தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சேமிப்புப் பணத்தில் வீடு கட்டி வாடகைக்கு விட்டால் லாபமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ப்ரீத்தி, மதுரை.

பொருளாதார மந்தநிலை வரும் என்கிறார்கள். வந்தால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடையும்; கூடவே மியூச்சுவல் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு வீழ்ச்சி அடையும். அப்போது அந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது அதிக யூனிட்டுகள் கிடைக்கும். அப்போது முதலீடு செய்யலாமா, அதுவரை எஸ்.ஐ.பி-யை நிறுத்தி வைக்கலாமா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்.

“பங்குச் சந்தையின் போக்கை எவராலும் மிகச் சரியாகக் கணிக்க முடியாது. எஸ்.ஐ.பி-யின் நோக்கமே பங்குச் சந்தையின் அனைத்து நிலைகளிலும் ஒருவரை முதலீடு செய்ய வைப்பதாகும். எனவே, எஸ்.ஐ.பி-யை ஒரு போதும் நிறுத்த வேண்டாம்.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருக்க வாய்ப்பு இல்லை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆண்டுக்கு 6% முதல் 7% வரை வளர்ந்து வருகிறது. அவ்வப்போது சற்று ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் சராசரியாக இந்த வளர்ச்சி தொடரும்.

பங்குச் சந்தை இறங்கும் பட்சத்தில் இப்போது முதலீடு செய்துவரும் திட்டங்களில் கூடுதலாக பணத்தை முதலீடு செய்யவும். இது அதிக யூனிட்டுகளை வழங்கும். இதனால், பின்னர் சந்தை உயரும்போது, அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.”

கூ.பாரதி முனி, மதுரை.

நான் ரூபாய் 904-க்கு வாங்கிய எல்.ஐ.சி பங்கின் மதிப்பு, தற்போது சரிந்து ரூபாய் 625 என்ற மதிப்பில் வர்த்தகமாகிறது. இந்த நிலையில் நஷ்டத்தில் உள்ள பங்குகளை விற்றுவிடலாமா அல்லது சில காலம் காத்திருக்கலாமா?

பி.குருமூர்த்தி ஐயர், நிறுவனர், https://mybillion.in/

“தற்போதைய நிலையில் எல்.ஐ.சி நிறுவனப் பங்குகளை சராசரி செய்து வரலாம். இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் எல்.ஐ.சி நிறுவனப் பங்கு முதலீட்டின் மூலம் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். எப்போதும் எந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்தாலும் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யுங்கள். குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் காத்திருக்கும் பட்சத்தில் பங்குச் சந்தை முதலீட்டில் கணிசமான லாபத்தைப் பார்க்க முடியும்.”

சேமிப்புப் பணத்தில் வீடு கட்டி 
வாடகைக்கு விட்டால் லாபமா?

கே.புவனா, கீரனூர்.

வீட்டுக் கடன் எத்தனை மாதம் வட்டியைக் கட்ட தவறினால் வீடு சீல் வைக்கப்படும்? வங்கி, வீட்டு வசதி நிறுவனத்தின் நடவடிக்கை களை விளக்கிச் சொல்லவும்.

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“மூன்று மாதத் தவணை களுக்குமேல் பணம் செலுத்தத் தவறியிருந்தால், அந்தக் கடன் வாராக் கடனாகக் கருதப்படும். அந்தச் சமயத்தில், நிலுவையில் இருக்கும் மாதத் தவணைகளை 60 நாள்களுக்குள் செலுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்புவார்கள். இந்த 60 நாள் களுக்குள் மேலும் மாதத் தவணைகளை நிலுவையில் வைக்காமல், தற்போது நிலுவையில் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட மாதத் தவணைகளை முழுவதுமாகச் செலுத்த வேண்டும் அல்லது மூன்றுக்குக்கீழ் மாதத் தவணைகள் நிலுவையில் இருக்கும் அளவுக்காவது செலுத்த வேண்டும். அப்படி செலுத்தத் தவறினால் அடுத்தகட்ட நடவடிக்கையாக வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக் கையில் இறங்குவார்கள். இந்த நடவடிக்கை 20 நாள் களிருந்து 50 நாள்களுக்குள் முடிவடையலாம்.”

நிவேதா, மதுரை - 2

நான் குடும்பத் தலைவி. சேமிப்பு மூலம் சேர்ந்திருக்கும் பணத்தைக் கொண்டு எங்களுக்கு சொந்தமாக இருக்கும் மனையில் வீடு கட்டி வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழ்நிலையில் இது நல்ல முடிவா?

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com

“நீங்கள் வீடுகட்டி வாடகைக்குவிட்டு அதன் மூலம் வருமானம் பெறத் திட்டமிட்டுள்ளீர்கள். அதற்கு பதில், அந்தப் பணத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் டில் போட்டால் ஆண்டுக்கு 7-7.5% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு வாடகை வருமானம் என்பது ஆண்டுக்கு 3-4% கிடைப்பதாக இருந்தால், வீடு கட்டி வாடகைக்கு விடலாம்.

உதாரணமாக, வீட்டின் மதிப்பு ரூ.40 லட்சம் எனில் இதன் 3% அதாவது, ஆண்டுக்கு சுமார் 1.20 லட்சம் வாடகை வருமானம் கிடைத்தால் வீடு கட்டி வாடகைக்கு விடலாம். கூடவே, சொத்துப் பராமரிப் புக் கட்டணங்கள், ஒருவர் வீடு மாறி அடுத்தவர் வாடகைக்கு வருவதற்கு இடைப்பட்ட வாடகை வராத காலம் ஆகியவற்றைக் கணக்கிட்டால் வாடகை வருமானம் லாபகரமாக இருக்காது.”

சேமிப்புப் பணத்தில் வீடு கட்டி 
வாடகைக்கு விட்டால் லாபமா?

அண்ணாமலை ராமன், முகநூல் மூலம்.

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் என்கிற ரெய்ட் (REIT) எப்படி வேலை செய்கிறது? அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன?

என்.ஜெயகுமார், சார்ட்டர்ட் ஃபைனாஷியல் அனலிஸ்ட் (CFA)

“ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (REIT) என்பது வருமானம் தரும் (அதாவது, வாடகை) ரியல் எஸ்டேட் சொத்து களில் முதலீடு செய்து, அதன் மூலம்வரும் லாபத்தை முதலீட் டாளர்களுக்கு விகிதாசார அடிப்படையில் (Proportionate Ownership) பிரித்து வழங்குகிறது. அதாவது, இது மியூச்சுவல் ஃபண்ட் போல செயல்படுகிறது.

நம் நாட்டு சட்டதிட்டங்களின்படி, இதில் வரும் வருமானத் தில் 90% முதலீட்டாளர்களுக்குத் தர வேண்டும் என்பது நியதி. ஒரே ஒரு முதலீட்டின் மூலம் பல சொத்துகளில் பிரித்து முதலீடு (Diversification) செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. குறைந்தபட்சம் ரூ10,000 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். தேவைப்படும்போது விற்று பணமாக்கும் வசதி அதிகம். சொத்துகள் தகுதி வாய்ந்த நிபுணர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது போன்றவை சாதகமான அம்சமாகும்.

‘ரெய்ட்’ திட்டம் இந்தியாவுக்குப் புதிது என்பதால், குறைந்த முதலீட்டு வாய்ப்புகளே உள்ளன. ‘ரெய்ட்’ பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமானாலும், இதில் குறைந்த முதலீட்டாளர்களே உள்ளதால், தேவைப்படும்போது உடனடியாக விற்று பணமாக்குவது சிரமமாக இருக்கலாம். இதில் வரும் வருமானத்துக்கு முதலீட்டாளர் எந்த வரி வரம்பில் என்பதைப் பொறுத்து வரி கட்ட வேண்டும் என்பது சாதக அம்சமாகும்.”

கலைச் செல்வி, விழுப்புரம்.

நான் குடும்பத் தலைவி. என்னிடம் ரூ.10 லட்சம் இருக் கிறது. இந்தப் பணம் இன்னும் பத்தாண்டுகள் கழித்துதான் தேவை. நான் இந்தப் பணத்தை எப்படி முதலீடு செய்யலாம்..?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“உங்களுடைய முதலீட்டுக் காலம் 10 வருடங்கள் என்று இருக்கையில், உங்களால் சற்றுக் கூடுதலாக ரிஸ்க் எடுத்து முதலீடு செய்ய இயலும். அப்படிச் செய்தால், ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்வதைவிட அதிகமாக வருடத்துக்கு 2 - 4% அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மியூச்சுவல் ஃபண்டு களைப் பொறுத்தவரை, ஆக்ஸிஸ் நிஃப்டி 100 இண்டெக்ஸ் ஃபண்ட், பராக் பரிக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், கோட்டக் எமெர் ஜிங் ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் ஆகியவற்றில் சம மாக முதலீடு செய்யலாம். 10 லட்சம் ரூபாயையும் ஒரே சமயத்தில் முதலீடு செய் யாமல், மாதம் ஒன்றுக்குஒரு லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் 10 மாதங்களில் பிரித்து முதலீடு செய்யவும்.”