நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

மைனஸில் கிரெடிட் ஸ்கோர்... வீட்டுக் கடன் கிடைக்குமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

பெ.நடராஜன், திருநெல்வேலி

மத்திய அரசு ஊழியரான என் வயது 39. எனக்கு பெண் குழந்தை உள்ளது. என்னால் மாதம்தோறும் ரூ.25,000 முதலீடு செய்ய முடியும். அடுத்த எட்டு ஆண்டுகளில் சொந்த வீடு, மகளின் கல்விச் செலவு மற்றும் சொந்த கார் ஆகியவை எனது இலக்குகளாக உள்ளன. வருமான வரி சேமிப்பு தொடர்பான முதலீடும் அவசியம் தேவை. அந்த வகையில் எனக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பரிந்துரை செய்ய முடியுமா?

த.முத்துகிருஷ்ணன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்.

“மாதம் ரூ.25,000 வீதம் எட்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்கும் பட்சத்தில் சுமார் ரூ.40 லட்சம் சேர வாய்ப்பிருக்கிறது. வருமான வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகளில் (ELSS) முதலீடு செய்யும்போது நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின்கீழ் ஒரு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை பெற முடியும்.

அந்த வகையில் நீங்கள் மாதம்தோறும் 12,500 ரூபாயை ஐ.டி.எஃப்.சி டாக்ஸ் அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். மீதி 12,500 ரூபாயை கோட்டக் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.”

மைனஸில் கிரெடிட் ஸ்கோர்... வீட்டுக் கடன் கிடைக்குமா..?

பவித்ரா, மன்னார்குடி.

என் வயது 40. என் மாதச் சம்பளம் ரூ.80,000. பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் பிடித்தம் ரூ.30,000 போக மாதம் ரூ.50,000 கையில் கிடைக்கிறது. நான் இது வரைக்கும் பெரிதாகக் கடன் எதுவும் வாங்கியதில்லை. வீட்டுக் கடன் வாங்குவதற்காக கிரெடிட் ஸ்கோர் பார்த்தபோது அது மைனஸ் 1-ஆக இருக்கிறது. நான் கடன் எதுவும் வாங்காத நிலையில், என் கிரெடிட் ஸ்கோர் இவ்வளவு குறைவாக இருக்குமா, இதனால் நான் வீட்டுக் கடன் வாங்குவதில் ஏதாவது பிரச்னை களைச் சந்திக்க வேண்டியிருக்குமா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“நீங்கள் இதுவரை வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தின் மூலம் எந்தக் கடனும் வாங்கவில்லை. இதனால், கடன் வாங்கி திருப்பிச் செலுத்தும் தகுதி மற்றும் நோக்கம் பற்றிய புள்ளிவிவரங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இல்லை. எனவேதான், உங்களின் சிபில் ஸ்கோர் மைனஸ் ஒன்றாக இருக்கிறது.

வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தில் நீங்கள் புதிதாகக் கடன் வாங்குவதற்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடும். ஆனாலும், உங்களின் வயது, கல்வித் தகுதி, வேலை பார்க்கும் கம்பெனி, உங்களின் மொத்த மற்றும் நிகர சம்பளம், கல்யாணம் ஆனவர் எனில், கணவர்/மனைவியின் சம்பளம், ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலனை செய்யும்போது வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தில் உங்களுக்கு வீட்டுக் கடன் கிடைப்பதில் எந்த விதமான தடையும் இருக்காது.”

மைனஸில் கிரெடிட் ஸ்கோர்... வீட்டுக் கடன் கிடைக்குமா..?

வெங்கட்பிரபு, இ-மெயில் மூலம்.

என் வயது 26. எனது பணியானது, தரவுகளைக் கையாளுதலை (Data Handling) உள்ளடக்கியது. நான் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். எனது நிறுவனத்தில் ஃபயர்வால் (Firewall) ஆன்டி வைரஸ் இருந்தாலும், எனக்கு தனிப்பட்ட சைபர் காப்பீடு (Cyber insurance) தேவையா? சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் எனில், அதில் எதற்கெல்லாம் கவரேஜ் இருக்கும்?

சுப்ரமணியம் பிரம்மஜோஸ்யுலா, தலைவர் - மறுகாப்பீடு மற்றும் திட்ட மேம்பாடு, எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்.

“நீங்கள் தொடர்ந்து டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவராக இருந்தால், தனிப் பட்ட சைபர் காப்பீட்டு பாலிசியை அவசியம் எடுக்க வேண்டும்.

இந்த பாலிசியானது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு ரிஸ்க்குகளுக்கு விரிவான கவரேஜை வழங்கு கிறது. உங்கள் தேவைகள் மற்றும் பிரீமியம் கட்டும் திறனைப் பொறுத்து நீங்கள் விரும்பும் கவரேஜ்களைத் தேர்வு செய்யலாம்.

பணத் திருட்டு, அடையாளத் திருட்டு, தரவு மறுசீரமைப்பு / மால்வேர் வைரஸ் நீக்கம், சைபர் மிரட்டல், நற்பெயரைக் கெடுத்தல், மிரட்டி பணம் பறித்தல், ஆன்லைன் ஷாப்பிங் மோசடி, சமூக ஊடக பாதிப்பு, ஸ்மார்ட் ஹோம் கவர், சிறுவயது நபர்களிடம் வேண்டும் என்றே தவறான நடத்தை, ஆன்லைன் விற்பனை மோசடி, நெட்வொர்க் பாதுகாப்பு, தனியுரிமை மீறல் மற்றும் தரவு மீறல், மூன்றாம் தரப்பினரால் தனியுரிமை மீறல் மற்றும் தரவு மீறல் உள்ளிட்டவை களுக்கு சைபர் இன்ஷூரன்ஸ் மூலம் இழப்பீடு கிடைக்கும்.”

பாலகுமார், ஓசூர்

தற்போது, என் வயது 32. என் ஓய்வுக்காலத்துக்காக (வயது 58), 2021 மே மாதம் முதல் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் பின்வரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறேன்.

ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் (மாதம் ரூ.4,000), கனரா ராபிகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் (மாதம் ரூ.1000), மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட் (மாதம் ரூ.1,000), மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் (மாதம் ரூ.1,000), பிஜிம் இந்தியா மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் (மாதம் ரூ.1,000), ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட் (ரூ.1,000), எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் ஃபண்ட் (ரூ.1,000), ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் (ரூ.1,000), பராக் பரிக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் (மாதம் ரூ.1,000) என மொத்தம் ஒன்பது ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். வருகிற ஏப்ரல் 2023 முதல் எஸ்.ஐ.பி முதலீட்டை 12,000 ரூபாயி லிருந்து ரூ.25,000-ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளேன். இன்றைய நிலவரப்படி, நான் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளின் நிகர வருமானம் 3.48% மட்டுமே. என்னுடைய இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சரியானவைதானா, இந்த ஃபண்ட் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

“இருபது வருடங்களுக்கு மேலான தொலைநோக்குப் பார்வையோடு நீங்கள் முதலீடு செய்ய நினைப்பதால், இத்தகைய ரிஸ்க் அதிகமுள்ள ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்வதில் தவறில்லை. இருப்பினும், உங்கள் முதலீட்டில் ஒரு பகுதியை ரிஸ்க் குறைவான வங்கி வைப்புத் தொகை அல்லது பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வருவது நல்லது.

உங்களது ஃபண்ட் திட்டங்களுக்கான தேர்வில் பெரிய குறை ஒன்றும் இல்லை. தற்போது நீங்கள் 50% லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள். இந்த வகை ஃபண்டு களுக்கு பதிலாக இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நலம். இதன் மூலம் லாபமும் அதிகம், செலவும் குறைவு.

உங்களது தற்போதைய லாப விகிதம் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்து வரவும். நிலையான முதலீடே வெற்றிக்கு வழி. இப்போதுள்ள ஃபண்டுகளிலேயே அதிகம் முதலீடு செய்யலாம்.”

மைனஸில் கிரெடிட் ஸ்கோர்... வீட்டுக் கடன் கிடைக்குமா..?

செ.சேதுராமன், எம்.ஆர்.சி நகர், சென்னை

நான் ஆன்லைன் மூலம் ரூ.50 லட்சத்துக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசி ஒன்று எடுத்திருக்கிறேன். எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், என் குடும்பத்தினர் இழப்பீடு பெற என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?

ஜி.வி.லஷ்மி, காப்பீட்டு ஆலோசகர்

“பொதுவாக, இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரம் ஒரிஜினல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், நாமினி பெயரில் உள்ள காசோலை (ரத்து செய்யப்பட்டது), பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பதையும், இழப்பீடு கோரும் காலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி வைப்பது நல்லது!”