நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

உங்களுக்கு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும் தகுதி உள்ளதா? பிராக்டிக்கல் செக் லிஸ்ட் இதோ..!

வீட்டுக் கடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்...

வீட்டுக் கடன் வாங்குபவர் நிரந்தர வேலையில் இருப்பது மிக முக்கியம். குறைந்தபட்ச பணி அனுபவம் 3 ஆண்டுகளாவது இருக்க வேண்டும்...

நம் அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. அந்த வீட்டை மொத்தமாகப் பணம் சேர்த்து வாங்குவது என்பது இயலாத காரியமாக உள்ளது. எனவே, பெரும்பாலானோர் வீட்டுக் கடன் மூலம்தான் தங்களின் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

வீட்டுக் கடன் வாங்கும் தகுதி ஒருவருக்கு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

எஸ்.கார்த்திகேயன் 
நிறுவனர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன் நிறுவனர், https://winworthwealth.com/

1. வீட்டுக் கடன் முன்பணம் 20% உங்களிடம் இருக்கிறதா?

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க திட்டமிடு பவர்கள் வீட்டின் விலையில் சுமார் 20% தொகை, தங்களிடம் இப்போது இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டின் முழு மதிப்புக்கும் கடன் கிடைக்காது. அதன் மதிப்பில் சுமார் 20% தொகையை வீடு வாங்குபவர் அவரின் கையிலிருந்து போட வேண்டும். மீதியைத்தான் வங்கிகள் / வீட்டு வசதி நிறுவனங்கள் / நிதி நிறுவனங்கள் கடனாகத் தரும்.

இந்த முன்பணத்தை டவுன் பேமென்ட் அல்லது மார்ஜின் மணி (Down Payment or Margin Money) என்பார்கள். இந்தத் தொகைக்கும் தனிநபர் கடன், தங்க நகை அடமானக் கடன் என ஏதாவது ஒரு கடன் வாங்கினால் வீட்டுக் கடன் செலுத்தும் நேரத்தில் இந்தக் கடனையும் கட்டுவது கடினமாக இருக்கும். எனவே, வீட்டுக் கடன் டவுன் பேமென்ட்டை முன்கூட்டியே சேமித்து வைத்திருப்பது அவசியமாகும்.

உங்களுக்கு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும் தகுதி உள்ளதா?  பிராக்டிக்கல் செக் லிஸ்ட் இதோ..!

2. உங்களுக்கு நிலையான வருமானம் இருக்கிறதா?

வீட்டுக் கடன் என்பது மிகவும் நீண்ட காலத்துக்கானதாகும். சுமார் 5 ஆண்டுகள் தொடங்கி 30 ஆண்டுகள் வரைக்கும் கடனைத் திரும்பச் செலுத்தலாம். பொதுவாக, வீட்டுக் கடன் 15, 20 ஆண்டு களில் திரும்பச் செலுத்துவதாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடன் வாங்குபவருக்கு நீண்ட காலத்துக்கு நிலையான வருமானம் வருவது மிக முக்கியமாகும்.

மேலும், வீட்டுக் கடன் வாங்குபவர் நிரந்தர வேலையில் இருப்பது மிக முக்கியம். அதுவும் குறைந்தபட்ச பணி அனுபவம் மூன்று ஆண்டுகளாவது இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்களும் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்கும் என்கிற நிலையில் தான் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க வேண்டும்.

3. மாதத் தவணை சம்பாத்தியத்தில் சுமார் 40% இருக்கிறதா?

வீட்டுக் கடன் தவணைக்கான தொகை, வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளத்தில் 40 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பது பொதுவான விதிமுறையாகும். உதாரணத்துக்கு, வீட்டுக்கு எடுத்து வரும் மாதச் சம்பளம் ரூ.70,000 என்றால் அதில் 40% அதாவது, ரூ.28,000 வீட்டுக் கடன் தவணையாக இருக்கலாம்.

கார் கடன், தனிநபர் கடன் போன்ற வேறு எந்தக் கடனும் இல்லை எனில், வீட்டுக் கடனுக்கான தவணை தொகை சம்பளத்தில் அதிகபட்சம் 45% வரை இருக்கலாம். அதாவது, ரூ.31,500 வீட்டுக் கடன் தவணை இருக்கலாம். கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்தால், வேறு கடன்கள் எதுவும் இல்லாத நிலையில் இருவரும் வீட்டுக்கு எடுத்து வரும் மொத்த தொகையில் சுமார் 50% வரை வீட்டுக் கடன் மாதத் தவணையாக இருக்கலாம்.

4. உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750-க்குமேல் இருக்கிறதா?

வீட்டுக் கடன் விரைவாகக் கிடைப்பதும் குறைவான வட்டியில் கிடைப்பதும் ஒருவரின் கிரெடிட் ஸ்கோரில்தான் இருக்கிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750-க்குமேல் இருந்தால் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். 800-க்கு மேல் இருந்தால் பேரம் பேசி வட்டியைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது.

5. சொந்த வீட்டில் குடியேறும் வரை வாடகை மற்றும் இ.எம்.ஐ கட்டும் தகுதி இருக்கிறதா?

கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்கினால், அதில் உடனே குடியேறிவிடலாம். இதனால், தற்போது கொடுத்து வந்த வாடகை உடனடியாக மிச்ச மாகும். இதுவே இனிமேல்தான் கட்டுமான வேலையை ஆரம்பிக்க வேண்டும் அல்லது கட்டிக்கொண்டிருக்கும் வீடு என்றால் ஒரு புறம் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டும். மறுபுறம் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்துக்கு வீட்டுக் கடன் இ.எம்.ஐ கட்டிவர வேண்டி இருக்கும்.

கட்டப்பட்டு வரும் வீடு என்றால் வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப பில்டருக்கு பணம் கொடுக்க வேண்டி வரும். இதற்கு ஏற்பதான் வங்கியும் பகுதி பகுதியாகக் கடன் வழங்கும். இதைக் கணக்கிட்டு எப்போதிலிருந்து இ.எம்.ஐ கட்ட வேண்டிவரும் என்பதை வங்கியிடம் கேட்டு தெளிவுப் படுத்திக்கொள்ள வேண்டும். உங்களால் சில ஆண்டுகளுக்கு வீட்டு வாடகை மற்றும் இ.எம்.ஐ கட்ட முடியும் என்றால் மட்டுமே வீட்டுக் கடன் மூலம் கடன் வாங்க வேண்டும்.

புதிதாக ஆரம்பிக்கும் கட்டு மானத் திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும். சில நேரங்களில் சில ஆண்டுகள் தள்ளிபோக வாய்ப்பு இருக்கிறது. அப்படி தள்ளிப்போகும் பட்சத்தில் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்கிற பட்சத்தில் மட்டுமே வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க வேண்டும்.

இந்த சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பில்டரின் நம்பகத்தன்மையைக் கவனிக்க வேண்டும். மேலும், கட்டுமானம் தாமதமாகும்பட்சத்தில் இழப்பீடு எவ்வளவு தருவார்கள் என்பதை பில்டரிடம் எழுத்து மூலம் எழுதி வாங்கிக்கொண்டு, வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவது நல்லது.

6. பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணத்துக்கு முதலீடு செய்ய பணம் இருக்கிறதா?

வீட்டுக் கடன் வாங்குவது மூலம் குடும்பத்தின் இதர நிதி இலக்கு களான பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணத்துக்கு பணம் சேர்ப்பது தடைபடும்பட்சத்தில் சொந்த வீடு வாங்குவதைத் தள்ளிப்போடுவது நல்லது.

சில ஆண்டுகளில் சம்பளம் உயரும்போது வீட்டுக் கடன் இ.எம்.ஐ கட்டிக்கொண்டே பிள்ளைகளின் எதிர்காலத் தேவை களுக்கும் தாராளமாக முதலீடு செய்ய முடியும் என்கிற நிலையில் தான் வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்க வேண்டும்.

இல்லை எனில், இப்போது கடனில் வீட்டை வாங்கிவிட்டு, பிள்ளைகளின் உயர்கல்வி நெருங்கும்போது போதிய பணம் இல்லாத நிலையில், கல்விக் கடன் கிடைக்காத நிலையில் இந்த வீட்டை பிள்ளைகளின் எதிர்கால தேவைகளுக்காக விற்க வேண்டிய நிலை வந்தால் நன்றாக இருக்காது.

இந்த நிலை வராமல் குடும்பத்தின் வருமானத்தை அதிகரித்து நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றால் வீட்டுக் கடன் வாங்குவது நல்லது, எனவே, அதற்கு ஏற்ப திட்டமிடவும்.

7. வட்டி விகித உயர்வை சமாளிக்கும் திறன்...

சர்வதேச அளவில் மற்றும் இந்தியாவில் இன்னும் பணவீக்க விகிதம் கட்டுக்குள் வரவில்லை. எனவே, வீட்டுக் கடன் வட்டி இன்னும் 0.25 - 0.5% அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்போது கடனைக் கட்டி முடிக்கும் காலம் சில ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், கூடுதலாக சில ஆயிரம் ரூபாய்களை கட்டி அடைக்கும் திறன், அதற்கான திட்டம் இருந்தால் கட்டாயம் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கலாம். இப்படி கூடுதலாகக் கட்டும் தொகைக்கு கூடுதலாக உழைக்க தயங்காதவர்களாக இருப்பது அவசியமாகும். இது தவிர, கூடுதல் வருமானம் ஈட்டி கடனை அதன் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே அடைக்க திட்டமிட்டிருப்பவர்களும் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கலாம்.

வீட்டுக் கடன் வாங்கும்முன் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளைச் சொல்லிவிட்டோம். இந்தத் தகுதிகள் இப்போது இல்லை என்றாலும் பரவாயில்லை, இனிவரும் நாள்களில் அவற்றை வளர்த்துக்கொண்டு, வீட்டுக் கடன் வாங்க முயற்படுவது நல்லது.

முன்பணம் போக கூடுதல் தொகை கையில் இருக்கிறதா?

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க நினைப்பவர்கள், தாங்கள் திட்டமிட்டதைவிட கூடுதலாகப் பணம் வைத்திருப்பது எப்போதும் நல்லது.

வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும்போது டவுன் பேமென்ட் 20 சதவிகிதத்துடன் கூடுதலாக சுமார் 15 - 20% தொகையை வைத்திருப்பது அவசியமாகும். காரணம், வீட்டு உள் அலங்காரம், சமையல் அறை சாதனங்கள், மின்சாரம் மற்றும் மின் சாதனங்கள் ஆகியவற்றுக்குப் பணம் தேவைப்படும்.

மேலும், பத்திரப் பதிவு செலவு இருக்கிறது. இந்தச் செலவுகளுக்கான பணத்தையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொள்வது நல்லது.

இந்தச் செலவுகளை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சொற்ப தொகையை வீட்டுக் கடனாக வாங்குபவர்கள் பிற்பாடு இதர செலவுகளைச் செய்ய முடியாமல் அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்!

அவசரகால நிதி இருப்பது அவசியமாகும்..!

வீட்டுக் கடன் வாங்குபவர்கள், அவசரகால நிதியை வைத்திருப்பது அவசியமாகும். வீட்டு கடன் மாதத் தவணை, குடும்பச் செலவு எல்லாம் சேர்ந்து ஒரு மாதத்துக்கு செலவாகும் தொகையைப் போல் சுமார் 3 - 6 மடங்கு தொகையை அவசரக் கால நிதியாக வைத்திருப்பது அவசியமாகும். அப்போதுதான் திடீர் வேலை இழப்பு, திடீர் உடல் நலக்குறைவு போன்றவற்றால் மாதச் சம்பளம் தடைபபட்டால் வீட்டுக் கடன் மாதத் தவணையைத் தவறாமல் கட்ட முடியும்.

அதே போல, வீட்டுக் கடன் வாங்குபவர், தேவையான அளவுக்கு இன்ஷூரன்ஸ் வைத்திருக்க வேண்டும். வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும் போது கடன் தொகைக்கு இணையாக, குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம்.