நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

வீட்டுக் கடன் வட்டி உயர்வு... இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கும்..? - கேள்வி - பதில்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

SWP முறையில் தேவைக்குப் பணம் கிடைப்பதுடன், குறைவாக வருமான வரியைக் கட்டினால் போதும்...

உதய மூர்த்தி, கும்பகோணம்.

என் உறவினர் ஒருவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது 9 - 12 லட்சம் ரூபாய் வருமான வரம்பில் வருகிறார். அடுத்த சில வருடங்களில் அடுத்த வருமான வரம்புக்கு அவர் சென்றுவிடுவார். அவருக்கு வீட்டுக் கடன் இருக்கிறது. வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் குடியிருந்துவருகிறார். பிராவிடென்ட் ஃபண்ட் சேமிப்பு சந்தா வருடத்துக்கு ரூ.1.5 லட்சம் உள்ளது. மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.25,000 பிரீமியம் கட்டி வருகிறார். வேறெந்த வரிச் சலுகை சேமிப்புகளும் இல்லை. இவருக்குப் பழைய வருமான வரி முறை சரியாக இருக்குமா, புது வருமான வரி முறை சரியாக இருக்குமா..?

ஆர்.ஜெகதீஷ், ஆடிட்டர், தேனி.

‘‘பழைய வரி முறையில் வருமான வரிச் சலுகைக்கான முதலீடுகள் மற்றும் செலவு களைச் செய்வது மூலம் 80C, 80D உள்ளிட்ட பிரிவுகளின் மூலம் வரியைத் தவிர்க்க அல்லது குறைக்க முடியும்.

பொதுவாக, 9 முதல் ரூ.15 லட்சம் உள்ளவர் களுக்கு 80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம், வீட்டுக் கடன் வட்டி ரூ.2 லட்சம், வங்கிச் சேமிப்பு வட்டி வருமானம் ரூ.10,000, 80D பிரிவின்கீழ் ரூ.25,000 மருத்துவக் காப்பீடு பிரீமியம், 80CCD(1B) பிரிவின்கீழ் என்.பி.எஸ் ரூ.50,000 முதலீடு, கொண்டவர்களுக்கு பழைய வரி முறை லாபகரமாக இருக்கும்.

அந்த வகையில், உங்கள் உறவினருக்கு தற்போதைய நிலையில் பழைய வரி முறை லாபகரமாக இருக்கும். ஒருவருக்கு மேற்கண்ட சேமிப்புகள், செலவுகள் எதுவும் இல்லை எனில், அவருக்கு புதிய வரி முறை லாபகரமாக இருக்கும்.

எதற்கும் வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்கு முன் உங்களின் விவரங்களை வருமான வரித் துறையின் வரி கணக்கீட்டு கால்குலேட்டரில் உள்ளீடு செய்தால், எந்த முறையில் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்பதைக் குறிப்பிடும். அப்போது எந்த முறையில் குறை வாக வரி கட்ட வேண்டியிருக்கிறதோ, அதைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.’’

வீட்டுக் கடன் வட்டி உயர்வு... இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கும்..? - கேள்வி - பதில்

அ.நிவேதன், கன்னியாகுமரி.

நான் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெறப் போகிறேன். செலவுக்குப் பணம் கிடைக்கும் விதமாக நன்கு டிவிடெண்ட் தரும் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். இது சரியான அணுகுமுறையா?

ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் டிவிடெண்ட் என்பது மாதம்தோறும் அதுவும் குறிப்பிட்ட தேதியில் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது.

பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் எனில், பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும் காலத்தில் பெரும்பாலும் டிவிடெண்ட் வழங்காது. எப்போது டிவிடெண்ட் வழங்குவது, எவ்வளவு வழங்குவது என்பது அந்த ஃபண்ட் மேனேஜரின் முடிவைப் பொறுத்ததாகும்.

மேலும், டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். உதாரணமாக, ஒருவருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் டிவிடெண்ட் கிடைக்கிறது எனில், அதற்கு அவர் 30% வரி வரம்பில் வந்தால், ரூ.30,000 வருமான வரியைக் கட்ட வேண்டும்.

இதற்குப் பதில், குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்து விட்டு, ஓராண்டு கழித்து பணத் தேவைக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தேதியில் (உதாரண மாக, 5-ம் தேதி) சிஸ்ட மேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் யூனிட்டுகளை விற்கும் போது ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரி கட்டினால் போதும்.

அந்த வகையில், தொடர்ச்சி யான பணவரத்துக்கு எஸ்.டபிள்யூ.பி முறையைப் பயன்படுத்தும்போது தேவைக் குப் பணம் கிடைப்பதுடன், குறைவாக வருமான வரியைக் கட்டினால் போதும்.’’

வீட்டுக் கடன் வட்டி உயர்வு... இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கும்..? - கேள்வி - பதில்

வி.கருணாகரன், சென்னை -17

என் வயது 40. என்னுடைய 58-வது வயதில் எனக்கு பென்ஷன் தேவை. எல்.ஐ.சி-யின் நியூ பென்ஷன் ப்ளஸ் திட்டத்தில் முதலீடு செய்து பென்ஷன் பெற விரும்புகிறேன். இதில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், எனக்கு மாதம் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

ஏ.தேவி, நிறுவனர், ஶ்ரீதேவி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ், சென்னை.

‘‘நியூ பென்ஷன் ப்ளஸ் பாலிசி பங்குச் சந்தை சார்ந்த யூலிப் திட்டமாகும். பென்ஷன் தொகை பங்குச் சந்தையின் செயல் பாட்டைச் சார்ந்துள்ளது. இதில் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்து, அதை 18 வருடங்கள் உங்களின் பணி ஓய்வுக்காலம் வரை தொடர்வதாக வைத்துக்கொள் வோம். அதற்கு 8% வருமானம் கிடைத்தால், 18 வருட முடிவில் ரூ.1.2 கோடி கோடியாகப் பெருகி இருக்கும்.

இந்தத் தொகையை எடுத்து மாதம் 6% வருமானம் தரும் திட்டத் தில் முதலீடு செய்தால், 20 ஆண்டு களுக்கு மாதம்தோறும் கிடைக்கும் பென்ஷன் தொகை சுமார் ரூ.60,000. இந்தத் தொகையானது அடுத்த 20 ஆண்டுகளுக்குக் கிடைக்கும். இந்தத் தொகை அவருக்குப் பிறகு அவரின் துணைவருக்குக் கிடைக்கும்.

இந்த பாலிசியில் கூடுதல் உத்தர வாதத் தொகை ரூ.6 லட்சம் தொகையை பாலிசி தொடங்கி ஐந்து ஆண்டு முதல் 18 ஆண்டு களில் பிரித்துத் தரப்படும்.

நியூ பென்ஷன் ப்ளஸ் திட்டத் தின் வருமானம் பங்குச் சந்தையைச் சார்ந்தது. பங்குச் சந்தையின் மூலம் அதிக வருமானம் கிடைத்தால், அதிக பென்ஷன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருவரின் மறைவுக்குப் பிறகு டெபாசிட்டாகச் செய்யப் பட்ட ரூ.1.2 கோடி வாரிசுகளுக்குக் கிடைக்கும்.’’

வீட்டுக் கடன் வட்டி உயர்வு... இ.எம்.ஐ எவ்வளவு அதிகரிக்கும்..? - கேள்வி - பதில்

கலைச்செல்வி, விருத்தாச்சலம்.

2022 ஏப்ரல் மாதத்தில், 10 ஆண்டு களில் திரும்பக் கட்டும் வகையில் ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினேன். அப்போது வட்டி விகிதம் 6.55% ஆகும். மாத தவணை 56,775 ரூபாயைக் கட்டி வருகிறேன்.
இப்போது இந்தக் கடனுக்கான வட்டி 9.25 சதவிகிதமாக அதிகரித்துவிட்டது. இதே வட்டி நீண்ட காலத்துக்கு நீடித்து, நான் மாதம்தோறும் ரூ.56,775 கட்டி வந்தால், எத்தனை ஆண்டுகளில் நான் வாங்கிய வீட்டுக்கடனைக் கட்டி முடிக்க முடியும். கடனைத் திட்டமிட்டபடி பத்து ஆண்டுகளில் முடிக்க எவ்வளவு தொகையை அதிகரித்து கட்டி வர வேண்டும்?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

‘‘உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் கடந்த ஓராண்டில் 6.5 சதவிகிதத்திலிருந்து 9.25 சதவிகிதமாக உயர்ந்ததால், நீங்கள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் கிட்டத்தட்ட 12 மாதங்களிருந்து 15 மாதங்கள் வரை உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது.

வீட்டுக்கடனுக்கு தற்போதிருக்கும் வட்டி விகிதம் 9.25% வட்டி விகிதம் இன்னும் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறிதான். உங்கள் கருத்துப்படி, இப்போதிருக்கும் 9.25% வட்டி விகிதமே தொடர்ந்து நீடித் திருக்கும் என வைத்துக்கொண்டால், நீங்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணையை ரூ.63,359-ஆக உயர்த்தினால் மட்டுமே மீதமிருக்கும் ஒன்பது ஆண்டுகளில் நீங்கள் வீட்டுக் கடனை முடிக்க இயலும்.

இதைப் பற்றி நீங்கள் எந்த வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் பெற்றிருக்கிறீர்களோ, அதன் அலுவலகத்துக்குச் சென்று அதிகாரிகளை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம்.’’