
கேள்வி பதில்
பாலமுருகன், திருப்போரூர்.
இன்னும் மூன்று மாதத்தில் எனக்கு ரூ.15 லட்சம் பணம் வர உள்ளது. இந்தப் பணம் எனக்கு அடுத்த பத்தாண்டுகளுக்குத் தேவைப்படாது. முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. என் மகளின் உயர்கல்விக்குப் பயன்படும் விதமாக எதில் முதலீடு செய்யலாம்? இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் ஏதாவது இருக்கிறதா?
லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com
“மொத்த முதலீடு என்கிறபோது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும், நீங்கள் முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்பதால், உங்களுக்குத் தபால் அலுவலக தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) ஏற்றதாக இருக்கும். இது ஐந்து ஆண்டுகள் ‘லாக்இன்’ கொண்ட திட்டமாகும். முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகையும் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதை மேலும் நீட்டித்துக்கொள்ளலாம்.”

கே.சீனிவாசன், ஶ்ரீபெரும்புதூர்.
நான் புதிதாக ஒரு கடையைத் தொடங்கி இருக்கிறேன். எனது கடைக்குத் தீ விபத்து காப்பீடு பாலிசி அவசியமா..? இந்த பாலிசியில் எவற்றுக் கெல்லாம் காப்பீடு செய்யப்படுகிறது?
சுப்ரமணியம் பிரம்மஜோஸ்யுலா, தலைவர் - மறுகாப்பீடு மற்றும் திட்ட மேம்பாடு, எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ்.
“தீ, வெடிப்பால் (Explosion) ஏற்படும் எதிர்பாராத சேதங்களுக்கு எதிராக தீ விபத்து மற்றும் பேராபத்து காப்பீட்டு பாலிசி (Standard Fire & Special Perils Insurance Policy) நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. பொதுவாக, தீ விபத்து மற்றும் பேராபத்து காப்பீட்டு பாலிசியில் கட்டடங்கள், தயாரிப்புப் பொருள்கள் இருப்பு, உபகரணங்கள், இயந்திரங்கள், மரச்சாமான்கள், கருவிகள் போன்றவற்றுக்கு காப்பீடு செய்யப்படும்.
தீ விபத்து மற்றும் பேராபத்து காப்பீட்டு பாலிசியில் மற்ற ஆபத்துகளான பூகம்பம், புயல், வெள்ளம், நிலச்சரிவு, மண் சரிவு, பாறை சரிவு, கலவரம், வேலை நிறுத்தம், தீங்கிழைக்கும் சேதம், காட்டுத் தீ போன்றவற்றுக்கும் கவரேஜ் இருக்கிறது.
தீ விபத்து மற்றும் பேராபத்து காப்பீட்டு பாலிசிகள் பொதுவாக ஒரு வருட காலத்துக்கானது. இருப்பினும், மிகக் குறுகிய காலத்துக்குக்கூட இந்த பாலிசிகள் கிடைக்கின்றன.”
கோபிநாத், செட்டிபுண்ணியம்.
என் வயது 40. நான் ஓய்வுபெறும் காலத்தில் எனக்கு குறைந்த அளவில்தான் பி.எஃப் பென்ஷன் கிடைக்கும். இது எனக்குப் போதாது. நான் 58 வயதில் பணி ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான தொகையை பென்ஷன் போல பெற விரும்புகிறேன். அதற்கு மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லவும்.
த.முத்துகிருஷ்ணன், சர்ட்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்.
“நீங்கள் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இந்த முதலீட்டை அடுத்து 18 வருடங்களுக்கு தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும். நீங்கள் பணி ஓய்வு பெற்றவுடன் மாதம் தோறும் செலவுகளைக் கணக்கிட்டு, குறிப்பிட்ட தொகையை சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) முறையில் பெற்றுக்கொள்ள முடியும். இது உங்களுடயை பென்ஷன் போக கூடுதல் தொகையாக உங்களுக்கு இருக்கும்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்ட், கோட்டக் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்ட் ஆகிய வற்றில் முதலீட்டுத் தொகையை சமமாகப் பிரித்து முதலீடு செய்யவும். ஹைபிரிட் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங் களில் பிரித்து முதலீடு செய்யப் படுவதால், ரிஸ்க்கானது குறைவாக இருக்கும்.”

வெ.நளினி, கோயம்புத்தூர்.
மூத்த குடிமக்கள் பென்ஷன் பெறுவதற்கான பிரதமரின் வய வந்தனா யோஜனா திட்டத்தில் சேரத் திட்டமிட்டுள்ளேன். அதில் அதிக பட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம், வருமானம் எவ்வளவு கிடைக்கும்?
ப.முகைதீன் ஷேக் தாவூது
“மூத்த குடிமக்கள் பென்ஷன் பெறுவதற்காக 2017-ம் ஆண்டில் பிரதமரின் வய வந்தனா யோஜனா திட்டம் தொடங்கப் பட்டது. இந்தத் திட்டம் 31.03.2023 தேதிடன் முடிவடைகிறது. இதன் முதிர்வுக் காலம் 10 ஆண்டுகள். இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,56,650-ஆகவும் அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்ச மாகவும் உள்ளது.
இந்தத் திட்டத்தில் தற்போது கிடைக்கும் வட்டி விகிதம் 8% ஆகும். அதாவது, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக் கான அதே அளவு வட்டிதான் இந்தத் திட்டத்துக்கும் தரப் படுகிறது. இந்தத் திட்டத்தில் சேரும்போது உள்ள வட்டி விகிதம் முதிர்வுக்காலமான 10 ஆண்டுக்கும் மாறாமல் தொடரும். முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப பென்ஷன் கிடைக்கும்.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) நிர்வகிக்கும் இந்த பென்ஷன் திட்டத்தில் மாதம் ஒருமுறை, காலாண்டுக்கு ஒரு முறை அரையாண்டுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை எனத் தேவைக்கேற்ப பென்ஷன் பெறலாம். இதில் செய்யப்படும் முதலீட்டுத் தொகையில் 75% கடனும் பெறலாம். கடனுக்கான வட்டி பென்ஷனில் பிடித்தம் செய்யப்படும். தனக்கோ, தன் வாழ்க்கைத் துணைக்கோ தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டால் முதிர்வுக்காலத்துக்கு முன் முதலீட் டுத் தொகையைத் திரும்பப் பெறும் சலுகை இருக்கிறது. முதலீடு செய்த தொகையில் 98% திரும்பக் கிடைக்கும்.”

மணிகண்டன், முடிச்சூர்.
என் தந்தையிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பங்குகள் என்னுடைய டீமேட் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பங்கை என் தந்தை வாங்கிய விலை தெரியவில்லை. என்னுடைய ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் உள்ளது.இந்த நிலையில், என் தந்தையிடம் இருந்து எனக்குக் கிடைத்த பங்குகளை நான் உடனே விற்றால் நான் எப்படி வரி கட்ட வேண்டும்?
வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in
“வருமான வரிச் சட்டத்தின்படி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை (Listed Shares) வாங்கி வைத்திருந்து 12 மாதங்களுக்குமேல் விற்றால், கிடைக்கும் ஆதாயம் நீண்ட கால மூலதன ஆதாயமாக (Long Term Capital Gain ) கருதப்படும். அந்த லாபத்தில் நிதி ஆண்டில் ரூ.1 லட்சத்துக்கு வருமான வரி கிடையாது. மீதமுள்ள நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 10% வருமான வரி செலுத்த வேண்டும். இதில் உங்கள் தந்தை பங்குகளை வாங்கி வைத்திருந்த காலமும் சேர்த்துக் கணக்கிடப்படும். உங்கள் தந்தை வாங்கிய பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளாக இருந்தால், அவை வாங்கிய தேதி, மாதம், வருடம் தெரிந்திருந்தால் பி.எஸ்.இ (BSE), என்.எஸ்.இ (NSE) மற்றும் சில வெப்சைட்டுகள் மூலமாக என்ன விலைக்கு வாங்கினார் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். இந்தப் பங்குகளை உங்கள் தந்தை ஓராண்டுக்குள் வாங்கியிருந்தால், குறுகிய கால மூலதன ஆதாயமாக (Short Term Capital Gain) இருந்தால், 15% வரி செலுத்த வேண்டும்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பங்குகளாக (Unlisted Shares) இருந்தால், அவர் எந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்கி உள்ளாரோ அதற்குண்டான தரவுகளை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். 24 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தது விற்றால் நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்பட்டு அதற்குண்டான கணக்கீடு செய்து, 20% வரி செலுத்த வேண்டும். குறுகிய கால மூலதன ஆதாயமாக இருந்தால் நீங்கள் எந்த வருமான வரி வரம்புக்குள் வருகிறீர்களோ, அதற்கேற்ப (பழைய வருமான வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வருமான வரி செலுத்த வேண்டும்.”