பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

சிபில் ஸ்கோர் அதிகம் இருந்தும் கடன் மறுக்கப்பட என்ன காரணம்..?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

ஜெயந்தி கண்ணன், மும்பை.

என் கிரெடிட் ஸ்கோர் 835. அண்மையில் கார் வாங்குவதற்காக, கடனுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். எனக்குக் கடன் மறுக்கப் பட்டிருக்கிறது. என்ன காரணமாக இருக்கும்?

சுரேஷ் பார்த்தசாரதி, நிதி ஆலோசகர், Myassetsconsolidation.com

“உங்களுக்குக் கடன் நிராகரிக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு பலதரப்பட்ட கடன் இருப்பதால் நிராகரிக்கப் பட்டு இருக்கலாம். உங்கள் வருமானம் போதிய அளவுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். நீங்கள் தற்போது வேலைபார்க்கும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களே ஆகியிருந் திருக்கலாம். சமீபத்தில் அதாவது, 3 - 6 மாதங்களுக்கு முன் ஏதாவது கடன் வாங்கி இருக்கலாம்.

அதாவது, அடிக்கடி கடன் வாங்குகிறார் என்ற வகையில் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். சமீபத்தில் உங்கள் கிரெடிட் கார்டு பேமென்டை சரியாகக் கட்டாமல் இருந்திருக்கலாம் அல்லது மாதாந்தர பேமென்ட்டைப் பிரித்து செலுத்தி யிருக்கலாம். இது மாதிரி ஏதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா என்று ஆராய்ந்து பார்த்தால், அதற்கான காரணத்தை நீங்களே கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டு.’’

சிபில் ஸ்கோர் அதிகம் இருந்தும்
கடன் மறுக்கப்பட என்ன காரணம்..?

ஜே.ரூபன், திசையன்விளை.

நான் ஒரு சிறிய வியாபாரி. மூன்று சக்கர வண்டி மூலம் பொருள்களை டெலிவரி செய்கிறேன். இதற்கு பொருள்களுடன் மின் வழி பில் (இ-வே பில்) உருவாக்கி அனுப்ப வேண்டியது அவசியமா, இ-வே பில் உருவாக்க மதிப்பு ஏதேனும் சட்டத்தில் உள்ளதா?

சு.செந்தமிழ்ச் செல்வன், ஜி.எஸ்.டி ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர்

“சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி விதி எண் 138 (14) (b)-படி, மோட்டார் அல்லாத போக்குவரத்து மூலம் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டால் இ-வே பில் உருவாக்கத் தேவையில்லை. தமிழ்நாடு மாநில அரசால் 02/06/2018-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாநிலங்களுக்கு இடையேயான நடவடிக்கைகளுக்கு இ-வே பில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,நீங்கள் விற்பனை செய்யும் பொருளின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்குக் கீழ் இருந்தால் இ-வே பில் உருவாக்க வேண்டியது இல்லை.”

மு.சிபி, மதுரை.

என் பணத்தை தபால்துறை எஃப்.டி., பி.பி.எஃப், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு நிதி போன்றவற்றில் முதலீடு செய்துள்ளேன். இந்தத் திட்டங்களால் எனக்கு லாபம் கிடைக்குமா? வங்கிகள் திவால் ஆவது போல் தபால்துறை திவால் ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?

சுரேஷ் பார்த்தசாரதி, சு.செந்தமிழ்ச் செல்வன், பி.ராமசாமி, சு.கஸ்தூரி, ஆர்.ஜெகதீஷ்,  வி.தியாகராஜன்
சுரேஷ் பார்த்தசாரதி, சு.செந்தமிழ்ச் செல்வன், பி.ராமசாமி, சு.கஸ்தூரி, ஆர்.ஜெகதீஷ், வி.தியாகராஜன்

பி.ராமசாமி, நிறுவனர், Easyinvest.co.in

“தபால் அலுவலகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட், பி.பி.எஃப், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவை மத்திய அரசின் உத்தரவாதம் பெற்ற திட்டங்கள் ஆகும். ஆகையால், உங்கள் முதலீட்டுக்கு மோசமில்லை. இதில் வரும் வட்டி வருமானம் குறைவாக இருந்தாலும் நிலை யானது மற்றும் பாதுகாப்பானது என்பதால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.”

கார்த்திகேயன், இ-மெயில் மூலம்.

என் அம்மாவின் பெயரில் உள்ள நிலத்தின் தாய்ப் பத்திரத்தை என் அண்ணன் வைத்திருக்கிறார். எனக்கு உள்ள பங்கையும் என் அண்ணனுக்கு உள்ள பங்கையும் பிரித்துக் கொடுக்க என் தாய் தயாராக இருக்கிறார். ஆனால், என் அண்ணன் சொத்தை முழுமையாக தானே எடுத்துக்கொள்ளப் பார்க்கிறார். தாய்ப் பத்திரம் இல்லாமல் என் பங்குக்கு உரிய சொத்தை என் அம்மா எனக்கு பத்திரப் பதிவு செய்து தர முடியுமா?

சு.கஸ்தூரி, வழக்கறிஞர், ஆவண எழுத்தர், ஆல்மைட்டி அசோசியேட்ஸ்.

“தாய்ப் பத்திரம் இல்லாமல் பத்திரப் பதிவு செய்ய வாய்ப்பு இல்லை. உங்கள் அம்மா பெயரில் சொத்து இருக்கும் பட்சத்தில், அதை யாருக்கும் எழுதித் தராத நிலையில், வாரிசுகள் எல்லோருக்கும் பாகம் உண்டு. அம்மாவின் விருப்பப்படி, அந்தச் சொத்தைப் பிள்ளைகளுக்கு எழுதித் தர விரும்பினால், முறையாகப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு தாய்ப் பத்திரம் அவசியம். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யும்போது அதைச் சரி பார்த்த பின்பே பதிவுக்கு சப்-ரிஜிஸ்டர் அனுமதி அளிப்பார்.

ஒரு வேளை, உங்கள் அண்ணனிடம் தாய்ப் பத்திரம் உண்மையில் இல்லை எனில், பத்திரம் காணவில்லை என வழக்கறிஞர் மூலம் முறைப்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்து, அதைக் கொண்டு உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத் தில் புகார் செய்து குறிப்பிட்ட நாள் இடைவெளியில் காவல் நிலையத்தில் தரும் சான்றைக் கொண்டு பத்திரப் பதிவு செய்யலாம்.”

அருண் குமார், இ-மெயில் மூலம்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நான், கடந்த ஆண்டு புதிய வரி முறைப்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தேன். இந்த ஆண்டு வீட்டுக் கடன் வாங்கி இருப்பதால், அசலில் ரூ.1.5 லட்சம், வட்டியில் ரூ.2 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். நான் புதிய வரி முறை யிலிருந்து பழைய வரி முறைக்கு மாற என்ன செய்ய வேண்டும்?

ஆர்.ஜெகதீஷ்,ஆடிட்டர், தேனி.

“தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். வருமான வரிச் சட்டத்தின்படி, சம்பளதாரர் ஒரு வரி முறையிலிருந்து மற்றொரு வரி முறைக்கு மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படு கிறது. எனவே, நீங்கள் புதிய வரி முறையிலிருந்து பழைய வரி முறைக்குத் தாராளமாக மாறிக்கொள்ளலாம். வருமான வரித் துறையின் இணையதளத்தில் வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது பழைய வரி முறைதான் முதலில் வந்து நிற்கும். நீங்கள் அதிலேயே வரிக் கணக்கு தாக்கல் செய்து வரிச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.”

ராஜேஷ் குமார், மணலி, சென்னை.

நான் ரிஸ்க் எடுக்க விரும்பாதவன். அதிக வட்டி கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டு நண்பரிடம் விசாரித்தேன். அவர் நான்-வித்ட்ரால் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போட்டால் அதிக வட்டி கிடைக்கும் என்றார். அப்படிச் செய்யலாமா?

வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in

“இடையில் எடுக்க முடியாத வைப்பு நிதி (Non-Withdrawable FD) வைப்பு நிதியில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.15 லட்சத்திலிருந்து தொடங்கும். இதில் சாதாரண வைப்பு நிதியைவிட 0.10% - 0.50% வரை அதிக வட்டி கிடைக்கும். குறைந்தது இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை தேவைப்படாத பணத்தை இந்த வைப்பு நிதியில் போட்டு வைக்கலாம். ஏற்கெனவே சொன்னபடி, முதிர்வுக் காலம் முடியும் வரை இந்தப் பணத்தை எடுக்க முடியாது. சில வங்கிகள், டெபாசிட்தாரரின் இறப்பு மற்றும் திவால் நிலை (Insolvency) போன்ற காரணங்களுக்காக மட்டும் இடையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றன.”