யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பணப் பரிவர்த்தனை மிகவும் எளிதானது. அந்தவகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் ஒரு நாளில் இந்தியர்கள் மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி நிலவரப்படி 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 2022 பிப்ரவரியில் ஒரு நாளைக்கு 24 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்த நிலையில் 2023 பிப்ரவரி நிலவரப்படி 36 கோடியாக அதிகரித்துள்ளது. மதிப்பு அளவில் பார்க்கும்போது கடந்த் ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி ரூ. 5.36 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை மூலம் செய்யப்பட்டிருந்தது.
2023 பிப்ரவரி நிலவரப்படி ரூ.6.27 லட்சம் கோடி அளவுக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விழிப்புணர்வு வாரத்தைத் தொடங்கிவைத்த சக்தி காந்த தாஸ் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.
மேலும் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாதத்தில் நடக்கும் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 1000 கோடி என்ற மைல்கல்லை சாதித்திருக்கிறது என்றும் கூறினார். யுபிஐ மூலமான பரிவர்த்தனைகளை பிற பரிவர்த்தனைகளோடு ஒப்பிடுகையிலும் யுபிஐதான் அதிக அளவில் பரிவர்த்தனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
ஜனவரி 2023 -ல் யுபிஐ மூலமான பரிவர்த்தனைகள் 800 கோடி முறை நடந்திருக்கிறது. என்.இ.எஃப். டி (NEFT) முறையில் 3.18 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

யுபிஐ வங்கித் துறையின் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இடையில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் என்ற செய்திகள் பரவின. ஆனால், அப்படியான கட்டணம் குறித்து எந்த தகவலும் அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கியிடமிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.