நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

டேர்ம் இன்ஷூரன்ஸ்... கணவன் – மனைவி சேர்ந்து எடுக்கலாமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கே.ஜெயகுமார், கங்கைகொண்டான்

இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்பாக முதலீடு செய்ய ஃபார்மா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா? ஒருவரின் மொத்த முதலீட்டில் இது போன்ற ஃபண்டுகளில் என் முதலீட்டில் எத்தனை சதவிகிதத்தை முதலீடு செய்யலாம்?

என்.ஜெயகுமார், சர்டிஃபைடு ஃபைனாஷியல் அனலிஸ்ட் (CFA).

“பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது ஈக்விட்டி ஹைபிரிட் (Equity Hybrid) மற்றும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் (Balanced Advantage) வகை ஃபண்டுகள் பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.

ஃபார்மா மியூச்சுவல் ஃபண்ட் என்பது செக்டார் ஃபண்ட் ஆகும். எனவே, இவற்றில் முதலீடு செய்யும் போது மொத்த முதலீட்டில் 5% - 10% வரை செய்யலாம்.

ஒரு துறையின் நெழிவு சுழிவுகள் பற்றி நன்கு அறிந்திருக்கும்பட்சத்தில் மட்டுமே துறை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

செக்டார் ஃபண்டுகளில் எப்போது முதலீடு செய்ய வேண்டும், எப்போது முதலீட்டை விற்றுவிட்டு வெளியே வர வேண்டும் என்கிற நுட்பம் தெரிந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இல்லை எனில், பெரும் இழப்பை சந்திக்க வேண்டிவரும்.”

டேர்ம் இன்ஷூரன்ஸ்... கணவன் – மனைவி சேர்ந்து எடுக்கலாமா..?

பொன்செல்வி, கோயம்புத்தூர்.

என் வயது 35. நான் எனக்கு மற்றும் வேலை பார்க்கும் என் மனைவிக்கு (32 வயது) ரூ.1 கோடிக்கு ஆயுள் காப்பீடு எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இருவருக்கும் தனித்தனியாக டேர்ம் பிளான் எடுப்பது நல்லதா அல்லது கணவன் – மனைவி இருவருக்கும் சேர்ந்து ஒரே பாலிசி எடுப்பது நல்லதா, எப்படி எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்? விளக்கமாகச் சொல்லவும்.

ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, தனிநபருக்கு மட்டுமே வழங்கப்படும். டேர்ம் இன்ஷூரன்ஸ் ஒவ்வொரு வருமானமீட்டும் தனி நபருக்கும் தேவையானது.

நீங்கள் மற்றும் உங்களது மனைவியும் பணிபுரிவதால், உங்கள் இருவருக்கும் தனித் தனி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும், டேர்ம் இன்ஷூ ரன்ஸ் பாலிசியின் பிரீமிய மானது ஆண் பாலிசிதாரருக் கான பிரீமியத்தைவிட, பெண் பாலிசிதாரருக்கான பிரீமியம் சற்று குறைவாகவே இருக்கும்.

35 வயது ஆணுக்கு ரூ.1 கோடி டேர்ம் பிளான் எடுத்தால், ஆண்டு பிரீமியம் ரூ.17,251 ஆகும். இதுவே 32 வயது பெண்ணுக்கு ரூ.1 கோடி டேர்ம் பிளான் எடுக்க ஆண்டு பிரீமியம் 13,221 ஆகும்.”

ராம்குமார், மதுரை

என் வயது 30. இப்போதுதான் முதலீட்டை ஆரம்பிக்க போகிறேன். நேஷனல் பென்ஷன் சிஸ்டத்தில் (NPS) எனக்கு ஏற்ற ஆப்ஷன் எது? அதைத் தேர்வு செய்வது எப்படி?

எஸ்.சரவணன், சர்டிஃபைடு டிரஸ்ட் & எஸ்டேட் பிளானர், Purplepond.in

“நியூ பென்ஷன் ஸ்கீமில் (NPS - National pension scheme) முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்களுக்கு ஆட்டோ சாய்ஸ், ஆக்டிவ் சாய்ஸ் என இரு விருப்பங்கள் கொடுக்கப்படும்.

ஆட்டோ சாய்ஸ் என்பது முதலீட்டாளர்களின் வயதுக்கேற்ப பங்குச் சந்தை முதலீட்டு விகிதம் மாறும். LC 25 (LIFE CYCLE 25) 25% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். LC 50 (LIFE CYCLE 50) 50% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். LC 75 (LIFE CYCLE 75) 75% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

உங்கள் வயது 30-ஆக இருப்பதால், ஆட்டோ சாய்ஸைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆட்டோ சாய்ஸின்கீழ் LC 75-ல் (LIFE CYCLE FUND 75) 75% பங்குச் சந்தையிலும், 10% கார்ப்பரேட் கடன் பத்திரத் திலும், மீதமுள்ள 15% அரசுக் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும்.

உங்கள் வயது அதிகமாக அதிகமாக இந்த விகிதம் மாறுபடும். இதுவே ஆக்டிவ் சாய்ஸ் எனில், பங்குச் சந்தை, கார்ப்பரேட் பாண்ட், அரசு பாண்டுகளில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலீட்டாளரே தேர்வு செய்து கொள்ளலாம்.”

டேர்ம் இன்ஷூரன்ஸ்... கணவன் – மனைவி சேர்ந்து எடுக்கலாமா..?

கு.வள்ளி, முடிச்சூர்

யாருக்கெல்லாம் செலுத்தும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு ஒருவர் வருமான வரிச் சலுகை பெற முடியும்?

திவ்யா அபிஷேக், சார்டர்ட் அக்கவுன்டன்ட்

“ஒருவர் தனக்கும், தன் துணைவர் (கணவர்/மனைவி), பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்குக் கட்டும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு வருமான வரிப் பிரிவு 80டி-யின் வரிச் சலுகை பெறலாம்.

60 வயதுக்கு உட்பட்டவர் தனக்கு மற்றும் துணைவர், பிள்ளைகளுக்குக் கட்டும் பிரீமியத்துக்கு நிதி ஆண்டில் ரூ.25,000 வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.

பெற்றோர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு கட்டும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு ரூ.50,000 வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். அதாவது, ரூ.75,000 வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.

ஒருவர் 30% அடிப்படை வருமான வரி பிரிவில் வரும் பட்சத்தில், அவர் நிதி ஆண்டில் தன் குடும்பம் மற்றும் பெற்றோருக்கு ரூ.75,000 பிரீமியம் கட்டினால் ரூ.23,400 வரிச் சலுகை கிடைக்கும்.

மேலும், நோய்ப் பரிசோதனைகளுக்கு செய்யும் செலவு களுக்கு நிதி ஆண்டில் ரூ.5,000 வரைக்கும் க்ளெய்ம் செய்ய முடியும். இது ரூ.25,000 வரம்புக்குள் அடங்கும்.

வரிதாரர் மற்றும் அவரின் பெற்றோர் இருவரும் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் ரூ.1 லட்சம் வரைக்கும் 80டி-யின் கீழ் மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்கு வரிச் சலுகை பெற முடியும்.”

எல்.சந்தியா, முடிச்சூர்

என்னிடம் ஐந்து லட்சம் இருக்கிறது. நான் அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் எனக்கு மாத வட்டியாக எவ்வளவு கிடைக்கும்?

தெய்வானை ராஜ்பாண்டியன், அரசு அங்கீகாரம் பெற்ற தபால் நிலைய முகவர்.

“உங்களிடம் இருக்கும் ரூ.5 லட்சத்துக்கு மாதம்தோறும் வருமானம் வேண்டும் என நினைக்கிறீர்கள். அதற்கு நீங்கள் 100% உத்தரவாத வருமானம் கிடைக்கும் அஞ்சலகத் திட்டங் களில் ஒன்றான மாத வருவாய் திட்டத்தைத் (MIS- Monthly Income Scheme) தேர்ந்தெடுப்பது நல்லதுதான்.

இந்தத் திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சமாக 1,000 ரூபா யும், அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும் முதலீடு செய்யலாம்.

தற்போது இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப் படுகிறது. அந்த வகையில், ரூ.4.5 லட்சத்துக்கு மாத வட்டி யாக ரூ.2,513 கிடைக்கும்.

ஐந்து வருடங்களுக்கு மாதம் தோறும் இந்தத் தொகை கிடைக்கும். ஒருவர் அதிக பட்சம் ரூ.4.5 லட்சம்தான் முதலீடு செய்ய முடியும்.

இருவர் சேர்ந்து ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். எனவே, ஐந்து லட்சம் ரூபாயை இருவர் இணைந்து முதலீடு செய்தால், மாத வட்டியாக ரூ.2,792 கிடைக்கும்.”