பணம் குறித்து பயம் வரும்போது அதாவது, நம்மிடம் இருக்கும் பணமெல்லாம் போயிடுமோ, பணமே இல்லாத நிலைக்கு நாம் ஆளாகிவிடுவோமோ என்பது போன்ற பயம் நமக்கு வரும்போ தெல்லாம் நம்முடைய நிதானத்தை இழந்துவிடுகிறோம்.

என்னுடைய 20 வருட நிதித்துறை அனுபவத்தில் நான் பலதரப்பட்ட முதலீட்டாளர்களைப் பார்த்திருக்கிறேன். பண விஷயத்தில் மக்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அவர்களை ஐந்து வகைக்குள் அடக்கிவிடலாம்.

இளைஞர்கள், எந்த வகை முதலீட்டாளராக இருந்தால்  கோடீஸ்வரர் ஆகலாம்? - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர்: 25

1. சூப்பர் சேவர்...

முதல் வகையான நபரை சூப்பர் சேவர் (Super Saver) என்று சொல்லலாம். இவர்களை நம்முடைய சமூகத்தில் எல்லா இடங் களிலும் பரவலாகப் பார்க்க முடியும். மாதம்தோறும் வாங்கும் சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.20,000-ஆக இருந்தாலும், அவர்கள் சம்பாதிப்பதில் பெரும்பகுதியைச் சேமிக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். காரணம், நம்முடைய பெற்றோர்கள் நம்மை அப்படி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக, நம்முடைய அம்மாக்களையே எடுத்துக்கொள்ளலாம். அஞ்சறைப் பெட்டி களிலும், கட்டிலுக்கு அடியிலும் எனக் கிடைக்கிற இடங்களிலெல்லாம் பணத்தை வைத்து சேமித்தவர்கள்தான். அவசரக் காலங்களில் அதை எடுத்து நிதித் தேவையைச் சமாளிப்பார்கள். இந்த ‘சூப்பர் சேவர்’ வகை சேமிப்பாளர்கள், வங்கி, அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் எனப் பல முதலீடுகளில் சேமித்த தொகை ரூ.1.40 லட்சம் கோடி இருக்கிறது.

இந்த வகையில் சேமிப்பவர்களுக்கு எந்த இலக்கு வரம்பும் கிடையாது. இந்த சேமிப்பே இவர்களுக்குப் பெரிய பாதுகாப்பைக் கொடுப்பதாக, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக உணர்வார்கள். இதில் இருக்கும் பெரிய பிரச்னை என்ன எனில், இவர்கள் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள்; சிலர் கஞ்சத்தனமாகவும் இருப்பார்கள். நிகழ்காலத்தில் வாழ்க்கையை வாழாதவர்களாகவே, எதையும் பெரிதாக அனுபவிக்காதவர்களாவே இருப்பார்கள்.

வாழ்க்கையின் நிகழ்காலத்திலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதே சமயம், எதிர்காலத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள திட்டமிட வேண்டும். இரண்டுமே சமநிலையாக இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் பணத்தை ரொம்ப கஞ்சத்தனமாகக் கையாள்வார்கள். எல்லா விஷயத் திலும் பணத்தைப் பற்றித்தான் பிரதானமாகச் சிந்திப்பார்கள். அது மட்டுமல்லாமல், இவர்களுடைய சேமிப்பும் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தருவதாக இருக்காது. அவர்களுடைய சேமிப்பின் மதிப்பு நீண்ட காலத்தில் வெகுவாகக் குறைந்திருக்கும். அதாவது, அவர்களின் பணம் பெரிதாகப் பெருகாமல் இருக்கும். இவர் களைப் போன்றவர்களைத்தான் ‘சூப்பர் சேவர்’ என்று சொல்கிறோம்.

2. செலவாளி...

இரண்டாவது வகையான முதலீட்டாளர்களை ‘செலவாளிகள்’ (Spenders) எனச் சொல்லலாம். முதலீட்டு உலகின் ஜாம்பவான் வாரன் பஃபெட் கூறிய புகழ்பெற்ற ஒரு பொன்மொழி இருக்கிறது. “உங்களுக்குத் தேவையில்லாத ஒரு பொருளை வாங்கினால், பின்னாளில் உங்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருளை விற்க வேண்டி வரும்” என்பதுதான் அது.

இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் பெரும்பாலும் அடுத்தவர்களைப் பார்த்து தான் அதிகமான செலவுகளை இழுத்துப்போட்டுக் கொள் கிறோம். பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கியது, உடன் பணிபுரியும் சக ஊழியர் புது மொபைல் வைத்திருப்பது, அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் ஃப்ளாஷ்சேல் விற்பனை போன்றவற்றால் நாம் அறியா மலேயே நமக்குத் தேவை இல்லாத பொருள்களை வாங்கிக் குவித்து வருகிறோம்.

‘பிக் பில்லியன் சேல்’ விற்பனையில் ஒரே ஒரு நாளில் ரூ.11,500 கோடி அளவுக்கு விற்பனை நடக்கிறது. மக்கள் எப்படி செலவு செய்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். இது போன்ற செலவுகளைச் செய்பவர்கள் நிறைய கிரெடிட் கார்டுகள், அதிக தனிநபர் கடன்களை வைத்திருப்பார்கள். அவர்களின் குடும்ப பட்ஜெட் சமநிலையில் இருக்கவே இருக் காது. ஊதாரித்தனம், ஆடம் பரம், கடன் நெருக்கடி என்று தான் அவர்களுடைய வாழ்க்கை இருக்கும்.

இளைஞர்கள், எந்த வகை முதலீட்டாளராக இருந்தால்  கோடீஸ்வரர் ஆகலாம்? - டார்கெட் குரோர்பதி @ 40 தொடர்: 25

3. பந்தய எலி...

இன்றைய கார்ப்பரேட் உலகத்தில் ஒரு பிரிவு மக்கள் இயந்திரங்களைப் போல மாறி இருப்பார்கள். ஒரே விஷயத்தையே இவர்கள் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். கடிவாளம் கட்டிய குதிரையைப் போல, ‘பந்தய எலி’களைப் (Race Rates) போல ஓடிக் கொண்டிருப்பார்கள்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே இவர்களது நோக்க மாக இருக்கும். பணத்துக்காக குடும்பம், உறவுகள், நண்பர் கள், உடல் ஆரோக்கியம் என எல்லாவற்றையும் அலட்சியப் படுத்துவார்கள். அதிகமான பணம் வேண்டும், அதிகாரம் வேண்டும் என கார்ப்பரேட் நிறுவன ஏணியில் முதல் இடத்துக்குப் போக வேண்டும் என்று வெறி பிடித்து ஓடு வார்கள். நம்முடைய மகிழ்ச் சிக்கு என்ன தேவை என்பதை யெல்லாம் யோசிக்காமல் அடுத்தவர்களோடு போட்டி யும் பொறாமையுமாகவே இருப்பார்கள்.

4. அலட்சியவாதி...

மூன்றாவது வகை மனிதர்கள், ஏற்கெனவே நாம் பார்த்த ‘பந்தய எலி’ மனிதர்களுக்கு அப்படியே முற்றிலும் எதிரானவர்கள். பண விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருப்பார்கள். எதைப் பற்றியும் கவலைப் பட மாட் டார்கள். இவர்கள், பணத்தைக் கண்டுபிடித்தது யார், எல்லா பிரச்னைகளுக் கும் இந்தப் பணம்தான் காரணம், என்று பேசக்கூடிய வர்கள்.இவர்களுக்கு வாழ்க்கையில் எந்த இலக்கும் இருக்காது, கனவும் இருக்காது. இந்த வகையானவர்கள் ரொம்பவும் ஏழ்மையில், கஷ்டத்தில் இருப்பவர்களாக இருப்பார்கள்.

5. பணத் துறவி...

ஐந்தாவது வகையான இந்த மனிதர்கள் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கக் கூடியவர்கள். இவர்களைப் பணத் துறவிகள் (Money Monks) என்றும் சொல்லலாம். இவர்கள் மேற்சொன்ன நான்கு வகைகளையும் உள்ளடக்கியவர்களாக அதாவது, அந்த நான்கு வகையான மனிதர்களின் குணங்களும் தலா 25% கலவையாக சமநிலையில் இவர்களிடத்தில் இருக்கும் என்று சொல்லலாம்.

நிறைய பணம் இருக்கும்போது அவர்கள் நன்றாகவே சேமிப்பார்கள். அதே சமயம், ஏதோ ஒரு சூழலில் பணத்தை இழக்க நேர்ந்தால், காசு போய்விட்டதே என்று புலம்பிக்கொண்டிருக்காமல், அதைப் பற்றியே யோசித்து வேதனைப்படாமல் விட்டுவிட்டு, அடுத்த என்ன செய்யலாம் என்று திட்டமிடுவார்கள். அதே போல, தற்போதைய நிகழ்கால வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக வாழ்ந்து, எதிர்காலத்துக்கும் திட்டமிடுவார்கள். வாழ்க்கையில் ஓர் இலக்கை வைத்துக்கொண்டு முன்னேறுவார்கள்.

பண விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர், நீங்கள் எந்த வகைக்குள் இருக்கிறீர்கள், எப்படிப்பட்ட முதலீட்டாளராக நீங்கள் இருந்தால், நீங்கள் பெரும் பணம் சேர்க்க முடியும் என்பது முக்கியமான விஷயம். பணத்தைச் சேர்க்க வேண்டும், செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு தரமான நல்ல நிறுவனப் பங்குகளில், சிறந்த பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யலாம். ஆனால், செல்வத்தைப் பெருக்கும் பயணத்தில் நீண்ட காலத்தில் உங்கள் முதலீடு கொடுக்கிற வருமானத்தின் பங்கு என்பது 25 சதவிகிதம்தான், மீதமுள்ள 75 சதவிகிதமும் பணம் சார்ந்த நம் நட வடிக்கையைப் பொறுத் ததே. அதாவது, பணம் சார்ந்து உங்களின் பேராசை, பயம் இரண் டையும் எப்படி கையாள் கிறீர்கள் என்பதன் அடிப்படையில்தான் உங்களு டைய பணம் பெருகுவதும், நஷ்டம் அடைவதும் இருக்கும்.

பணத்தைக் கையாளும் விஷயத்தில் பேராசை, பயம் இரண்டையும் சரியாகக் கையாண்டு ஐந்தாம் வகை மனிதர்களைப்போல, இன்றைய இளைஞர்கள் தங்களை மாற்றிக்கொண்டால் நிச்சயம் விரைவில் கோடீஸ்வரர் ஆக முடியும்.

(கோடீஸ்வரர் ஆவோம்)