
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு வருமானம் என்பது டிவிடெண்ட் அல்லது மூலதன ஆதாயமாகக் கிடைக்கும் அல்லது இரண்டும் சேர்ந்ததாக இருக்கும். ஒரு காலத்தில், எந்த ஃபண்டில் அதிகமாகவும் தொடர்ந்தும் டிவிடெண்ட் தருகிறார்களோ, அதைப் பல முதலீட்டாளர்கள் தேர்வு செய்துவந்தார்கள். டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி இல்லாமல் இருந்ததே இதற்கு முக்கியமானக் காரணம் ஆகும்.
டிவிடெண்ட் வழங்கும்போது, உண்மையாக என்ன நடக்கிறது, அந்த வருமானத்துக்கு எப்படி வரி கட்ட வேண்டும் எனத் தெரிந்து கொண்டால், இனி அதிக லாபம் வேண்டும் என நினைக்கும் எந்த முதலீட்டாளரும் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்ய மாட்டார்கள். இது ஏன் என விரிவாகப் பார்ப்போம்.

டிவிடெண்ட் என்பது...
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முகமதிப்புக்குத்தான் டிவிடெண்ட் தரப்படுகிறது. ஃபண்டின் முகமதிப்பு பெரும்பாலும் 10 ரூபாயாக இருக்கும். ஒரு ஃபண்டில் 20 சதவிகிதம் டிவிடெண்ட் தருகிறார்கள் எனில், ஒரு யூனிட்க்கு ரூ.2 டிவிடெண்ட் கிடைக்கும்.
பொதுவாக, டிவிடெண்ட் தரப்பட்ட விகிதத்துக் கேற்ப அந்த ஃபண்டின் என்.ஏ.வி. (நிகர சொத்து மதிப்பு) மதிப்பு குறைந்து விடும். உதாரணமாக, ஒரு ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு ரூ.28 எனில், டிவிடெண்ட் தந்த பிறகு, இது ரூ.26-ஆகக் குறைந்துவிடும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், டிவிடெண்ட் என்பது அதிகரித்திருக்கும் முதலீட்டு மதிப்பிலிருந்து ஒரு பகுதியை எடுத்து முதலீட்டாளருக்கே கொடுப்பதுதான் டிவிடெண்ட் ஆகும். அண்மையில் டிவிடெண்ட் என்பதை செபி அமைப்பு, வருமானப் பகிர்வு மற்றும் மூலதனம் திரும்பப் பெறும் விருப்பம் (Income Distribution cum capital withdrawal option IDCW) எனப் பெயர் மாற்றியிருக்கிறது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் கொடுத்து வருவதைப் பார்த்து, முதலீட்டு முடிவை எடுப்பது லாபகரமாக இருக்காது. டிவிடெண்ட் வழங்கப்பட்ட பிறகு, அதன் என்.ஏ.வி மதிப்பு டிவிடெண்ட் அளவுக்குக் குறையும் என்றாலும், மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால், முதலீட்டாளருக்கு டிவிடெண்ட் வழங்கப்பட்டதும் அந்த அளவுக்கு ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு குறைந்துவிடும் என்பதால், நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்கும் வாய்ப்பு குறைகிறது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவது என்பது ஃபண்ட் மேனேஜரை சார்ந்தது. அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போதுதான் டிவிடெண்ட் வழங்குவார். அப்படி டிவிடெண்ட் கொடுக்கப்படும் நேரத்தில் முதலீட்டாளருக்கு செலவுக்குப் பணம் தேவையில்லை எனில், அந்தப் பணம் தேவை இல்லாமல் கண்டபடி செலவு செய்ய வாய்ப்புள்ளது. இதனால், முதலீட்டுப் பணம் வீணாக வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில், முதலீட்டாளருக்கு பணம் தேவைப்படும் நேரத்தில் டிவிடெண்ட் கிடைக்க வாய்ப்பும் இல்லை.

முதலீட்டில் லாபத்தைக் குறைக்கும் டிவிடெண்ட் வரி...
தற்போதைய நிலையில், டிவிடெண்டுக்கு வருமான வரி விதிக்கப்படுவதால், முதலீட்டாளரின் கையில் கிடைக்கும் தொகை கணிசமாகக் குறைந்துவிடுகிறது. அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் டிவிடெண்ட் ஆப்ஷன் என்பது லாபகரமானது இல்லை. இதை சற்று விரிவாகப் பார்ப்போம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் கடன் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் என்பனவற்றில் எதுவாக இருந்தாலும், டிவிடெண்ட் தொகைக்கு முதலீட்டாளர்கள் வரி கட்ட வேண்டும். இந்த வரி அவரவர் வரி வரம்புக்கேற்ப (பழைய வரி முறைப்படி 5%, 20% அல்லது 30%, புதிய வரி முறைப்படி, 5%, 10%, 15%, 20%, 25% மற்றும் 30%) இருக்கும்.
ஒரு நிதி ஆண்டில் ரூ.5,000-க்கு மேற்படும் டிவிடெண்ட் தொகைக்கு 10% மூலத்தில் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) செய்யப்படும். இதை சிலர், ரூ.5,000-க்குக் கீழே இருந்தால் டிவிடெண்ட்டுக்கு வரி கிடையாது எனத் தவறாக நினைக்கிறார்கள்.
டிவிடெண்ட் ஒருவரின் இதர வருமானமாக (Other Income) எடுத்துக்கொள்ளப்பட்டு, வரி விதிக்கப்படும். டி.டி.எஸ் 10% பிடிக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் அதைக் கழித்துக்கொண்டு மீதி வரி கட்ட வேண்டும்.
சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடைமுறை சிக்கலைக் கருத்தில்கொண்டு, டிவிடெண்ட் அனைத்துக்கும் 10% டி.டி.எஸ் பிடித்துவிடுகின்றன. முதலீட்டாளர்தான் வரியைக் கணக்கிட்டு, கூடுதலாக டி.டி.எஸ் பிடிக்கப்பட்டிருந் தால், வரிக் கணக்கைத் தாக்கல் செய்து, ரீஃபண்ட் பெற வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ-க்கள்) டிவிடெண்ட் தொகைக்கு 20% டி.டி.எஸ் பிடிக்கப்படுகிறது.
உதாரணமாக, ரூ.10 முகமதிப்புள்ள யூனிட் ஒன்றுக்கு ரூ.2 டிவிடெண்ட் அறிவிக்கப்படுகிறது எனில், ஒருவரிடம் 10,000 யூனிட்டுகள் இருக்கின்றன. முதலீட்டாளருக்கு 2X10,000 = ரூ.20,000 டிவிடெண்ட் கிடைக்க வேண்டும். ஆனால், 10% டி.டி.எஸ் என்கிறபோது, அதாவது, ரூ.2,000 போக, ரூ.18,000 தான் டிவிடெண்டாகக் கிடைக்கும்.
இத்துடன் டிவிடெண்ட் வரி நின்றுவிடாது. இந்த முதலீட்டாளர் 30 சதவிகித வருமான வரி வரம்பில் வருகிறார் எனில், மீதி 20% வரி அதாவது, 4,000 ரூபாயை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்குமுன் முதலீட்டாளர் கட்ட வேண்டும். அறிவிக்கப்பட்ட டிவிடெண்ட் ரூ.20,000 என்றாலும், முதலீட்டாளருக்கு கிடைக்கும் தொகை 14,000 ரூபாய்தான்.
குரோத் ஆப்ஷன் பெட்டர் சாய்ஸா?
ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து ஓராண்டுக்குப் பிறகும் கடன் சார்ந்த ஃபண்டு களில் மூன்றாண்டுக்குப் பிறகும் பணம் தேவைப்படுகிறது எனில், டிவிடெண்ட் ஆப்ஷனுக்குப் பதிலாக, குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்து அதை, லாபகர மாகப் பயன்படுத்தலாம்; வருமான வரியைக் குறைக்கலாம்.
மூலதன ஆதாயம் எவ்வளவு..?
ஈக்விட்டி ஃபண்டுகளைப் பொறுத்தவரை, ஓராண்டுக்குப் பிறகு, தேவைக்கு யூனிட்டுளை விற்றுப் பணமாக்கும்போது, மூலதன ஆதாயத்துக்கு (Capital Gain) நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கட்ட வேண்டாம். இதற்கு மேற்பட்ட தொகைக்கு 10% (கூடுதல் வரி, ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை சேர்ந்து 11.96%) வரி கட்ட வேண்டி வரும்.
கடன் சந்தை ஃபண்டுகள் என்கிறபோது, மூன்றாண்டு களுக்குப் பிறகு, யூனிட்டுகளை விற்பது லாபகரமாக இருக்கும். மூன்றாண்டுக்கு முன் எனில், லாபத்துக்கு அடிப்படை வருமான வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டும்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு எனில், பணவீக்க விகித சரி கட்டலுக்குப் பிறகான லாபத்துக்கு 20% வரி (கூடுதல் வரி, ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வைச் சேர்ந்து 23.92%) கட்டினால் போதும். மூன்றாண்டு கழிந்த நிலையில், பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகான லாபத்துக்கு வரி என்பது மிகக் குறைவாக இருக்கும். சில நேரங் களில் வரி கட்ட வேண்டியதுகூட இருக்காது.
உதாரணமாக, ஈக்விட்டி ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்து ஓராண்டு கழித்து ரூ.20,000 டிவிடெண்ட் தரப்படுகிறது எனில், டிவிடெண்ட் வரி ரூ.6,000 போக 14,000 ரூபாய்தான் டிவிடெண்டாகக் கிடைக்கும் எனப் பார்த்தோம். இதுவே, ஓராண்டு கழித்து ரூ.20,000 மதிப்புக்கு யூனிட்டுகளை விற்பதாகவும், இந்த யூனிட்டுகளை ஓராண்டுக்கு முன் ரூ.15,000-க்கு வாங்கியதாகவும் வைத்துக் கொள்வோம்.
நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் நீண்ட கால ஆதாயத் துக்கு வரி இல்லை என்பதால், இந்த நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.5,000-க்கு வரி எதுவும் இல்லாமல் முதலீட்டாளருக்குக் கிடைத்துவிடும். முதலீட் டாளருக்கு டிவிடெண்ட் வரியாகச் செல்லும் தொகை ரூ.6,000 கூடுதல் லாபம்.
கடன் சந்தை சார்ந்த ஃபண்டில் மூன்றாண்டு கழித்து ரூ.20,000 டிவிடெண்ட் தரப்படுகிறது என்று வைத்துக்கொண்டால், டிவிடெண்ட் வரி 30% (அதிகபட்ச வரி வரம்பு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது) அதாவது, ரூ.6,000 போக 14,000 ரூபாய்தான் டிவிடெண்டாகக் கிடைக்கும் எனப் பார்த்தோம். இதுவே, ரூ.20,000 மதிப்புக்கு யூனிட்டு களை விற்றால், பணவீக்க சரிகட்டலுக்குப் பிறகு, மூலதன ஆதாயத்துக்கு சுமார் 20% கட்ட வேண்டும்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ரூ.20,000 மதிப்புள்ள யூனிட்டுகளை விற்பதாக வைத்துக்கொள்வோம். இந்த மூன்றாண்டுகளில் சராசரி பணவீக்க விகிதம் 5% என வைத்துக்கொள்வோம். இந்த யூனிட்டுகளை மூன்றாண்டு களுக்குமுன் ரூ.15,000-க்கு வாங்கியதாக வைத்துக்கொண்டால் நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.5,000 ஆகும்.
இதில் பணவீக்க விகிதத்தால் (15%), வாங்கிய விலையான ரூ.15,000 என்பது ரூ.17,250-ஆக அதிகரித்துவிடும். இங்கே பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு, மூலதன ஆதாயம் (20,000 - 17,250) ரூ.2,750 ஆகக் குறைந்துவிடும். இதற்கு 20% வரி என்றால் ரூ.550 கட்ட வேண்டும்.
டிவிடெண்ட் வரி மூலம் சென்ற தொகை ரூ.6,000 எங்கே, பணவீக்க விகித சரிகட்டலுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி ரூ.550 எங்கே..? முதலீட்டாளருக்கு ரூ.5,450 கூடுதல் லாபம்.
குறிப்பு: முதலீட்டாளருக்கு எளிமையாகப் புரிய வேண்டும் என்பதற்காகத் தோராய கணக்கீடுதான் கொடுக்கப்பட்டிருக்கிறது. மூலதன ஆதாயம் கணக்கிடும் போது, அந்தந்த ஆண்டுக்கு மத்திய அரசு வெளியிட்டிருக்கும் காஸ்ட் இண்டெக்ஸைப் பயன்படுத்தி மூலதன ஆதாயம் கணக்கிட வேண்டும்.
ஈக்விட்டி ஃபண்டும் டிவிடெண்ட் ஆப்ஷனும்..!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தரப்படும் டிவிடெண்ட் என்பது முதலீட்டாளர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே தருவதைப் போன்றது. பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனைக் கண்டிப்பாகத் தேர்வு செய்யக் கூடாது. காரணம், அந்த முதலீடு கூட்டு வளர்ச்சி அடிப்படையில் (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) வளர வாய்ப்புள்ளது. முதலீட்டின் வருமானம் பெருகப் பெருக டிவிடெண்டாக எடுத்துவிட்டால், அந்த முதலீட்டுத் தொகை எப்படி அதிகரிக்கும்? மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீட்டுத் தொகையும் அதன் வளர்ச்சியும் (லாபம்) அதிலேயே இருந்தால் மட்டுமே பணம் பல மடங்கு பெருகும். குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்யும்போது, பணம் அதிலிருந்து பன்மடங்காக அதிகரிக்கும்.