மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தினசரி, வாரம், மாதம்... எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு எது பெஸ்ட்?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மாதாந்தர எஸ்.ஐ.பி சிறந்தது என்பதற்கான சில தெளிவான விளக்கங்கள் இதோ...

பிபின் ராமச்சந்திரன், ரிசர்ச் அனலிஸ்ட், Primeinvestor.in

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் பலரும் சமீப காலமாகக் கேட்கும் கேள்வி, தினசரி எஸ்.ஐ.பி, வாராந்தர எஸ்.ஐ.பி, மாதாந் தர எஸ்.ஐ.பி - இதில் யாருக்கு, எது சிறந்தது என்பதுதான். இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

எஸ்.ஐ.பி-யின் முக்கிய அம்சம் சந்தையின் பல்வேறு ஏற்ற இறக்க சூழல்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராகத் தொடர்ந்து முதலீடு செய்யும்போது, முதலீட்டின் மீதான செலவைக் குறைக்கும் வகையில் சராசரி செய்ய உதவியாக இருக்கும்.

பிபின் ராமச்சந்திரன் 
ரிசர்ச் அனலிஸ்ட், 
Primeinvestor.in
பிபின் ராமச்சந்திரன் ரிசர்ச் அனலிஸ்ட், Primeinvestor.in

அந்த வகையில், தொடர்ச்சியான சீரான முதலீடு என்பதை அடிக்கடி பின்பற்றும்போது சந்தையின் பெரும்பான்மை ஏற்ற, இறக்க சூழலைச் சாதகமாக்கிக்கொள்ளும் வாய்ப்பு மாதமொரு முறை முதலீடு செய்வதைவிடவும் அதிகமாக இருக்கும் எனில், மாதாந்தர எஸ்.ஐ.பி.யைவிட, வாராந்தர எஸ்.ஐ.பி அல்லது தினசரி எஸ்.ஐ.பி சிறந்ததாக இருக்குமா? எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை அதிகமாக இருப்பின், சராசரி செய்யும் நடவடிக்கையில் உச்சபட்ச பலனை நாம் அடைய விரும்புவது இயற்கையான விஷயம்தானே?

இது குறித்து தெளிவான முடிவுக்கு வருவதற்குப் பல்வேறு காலகட்டங்களில் எஸ்.ஐ.பி முதலீட்டில் ஃபண்டுகள் கொடுத்த வருமானத்தை ஆய்வு செய்து பார்க்கலாம்.

எப்படி வருமானத்தை ஒப்பிடுவது?

மாதாந்தர எஸ்.ஐ.பி, வாராந்தர எஸ்.ஐ.பி அல்லது தினசரி எஸ்.ஐ.பி ஆகிய மூன்றையும் ஒப்பிடுவதற்கு நாம் கடந்த 15 ஆண்டு காலத்தில் பல்வேறு சந்தை சுழற்சிகளையும், பல்வேறு எஸ்.ஐ.பி கால அளவுகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.

A. 3 ஐந்தாண்டுக் காலம்: ஜனவரி 2005 முதல் 2009 டிசம்பர் வரை, ஜனவரி 2010 முதல் 2014 டிசம்பர் வரை, ஜனவரி 2015 முதல் 2019 டிசம்பர் வரை.

B. 10 ஆண்டுக் காலம்: ஜனவரி 2005 முதல் 2014 டிசம்பர் வரை, ஜனவரி 2010 முதல் டிசம்பர் 2019 வரை

C. 15 ஆண்டுக் காலம்: ஜனவரி 2005 முதல் 2019 டிசம்பர் வரை,

தினசரி, வாராந்தர மற்றும் மாதாந்தர எஸ்.ஐ.பிகள் அடிப்படையில் (ஃபண்ட் சார்ந்த வருமானத்தை ஒப்பிடுவதற்குப் பதிலாக) நிஃப்டி 100, நிஃப்டி 500 ஆகிய சந்தையின் இரு முன்னணி ஈக்விட்டி இண்டெக்ஸ்களின் வருமானத்தை ஒப்பிட்டிருக்கிறோம். இந்த ஒப்பீட்டை அட்டவணைகளில் காணலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இந்த ஆய்வுக்குப் பிறகு, நமக்கு கிடைக்கும் முடிவு என்ன வெனில், குறிப்பிட்ட ப்ரீக்வன்சியில் முதலீடு செய்தால், அதிக வருமானம் கிடைக்கிறது என்று சொல்வதற்கான எந்த அம்சமும் இல்லை. பங்குச் சந்தை என்பது ஏற்ற இறக்கங்களால் நிறைந்தது என்றாலும், தினசரி வர்த்தகத்தில் அவை பெரிய ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகாது. முதலீட்டுச் செலவை சராசரி செய்வதற்கான சாத்தியங்களையும் அதிகமாகக் கொடுக்கும். இது ஒருபக்கம் இருக்க, தினசரி வர்த்தகத்தில் நடக்கும் இறக்கத்தின் பலன், சந்தை உச்சத்தில் இருக்கும்போது செய்யப்படும் முதலீட்டாளரால் சமன் செய்யப்பட்டுவிடும். உதாரணமாக, நிஃப்டி 100 இண்டெக்ஸில் ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2020 வரை மாதாந்தர எஸ்.ஐ.பி-யில் ரூ.10,000 முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் மொத்தமாக செய்த முதலீடு ரூ.12,00,000. டிசம்பர் 2020-ல் அதன் மதிப்பு ரூ.22,06,095-ஆக இருக்கிறது.

மாதாந்தர எஸ்.ஐ.பி 10,000 ரூபாயை, வாராந்தர எஸ்.ஐ.பி ரூ.2,298-ஆக மாற்றும்போது, நாம் செய்கிற மொத்த முதலீடு ரூ.12,00,000 மாற்றமில்லாமல் இருக்கும். ஆனால், டிசம்பர் 2020-ல் முதலீட்டின் மதிப்பு ரூ.22,06,413-ஆக உள்ளது. வாராந்தர எஸ்.ஐ.பி, மாதாந்தர எஸ்.ஐ.பி-யைவிட ரூ.318 அதிகமாக வருமானம் தந்திருக்கிறது. அதேபோல், மாதாந்தர எஸ்.ஐ.பியை தினசரி எஸ்.ஐ.பி-ஆக மாற்றினால், ஒரு நாளைக்கு ரூ.484.26 முதலீடு செய்வோம். ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2020 வரை மொத்த முதலீடு ரூ.12,00,000. டிசம்பர் 2020-ல் முதலீட்டின் மதிப்பு ரூ.22,07,230-ஆக உள்ளது. தினசரி எஸ்.ஐ.பி, மாதாந்தர எஸ்.ஐ.பி-யைவிட ரூ.1,135 அதிகமாக வருமானம் தந்திருக்கிறது.

எஸ்.ஐ.பி முதலீடு, தினசரி, வாராந்தரம், மாதாந்தரம் ஆகிய மூன்று வகையிலும் தரும் வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரிய வித்தியாசம் இருப்பதில்லை என்பது தெளிவாகிறது. இந்த ஒப்பீட்டில் நமக்குத் தெரியவருவது:

1. எஸ்.ஐ.பி முதலீட்டின் கால இடைவெளியைக் குறைத்து அதிக முறை முதலீடு செய்வதால், பெரிய பலன் கிடைக் கிறது என்று வாதாடும் அளவுக்கு மாதாந்தர எஸ்.ஐ.பி தரும் வருமானத்தைவிட வாராந்தர எஸ்.ஐ.பி தரும் முதலீடு அதிகமாக இல்லை.

2. சந்தை இறக்கத்தில் இருக்கும் போது அதாவது, முதலீட்டு செலவைக் குறைக்கும் சாத்தி யத்தை எதிர்பார்க்கும்போது, மாதாந்தர எஸ்.ஐ.பி முறையே அதற்குப் போதுமானதாக இருக்கிறது. சந்தையின் இறக்கம் குறுகிய நேரமே இருக்கிறது எனில், எந்தவிதமான எஸ்.ஐ.பி முறையும் முதலீட்டு செலவைக் குறைக்கும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே, சந்தை இறக்கத்தை முதலீட்டு செலவைக் குறைக்க முழுமையாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமெனில், அதற்கு சிறந்த வழி உபரியாக உள்ள கணிசமான மொத்த பணத்தை முதலீடு செய்து எஸ்.ஐ.பி முதலீட்டில் சராசரி செய்வதை மேற்கொள்வதுதான்.

இங்கு ஒப்பீட்டளவில் சில கால வரம்புகளை மட்டுமே நாம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இந்த ஒப்பீட்டில் உங்களுக்கு திருப்தி இல்லாதபட்சத்தில் வேறு சில கால வரம்புகளில் எஸ்.ஐ.பி முதலீடுகள் தந்த வருமானத்தை கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இப்படி எடுத்துக்கொள்ளும் கால வரம்பை ஆரம்ப தேதி, முடிவு தேதி அடிப்படையில் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரண மாக, 01.01.2005 முதல் 31.12.2019 வரை. எஸ்.ஐ.பி முதலீட்டு தொகை, மொத்த முதலீடு, முடிவில் முதலீட் டின் மீதான மதிப்பு மற்றும் வருமான விகிதம் ஆகியவற்றைக் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த உதாரணத்தில் கிடைத்துள்ள வருமான ஒப்பீடு அட்டவணையில் தந்திருக்கிறோம். இதே போல, நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

மாதாந்தர எஸ்.ஐ.பி.யைவிட, வாராந்தர எஸ்.ஐ.பி, தினசரி எஸ்.ஐ.பி சிறிதளவு அதிகமான வருமானத்தைக் கொடுத்திருப்பது உங்களைக் கவரும்பட்சத்தில் நீங்கள் தாராளமாக வாராந்தர எஸ்.ஐ.பி, தினசரி எஸ்.ஐ.பி மேற் கொள்ளலாம். அல்லது இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது என்பவர்களுக்கு, மாதாந்தர எஸ்.ஐ.பி சிறந்தது என்பதற்கான சில தெளிவான விளக்கங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

1. மாதாந்தர எஸ்.ஐ.பி நிர்வகிக்க எளிது: சம்பளதாரர்கள் மாதத்துக்கு ஒரு முறைதான் ஊதியம் பெறுகிறார்கள். எனவே, மாதாந்தர எஸ்.ஐ.பி முறையே பொருத்தமாக இருக்கும். மாதாந் தர முதலீடு என்னும்போது வங்கிக் கணக்கில் வரவு செலவுகளைக் கண்காணிப்பதும், முதலீட்டுக் கான தொகை இருப்பதை உறுதி செய்வதும் எளிது. வாராந்தர எஸ்.ஐ.பி எனில், மாதம் 4 தவணை, தினசரி எஸ்.ஐ.பி எனில், மாதத்தில் உள்ள வர்த்தகத் தினங்களின் எண்ணிக்கை. எனவே, தொடர்ந்து வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா, இன்னும் எத்தனை தவணைக்குப் பணம் தேவை என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய வேலை இருக்கும். மாதாந்தர எஸ்.ஐ.பி எனில், இந்த வேலை இல்லை.

2. வரிக் கணக்குத் தாக்கல், போர்ட்ஃபோலியோ நிர்வகிப்பும் எளிது: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நாம் விற்று வருமானத்தை எடுக்கும்போது நாம் மூலதன ஆதாயத்தை வரிக் கணக்குத் தாக்கலில் பதிவு செய்ய வேண்டும். இந்த மூலதன ஆதாயம் என்பது ஒவ்வொரு முதலீட்டு பரிவர்த்தனைக்கும் தனித்தனியாகக் கணக்கிடப்பட வேண்டும். முதலீட்டுப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது ஒவ்வொரு பரிவர்த்தனையின் செலவு மற்றும் அதன் ஆதாயம் கணக்கிடுவது மிகவும் சிரமமான காரியம். அதேபோல, எக்ஸிட் லோட் என்கிற வெளியேறு கட்டணமும் கணக்கிடுவது கடினம். எனவே, மாதாந்தர எஸ்.ஐ.பி-யில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவதும், போர்ட்ஃபோலியோவை நிர்வகிப்பதும் எளிதாக இருக்கும்.

3. ஈக்விட்டி ஃபண்டுகளில் மட்டுமே பலன்: எஸ்.ஐ.பி முதலீடுகளில் ஈக்விட்டி ஃபண்டுகளில்தான் ஏற்ற இறக்கங் களைப் பயன்படுத்தி கணிசமான ஆதாயம் பார்க்க முடியும். பிற வகை ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முதலீடுகள் மூலமாக சராசரி செய்யும் வாய்ப்புகள் இருப்பதில்லை. அதேபோல, பிற ஃபண்டுகளில் டைமிங் செய்வது கணிசமான ரிஸ்க்கைக் கொண்டுவரும். எனவே, பிற வகை ஃபண்டுகளில் அடிக்கடி செய்யப்படும் முதலீடுகள் அதிக சிரமத்தைக் கொண்டுவரும்.

எஸ்.ஐ.பி முதலீட்டின் சாதகமான அம்சமே அதன் எளிமைதான். இதில் கிடைக்கும் மிகப் பெரிய ஆதாயம், நாம் அடிக்கடி குறிப்பிடுவதுபோல முதலீட்டில் ஒழுக்கத்தைக் கொண்டு வரும் என்பதுதான். அதை மாதம் தோறும் செய்வதே சிறந்ததாக இருக்கும்!

(ஆய்வு தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்