
கேள்வி - பதில்
எம்.கிருபாகரன், நாகப்பட்டினம்
நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறேன். அடிக்கடி பங்குகளை வாங்கி விற்றுவருகிறேன். தினசரி பங்கு வர்த்தகம் மற்றும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்திலும் ஈடுபடுகிறேன். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் பங்குச் சந்தையிலேயே முதலீடு செய்தால், எனக்கு ஏதாவது வரிச் சலுகை கிடைக்குமா, நான் எப்படி வரியைக் கட்ட கட்ட வேண்டியிருக்கும்?
எஸ்.சதீஷ்குமார், சார்ட்டர்ட் அக்வுன்டன்ட். Auditorssk.com
‘‘நீங்கள் தினசரி பங்கு வர்த்தகம் மற்றும் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தின் மூலம் ஈட்டும் லாபம், வணிக வருமானமாக (Business Income) கருதப்படும். பொதுவாக, வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசம் லாபமாகக் கருதப்படும். இந்த லாபத்துக்கு வரிச் சலுகைகள் (குறைவான வரி அல்லது பணவீக்க விகிதச் சரிகட்டல்) எதுவும் கிடையாது. இந்த லாபம் உங்களின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, நீங்கள் எந்த வருமான வரி வரம்புக்குள் (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வருகிறீர்களோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும்.’’
ஆனந்தகுமார், இ-மெயில் மூலம்.
என் வயது 30. அதிக ரிஸ்க் எடுக்க முடியும். மாதம் ரூ.5,000 வீதம் நீண்ட காலத்துக்கு எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய மூன்று இண்டெக்ஸ் ஃபண்டுகளைப் பரிந்துரை செய்யவும்.
வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், https://www.moneyavenues.in/
‘‘உங்கள் வயது, அதிக ரிஸ்க் எடுக்கும் ஆர்வம் மற்றும் திறனைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது நீங்கள் டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். எனினும், நீங்கள் இண்டெக்ஸ் ஃபண்ட் என்று குறிப்பிட்டுக் கேட்பதால் ஐ.சி.ஐ.சி.ஐ நிஃப்டி, ஹெச்.டி. எஃப்.சி நிஃப்டி மற்றும் நிப்பான் நிஃப்டி ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் பிரித்து முதலீடு செய்யலாம்.’’

அ.கார்த்திகேயன், சேலம்.
இந்தியாவில் நடக்கும் சிட் ஃபண்ட் திட்டங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்) சேர முடியுமா, இதற்கென விதிமுறைகள், நிபந்தனைகள் ஏதாவது இருக்கின்றனவா?
அ.சிற்றரசு. பொதுச் செயலாளர், அகில இந்திய சீட்டு நிதியங்கள் சங்கம்.
‘‘இந்தியாவில் நடத்தப்படும் பதிவு பெற்ற சீட்டுகளில் வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) சேரலாம். இதற்கான அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. சீட்டுகளில் செலுத்தக்கூடிய பணத்துக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பணம் இந்திய வங்கிகள் ஏதேனும் ஒன்றில், பணம் அனுப்புபவரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் மூலம்தான் அனுப்பப்பட வேண்டும். இது போல் அனுப்பி சேமிக்கப்படும் பணத்தை அவர்கள் வாழும் நாடுகளுக்கோ, பிற நாடுகளுக்கோ எடுத்துச் செல்ல முடியாது. இந்த நிபந்தனையுடன்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நம் நாட்டைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக, தென் இந்திய மக்கள் பலர், வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கு ஈட்டிய பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி இங்கே சேமிக்க சீட்டு முறை மிகவும் உதவியாக உள்ளது.’’

கே.சதீஷ்குமார், இ-மெயில் மூலம்.
நான் மூன்று மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை வைத்திருக்கிறேன். ஒன்று, என் அலுவலகத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு எடுத்துத் தந்திருப்பது; இரண்டாவது, என் மனைவியின் அலுவலகத்தில் இருந்த தரப்பட்ட ரூ.1 லட்சம் பாலிசி; மூன்றாவது, நான் 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு தனிநபர் பாலிசியை எடுத்திருப்பது. ஏதாவது, மருத்துவச் சிகிச்சைக்கான க்ளெய்ம் செய்ய வேண்டுமெனில், எனக்கு எல்லா பாலிசிகளிலும் க்ளெய்ம் கிடைக்குமா?
வெங்கடேசன் பிரம்மநாயகம், மருத்துவக் காப்பீடு ஆலோசகர்.
‘‘ஒரு தனிநபரோ, அவரின் குடும்பத்தினரோ அவருடைய வருமான வரம்பு மற்றும் உடல் தகுதிக்கு உட்பட்டு எத்தனை காப்பீட்டு பாலிசிகள் வேண்டு மானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை பாலிசி எடுக்கும் போதும், ஏற்கெனவே எடுத்திருக்கும் பாலிசிகளின் விவரத்தை விண்ணப்பப் படிவத்தில் தெரிவித்து, அடுத்த பாலிசி எடுக்க வேண்டும். அனைத்துத் தகவல் களும் சரிபார்க்கப்பட்டு, நீங்கள் எடுத்துள்ள அனைத்து பாலிசி களின் காப்பீட்டு கூட்டுத் தொகை களின் மதிப்புக்கு ஏற்ப க்ளெய்ம் செய்துகொள்ளலாம்.
இப்போது உங்கள் கேள்விக் கான பதிலைப் பார்ப்போம், மேற்சொன்ன தகவல்களின்படி, நீங்கள் பாலிசி எடுத்திருப்பீர்களே யானால், உங்கள் மொத்த காப்பீட்டுத் தொகை ரூ.2 + ரூ.1 + ரூ.2 = ரூ.5 லட்சம் வரை க்ளெய்ம் பெறலாம்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைக்கு ஏற்படும் செலவுகளை ஒருமுறை மட்டுமே க்ளெய்ம் செய்ய முடியும். சிகிச்சை சம்பந்தப்பட்ட அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் க்ளெய்ம் செய்யும் காப்பீட்டு நிறுவனத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும்.
உதாரணமாக, உங்களின் ஒரு குறிப்பிட்ட சிகிச்சைக்கான மருத்துவச் செலவில் உங்களுக்கான தகுதி க்ளெய்ம் (Eligible Claim - மொத்த சிகிச்சைக்கான செலவிலிருந்து மருத்துவம் அல்லாத செலவுகளைக் கழித்துவரும் தொகை) ரூ.6 லட்சமாக இருந்தால், நீங்கள் உங்கள் மொத்த காப்பீட்டுத் தொகையான ரூ.5 லட்சம் வரை க்ளெய்ம் பெறமுடியும். ஒருவேளை, தகுதி க்ளெய்ம் ரூ.4 லட்சமாக இருந்தால், உங்களுக்கு ரூ.4 லட்சம் க்ளெய்ம் கிடைக்கும்.
பொதுவாக, க்ளெய்ம் ஆவணங்களுடன் அனைத்துக் காப்பீடு பாலிசிகளையும் சேர்த்தே ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் கொடுக்க வேண்டும். காப்பீடு நிறுவனங்கள் அவரவர்களின் காப்பீட்டுத் தொகைக்கேற்ப க்ளெய்ம் தொகையை விகிதாச்சாரப்படி பகிர்ந்து அளிக்கும்.’’
கே.மகேஷ், இ-மெயில் மூலம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய நிறுவனப் பங்குகளில் தினசரி வர்த்தகம் மேற்கொள்ள முடியுமா?
டி.அழகப்பன், நிறுவனர், Assetcreators.net
‘‘வெளிநாட்டு இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்), இந்தியாவில் சம்பாதித்த தொகையை நிர்வகிக்க இந்தியாவில் என்.ஆர்.ஐ-க்கள் வைத்திருக்கும் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கு என்.ஆர்.ஓ ஆகும். என்.ஆர்.ஐ-க்கள் வெளிநாட்டில் சம்பாதித்த வெளிநாட்டுப் பணம், இந்திய ரூபாய் மதிப்பில் வரவு வைக்கப்படும் கணக்கு என்.ஆர்.இ எனப்படும்.
இந்த இரு கணக்குகள் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டெலிவரி அடிப்படையில் குறுகிய காலம் மற்றும் நீண்ட கால முதலீடாகப் பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால், அவர்கள் தினசரி பங்கு வர்த்தகம், ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி இல்லை.’’