நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எஸ்.ஐ.பி Vs எஸ்.டி.பி... எப்போது, எந்த முறை சரியாக இருக்கும்? - கேள்வி பதில்

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

உங்களிடம் மொத்தப் பணமும் இருக்கும்பட்சத்தில் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க எஸ்.டி.பி முறையில் நீங்கள் முதலீடு செய்யலாம்!

ஏழுமலை, விழுப்புரம்.

டீமேட் கணக்கு மூலம் பங்குச் சந்தையில் சாவரின் கோல்டு பாண்ட் (SGB) வாங்கி ஆவரேஜ் செய்யும்போது எனக்கு ஆண்டு வட்டி 2.5% கிடைக்குமா? அந்த வட்டிக்கு வருமான வரி கட்ட வேண்டுமா?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்.

‘‘வட்டி கிடைக்கும். எந்த தொகுப்பு விலையில் வெளி யிடப்பட்டதோ, அதற்குரிய வட்டியானது ஆறு மாத காலத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இருமுறை தரப்படும். இரண்டாம் நிலை சந்தையில் (Secondary market) வாங்கக்கூடிய விலையில் அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, அந்த பாண்ட் எந்த விலையில் வெளியிடப் பட்டதோ, அதன் மதிப்புக்குத் தான் ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். இந்த வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.’’

எஸ்.ஐ.பி Vs எஸ்.டி.பி... எப்போது, 
எந்த முறை சரியாக இருக்கும்? - கேள்வி பதில்

சி.தேவி, காரைக்கால்.

மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டில் எப்போது எஸ்.ஐ.பி முறையைப் பயன்படுத்த வேண்டும், எப்போது எஸ்.டி.பி முறையைப் பின்பற்ற வேண்டும்?

ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ்.

‘‘நீங்கள் நீண்ட காலத்தில் செல்வம் உருவாக்க, பிள்ளை களின் உயர்கல்வி போன்ற தேவைகளுக்கு எஸ்.ஐ.பி (Systematic Investment plan) மற்றும் எஸ்.டி.பி (Systematic Transfer plan) ஆகிய முறை களில் முதலீடு செய்துவரலாம்.

உங்களுக்கு வருமானம் மாதம்தோறும் வரும் என்கிற பட்சத்தில் நீங்கள் எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம்.

உங்களிடம் மொத்தப் பணம் இருக்கும்பட்சத்தில் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்தை சமாளித்து முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க எஸ்.டி.பி முறையை நீங்கள் பயன்படுத்துவது லாபகரமாக இருக்கும்.

இந்த முறையில் மொத்தப் பணத்தை ரிஸ்க் இல்லாத லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்து, அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவதாகும். இப்படி செய்யும்போது, பல்வேறு வேலைகளில் நம்மால் மியூச் சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை வாங்க முடிகிறது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் குறைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.’’

எஸ்.ஐ.பி Vs எஸ்.டி.பி... எப்போது, 
எந்த முறை சரியாக இருக்கும்? - கேள்வி பதில்

அ.சுகந்தி, திருவண்ணாமலை.

எல்.ஐ.சி நிறுவனத்தின் ஜீவன் ஆரோக்யா மருத்துவக் காப்பீட்டு பாலிசிக்கும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் எடுக்கும் மருத்து வக் காப்பீட்டு பாலிசிக்கும் என்ன வித்தியாசம்?

ஏ.தேவி, நிறுவனர், தேவி இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ், சென்னை.

‘‘எல்.ஐ.சி-யின் ஜீவன் ஆரோக்யா திட்டத்தில் பாலிசிதாரருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் பாலிசி கவரேஜ் தொகை முழுமையாக வழங்கப்பட்டுவிடும். உதாரணமாக, மருத்துவ சிகிச்சை செலவு ரூ.2 லட்சம் என வைத்துக்கொள்வோம். ஜீவன் ஆரோக்யா பாலிசி கவரேஜ் தொகை ரூ.5 லட்சம் எனில், அது முழுமையாக பாலிசிதாரருக்கு வழங்கப்பட்டுவிடும். முக்கியமான அறுவைசிகிச்சை எனில், அறுவைசிகிச்சைக்கு முன்பே பாலிசிதாரருக்கு 50% தொகை வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பிறகு, மருத்துவமனை தரும் பில்லைக் கட்டிவிட்டு, அதை எல்.ஐ.சி அலுவலகத்தில் பாலிசி பத்திரத்துடன் இணைத்து சமர்ப்பித்தால், மீதி கவரேஜ் தொகையைத் தந்துவிடுவார்கள்.

பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுக்கப்படும் மருத்துவக் காப்பீட்டில், மருத்துவமனையில் சிகிச்சை செலவு எவ்வளவு ஆகிறதோ, அந்தத் தொகைதான் இழப்பீடாகக் கிடைக்கும். உதாரணமாக, பாலிசியின் கவரேஜ் ரூ.5 லட்சம் எனில், மருத்துவச் சிகிச்சை செலவு ரூ.2 லட்சம் எனில், அந்தளவுக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும். அனுமதிக்கப்பட்ட மருத்துவச் செலவுகள் அனைத்தையும் காப்பீடு நிறுவனம், மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கிவிடும்.

எல்.ஐ.சி-யின் ஜீவன் ஆரோக்யா பாலிசியில் பிரதான பாலிசிதாரர் இறந்துவிட்டால், அடுத்த 15 ஆண்டுகளுக்கு பாலிசியின் பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். மற்ற உறுப்பினர்கள் பாலிசியின் பலன்களைத் தொடர்ந்து பெற முடியும். மேலும், எல்.ஐ.சி பாலிசியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் க்ளெய்ம் எதுவும் செய்யவில்லை எனில், நான்காவது ஆண்டில் தினசரி பலன் 5% என்பதுபோல் அதிகரிக்கும்.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தரும் பாலிசியை எடுத்த பின், பிரதான பாலிசிதாரர் இறந்துவிட்டாலும் தொடர்ந்து பிரீமியம் கட்டினால் மட்டுமே பாலிசியின் பலன் களை குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் பெற முடியும். இந்த பாலிசியில் ஓராண்டில் க்ளெய்ம் எதுவும் செய்யவில்லை எனில், அடுத்த ஆண்டில் கவரேஜ் தொகை 20% அதிகரிக்கும்.

ஒருவர் எல்.ஐ.சி-யின் ஜீவன் ஆரோக்யா பாலிசி மற்றும் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீடு இரண்டையும் எடுத்திருக்கிறார் என வைத்து கொள்வோம். உடல் நலப் பாதிப்புக்கு மருத்துவமனையில் சேர்ந்து பொதுத் காப்பீட்டு நிறுவனத்தின் பாலிசியின் மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தொகை அந்த பாலிசி மூலமே வழங்கப்பட்டுவிடும். அதே நேரத்தில் மருத்துவமனை பில்களின் நகலை எல்.ஐ.சி-யில் கொடுத்து எல்.ஐ.சியின் பாலிசிக்குரிய தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். அதாவது இரண்டு பாலிசிகளிலும் ஒரேநேரத்தில் இழப்பீடு பெற முடியும்..’’

கே.ரவிகுமார், சேலம்.

பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கில் முதலீடு செய்ய விரும்புகிறேன். என் முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகள். இந்த பங்கின் சாதக, பாதகங்கள் பற்றி விளக்கிச் சொல்ல முடியுமா?

எல்.அர்ஜூன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

‘‘ பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் 1.27 கோடி வாடிக்கை யாளர்களுக்கு நிதியளித்துள்ளது. நுகர்வோர், எலெக்ட்ரானிக்ஸ், மற்றும் டிஜிட்டல் பொருள்களுக்குக் கடன் வழங்கும் முன்னணி நிறுவனமாகும். தொடர் நிகர லாபம், வருவாய் வளர்ச்சி மற்றும் பங்கு விலை உயர்வு என பங்குதாரர்களுக்கு நிலையான வளர்ச்சியைத் தந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம், 2019-20-ம் நிதி ஆண்டில் ரூபாய் 950 கோடியாக இருந்தது. அது கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.3,160 கோடி யாக உயர்ந்துள்ளது. ஆக, இந்த நிறுவனத்தின் நிகர லாப வளர்ச்சி சீராக உள்ளது.

மேற்கூறிய காலகட்டத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத் தின் நிகர வாராக் கடன் (NPA) 0.75 சதவிகிதத்தில் இருந்து 0.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் லாபம், கூட்டு வருடாந்தர வளர்ச்சி விகிதத்தில் 35.8 சதவிகிதமாக (CAGR) உள்ளது.

இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை பாதகமாக பார்க்கப்படும் விஷயம், அந்நிய நிதி நிறுவன முதலீடு கடந்த இரண்டு வருடங்களில் 24 சதவிகிதத்திலிருந்து 19 சத விகிதமாகக் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டியை உயர்த்திவந்ததால், கடன் வாங்கு பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. போட்டி நிறுவ னங்களின் கடும் சவால்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் போன்றவை இந்த நிறுவனத்துக்கு பாதகம் ஆகும்.

இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.7,832 என்ற உச்சம் சென்றது. ரூ.5,400 வரை இறங்கி தற்போது ரூ.6,700 என்ற விலை யில் வர்த்தகமாகி வருகிறது ஆகவே, தற்போது இதில் முதலீடு செய்யலாம். மொத்த முதலீடும் ஒரே முறையில் செய்வதைத் தவிர்த்துவிட்டு, விலை இறங்கும்போது வாங்கி சேர்க்கலாம்.’’