
கேள்வி - பதில்
கே.கார்த்திகேயன், சாத்தூர்
நான் மாதம்தோறும் வீட்டுக் கடன் தவணை செலுத்தி வருகிறேன். கையில் பணம் கிடைக்கும்போது கூடுதல் தவணைகள் வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு செலுத்தி வந்தால் வட்டி குறையுமா?
சௌ.சிவகுமார், நிறுவனர், www.bestservicerealty.in
“நிச்சயமாக வட்டிக்குச் செல்லும் தொகை குறையும். நீங்கள் கூடுதலாகக் கட்டும் தவணைக்கு உரிய தொகை உடனடியாகப் பாக்கியுள்ள அசல் தொகையில் குறைக்கப் படுகிறது. மீதியுள்ள தொகைக்குதான் வட்டி போடப்படுகிறது. உதாரணத்துக்கு, ரூ.10 லட்சம் கடன் பாக்கி இருக்கிறது. மாதத் தவணை ரூ.20,000. ஒருவர் ஐந்து மாதத் தவணை ரூ.1 லட்சத்தைக் கூடுதலாகக் கட்டுகிறார் என்றால் மீதியிருக்கும் ரூ.9 லட்சம் ரூபாய்க்குதான் வட்டி போடப்படும். இதனால், அவருக்கு நீண்ட காலத்தின் வட்டியில் கணிசமான தொகை மிச்சமாகும்.”

உமா மகேஸ்வரி, ஶ்ரீரங்கம்
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் ஈக்விட்டி ஃபண்டில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்துவிட்டு ஓய்வுக்காலத்தில் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) முறையில் பணத்தை எடுத்துக்கொள்வது லாபமாக இருக்குமா? சற்று விளக்கமாகச் சொல்லவும்.
ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com
“மேலோட்டமாகப் பார்த்தால், இது சரியானது போல்தான் தோன்றும். மேலும், நிதித் திட்டமிடல்படி, முதலீடு செய்துவிட்டு, பணி ஓய்வுக்குப் பிறகான செலவுக்குப் பணம் எடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய அம்சம், வேலை பார்க்கும்போது ஒருவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும். குறைவான வயதாக இருக்கும் என்பதால், அவர் ரிஸ்க் எடுத்து ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்து வந்திருப்பார். ஆனால், பணி ஓய்வின்போது சம்பளம் அல்லது வருமானம் வராது. மேலும், சீனியர் சிட்டிசன் என்பதால், முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. இதனால், அவர் ஈக்விட்டி ஃபண்ட் தொகுப்பு நிதியை அதிக ரிஸ்க் இல்லாத கடன் ஃபண்டுக்கு மாற்றிவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் செலவுக்குப் பணம் எடுப்பதுதான் சரியாக இருக்கும். ஈக்விட்டி ஃபண்டிலிருந்து அப்படியே எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுத்துச் செலவு செய்வது புத்திசாலித்தனம் அல்ல.”
கண்ணன் தங்கமுத்து, இ-மெயில் மூலம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயத்துக்கு உட்பட்டது என்று சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்படி நம்பி முதலீடு செய்வது?
சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com
“பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் கொண்டவை. ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி நல்ல வருமானம் கொடுக்கக் கூடியவையாகும். அதற்கு நீங்கள் ஈக்விட்டி ஃபண்டுகளில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வர வேண்டும். நீண்ட காலத்தில் ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகிதத் துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.”

ப.ரங்கநாதமூர்த்தி, கோவை.
என் வயது 42. என் எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீடு பாலிசி மார்ச் 2022-ல் முதிர்ச்சி அடைகிறது. வேறு காப்பீடுகள் இல்லை. மீண்டும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கலாமா அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?
ச.ராமலிங்கம், பார்ட்னர் என் ஜே இந்தியா.
“காப்பீடு என்பது உங்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் எதிர்பாராமல் நடந்துவிட்டால், நீங்கள் உயிரோடு இருக்கும்போது உங்கள் குடும்பத்துக்கு என்னென்ன செய்வீர்களோ அவற்றைச் செய்யத் தேவையான பண வசதியை ஏற்படுத்தித் தருவதாக இருக்கிறது.
ஆயுள் காப்பீடு ஒரு சொகுசு அல்ல, அது ஒரு முக்கியத் தேவை என்பதை உணர்ந்து பணிபுரியும் / சம்பாதிக்கும் ஒவ்வொருவரும், குறிப்பாக, உங்கள் வருமானத்தை மட்டும் நம்பி வாழும் குடும்பத்தினருக்காக (Sole Breadwinner) கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் வயது தற்போது 42 என்று கூறும்போது மனைவி, மகன், மகள் என்று ஒரு குடும்பத் தலைவனாக இருக்கும்போது எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை டேர்ம் பிளான் எனப்படும் குறைந்த பிரீமியத் தொகையில் அதிக காப்பீட்டுத் தொகையுடைய பாலிசியை ஒரு காப்பீடு முகவர் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல 10 - 12 மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நலம். உங்கள் வயது, எடை, உயரம், தேக ஆரோக்கியம் , நீரிழிவு பாதிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு ஆகியவற்றைக் கேட்டு அறிந்து தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனை (இலவசம்) செய்துகொள்ள உதவுவார் ஆலோசகர்.
மீதமுள்ள பணத்தை என்.ஜே பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், எடில்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் மொத்தமாகவும் முதலீடு செய்யவும். முடிந்தால் ஒரு சிறு தொகையை கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.”
கலைச் செல்வி, மானா மதுரை.
நான் 5 ஆண்டுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட திட்டமிட்டிருந்தேன். என் நண்பர் ஒருவர் அதற்குப் பதில் மியூச்சுவல் ஃபண்டில் அது போன்ற திட்டங்கள் உள்ளன. அதில் முதலீடு செய்தால் வருமானத்துக்கு குறைவான வரி கட்டினால் போதும் என்று சொன்னார். நான் எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்?
ராஜேந்திரன் கௌரிசங்கர், மியூச்சுவல் ஃபண்ட் விநியோஸ்தகர், கும்பகோணம்.
“வங்கி டெபாசிட் எத்தனை ஆண்டுகளுக்கு போட்டுருந்தாலும், அதற்குக் கிடைக்கும் வட்டி வருமானத் துக்கு ஒருவரின் அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வருமான வரி கட்ட வேண்டும். இதுவே கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் மூன்றாண்டுகளுக்குள் யூனிட்டுகளை விற்று லாபம் கிடைத்தால், குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு ஒருவரின் அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.
இதுவே கடன் ஃபண்டுகளின் யூனிட்டுகளை மூன்றாண்டுகள் மற்றும் அதற்கு மேல் விற்று கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க சரி கட்டலுக்குப் (Indexation) பிறகு, 20% வரி கட்டினால் போதும். அந்த வகையில், வரிக்குப் பிந்தைய நிலையில் நீண்ட காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் களைவிட கடன் மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் அதிகமாக இருக்கும்.”