நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இடையில் நின்றுபோன பி.பி.எஃப்... மீண்டும் தொடர முடியுமா..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

@ ப.ராம்குமார்

நான் மாநில அரசு ஊழியர்; மாதம்தோறும் ரூ,40,000 சம்பளம். என் தாய் பூர்வீக வீட்டின் மீது வீட்டு வசதி நிறுவனம் ஒன்றின் மூலம் ரூ.10 லட்சம் வீட்டு அடமானக் கடன் வாங்கியுள்ளார். மாத இ.எம்.ஐ ரூ.11,080. வட்டி விகிதம் இப்போது 13.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. முதலில் 15 வருட கடனாக இருந்தது, இப்போது வட்டி விகித உயர்வால் மூன்று ஆண்டுகள் அதிகரித்துள்ளன. இ.எம்.ஐ தொகையை மாதம் ரூ.3,000 வீதம் அதிகரித்து விரை வாகக் கடனைக் கட்டி முடிப்பதா அல்லது இண்டெக்ஸ் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் அந்த 3,000 ரூபாயை முதலீடு செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, கடனை பிறகு அடைக்கலாமா?

த.முத்துகிருஷ்ணன், சர்ஃடிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்.

“கடனை விரைந்து அடைப்பதே சிறந்த வழியாகும். நீங்கள் வீட்டு அடமானக் கடனுக்குக் கட்டும் வட்டி 13.1% என்பது மிக அதிகமாகும். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்த அளவுக்கு அதிக வருமானம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, முதலில் அதிக வட்டியிலான கடனை அடைக்கவும். அதன்பிறகு எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்கலாம்.”

இடையில் நின்றுபோன பி.பி.எஃப்... மீண்டும் தொடர முடியுமா..?
Avijit Sadhu

கே.சுகன்யா, சென்னை-17

அண்மையில் ஒருவருக்கு லாட்டரி சீட்டில் ரூ.25 கோடி பரிசு விழுந்துள்ளது என செய்தித்தாளில் படித்தேன். அவருக்கு சுமார் ரூ.15 கோடிதான் கிடைக்கும் என என் தோழி தெரிவித்தார். அவர் சொல்வது உண்மையா?

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர், சென்னை.

“உண்மைதான். சமீபத்தில் கேரளாவில் லாட்டரி சீட்டில் அனுபு என்பவருக்கு 25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அந்தத் தொகையில் ஏஜென்ட் கமிஷன் 10% முதலில் கழிக்கப்படும். மீதமுள்ள தொகைக்கு வருமான வரி 30% மற்றும் வருமான வரி மீதான கல்வி, ஆரோக்கியத் தீர்வை 4% கட்ட வேண்டும். 30 சதவிகிதத்தில் 4% என்பது 1.2% ஆகும். ஆக மொத்தம் 31.2% வருமான வரி விதிக்கப்படும். ரூ.25 கோடியில் ஏஜென்ட் கமிஷன் 10% என்பது ரூ.2.25 கோடி. இது போக மீதியுள்ள ரூ.22.5 கோடிக்கு 31.1% வரி என்பது ரூ.7.02 கோடி என மொத்தம் ரூ7.2 கோடி போக, ரூ.15.48 கோடிதான் அவருக்குக் கிடைக்கும்.’’

த.முத்துகிருஷ்ணன், கே.ஆர்.சத்யநாராயணன், ஜி.சோலை, அனந்தராமன், ஏ.எஸ்.முரளிதரன்
த.முத்துகிருஷ்ணன், கே.ஆர்.சத்யநாராயணன், ஜி.சோலை, அனந்தராமன், ஏ.எஸ்.முரளிதரன்

ராமகனி, திருநின்றவூர்.

என் வயது 60. என் பேத்தியின் உயர்கல்விக்காக முதலீடு செய்ய விரும்புகிறேன். என்னிடம் ரூ.15 லட்சம் ரூபாய் இருக்கிறது. இது இன்னும் 16 வருடம் கழித்து என் பேத்தியின் கல்லூரிச் செலவுக்குத் தேவைப்படும். இந்தப் பணத்தை நான் எந்த மாதிரி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்?

ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

“நீண்ட முதலீட்டுக் காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது, நீங்கள் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்ட், மிட்கேப் ஃபண்ட் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இவை அனைத்தும் டைவர்சி ஃபைட் திட்டங்கள் என்பதால், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். இலக்கை நெருங்கும் காலத்தில் அதாவது, 15-வது ஆண்டு வாக்கில் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டுகளி லிருந்து குறுகிய கால ஃபண்டுகளுக்கு மாற்றிக் கொள்வது நல்லது. இப்படிச் செய்யும்போது பங்குச் சந்தையில் திடீரென ஏற்படக்கூடிய சரிவிலிருந்து முதலீட்டைப் பாதுகாக்க முடியும். ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளிலிருந்து பணத்தை எடுத்து தேவைப்படும் போது உயர்கல்வி தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளவும்.”

எல்.அழகன், கள்ளக்குறிச்சி.

நான் என் ஓய்வுக்காலத்துக்காக பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீடு செய்துவந்தேன். மூன்றாண்டுகள் முடிந்த நிலையில், அதைத் தொடர முடியவில்லை. முதலீட்டை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அந்த முதலீட்டைத் தொடர முடியுமா?

அனந்தராமன், சர்டிஃபைட் ஃபைனான்ஷியல் பிளானர்.

“நீங்கள் உங்கள் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் கணக்கை மீண்டும் தொடர முடியும். பி.பி.எஃப் கணக்கைத் தொடங்கிய பிறகு, கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்ச சந்தா தொகையை டெபாசிட் செய்யாத எந்தக் கணக்கும் நிறுத்தி வைக்கப் பட்டதாகக் கருதப்படும். இத்த கைய கணக்கை, ஒவ்வோர் ஆண்டும் சந்தா செலுத்தத் தவறியதற்கு குறைந்தபட்ச சந்தா தொகையான ரூ.500 மற்றும் சந்தா செலுத்தத் தவறியதற்கான கட்டணம் ரூ.50 ரூபாய் செலுத்துவதன் மூலம் புதுப் பித்துக்கொள்ளலாம்.

உங்கள் பி.பி.எஃப் கணக்கில் நீங்கள் இரண்டு ஆண்டுகள் பணம் கட்டவில்லை என்பதால் ஆண்டுக்கு ரூ.500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு நீங்கள் 1,000 ரூபாய் சந்தா மற்றும் ஆண்டுக்கு ரூ.50 அபராதம், இரண்டு ஆண்டு களுக்கு 100 ரூபாய் ஆக மொத்தம் ரூ.1,100 செலுத்தி உங்கள் கணக் கைப் புதுப்பித்துக்கொள்ளலாம். பி.பி.எஃப் கணக்கில் நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்வது அவசியம். அதேநேரத்தில், அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய்தான் செலுத்த முடியும்.

ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 500 ரூபாய் செலுத்தாமல் உங்கள் கணக்கை 15 வருடம் கழித்து முடிக்கவோ, இடையில் உங்களுக்குரிய கணக்கில் பகுதி யாகவோ எடுக்க முடியாது. பி.பி.எஃப் கணக்கைத் தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் தொடங்க முடியும். சந்தா செலுத்த சில வங்கிகளில் இணையதள வசதியும் உள்ளது.”

இடையில் நின்றுபோன பி.பி.எஃப்... மீண்டும் தொடர முடியுமா..?
John Kevin

அ.சுரேஷ், சுப்ரமணியபுரம், திருச்சி.

என் வயது 35. என்னால் மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்யும் பணத்தில் 50% ஐந்து ஆண்டு கழித்தும், மீதமுள்ள 50% பத்து ஆண்டுகள் கழித்தும் தேவைப்படும். நான் எது போன்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்?

ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ், சென்னை.

“உங்களின் முதலீட்டுத் தொகையான 10,000 ரூபாயை தலா ரூ.5,000 எனப் பிரித்துக்கொள்ளவும். ஐந்து ஆண்டு கழித்து தேவைப்படும் பணத்துக்கு நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரவும். முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகளாக இருப்பதால், அதிக ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால், ஹைபிரிட் ஃபண்டுகள் பரிந்துரை செய்யப்படுகின்றன. ரிஸ்க்கை மேலும் குறைக்க இரண்டு ஃபண்டுகளில் தலா ரூ.2,500 முதலீடு செய்யவும். இந்த ஃபண்டுகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்கலாம். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப் பீர்கள். அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைத்தால், மொத்தம் ரூ.3.9 லட்சம் சேர்ந்திருக்கும்.

பத்து ஆண்டுகள் கழித்து, தேவைப்படும் பணத்துக்கு மீதியுள்ள 5,000 ரூபாயை ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும். ரிஸ்க்கைக் குறைக்க ஃபிளெக்ஸிகேப் ஃபண்டில் ரூ.2,500, மல்ட்டிகேப் ஃபண்டில் ரூ.2,500 என முதலீடு செய்துவரவும். பத்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.6 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் மொத்தம் ரூ.11.6 லட்சம் சேர்ந்திருக்கும்.”