பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அவசரகால நிதி... எந்த வயதுக்கு எவ்வளவு..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

பத்மாவதி, விருகம்பாக்கம், சென்னை.

அவசரகால நிதியை வயதுக்கேற்ப அதிகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என என் தோழி சொன்னார். எந்த வயதுக்கு எவ்வளவு அவசரகால நிதியை வைத்திருக்க வேண்டும்..?

என்.விஜயகுமார், இயக்குநர், https://www.click4mf.com/

“மருத்துவக் காரணங்கள் உள்ளிட்ட அவசரச் செலவுகள் ஒருவருக்கு வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். திடீரென ஏற்படும் வேலையிழப்பு, தொழிலில் ஏற்படும் பின்னடைவு எனச் சில காரணங்களால் வருமானம் நின்றுபோகலாம். அப்போது செலவுகளைச் சமாளிக்க கைகொடுக்கக் கூடியதுதான் அவசரகால நிதி. இது எல்லோருக்கும் கட்டாயம் இருக்க வேண்டியது மிக அவசியம்.

மாதச் சம்பளக்காரர்கள் 25 வயது முதல் 40 வயதுக்குள் இருந்தால், குறைந்தது ஆறு மாத சம்பளத்தை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வயதில் அவசரகால நிதி, மருத்துவ அவசர நிதியாகவும், ஒரு வேலை யில் இருந்து அடுத்த நல்ல வேலையில் சேரும்போது கைகொடுக்கும் நிதியாகவும் இருக்கும்.

40 வயது முதல் 60 வயது வரையானவர்கள் குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருட சம்பளத்தை அவசரகால நிதியாக வைத்துக் கொள்ள வேண்டும். காரணம், 40 வயதைத் தாண்டும்போது மருத்துவச் செலவுகளும், மற்ற வகையிலான அவசரச் செலவுகளும் அதிகமாக வர வாய்ப்புள்ளது.

60 வயதுக்குமேலே இருப்பவர்கள் கண்டிப் பாக ஓரிரு வருட சம்பளத்தை, ஓய்வூதியமாக இருந்தாலும் சரி, வேறு ஏதாவது வருமான மாக இருந்தாலும் சரி, உடனே எடுத்து செலவு செய்வது போல் வைத்துக்கொள்ள வேண்டும். 18 மாத செலவுப் பணத்தை அவசரச் செலவுக்கு என வைத்திருப்பது நல்லதாகும். ஏனெனில், 60 வயதுக்கு மேல் மருத்துவத் தொடர்புடைய பிரச்னைகள் அதிகம் வரும். மேலும், பணத் தேவைகள் அதிகமாக இருக்கும்.”

அவசரகால நிதி... எந்த வயதுக்கு எவ்வளவு..?

ஏ.மஹிமா, பூட்டை, கள்ளக்குறிச்சி.

நான் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரியில் தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வாங்கினேன். இதற்கான வட்டி ஆண்டுக்கு 14% ஆகும். என் முதலீட்டின்மூலம் நான் சேர்த்திருக்கும் தொகை தற்போது ரூ.20 லட்சமாக இருக்கிறது. இதில் ரூ.15 லட்சம் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிலும் மீதி கடன் ஃபண்டுகளிலும் இருக்கிறது. எனக்கு வேறு எந்தப் பணத்தேவையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இல்லை. இந்த நிலையில், என் முதலீட்டுப் பணத்தைக் கொண்டு தனிநபர் கடனை அடைப்பது சரியாக இருக்குமா?

ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர், Wealthladder.co.in

“தனிநபர் கடனைப் பொறுத்தவரை, மாதம் தோறும் வட்டி குறையும்படி இருப்பதால், முதல் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீங்கள் கட்டிய வட்டித்தொகை அதிகமாகவும் பின்வரும் காலங்களில் அசல் தொகை அதிகமாகவும் வசூல் செய்யப்படும். எனவே, தனிநபர் கடனை தற்போது அடைப்பதில் அதிக லாபம் கிடைக்காது.

கடன் சார்ந்த முதலீட்டில் 6% - 7% வருமானமே வரும் என்பதால், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டை விற்று கடனின் ஒரு பகுதியை அடைத்துவிட்டு, மீதமுள்ள தொகைக்கு இ.எம்.ஐ மூலம் தொடர்ந்து கட்டுவது மிகவும் சிறந்தது.”

எஸ்.சங்கரன், வள்ளியூர்.

என்னிடம் ரூ.20 லட்சம் இருக்கிறது. என் வயது 28. அடுத்த 5 ஆண்டுகளில் என் முதலீடு சுமார் இருமடங்காக அதிகரிக்க வேண்டும். அதற்கு நான் எந்த மாதிரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும், நான் முதலீட்டில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கிறேன்.

ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

“உங்களுக்கு இளம் வயது என்பதால், முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க முடியும். அந்த வகையில் நீங்கள் டைவர் சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டுத் தொகையில் 60 சதவிகிதத்தை மல்ட்டிகேப் ஃபண்டுகள் மற்றும் ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் கலந்து முதலீடு செய்துவரவும். மீதி 40% தொகையை மிட்கேப் ஃபண்டுகள் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும்.

மல்ட்டிகேப் ஃபண்டுகள் மற்றும் ஃபிளெக்ஸிகேப் ஃபண்டு களின் முதலீட்டுக் கலவையில் இருக்கும் லார்ஜ்கேப் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் (volatility) குறைவாக இருப்பதுடன், இந்தப் பங்குகள் கொடுக்கும் வருமானம் நீண்ட காலத்தில் சராசரியாக இருக்கும்.

மிட்கேப் ஃபண்டுகள் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் இடம்பெற்றிருக்கும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஆனால், நீண்ட காலத்தில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். இந்த ஃபண்டு களின் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக (CAGR) 13% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் விரும்பும் இரு மடங்கு தொகை கிடைக்க அதிக வாய்ப் புள்ளது.”

அவசரகால நிதி... எந்த வயதுக்கு எவ்வளவு..?

அ.மீனா, முடிச்சூர்.

நாஸ்டாக் (Nasdaq) அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது மியூச்சுவல் ஃபண்ட் மூலம் முதலீடு செய்யலாமா?

க.முரளிதரன், முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com

“மோதிலால் ஆஸ்வால் நாஸ் டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 100 இ.டி.எஃப் அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. யு.எஸ் புளூசிப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். இந்த ஃபண்டுகளில் முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு களுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் முதலீடு செய்யலாம்.”

அவசரகால நிதி... எந்த வயதுக்கு எவ்வளவு..?

மகாலிங்கம், சென்னை, இ-மெயில் மூலம்.

பிள்ளைகளின் உயர்கல்வி செலவுக் காக வாங்கும் கடனுக்கு வருமான வரிச் சலுகை ஏதாவது இருக்கிறதா?

ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், கோயம்புத்தூர்.

“பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுக்காக வாங்கும் கடனுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. திரும்ப கட்டும் அசலுக்கு வரிச் சலுகை கிடையாது; வட்டிக்கு மட்டும் வரிச் சலுகை உள்ளது. இதை வருமான வரி பிரிவு 80E-யின் கீழ் எட்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பெற முடியும். வட்டித் தொகை எவ்வளவாக இருந்தாலும் அவ்வளவுக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.”

கலிய பெருமாள், வந்தவாசி.

நான் என் 26-வது வயதில் வேலைக்குச் சேர்ந்ததும் ரூ.10 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தேன். இப்போது திருமணமாகி மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். ரூ.30 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே எடுத்திருக்கும் பாலிசியில் கவரேஜை அதிகரிக்க முடியுமா? இல்லை தனியாக புது பாலிசி எடுக்க வேண்டுமா? இப்போதும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமா?

ஜி.வி.லஷ்மி, காப்பீட்டு ஆலோசகர்.

“அதே திட்டத்தில் கவரேஜை அதிகரிக்க முடியாது. புதிய பாலிசிதான் எடுக்க வேண்டும். அப்போது கட்டாயம் ரத்த அழுத்தம், இதய துடிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய வேண்டி வரும். இதற்கான ஏற்பாட்டை காப்பீட்டு நிறுவனம் அதன் செலவில் செய்யும்.”