Published:Updated:

பங்கு வர்த்தகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன? | Doubt of Common Man

இந்தியப் பங்குச்சந்தை ( vikatan )

பிக்ஸட் டெப்பாசிட் போல 100 ரூபாய் பணத்தை முதலீடு செய்தால் கண்டிப்பாகக் குறிப்பிட்ட காலத்தில் 150 ரூபாயாகி விடும் என்று பங்குச்சந்தையில் சொல்ல முடியாது. 100 ரூபாய் போட்டால் 50 ரூபாயும் ஆகலாம், 200 ரூபாயும் ஆகலாம்.

Published:Updated:

பங்கு வர்த்தகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன? | Doubt of Common Man

பிக்ஸட் டெப்பாசிட் போல 100 ரூபாய் பணத்தை முதலீடு செய்தால் கண்டிப்பாகக் குறிப்பிட்ட காலத்தில் 150 ரூபாயாகி விடும் என்று பங்குச்சந்தையில் சொல்ல முடியாது. 100 ரூபாய் போட்டால் 50 ரூபாயும் ஆகலாம், 200 ரூபாயும் ஆகலாம்.

இந்தியப் பங்குச்சந்தை ( vikatan )
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் பத்மா சந்திரசேகர் என்ற வாசகர், "பங்குவர்த்தகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன? இந்தக் குறிப்பிட்ட பங்கை வாங்கலாம் என எப்படி முடிவு செய்வது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

பங்குச்சந்தை என்ற சொல்லை நாம் பலமுறை செய்திகளிலும் பொதுவெளியிலும் கேட்டிருப்போம். ஆனால், அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிறையப் பேருக்கு வருவதில்லை. பங்குச்சந்தையை மிரட்சியுடன் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் உண்டு. ரூ.10,000 முதல் போட்டால் குறிப்பிட்ட காலத்தில் 1 லட்சமாக உயரும் என்ற ஆசை வார்த்தைகள் ஒரு பக்கம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் பெருநஷ்டத்தைச் சந்திக்க வேண்டும் என்பன போன்ற பயமுறுத்தல்கள் மறுபக்கம் என இரண்டுக்கும் இடையே நிற்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நம் வாசகர் ஒருவருக்கும் பங்குச்சந்தை முதலீடு செய்ய வேண்டும் என ஆர்வம் எழுந்திருக்கிறது. எனவே, பங்குச்சந்தை குறித்த மேற்கூறிய கேள்வியை நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

பங்குச்சந்தை
பங்குச்சந்தை
vikatan
நம் வாசகருக்கான விடையை அறிந்து கொள்ளும் பொருட்டும், பங்குச் சந்தை குறித்துத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கான ஓர் அறிமுகத்தைக் கொடுக்கும் நோக்கோடும் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம்.

அவர் கூறியதாவது, "பங்குச்சந்தை என்பது வங்கியில் நாம் செய்யும் பிக்ஸட் டெப்பாசிட் போல நிலையான ஒரு வருமானத்தைக் கொடுக்கும் என நாம் நினைக்கக் கூடாது. பங்குச்சந்தையில் எவ்வளவுக்கு எவ்வளவு ஆதாயம் அதிகமாக இருக்கிறதோ அதே அளவு ஆபத்தும் அதிகம் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் பங்குச்சந்தை பணவீக்கத்தைக் கடந்த ஒரு நல்ல ஆதாயம் கடந்த காலங்களில் கிடைத்திருப்பதைப் பார்க்க முடியும்.

வ. நாகப்பன்
வ. நாகப்பன்

புதிதாகப் பங்குச்சந்தைக்குள் நுழைபவர்கள் நிப்டி-யை (Nifty - தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்) அடிப்படையாகக் கொண்ட எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்களில் (Exchange Traded Fund - ETF) முதலீடு செய்யலாம். ஒழுங்குபடுத்தப்பட்ட தவணை முறை முதலீட்டு (Systematic Investment Plan - SIP) முறையில் இது போன்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்து பழகலாம். இது போன்ற பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்து பங்குச்சந்தை குறித்துப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

பங்குச்சந்தையைப் பொருத்தவரை ஏற்றமும் இறக்கமும் சகஜமான விஷயம். இறக்கத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் பங்குச்சந்தையில் நிலைக்க முடியாது. பிக்ஸட் டெப்பாசிட் போல 100 ரூபாய் பணத்தை முதலீடு செய்தால் கண்டிப்பாகக் குறிப்பிட்ட காலத்தில் 150 ரூபாயாகி விடும் என்று பங்குச்சந்தையில் சொல்ல முடியாது. 100 ரூபாய் போட்டால் 50 ரூபாயும் ஆகலாம், 200 ரூபாயும் ஆகலாம். எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பவர்களே பங்குச்சந்தையில் நிலைத்திருக்க முடியும்.

பங்குச்சந்தை என்றால் என்ன என்ற புரிதலையும், ஓரளவு அனுபவத்தையும் பெற்றபின்பு, இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த ஒரு நல்ல ஆலோசகரின் துணைகொண்டு முதலீடு செய்யலாம். புதிதாகப் பங்குச்சந்தைக்கு வருபவர்கள், தரகுக் கட்டணம் இல்லை என்று கூறி விளம்பரங்கள் செய்யும் ஆன்லைன் செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இது போன்ற ஆன்லைன் செயலிகளைப் பயன்படுத்துவது என்பது கண்ணைக் கட்டி காட்டில்விடுவது போன்ற கதையாகிவிடும். எதுவும் தெரியாமல் பங்குச்சந்தைக்குள் நுழைந்து நமது பணத்தை இழக்க நேரிடலாம். பங்குச்சந்தையைப் பொருத்தவரை ஒரு வழிகாட்டி அவசியம்.

ஷேர் மார்க்கெட்
ஷேர் மார்க்கெட்

கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் ஓர் ஆலோசகரின் துணையுடன் பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபடுவதே சிறந்தது. முதலீட்டைப் பொருத்தவரை பர்சனல் டச் மிகவும் முக்கியம். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான பங்கை எப்படித் தேர்வு செய்வது என்று கேட்டால், அது அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தின் கடந்தகால செயல்பாடுகள், எதிர்கால செயல்பாடுகள், நிதி அறிக்கைகள், வருமானம் எவ்வளவு, தலைமை யார் என நிறைய விஷயங்களை ஆராய்ந்த பிறகே முடிவு செய்ய முடியும். புதிதாகப் பங்குச்சந்தைக்குள் நுழையும் நபரால் சிறந்த பங்கு எது என்று எளிதில் கண்டறிய முடியாது. எனவே, ஓர் ஆலோசகரின் துணை கண்டிப்பாகத் தேவை" என்று கூறி முடித்தார்.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man