
‘‘பல வங்கிகளில் டெபாசிட் வைத்திருந்தால் ஒவ்வொரு வங்கிக்கும் அதிகபட்சம் தலா ரூ.5 லட்சம் கிடைக்கும்!’’
க.ஆதிமூலம், திசையன்விளை
வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சம் வரைக்கும் டெபாசிட் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. வங்கி திவால் ஆகும்பட்சத்தில் வட்டி மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் சேர்த்து ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே டெபாசிட் ஃபண்ட் திரும்பக் கிடைக்குமா? ரூ.5 லட்சத்துக்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் இருந்தால் முழுப் பணமும் கிடைக்காதா? உதாரணமாக, ஒருவர் வங்கி ஒன்றில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்திருந்தால், வங்கி திவாலாகும் பட்சத்தில் அவருக்கு எவ்வளவு தொகை டெபாசிட் இன்ஷூரன்ஸ் மூலம் திரும்பக் கிடைக்கும்?
வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in
‘‘வங்கி ஒன்றில் ஒருவர் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்திருக்கிறார் எனில், வங்கி திவால் ஆகும்பட்சத்தில் ரூ 5 லட்சம் மட்டுமே திரும்ப கிடைக்கும். ஒருவர் ஒரே வங்கியில் அவர் பேரிலேயே பலவிதமான கணக்குகள் அதாவது, சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதி கணக்கு வைத்திருந்து, அந்த மொத்த கணக்கு களின் வைப்புத் தொகை மற்றும் அவற்றுக்கான வட்டி எல்லாம் சேர்த்து ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், வங்கி திவாலாகும்பட்சத்தில் ரூ.5 லட்சம் மட்டுமே திரும்ப கிடைக்கும். இதுவே அவர் வேறு பல வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்திருந்தால், ஒவ்வொரு வங்கிக்கும் அதிகபட்சமாக தலா ரூ.5 லட்சம் திரும்பக் கிடைக்கும்.’’

சுலக்சனா சம்பத், காரைக்குடி.
என் வயது 30. எனக்கு 45 வயதில் ரூ.1 கோடி தேவை. இதற்கு நான் எந்த மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம்தோறும் எவ்வளவு முதலீடு செய்யவேண்டும்? நான் கவனிக்க வேண்டிய விவரங்கள் ஏதாவது இருக்கிறதா?
ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்
‘‘இன்னும் 15 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு பணம் தேவைப்படுவதால், நீங்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்துவரலாம். நீங்கள் லார்ஜ் கேப், மல்ட்டிகேப், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டு களில் முதலீடு செய்யலாம்.
உங்களின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், மாதம் ரூ.19,850 வீதம் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் முதலீடு செய்துவர வேண்டும். முதலீட்டுத் தொகையை மேலே குறிப்பிட்ட ஃபண்ட் வகைகளில் பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைப் பரவலாக்கம் செய்ய முடியும்.
முதலீட்டுக் காலமான 15 ஆண்டுகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குமுன் அதாவது 12-வது ஆண்டிலிருந்து அதுவரைக்கும் சேர்ந்திருக்கும் பணத்தை சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) மூலம் கடன் சந்தை சார்ந்த திட்டங்களுக்கு மாற்றிக் கொள்வது மூலம் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.
முதலீட்டில் ரிஸ்க்கை மிகவும் குறைக்க விரும்பி னால் முழுத் தொகையையும் கடன் சந்தை ஃபண்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். அதே போல, கடைசி மூன்று ஆண்டுகளில் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு கன்சர்வேட்டிவ் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இது திடீர் சந்தை இறக்கத்திலிருந்து முதலீட்டைப் பாதுகாக்க உதவும்.’’

கே.சுதா, திருவான்மியூர், சென்னை.
நான் 12-ம் வகுப்பு படித்துள்ளேன். என் வயது 27. மாதச் சம்பளம் ரூ.30,000. அண்மையில்தான் எனக்குத் திருமணமானது. நான் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இந்த பாலிசியை எடுக்க ஏதாவது அடிப்படைத் தகுதிகள் இருக்கின்றனவா, என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டிவரும்?
ராஜி ராஜேஷ், சர்ட்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர், https://banconus.com/
‘‘எந்தவொரு தனிநபரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியும். வயதுக்கான ஆதாரம் (பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்), அடை யாளத்துக்கான ஆதாரம் (ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்), முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம்) ஆகியவை தேவைப்படும்.
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, வருமான ஆதாரம் கொடுக்க வேண்டும். அதாவது, சம்பள ரசீது, படிவம் 16 மற்றும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தற்கான ஆதாரம் ஆகியவை தேவைப் படும். மார்பளவு புகைப்படம் ஒன்று தேவை. பொதுவாக, ஒருவரின் 15 ஆண்டுச் சம்பளத் தொகைக்கு இணையாக டேர்ம் பிளான் வழங்கப்படும்.
உங்களின் மாதச் சம்பளம் ரூ.30,000 என்பதால், ஆண்டுச் சம்பளம் ரூ.3.6 லட்சம் ஆகும். உங்களின் பிரீமியம் கட்டும் தகுதியை பொறுத்து ரூ.55 லட்சம் வரைக்கும் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனத்தில் வழங்கப்படும் முன்மொழிவு படிவத்தைப் (Proposal Form) பூர்த்தி செய்து மேலே குறிப்பிட்ட ஆவணங் களுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.’’

கே.கவிதா, முடிச்சூர்.
நான் மாதம்தோறும் ரூ.10,000 முதலீடு செய்துவந்தால், ஐந்தாண்டுகள் கழித்து எனக்கு மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும்? இதற்கு நான் எத்தகைய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என விளக்கிச் சொல்லவும்.
லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com
‘‘உங்களின் முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டு என இருப்பதால் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. எனவே, நீங்கள் உங்கள் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.
மாதம்தோறும் ரூ.10,000 முதலீடு எனும்போது, 5 ஆண்டுகளில் உங்களின் முதலீடு ரூ.6 லட்சம் ஆகியிருக்கும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 6% கூட்டு வட்டி கிடைத்தால், ஐந்து ஆண்டு முடிவில் உங்களின் முதலீடு ரூ.7 லட்சமாகவும், ஆண்டுக்கு 8% கூட்டு வட்டி கிடைத்தால், ரூ.7.4 லட்சமாகவும் பெருகியிருக்கும்.
உங்களுக்கு எவ்வளவு மாத வருமானம் தேவை, எவ்வளவு காலத்துக்குத் தேவை மற்றும் பணவீக்க உயர்வுக்கேற்ப உயரும் வருமானம் அல்லது உத்தரவாதமான, நிலையான வருமானம் வேண்டுமா என்பது போன்ற காரணிகளைப் பொறுத்து, திட்டங்களைத் தேர்வு செய்ய சில முறைகள் உள்ளன. நீங்கள் முழு மூலதனம் ரூ.7.4 லட்சத்தையும் தக்க வைத்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் மாதம்தோறும் சிறிய தொகையை வருமானமாகப் பெறலாம். ஆனால், உங்கள் செலவுகளை அது சமாளிக்கப் போதுமானதாக இருக்காது.
ஒவ்வோர் ஆண்டும் பணவீக்கத்தை ஈடுகட்டிய வருமானத்தை நீங்கள் பெற விரும்பினால், ஒவ்வோர் ஆண்டும் அதிக வருமானம் பெறலாம். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு மூலதனம் காலியாகிவிடும்.உதாரணமாக, நீங்கள் ரூ.7.4 லட்சத்தை ஆண்டுக்கு 8% வட்டி வருமானம் தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், நீங்கள் நிலையான வட்டியாக மாதம் 4,900 ரூபாயைப் பெறலாம். நீங்கள் முதலீடு செய்த பணம் அப்படியே இருக்கும்.
உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்து, ஆண்டுக்கு சுமார் 8-10% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் பணவீக்கத்தை ஈடுகட்டும் விதமாக நீங்கள் மாதம் ரூ.5,000 பெறலாம். மேலும், இந்தத் தொகையை ஆண்டுக்கு 5% அதிகரிக்கலாம்; அப்படி செய்யும்போது மூலதனம் 12-15 ஆண்டுகளுக்கு நீடிக்கும். ஆனால், சந்தை இறங்கும் பட்சத்தில்நீங்கள் முதலீடு செய்த பணம் குறையும் என்பதையும் மனதில் கொண்டு செயல்படுவது அவசியம்.’’