தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

புதிய முதலீட்டாளர்களுக்கு செக்டார் ஃபண்டுகள் ஏற்றதா..? - கேள்வி பதில்

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

என்.எஸ்.சி-யில் செய்யப்படும் ரூ.1 லட்சம் முதலீடு ஐந்து ஆண்டுகளில் ரூ.1,44,900 ஆக அதிகரிக்கும்...

கவின் குமார், வந்தவாசி

’’நான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவன். என் வயது 25. மாதம்தோறும் 6,000 ரூபாய் வீதம் நீண்ட காலநோக்கில் பத்து ஆண்டு களுக்கு முதலீடு செய்ய விரும்புகிறேன். நான் செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்

‘‘செக்டார் மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் ரிஸ்க்கானவை. காரணம், இந்த ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங் களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப் படும்.

அந்தக் குறிப்பிட்டத் துறை பற்றி நன்கு அறிந்திருந்தால்தான் இந்தத் துறை சார்ந்த ஃபண்டுகளில் சரியான நேரத்தில் முதலீடு செய்ய முடியும்.

அது மட்டுமல்ல, இந்த ஃபண்டில் செய்த முதலீடுகளை சரியான நேரத்தில் விற்று வெளியேறுவதும் அவசியம்.செக்டார் ஃபண்டுகளில் உங்களுக்குக் கிடைக்கும் லாபமானது, இந்த இரண்டு விஷயங்களைப் பொறுத்தே இருக்கிறது.

நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர் என்பதால் உங்களுக்கு செக்டார் ஃபண்ட் இப்போதைக்கு ஏற்றதல்ல.

எனவே, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யக்கூடிய மல்ட்டிகேப் ஃபண்டுகள், ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகள் அல்லது ஓரளவுக்கு ரிஸ்க் குறைவான லார்ஜ்கேப் ஃபண்டுகள் போன்றவற்றில் மாதம்தோறும் தலா ரூ.2,000 வீதம் முதலீடு செய்துவரவும்.’’

புதிய முதலீட்டாளர்களுக்கு
செக்டார் ஃபண்டுகள் ஏற்றதா..? - கேள்வி பதில்

யா.நிலா, புதுக்கோட்டை

என் வயது 28. என்னால் மாதம் ரூ.3,000 முதலீடு செய்ய முடியும். இந்தப் பணம் எனக்கு 20 ஆண்டுகள் கழித்துத் தேவை. ஆனால், முதலீட்டில் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. நான் எது போன்ற முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்?

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com

‘‘முதலீட்டில் நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப வில்லை எனில், நீங்கள் வங்கி அல்லது தபால் அலுவலக ரெக்கரிங் டெபாசிட்டுகளில் (RD) முதலீடு செய்துவரலாம்.

தபால் அலுவலக ஆர்.டி திட்டத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்துவர வேண்டும்.

இதற்கு தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 6.2% வட்டி வருமானம் கிடைக்கிறது. மாதம் ரூ.3,000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு செய்யப்படும் முதலீட்டுக்கு ஐந்து ஆண்டு இறுதியில் ரூ.2.11 லட்சம் கிடைக்கும்.

ஐந்து ஆண்டு ‘லாக்இன்’ கொண்ட தபால் அலுவலக ஆர்.டி திட்டம் உங்களுக்கு வேண்டாம் எனில், வங்கி ஆர்.டியில் முதலீடு செய்துவரலாம். ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், தற்போது ஓராண்டுக்கான ஆர்.டிக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்குகிறது; ஐந்து ஆண்டு முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது.

ஐந்து ஆண்டு முடிவில் ஆர்.டி தொகையை எடுத்து, தபால் அலுவலகத் திட்டமான தேசிய சேமிப்புப் பத்திரத்தில் (NSC) முதலீடு செய்யவும். இந்த முதலீட்டில் ஆண்டுக்கு 7.7% வட்டி வருமானம் கிடைக்கும்.

என்.எஸ்.சி-யில் முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் முதலீடு ஐந்து ஆண்டு களில் ரூ.1,44,900- ஆக அதிகரிக்கும். வங்கி முதலீட்டை விட தபால் அலுவலக முதலீடு பாதுகாப்பானது.’’

புதிய முதலீட்டாளர்களுக்கு
செக்டார் ஃபண்டுகள் ஏற்றதா..? - கேள்வி பதில்

கோபி கிருஷ்ணா, வந்தவாசி

என் முதலீட்டுக் காலம் ஓராண்டு. நான் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் டெக்னாலஜி - டைரக்ட் பிளான் குரோத் ஆப்ஷனில் மாதம்தோறும் ரூ.5,000 முதலீடு செய்துவரலாமா?

ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in

‘‘பங்குச் சந்தையில் முதலீடு என்று செய்யும்போது ஒரு வருடம் என்பது மிகக் குறைவான காலமாகும். குறைந்தது 3 முதல் 5 வருடங்கள் பொறுமையாக முதலீடு செய்வதற்கே பங்குச் சந்தை உகந்தது. இதற்கு நீங்கள் தயாராக இல்லை எனில், உங்கள் முதலீட்டில் நஷ்டம் ஏற்படுவதற் கான ரிஸ்க் அதிகம் இருக்கிறது.

பொதுவாக, பங்குச் சந்தை யின் செயல்பாட்டைப் பொறுத்தே லாபம் கிடைக்கலாம்; அல்லது முதலுக்கே மோசம்கூட ஆகலாம். அதுவும் நீங்கள் தேர்வு செய்திருக்கும் ஃபண்டானது ஒரு குறிப்பிட்ட துறையில் (தொழில்நுட்பம்) மட்டும் முதலீடு செய்வது.

இத்தகைய ஃபண்டில் இப்படிக் குறைவான காலத்துக்கு முதலீடு செய்வது அதிக ரிஸ்க் கானதாகும். ஒரு வருட முதலீடு களுக்கு வங்கி எஃப்.டி-கள் சரியானவை.’’

பவித்ரா பாஸ்கரன், உடுமலைப் பேட்டை

வங்கியில் வைப்புத் தொகை வைத்திருக்கும் என் நண்பர், வாரிசுகள் ஏதும் இல்லாத நிலையில், உறவுமுறை ஏதும் இல்லாத மூன்றாவது நபர் ஒருவரை நாமினியாக நியமனம் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், டெபாசிட்தாரர் இறந்த பிறகு நாமினியாக நியமிக்கப்பட்டவர், வாரிசுச் சான்று இல்லாமலே வைப்புத் தொகையைப் பெறமுடியுமா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

‘‘வங்கியில் மூன்றாவது நபரின் பெயரை நாமினியாகக் கொடுத்திருந்தால், டெபாசிட்தாரர் இறந்த பிறகு வங்கியானது அந்தப் பணத்தை அந்த மூன்றாவது நபருக்கு வாரிசு சான்றிதழ் இல்லாமலே தந்துவிடும். ஆனால், டெபாசிட்தாரருக்கு கிளாஸ் 1 (Class 1) - நேரடி ரத்த சம்பந்தமான உறவுகள், கிளாஸ் 2 - தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் சட்ட பூர்வ வாரிசுகளாக இருந்தால், அவர்கள் அந்த ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை சட்டபூர்வமாகக் கோரினால், நாமினி அந்தப் பணத்தை அந்த வாரிசுகளுக்குக் கொடுத்துதான் ஆகவேண்டும்.’’

ஆர்.கண்ணன் இ-மெயில் மூலம்

நான் என் ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.30 லட்சத்தை என் இந்திய என்.ஆர்.இ வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளேன். பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். அதுவரைக்கும் இந்தப் பணத்தை வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், கடன் மியூச்சுவல் ஃபண்ட் என எதில் முதலீடு செய்து வைக்கலாம்?

புதிய முதலீட்டாளர்களுக்கு
செக்டார் ஃபண்டுகள் ஏற்றதா..? - கேள்வி பதில்

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

‘‘நீங்கள் பங்குச் சந்தை இறங்கும் வரை உங்கள் பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் உள்ள லிக்விட் ஃபண்ட் அல்லது மணி மார்க்கெட் ஃபண்டில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளவும்.

வங்கி சேமிப்புக் கணக்கில் வங்கியைப் பொறுத்து ஆண்டுக்கு சுமார் 3% - 6% வரை வட்டி வருமானம் வர வாய்ப்புள்ளது. ஆனால், லிக்விட் ஃபண்ட், மணி மார்க்கெட் ஃபண்டில் ஆண்டுக்கு 5.5% - 6% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உதாரணமாக, நூறு பங்கு வாங்க வேண்டும் எனில், மாதம் பத்து பங்குகள் அல்லது தினசரி ஒரு பங்கு வீதம் வாங்கிக்கொண்டு வாருங்கள்; அப்போது உங்களுக்கு சராசரியாக குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தை எப்போது இறங்குமோ, அப்போது முதலீடு செய்யலாம் என்று காத்திருந்தால் பல நேரங்களில் வாய்ப்பை நழுவவிட வாய்ப்புள்ளது. நீங்கள் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாமல், கன்சர்வேட்டிவ் முதலீட் டாளராக இருந்தால், லிக்விட் ஃபண்ட் அல்லது மணி மார்க்கெட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, பங்குச் சந்தை இறங்கும்போது முதலீடு செய்துகொள்ளுங்கள்.’’