சொந்த வீடு என்பது எல்லோரது கனவு. வீட்டுக்கடன் வாங்குவதன் மூலமே இந்தக் கனவை நாம் நிஜமாக்கிக்கொள்ள முடியும். ஆனால், வீட்டுக்கடன் வாங்குபவர்கள் அந்தக் கடனை அடைப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். வீட்டுக்கடனை வேகமாக அடைப்பதன் மூலம் கடனில் இருந்து வெளியே வர நினைப்பது நல்ல எண்ணம்தான். ஆனால், 20 ஆண்டுகளுக்குக் கட்டிமுடிக்கிற மாதிரி கடன் வாங்கிவிட்டு, அதை ஏன் 15 அல்லது 10 ஆண்டுகளில் கட்டிமுடிக்க வேண்டும்?

அதற்குப் பதிலாக, 20 ஆண்டுகளில் கட்டி முடிக்கிற கடனை 20 ஆண்டுகளிலேயே கட்டி முடிப்போம். வீட்டுக்கடனில் கூடுதலாகக் கட்டுகிற, கட்டும் தொகையை நீண்ட காலத்தில் நல்ல லாபம் தரும் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், சூப்பர் லாபம் பார்க்க முடியும். நீங்கள் வீட்டுக்கடனுக்காகக் கட்டிய பணம் அனைத்துமே உங்களுக்குத் திரும்பக் கிடைத்து, ஏறக்குறைய ஒரு பைசா செலவு இல்லாமல் உங்களுக்கு இலவசமாக ஒரு வீடு கிடைக்கும் நிலை உருவாகும். எப்படி என்று கேட்கிறீர்களா? வாருங்கள், இதற்கான கணக்கைப் பார்ப்போம்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தருண் ஜீவாவுக்கு இப்போது 30 வயது. அவரின் 55 வயதுக்குள் திரும்பக் கட்டுகிற மாதிரி ரூ.30 லட்சத்தை அவர் வீட்டுக்கடனை வாங்குகிறார். இதற்கு வட்டி விகிதம் 9% என்று வைத்துக்கொள்வோம்.

ரூ.30 லட்சத்தை 9% வட்டியில் 25 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த மாதம்தோறும் ரூ.25,176 கட்டுகிறார். இப்படித் திரும்பச் செலுத்தினால், வீட்டுக் கடனை கட்டி முடிக்கும்போது மொத்தம் எவ்வளவு பணத்தைக் கட்டி இருப்பார்?
வீட்டுக் கடன் தொகை - ரூ.30,00,000
வட்டியாகக் கட்டும் தொகை - ரூ.45,52,767
மொத்தமாகக் கட்டும் தொகை - ரூ.75,52,767
வீட்டுக்கடன் ரூ.30 லட்சத்தை மாதம்தோறும் ரூ.25,175 கட்டுவது ஒருபக்கம் இருக்கட்டும். இப்படி இ.எம்.ஐ கட்டுவது தவிர்க்க முடியாது.
இப்படி இ.எம்.ஐ கட்டுகிற அதே சமயத்தில், இந்த இ.எம்.ஐ தொகையில் 15% பணத்தை, அதாவது வெறும் ரூ,3,776-யை 25 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் 12% வருமானம் தரும் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், எவ்வளவு கிடைக்கும்?
மொத்தமாகக் கட்டும் தொகை - ரூ.11,32,915
லாபமாக கிடைக்கும் தொகை - ரூ.60,33,283
மொத்தமாக திரும்பக் கிடைக்கும் தொகை ரூ.71,66,198 அதாவது, வீட்டுக்கடனை அடைக்க நீங்கள் கட்டிய மொத்தத் தொகை - ரூ.75,52,767
எஸ்.ஐ.பி-ஆக கட்டியதால் திரும்பக் கிடைக்கும் மொத்த தொகை - ரூ.71,66,198

வீட்டுக்கடனுக்காக நீங்கள் கட்டிய பணம் அளவுக்கு உங்களுக்குப் பணம் கிடைத்துவிட்டதல்லவா? இந்தப் பணத்தை வைத்து, உங்களது எதிர்காலத் தேவைகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாமே!
ஏற்கெனவே மாதம்தோறும் இ.எம்.ஐ-ஆக ரூ.25,176-ஆக கட்டிவரும் வேளையில், மேலும் ரூ.3,776-யைக் கட்ட முடியுமா என்று கேட்கலாம். நிச்சயமாக முடியும். வீட்டுக்கடனை சீக்கிரமாக அடைக்க கூடுதலாக கட்டும் தொகையில் 15 சதவிகிதத்தைத்தானே இப்படிக் கட்டப் போகிறீர்கள்? எனவே, இது முடியாத காரியம் என்று நினைக்கத் தேவையில்லை.
வீட்டுக்கடன் வாங்கி, இ.எம்.ஐ-ஆகத் திரும்பக் கட்டுகிறவர்கள் இது மாதிரி ஏன் யோசித்து செயல்படக் கூடாது?