Published:Updated:

டப்பா டிரேடிங் என்னும் பேராபத்து... உஷார் மக்களே!

டப்பா டிரேடிங்
பிரீமியம் ஸ்டோரி
டப்பா டிரேடிங்

பொதுவாக, பங்குகளைத் தரகர் மூலம் வாங்கினாலோ, விற்றாலோ அதற்கு சில கட்டணங்கள் உண்டு. பங்குகளை வாங்கி வைத்திருந்து, அதை நல்ல லாபத்துக்கு விற்கும்போது குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீட்டு ஆதாய வரியைக் (Capital Gain Tax) கட்டவேண்டும்.

Published:Updated:

டப்பா டிரேடிங் என்னும் பேராபத்து... உஷார் மக்களே!

பொதுவாக, பங்குகளைத் தரகர் மூலம் வாங்கினாலோ, விற்றாலோ அதற்கு சில கட்டணங்கள் உண்டு. பங்குகளை வாங்கி வைத்திருந்து, அதை நல்ல லாபத்துக்கு விற்கும்போது குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீட்டு ஆதாய வரியைக் (Capital Gain Tax) கட்டவேண்டும்.

டப்பா டிரேடிங்
பிரீமியம் ஸ்டோரி
டப்பா டிரேடிங்

என்.எஸ்.இ (NSE) என சுருக்கமாக அழைக்கப்படுகிற தேசிய பங்குச் சந்தை, இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. எதற்குத் தெரியுமா? இந்த நிறுவனங்கள் முறையற்ற வகையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதுதான்.

`அது என்ன, முறையற்ற வகையில் பங்கு வர்த்தகம்? இதிலும் முறையுள்ள, முறையற்ற எனப் பாகுபாடுகள் இருக்கிறதா? முறையற்ற வகை வர்த்தகம் என ஒன்று இருக்கிறது எனில், அதற்கான நோட்டீஸ் அனுப்பும் பொறுப்பு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபிக்குதானே இருக்கிறது, என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்ச் ஏன் நோட்டீஸ் அனுப்பியது என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.

NSE
NSE

எந்தப் பிரச்னை ஆனாலும் பாதிக்கப்பட்டவர் நேரடியாக எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்புவதுதானே வழக்கம். அந்த வகையில், முறையற்ற வகையில் நடந்த வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்ச்தான். எனவே, அந்த அமைப்பு நோட்டீஸ் விட்டிருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா சொல்கிறேன்.

பொதுவாக,பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை வாங்குவது அல்லது விற்பது ஆகிய வேலைகளை என்.எஸ்.இ அல்லது பி.எஸ்.இ என்கிற இரண்டு எக்ஸ்சேஞ்சில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் செய்ய வேண்டும். இந்த வேலையை செய்து தருவதற்கு என்.எஸ்.இ/பி.எஸ்.இ எக்ஸ்சேஞ்சுகளில் பதிவு செய்துகொண்ட பல பங்குத் தரகு நிறுவனங்கள் உண்டு. அவர்கள் மூலம் நாம் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்.

சில சாமர்த்தியசாலிகள் என்.எஸ்.இ/பி.எஸ்.இ ஆகிய இந்த இரண்டு சந்தைகளையும் தவிர்த்துவிட்டு, மூன்றாவதாக ஒரு வழியைக் கண்டுபிடித்து, அங்கே வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள்.

அப்படி வர்த்தகம் செய்ய உதவும் நிறுவனங்களைத்தான் முறையற்ற வகையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் என்று சொல்லப்படுகிறது. இது மாதிரி செயல்படும் நிறுவனங்களுக்கு தான் என்.எஸ்.இ எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்திருக்கிறது.

எச்சரிக்கை என்றால், சாதாரண எச்சரிக்கை அல்ல. குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகளுக்குமேல் இதற்கு சிறை தண்டனை உண்டு என்பதையும் நினைவுபடுத்தி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்த நிறுவனங்கள் செய்த தவறுதான் என்ன?

பொதுவாக, பங்குகளைத் தரகர் மூலம் வாங்கினாலோ, விற்றாலோ அதற்கு சில கட்டணங்கள் உண்டு. ஒன்று, தரகுக் கட்டணம். மற்றொன்று, அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள். பங்குகளை வாங்கி வைத்திருந்து, அதை நல்ல லாபத்துக்கு விற்கும்போது குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீட்டு ஆதாய வரியைக் (Capital Gain Tax) கட்ட வேண்டும்.

இந்த வரிகளைத் தவிர்த்து, ஒரு பங்கை வாங்கும்போதும், விற்கும்போதும் செலுத்த வேண்டிய வரிகள் சில உள்ளன இவற்றைப் பிடித்தம் செய்து அரசுக்கு கட்ட வேண்டிய பொறுப்பு, பங்குச் சந்தைகளுக்கு உண்டு.

முதலாவது, செக்யூரிட்டி டிரான்ஸ்ஷாக்சன் டேக்ஸ் (STT). இரண்டாவது, செபி டர்ன்ஓவர் டேக்ஸ். மூன்றாவது, ஸ்டாம்ப் டியூட்டி. நான்காவது, மத்திய, மாநில GST வரிகள்.

ஒவ்வொரு முறையும் பங்கை வாங்கும்போதும் விற்கும்போதும் கட்டியாக வேண்டிய வரிகள் இவை. தரகு கமிஷனன் வேண்டுமானால் சில நிறுவனங்களில் கொஞ்சம் குறைவாக அல்லது ஜீரோ கமிஷன் என்கிற மாதிரிகூட தரலாம். ஆனால், பங்குகளை வாங்கும்போதும், விற்கும்போது வரி கட்டாமல் தப்பிக்க முடியாது.

இந்த வரிகளுடன் தரகு கமிஷனையும் சேர்த்து கணக்குப் போட்டுப் பார்த்ததில் அது சுமாராக 100 ரூபாய்க்கு 70 காசு வருகிறது. அதாவது, 100 ரூபாய்க்கு பங்கு வாங்கினால், வரியையும் சேர்த்து 100 ரூபாய் 70 காசு கொடுக்க வேண்டும். ஒருவர், 100 ரூபாய்க்கு பங்கை விற்றால், வரிகள் மற்றும் தரகுக் கட்டணங்கள் போக நமக்கு 99 ரூபாய் 30 காசுதான் கிடைக்கும்.

நூறு ரூபாய் அல்லது சில ஆயிரங்களில்கூட பங்குகளை வாங்கும்போது அல்லது விற்கும்போது இந்த 70 காசு என்பது பெரிய பொருட்டு இல்லை. ஆனால், லட்சங்களில், கோடிகளில் பங்குகளை வாங்கி விற்பனை செய்கிறவர்கள் நிறைய பணத்தை இப்படி வரியாகச் செலுத்தியாக வேண்டும். அதிலும் `இன்ட்ரா டே’ எனப்படும் தினசரி டிரேடிங் செய்பவர்களின் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் எவ்வளவு பணம் வரியாகக் கட்டுவார்கள் என்பதை கற்பனை செய்துபாருங்கள்.

உதாரணமாக, TCS நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.3,250. நூறு பங்குகளை வாங்கினால் ரூ.3,25,000. விற்றால் இன்னொரு ரூ.3,25,000. ஆக மொத்தம் ரூ.6.5 லட்சம். நூறு ரூபாய்க்கு 70 காசுகூட வேண்டாம். 50 காசு என்று வைத்துக்கொண்டால்கூட கட்ட வேண்டிய தொகை எவ்வளவு?

ரூ.4,450. இப்படி ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை செய்தால்? இந்தக் கட்டணங்கள் மட்டுமே 10,000 ரூபாய், 12,000 ரூபாய் என்றாகிவிடும். சில தரகு நிறுவனங்கள் இண்ட்ரா டே டிரேடிங் வர்த்தகத்துக்கு புரோக்கரேஜ் இல்லை என்கிறார்கள். (பிறகு, இந்த நிறுவனங்கள் எப்படி எப்படி வருமானம் ஈட்டுமோ!) அது மாதிரியான நிறுவனங்களில் வர்த்தகம் செய்தாலும்கூட, வரிகள் மூலமாக பெரிய அளவு பணம் போகத்தான் செய்யும்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இது தவிர்க்க முடியாத, கட்டாயம் செலுத்தியாக வேண்டிய, சட்டப்படியான செலவு. இவற்றையும் சேர்த்துதான் பங்கு வர்த்தகத்தில் நாம் லாபம் பார்க்க வேண்டும்.

ஆனால், இவற்றைத் தவிர்க்க விரும்பும் சிலர், பங்குச் சந்தைகளுக்கு வராமல் அவர்களுக்குள்ளாகவே பேசி வைத்துக்கொண்டு பங்குச் சந்தையின் விலை நடமாட்டங்களைக் கண்காணித்து, ஒருவர் வாங்க ஒருவர் விற்க என்று வர்த்தகம் செய்கிறார்கள். அல்லது பெயருக்கு ஒன்று, இரண்டு பங்குகளை மட்டும் பங்குச் சந்தை மூலம் வாங்கிவிட்டு, அதே விலை, அதே நேரம், அதே பங்கை 100 அல்லது 1000 அல்லது அதற்கு மேலாகக்கூட அவர்களுக்குள் வர்த்தகம் செய்துகொள்கிறார்கள். பின்னர், அந்த வர்த்தகத்தை முடிக்கும்போது லாப, நஷ்டங்களுக்கேற்ப பணம் கொடுத்து, வாங்கி கணக்கை முடித்துக்கொள்கிறார்கள்.

இப்படி செய்வதற்கு ஓரளவு தரகு கமிஷனும் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக வரிகள் இல்லை. பில் இல்லாமல் பொருள்களை வாங்கும்போது வரி எதுவும் கட்டத் தேவையில்லை என்கிற மாதிரி நடக்கும் விஷயம் இது.

இப்படி அவர்களுக்குள்ளாகப் பெரிய அளவிலே செய்துகொள்ளும் வர்த்தகங்கள் குறித்து பங்குச் சந்தைகளுக்கோ, அரசுக்கோ தெரிய வராது. தவிர, பங்குச் சந்தைகள் மூலமாக வர்த்தகம் செய்தால், முன்பணம் (மார்ஜின்) கட்ட வேண்டும். அந்த முன்பணத்தைப் போல எத்தனை மடங்கு அவர்கள் இன்ட்ரா டே செய்யலாம் என்கிற எக்ஸ்போசர் அளவை என்.எஸ்.இ/பி.எஸ்.இ பங்குச் சந்தைகள் நிர்ணயித்ததாக இருக்கும். அதைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான எக்ஸ்போஷரையும் இந்த வெளி வர்த்தகர்கள் அனுமதிக்கிறார்கள்.

இப்படி நடக்கும் வர்த்தகங்களுக்குதான் `டாப்பா டிரேடிங்’ (Dabba Trading) என்று பெயர்.

இது முழுக்க முழுக்க சட்டவிரோதமானது. இந்தக் குற்றத்தை செய்து மாட்டினால் சிறைவாசம் உட்பட பல தண்டனைகள் உண்டு.

`இப்படி செய்பவர்களைத் தெரிந்துகொள்ள நாங்கள் சில வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவையும் (AI) பயன்படுத்துகிறோம். எங்கள் ஆட்கள் சிலரை வாடிக்கையாளர்கள் போலவே அணுகச் சொல்லி (Mystery Shopping) அதன் மூலமும் அவர்கள் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறோம். Whatsapp மற்றும் Telegram போன்ற குழுக்களில் இந்த வர்த்தகத்துக்கு அழைப்பவர்களைக் கண்காணிக்கிறோம்’ என்றெல்லாம் தேசிய பங்குச் சந்தை தெரிவித்திருக்கிறது.

இதிலிருந்து மூன்று முக்கியமான விஷயங்களை சிறு முதலீட்டாளர்களாகிய நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

டப்பா டிரேடிங்
டப்பா டிரேடிங்

ஒன்று, பங்குச் சந்தையில் மூலமாகவே வாங்கி விற்றாலும்கூட அடிக்கடி வாங்கி, விற்பதால் கட்ட வேண்டிய பல்வேறு கட்டணங்களால் நமக்குக் கிடைக்க வேண்டிய லாபம் கணிசமாகக் குறையும். சில சமயங்களில் நம் வரும் நஷ்டத்தின் அளவையும் அது அதிகப்படுத்திவிடும்.

இரண்டாவது வரி, ஏய்ப்பு செய்ய டாப்பா போன்ற வர்த்தகங்களில் ஈடுபட வேண்டாம். இதில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்கள் மாட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. தண்டணைகள் கடுமையாக இருக்கின்றன.

மூன்றாவது, டாப்பா டிரேடிங்கில் லாபம் வந்தால் கையில் கிடைக்குமா, ஒழுங்காகத் தருவார்களா என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் கிடையாது. இது ஒரு வகையில் சூதாட்டம் மாதிரி. இவை வெளிப்படையாக, அரசு அனுமதியுடன் முறையாக நடப்பவையல்ல. இதில் நமக்கு ஏதாவது பாதிப்பு வந்தால், நாம் எந்த அமைப்பிலும் சென்று புகார் செய்ய முடியாது. பிரச்னையை செபி, நீதிமன்றம் ஆகியவற்றுக்குக் கொண்டு போக இயலாது. அதே சமயம், நஷ்டமானால், நம்மை சும்மா விட மாட்டார்கள். ரெளடிகளை வைத்து, நம்மிடம் இருந்து முரட்டுத்தனமாக பணத்தை வசூலித்துவிடுவார்கள். அப்போதும் நாம் யாரிடமும் போய் புகார் செய்ய முடியாது. அதிக எக்ஸ்போஷர் கிடைப்பதால், அதிகமாக நஷ்டம் வரும் ஆபத்தும் இருக்கிறது.

டப்பா டிரேடிங் என்பது பேராபத்து. அதில் போய் மாட்டிவிடாதீர்கள் முதலீட்டாளர்களே உஷார்! மக்களே உஷார்!