பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

சிட் ஃபண்டுக்கு ஜி.எஸ்.டி உயர்வு... யாருக்கு என்ன பாதிப்பு..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

சந்தியா, மயிலாடுதுறை.

அண்மையில் சிட் ஃபண்ட் மீதான ஜி.எஸ்.டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிட் ஃபண்டில் பணம் கட்டிவருகிறவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

அ.சிற்றரசு, பொதுச் செயலாளர், அகில இந்திய சீட்டு நிதியங்கள் சங்கம்.

“வங்கிகளில் நிதி உதவி கிடைக்காதவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் புதிதாகத் தொழில் தொடங்க, ஏற்கெனவே செய்துவரும் தொழிலை மேம்படுத்த, தங்க நகை வாங்க, வீடு கட்ட சீட்டு கம்பெனிகளில் ஏலச்சீட்டுகள், மாதக் குலுக்கல் சீட்டுகள் போன்ற சீட்டுத் திட்டங்களில் சேர்ந்து பணத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

இத்தகைய பொருளாதார சேவையை செய்துவரும் சீட்டு கம்பெனிகள் நடத்தும் சிட் ஃபண்ட் நிறுவனங்களின் மீதான ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது. இந்த ஜி.எஸ்.டி வரி உயர்வு முழுவதும் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுபவர்களைப் பெரிதும் பாதிக்கும். ஆகவே, இதை முழுவது மாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்.

உதாரணத்துக்கு ரூ.1 லட்சம் சீட்டுத் திட்டத் தில் ஒருவர் மாதம்தோறும் ரூ.5,000 பணம் கட்ட வேண்டும். 20 மாதம் எனில், சீட்டுத் திட்டம் நடத்தும் கம்பெனிக்கு மாதம் ரூ.5,000 கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷனுக்கு 12% அதாவது, ரூ.600 ஜி.எஸ்.டி கட்ட வேண்டும் என்று முன்பு இருந்தது. அது இப்போது 18 சதவிகிதமாக அதாவது, ரூ.900-ஆக உயர்த்தப் பட்டிருக்கிறது. ஏற்கெனவே விதிக்கப்பட்ட ரூ.600-யை சீட்டு எடுப்பவரிடமிருந்து சீட்டுத் திட்டம் நடத்தும் நிறுவனம் வசூலித்து அரசுக்குக் கட்டும். இப்போது ரூ.900 பிடித்துக் கொண்டு கொடுக்கும்.

ரூ.1 லட்சம் சீட்டை ஒருவர் ரூ.20,000-க்கு தள்ளி எடுக்கிறார் எனில், ரூ.20,000 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.900 போக அவருக்கு ரூ.79,100-தான் கிடைக்கும். இதனால் சீட்டுத் திட்டத்தின்மூலம் தற்போது கிடைத்து வரும் 8 - 12% லாபம் என்பது இன்னும் குறையவே செய்யும்.”

சிட் ஃபண்டுக்கு ஜி.எஸ்.டி உயர்வு...
யாருக்கு என்ன பாதிப்பு..?

எஸ்.பூபதி, இ-மெயில் மூலம்.

என் மனைவிக்கு இப்போது 30 வயது ஆகிறது. அவருக்கு மூன்று வயதாக இருக்கும்போது ஒரு கிட்னி செயலிழந்ததால் அதை எடுத்துவிட்டார்கள். இந்த நிலையில், தற்போது நான் அவருக்கு மெடிக்ளெய்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் என நினைக்கிறேன். எந்த மாதிரியான பாலிசி அவருக்கு சிறந்ததாக இருக்கும், எவ்வளவு கவரேஜ் தேவைப்படும் என்பதுடன், இதற்கு எவ்வளவு பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும், மருத்துவப் பரிசோதனை ஏதாவது செய்ய வேண்டுமா என்பதைச் சொன்னால், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீட்டு ஆலோசகர்.

“மருத்துவக் காப்பீடு நிறுவனங்களைப் பொறுத்தவரை, முக்கியமான உடல் உறுப்புகளில் ஏற்படும் பெரிய அளவிலான பாதிப்போ முக்கியமான உடல் உறுப்பு நீக்கமோ செய்த பிறகு புதிதாக பாலிசிகள் வழங்குவது கடினமே. உங்கள் மனைவிக்கு ஒரு கிட்னி செயலிழப்பு ஏற்பட்டு கிட்னியை எடுத்துவிட்டதால் அவர்களுக்குப் புதிதாக மருத்துவக் காப்பீடு பெறுவது கடினமே.

இருப்பினும் உங்கள் மனைவியின் தற்போதைய உடல்நலம் குறித்த ரிப்போர்ட் மற்றும் அவர்கள் தொடர்ந்து எடுத்துவரும் மருந்துகள், சிகிச்சைகள், ஏற்கெனவே கிட்னி ஆபரேஷன் செய்தபோது உள்ள ரிப்போர்ட் என அனைத் தையும் சேர்த்து மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தில் புதிய பாலிசிக்கான அப்ளிகேஷ னுடன் தந்தால் சில வரை முறைக்கு உட்பட்டு காப்பீடு தர வாய்ப்பிருக்கிறது.

அப்படிப் பரிசீலிக்கும்பட்சத் தில் மருத்துவ சோதனை தேவையா, எவ்வளவு கவரேஜ் மற்றும் பிரீமியம் என்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உங்களுக்கு தெரியப்படுத்தும், இது காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும்.”

சிட் ஃபண்டுக்கு ஜி.எஸ்.டி உயர்வு...
யாருக்கு என்ன பாதிப்பு..?

சோ.கணேஷ் குமார், நடுவீரப்பட்டு.

மாதம் ரூ.5,000 வட்டி வருவதற்கு, தற்போதைய நிலையில் எவ்வளவு தொகையை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? மேலும், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஏதாவது இருக்கிறதா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“மாதம் ரூ.5,000 எனில், வருடத்துக்கு ரூ.60,000 வட்டி வருமானம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். எத்தனை ஆண்டுகளுக்கு நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போட்டு வைத்திருப்பீர்கள் என்று சொல்லவில்லை. ஆகவே, நான் இரண்டு வருடங்கள் என்று அனுமானித்துக்கொள்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் இப்போது 5.50 சதவிகிதத் திலிருந்து 6.50% வரை பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் தருகின்றன. நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகனாக இருந்தால் 7% வரை உங்களுக்கு வட்டி கிடைக்கலாம்.

இதை வைத்துக் கணக்கிடும் போது ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஃபிக்ஸட் டெபா சிட் பணம் போட்டு வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால், வருடம் ரூ 60,000 வட்டி வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இதற்கு உங்களுடைய பான் கார்டு, ஆதார் கார்டு, இருப்பிடச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். மேலும், வருட வட்டி வருமானம் ரூ.40,000-க்கு மேல் இருந்தால், (மூத்த குடி மக்களுக்கு ரூ.50,000) 10% வரிப் பிடித்தம் செய்யப்படும்.

உங்கள் மொத்த வருமானம் வருமான வரி விலக்கு அடிப்படை வரம்பான ரூ.2.5 லட்சத்துக்குக் கீழ் இருக்கும்பட்சத்தில், படிவம் 15 ஜி (மூத்த குடிமக்களுக்கு 15 ஹெச்)நிரப்பித் தந்து, வரிப் பிடித்தத்தைத் தவிர்க்கலாம்.”

ஏ.அமலா, மும்பை.

5ஜி தொழில்நுட்பம்தான் எதிர்காலம் என்கிறபட்சத்தில் அதன்மூலம் லாபம் அடையும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்குமா? முதலீட்டுக்கு ஏற்ற சில பங்குகளை சொல்ல முடியுமா?

சிட் ஃபண்டுக்கு ஜி.எஸ்.டி உயர்வு...
யாருக்கு என்ன பாதிப்பு..?

எல்.அர்ஜூன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com

“தற்போது தொலைத்தொடர்புத்துறை சார்ந்த சேவைகளை வழங்குவதில் ஆகாஷ் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும், சுனில் மிட்டல் தலைமையில் பார்தி ஏர்டெல் நிறுவனமும் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருக்கின்றன.

வோடஃபோன் ஐடியா, அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் தொலைத்தொடர்புத்துறை சேவைகளை வழங்கி வருகின்றன. இந்திய அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் (ஜியோ) மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகளில் நீண்ட கால நோக்கத்துக்காக முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

மேலும், அதானி குழுமம் 5ஜி ஏலத்தில் பங்கேற்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. அதற்காக முன்பணமும் செலுத்தியுள்ளது. என்றாலும், அதானி குழும நிறுவனம் நேரடியாகப் பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு சேவைகளைத் தற்போது வழங்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. தமது குழுமத்தைச் சார்ந்த நிறுவனங் களுக்கும், பிற தனியார் நிறுவனங்களுக்கும் மட்டும் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானியின் வருகையால் தொலைத் தொடர்புத்துறையில் மேலும் போட்டி அதிகரித்துள்ளது. 5ஜி ஏலம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அது முழுக்க முடிந்த பின்தான் அதனால் பயனடையும் நிறுவனங்கள் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியும்.’’