
கேள்வி - பதில்
சிவகுரு, கோயம்புத்தூர்
தங்க நகை அடமானக் கடனுக்கு 89 பைசா வட்டி என்று விளம்பரம் ஒன்றில் பார்த்தேன். இதை மிகக் குறைவான வட்டி என்று வேறு குறிப்பிட்டிருந்தார்கள். உண்மையில், அது குறைவான வட்டிதானா, அதை சதவிகிதத்தில் எப்படி கணக்கிடு வது, இந்த வட்டி விகிதத்தில் ரூ.1 லட்சம் கடனுக்கு ஆண்டுதோறும் எவ்வளவு ரூபாய் வட்டி கட்ட வேண்டும்?
வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in
‘‘89 பைசா வட்டி என்பது ரூ.100-க்கு ஒரு மாதத்துக்கு 89 பைசா வட்டி என்பதாகும். இந்த வட்டி விகிதத்தில் ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், மாதத்துக்கு ரூ.890 வட்டி கட்ட வேண்டியிருக்கும். வருடத்துக்கு ரூ.10,680 வட்டியாக நீங்கள் கட்ட வேண்டியிருக்கும். இதை சதவிகிதத்தில் கணக்கிட்டால் 10.68 சதவிகிதமாக வரும். மற்ற வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதத்துடன் நீங்கள் சொல்லும் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு, இது அதிகமா அல்லது குறைவா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.’’

பி.சோமசுந்தரம், மதுரை
பங்குச் சந்தைக்கு புதிதாக வரும் நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டின்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந் தால் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை எப்படி ஒதுக்கீடு செய்வார்கள்? இதேபோல், பங்கு வெளியிடும் அளவுக்கு சரியான எண்ணிக்கையில் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கும்போது முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை எப்படி ஒதுக்கீடு செய்வார்கள்?
எல்.அர்ஜூன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com
“பொதுமக்களுக்கான ஆரம்பப் பங்கு வெளியீடு (Initial Public Offering - IPO) என்பது நிறுவனம் தனது நிறுவனத்தின் பங்குகளைப் (நிதி திரட்ட) பங்குச் சந்தையில் பட்டியலிட்டு விற்பனை செய்ய முன்வரும் நடவடிக்கை ஆகும். இதனால் அந்தக் குறிப்பிட்ட நிறுவனம், ஒரு பொது நிறுவனமாக மாறுகிறது.
மேலும், பங்குகளைப் பொதுமக்களுக்கு வெளியிட முடிவு செய்த நிறுவனம், சரியான நேரத்துக்குக் காத்திருக்கும். பங்கு வெளி யீட்டுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தால்தான் பங்குகளை வெளி யிட முன்வரும். அதனால்தான் பெரும்பாலான ஐ.பி.ஓ-கள் பங்குச் சந்தை உச்ச நிலையில் இருக்கும்போது வெளி வருகின்றன.
முதலீட்டாளர்களிடையே பங்குகள் வேண்டி அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் உதாரணமாக, ஒரு நிறுவனம் ஒரு லட்சம் பங்குகள் சந்தையில் புழக்கத்தில் விடுவதாக இருந்தால் குறைந்தபட்சம் 5 லட்சம் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த வெளியீடு அமோக வெற்றி பெற்றதாகக் கருதப்படும். குலுக்கல் முறையைப் பின்பற்றி தேர்வானவர் களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
மேலும், சந்தையில் வெளிவரும் நாள் கணிச மான லாபத்தில் அந்தப் பங்கு இருக்கும். இதை ‘லிஸ்டிங் டே கெய்ன்’ என்பார்கள். சென்ற மாதத்தில் வெளிவந்த ஐ.பி.ஓ எலெக்ட்ரானிக்ஸ் மார்ட். இதன் வெளியீட்டு விலை ரூ.59. சிறு முதலீட்டாளர்கள் இடையே 20 மடங்கும், மொத்தமாக 79 மடங்கும் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருந்தன. சந்தையில் முதல் நாளின்போது (Listing Day) ரூ.90 விலையில் அதாவது, 53% லாபத்தில் வந்தது.
ஒருவேளை, முதலீட்டாளர்களிடையே வெளியிடப்படும் அளவுக்கே பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருந்தால், விண்ணப்பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்கும். மேலும், அந்தப் பங்கு வெளியிடும் நாள் ஐ.பி.ஓ விலையைவிட மிகவும் குறை வாகவே இருக்கும்.
உதாரணமாக, கடந்த ஆண்டு வெளியான எல்.ஐ.சி (LIC) வெளி யீட்டில் அமோக வரவேற்பு இல்லை. இரண்டு மடங்கு மட்டுமே விண்ணப்பித்திருந் தனர். அதனால், முதல் நாளில் எல்.ஐ.சி வெளியீட்டு விலையான 949 ரூபாயிலிருந்து 872 ரூபாயில் வர்த்தகமானது.”

தீபா, பாளையங்கோட்டை
இப்போது முதலீடு செய்யும் தொகை ஐந்து ஆண்டுகள் கழித்து எனக்குத் தேவை. இந்த நிலையில், நான் எந்த மாதிரி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வர வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர்.
“உங்களின் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகள் என்பதால், நீங்கள் முதலீட்டுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளைக் கவனிக்கலாம்.உங்களின் முதலீட்டுத் தொகையை சமமாகப் பிரித்து கோட்டக் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்து வரவும். இந்த ஃபண்டுகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்கலாம்.”

அ.குணசேகரன், சாத்தூர்
நான் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய பங்குகள் நல்ல லாபத்தில் இருக்கின்றன. அந்த நிறுவனம் போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது. நான் ரெக்கார்டு தேதி அன்று அந்தப் பங்குகளை விற்பனை செய்தால், அந்தப் பங்குகள் எனக்குக் கிடைக்குமா? மேலும், ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு ஏன் போனஸ் பங்குகளை அளிக்கிறது, அதனால், முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?
தி.ரா.அருள்ராஜன். பங்குச் சந்தை பயிற்சியாளர். www.ectra.in
“ஒரு நிறுவனம், தொடர்ந்து லாபம் சம்பாதித்து கொண்டு இருக்கும்போது, அதன் செலவு, மற்றும் டிவிடெண்ட் தொகை போன்றவற்றைத் தாண்டி அதிக அளவில் ரொக்கப் பணம் கையிருப்பு இருக்கும்போது, அதன் பங்குதார்ரகளுக்கு இலவச பங்குகளை அறிவிக்கும்.
கையில் இருக்கும் தொகையின் மதிப்புக்கேற்ப, இலவசப் பங்கு களின் ரேஷியோவை அறிவிப்பார் கள். பொதுவாக 1 : 1 எனில், நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குக்கும், ஓர் இலவச பங்கு கிடைக்கும். இதன் மூலம் அந்த பங்குதாரர், கூடுதல் முதலீடு செய்யாமலே, அவரிடம் கூடுதல் பங்குகள் சேர்ந்துகொண்டே இருக்கும்.
அந்த நிறுவனம் தொடர்ந்து லாபம் சம்பாதித்துகொண்டே இருந்தால், பங்கின் மதிப்பும் கூடி, உங்கள் ஒட்டுமொத்த பங்கின் மதிப்பை உயர்த்திக்கொண்டே இருக்கும். ஒரு நிறுவனம் டிவிடெண்ட், போனஸ் போன்றவற்றைக் கொடுப்பது என்பது நிறுவனத்தின் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, ஒரு பங்குதாரர், அந்த நிறுவனத்தில் முதலாளிகளில் ஒருவர் இல்லையா?
போனஸ் அறிவிக்கும்போது, கூடவே ரெக்கார்டு தேதியையும் அறிவிப்பார்கள். அதன்படி, ரெக்கார்டு தேதியன்று டீமேட் கணக்கில் யாரிடம் பங்கு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் அந்த நிறுவனம் போனஸ் பங்குகளை டீமேட் கணக்கில் வரவு வைக்கும்.
பொதுவான, செட்டில்மென்டில், T+2-ஆக இருந்தால், இரண்டு நாள்கள் முன்பு வாங்குபவர்களுக்குதான், ரெக்கார்டு தேதியன்று பங்கு டீமேட் கணக்கில் வரும். எடுத்துக்காட்டாக, புதன் அன்று ரெக்கார்டு தேதி எனில், திங்கள் அன்று அந்தப் பங்கு வாங்கப்பட்டு இருக்க வேண்டும். எனவே, திங்கள் அன்று வரை இந்தப் பங்கு ‘கம் போனஸ் (Cum Bonus)’ என்று அழைக்கப்படும்.
செவ்வாய் அன்று வாங்குபவர்களுக்கு, ரெக்கார்டு தேதி தாண்டி வியாழக்கிழமைதான் டீமேட் கணக்குக்கு பங்குகள் வரவு வைக்கப்படும். எனவே, அவர்களுக்கு போனஸ் கிடைக்கும் தகுதி இல்லை என்பதால், செவ்வாய் அன்று முதல் இந்தப் பங்கு ‘எக்ஸ் போனஸ் (Ex Bonus)’ ஆகிவிடும்.
பொதுவாக ரெக்கார்டு தேதியன்று எக்ஸ் போனஸாகவே இருக்கும். அதனால், ரெக்கார்டு தேதியன்று விற்றாலும், உங்களுக்கு போனஸ் பங்குகள் கிடைக்கும்.”