
கேள்வி - பதில்
கமலக்கண்ணன், திருவல்லிக்கேணி, சென்னை.
ஒரு பங்கின் விலை கடந்த மூன்று மாதமாகத் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தப் பங்கில் முதலீடு செய்யலாமா? தொடர்ந்து ஏற்றம் பெறும் பங்கில் முதலீடு செய்யும் போது முக்கியமாக வேறு என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.
“பங்கின் விலை என்பது ஒரு பங்கு மதிப்பின் செயல்பாட்டின் அடிப்படையிலானது. ஒரு பங்கின் விலை தொடர்ந்து மூன்று மாதங்களாக உயர்ந்துகொண்டே இருந்தால், அந்த நீடித்த உயர்வுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பது விவேகமானது. இதற்கு சிறப்பான காலாண்டு நிதிநிலை முடிவுகள், நிறுவனத்தின் கொள்கை மாற்றங்கள், புதிய ஆர்டர்கள், நிர்வாக பாணியில் மாற்றம், புதிய வணிகத்தில் நுழை தல் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
சில சமயங்களில் வலுவான எதிர்கால எதிர்பார்ப்புகள் காரணமாகவும், ஊகத்தின் காரணமாக பங்கு விலைகள் உயரும். ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்வது விலையின் அடிப்படையில் மட்டுமல்ல, விலை மற்றும் வணிகச் செயல்பாடுகள் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும். விற்பனை வளர்ச்சி, லாப வளர்ச்சி மற்றும் வணிகத்தின் வருவாய் வளர்ச்சி ஆகிய மூன்று முக்கியமான அளவுருக்கள் ஆகும். இவை ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய்யும் முடிவை எடுக்க உதவும்.”

வி.ஜனனி, மதுரை.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இரண்டாவது ஹோல்டராக (Second Holder) நியமிக்கப்பட்டிருப்பவரை மாற்ற முடியுமா, எப்போது மாற்றலாம், அதற்கான நடைமுறை என்ன?
ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.
“மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை முதல் விண்ணப்பதாரர் (Applicant) மற்றும் இரண்டா வது விண்ணப்பதாரர் என இருவர் சேர்ந்து ஆரம்பிக்க முடியும். இரண்டாவது விண்ணப்ப தாரரை இஷ்டத்துக்கு மாற்ற மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. இரண்டாவது விண்ணப்பதாரர் இறந்துவிடும் நிலையில் மட்டுமே அவரை மாற்ற முடியும். இதை ஒரு கோரிக்கை கடிதம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குத் தெரிவித்து மாற்றலாம்.’’

குணச் செல்வி, காரைக்குடி
அதிக நட்சத்திரக் குறியீடு கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளின் நட்சத்திரக் குறியீடு குறைக்கப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in
“ஒரு ஃபண்டின் நட்சத்திரக் குறியீடு என்பது அந்த ஃபண்டின் முந்தைய கால செயல்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழங்கப் பட்டதாகும். ஒரு ஃபண்ட் வரும்காலத்தில் எப்படிச் செயல்படும் என்பதை வெறும் நட்சத்திரக் குறியீட்டை மட்டும் வைத்து முடிவு செய்வது ஆபத்தான ஒன்று.
இந்தக் குறியீட்டில் ஏற்படும் மாற்றங்களை மட்டும் வைத்து ஒரு ஃபண்டில் இருக்கலாமா, வெளியேற வேண்டுமா என்று முடிவு செய்வது மேலும் தவறாகவே இருக்கும்.
ஒரு ஃபண்டுக்கு இணையான மற்ற ஃபண்டு களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும்.
இது சுலபமான விஷயம் இல்லைதான். ஆகையால், தேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அல்லது ஆலோசகர்களின் துணைகொண்டு இந்த முடிவு களை எடுப்பதே நல்லது.”
நளினி, செவ்வாய்பேட்டை, சேலம்.
என் அத்தை எழுதி வைத்த உயிலின்படி, எனக்குத் தங்க நகைகள் மற்றும் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு கிடைக்க வேண்டும். இவற்றை நான் விற்கும்போது எப்படி வருமான வரி கட்ட வேண்டும்? நகை மற்றும் வீட்டை அவர் எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினார் என தெளிவாகத் தெரியவில்லை. இவற்றின் மதிப்பை எப்படிக் கணக் கிடுவது? மேலும், இவற்றுக்கான மூலதன ஆதாய வரியை எப்படிக் கணக்கிட்டுக் கட்டுவது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்.

அழகப்பன் ராமநாதன், வருமான வரி ஆலோசகர்.
“முதலாவதாக, நகைகள் மற்றும் அப்பார்ட்மென்ட் உங்கள் அத்தையால் 1.4.2001-க்கு முன் வாங்கப்பட்டதா அல்லது அதற்குப் பிறகு வாங்கப்பட்டதா என்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
அவை 1.4.2001-க்கு முன் வாங்கப்பட்டிருந்தால், அந்தத் தேதியில் அந்தந்த சொத்துகளின் நியாயமான சந்தை மதிப்பாக (Fair Market Value -FMV) கொள்முதல் விலையாக எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த வாங்கப்பட்ட விலை யிலிருந்து விலைவாசி விகித குறியீட்டு விலையைப் பெற (Indexed cost of Acquisition), விலை பணவீக்கக் குறியீட்டால் (Cost Inflation Index-CII) ஈடுகட்ட வேண்டும்.
மூலதன ஆதாயம் (Capital gain) என்பது விற்பனை விலைக்கும் மேலே கணக்கிடப்பட்ட விலை வாசி விகித குறியீட்டு விலைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். இந்த மூலதன ஆதாயத்துக்கு 20% வரி கட்ட வேண்டும்.
மூலதன ஆதாயத்தை நீங்களே கணக்கிடாமல் ஒரு ஆடிட்டரை கலந்தாலோசித்து முடிவெடுப்பது எப்போதும் நல்லது. அவர் உங்களுக்குச் சரியாக வழிகாட்டு வதுடன் மூலதன ஆதாய வரியைச் சேமிக்கும் வழிகளையும் பரிந்துரை செய்வார்.”
ஜி.பாலன், இ-மெயில் மூலம்.
2018-ல் சென்னை மடிப்பாக்கத்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பை ரூ.55 லட்சத்துக்கு வாங்கினேன். இதற்கு தற்போது எந்தக் கடனும் இல்லை. இந்த வீட்டை ரூ.75 லட்சத்துக்கு விற்க முடியும்.
தவிர, மாதம்தோறும் ரூ.1 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறேன். ஃபிளாட் மதிப்பு தேய்மானம் ஆகும் எனப் பல இடங்களில் படித்தேன். தற்போதுள்ள நிலையில், இந்த வீட்டை விற்று வரும் பணத்தை வேறு நல்ல முதலீடு செய்து, வாடகை வீட்டுக்குச் செல்லலாமா என ஆலோசனை கூறவும்.
சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com
“ரியல் எஸ்டேட் நீண்டகால முதலீடு ஆகும். வாங்கிய பின் சில ஆண்டுகள் கழித்து விற்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல. வாங்குவதற்கு முன்பே நமக்கு வீடு வேண்டுமா அல்லது எத்தனை ஆண்டுக்காலம் வாடகை வீட்டில் இருக்க முடியும் அல்லது மனை வாங்கி வீடு கட்ட வேண்டுமா என்று முடிவு செய்து நீங்கள் முதலீடு தொடங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ரியல் எஸ்டேட் தற்போது நன்றாக இருப்பதாக நினைத்து விற்பது சரியான அணுகு முறை இல்லை. அதே சமயம், அடுத்து வரும் பல ஆண்டு களுக்கு வாடகை வீட்டில் இருக்க ஆட்சேபனை இல்லை என நீங்கள் முடிவு செய்தால், அடுக்குமாடிக் குடியிருப்பை விற்று மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, ஆண்டுக்கு 5% சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) மூலம் எடுத்து வாடகையைச் செலுத்தலாம். அதாவது, ரூ.75 லட்ச முதலீடு செய்து, ஆண்டுக்கு 5% என சராசரியாக ரூ.31,000 வாடகை உங்களால் கொடுக்க இயலும்.
இவ்வாறு நீங்கள் முடிவு செய்தால் வீடு விற்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். எனினும், உங்கள் யோசனையை ஒன்றுக்கு பலமுறை நன்கு யோசித்து முடிவெடுப்பதே மிகவும் நல்லது.”