நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்கு Vs பங்கு சார்ந்த ஃபண்ட் முதலீடு... உங்களுக்கு ஏற்றது எது?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

பங்குச் சந்தை சார்ந்த முதலீடு நீண்ட காலத்துக்குக்கானவை எனில், அதில் வரும் முக்கியமான முதலீட்டுப் பிரிவு நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளாகும். இந்தத் திட்டங்களில் ஒருவர், அவரின் அவசரச் செலவு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட செலவுக்கு வைத்திருக்கும் பணத்தை முதலீடு செய்யக் கூடாது. உபரித் தொகை அல்லது நீணட காலம் கழித்துத் தேவைப்படும் தொகையைத்தான் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

எம்.சதீஷ்குமார் 
நிறுவனர்,
http://sathishspeaks.com
எம்.சதீஷ்குமார் நிறுவனர், http://sathishspeaks.com

அதிக வருமானம் தரும் திட்டம் எது?

பங்குச் சந்தை, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் - இந்த இரு முதலீட்டுத் திட்டங்களில் எது அதிகமான வருமானத்தைக் கொடுக்கும், எது லாபகரமாக இருக்கும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்ஃபோசிஸ் பங்கில் போட்ட ரூ.1 லட்சம் என்பது ரூ.2 கோடியாக உயர்ந்திருக்கிறது. எய்ஷர் மோட்டார்ஸ் பங்கில் முதலீடு செய்த ரூ.1 லட்சம் ரூ.2.5 கோடியாக அதிகரித்திருக்கிறது எனப் பல தகவல்களை நாம் படித்திருப்போம்.

உண்மைதான். நேரடிப் பங்கு முதலீடுதான் அதிக வருமானத்தைக் கொடுக்கும். ஆனால், நேரடிப் பங்கு முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் மிக மிக அதிகம்.

பங்கு Vs பங்கு சார்ந்த ஃபண்ட் முதலீடு... உங்களுக்கு ஏற்றது எது?

நீச்சல் குளமும் முதலீட்டின் ரிஸ்க்கும்...

நீங்கள் பெரிய தங்கும் விடுதிகள் அல்லது ரிசார்ட்டுகளுக்குப் போயிருப்பீர்கள். அங்குள்ள நீச்சல் குளத்தில் நீங்கள் குளித்திருப் பீர்கள். பொதுவாக, அந்த நீச்சல் குளத்தை மூன்றாகப் பிரித்திருப்பார்கள். முதலில், சிறுவர், சிறுமியர் தண்ணீரில் மூழ்காமல் விளையாடி மகிழக்கூடிய மூன்று அடி ஆழமானப் பகுதி; அடுத்து, வயது வந்த ஆண், பெண் நீச்சல் அடித்து விளையாடக்கூடிய ஐந்து அடி ஆழமுள்ள பகுதி; அடுத்து, நன்கு நீச்சல் தெரிந்தவர்கள், தண்ணீருக்குள் மூச்சு அடங்கி, டைவ் அடித்து விளையாடக்கூடிய 10 அடி ஆழமுள்ள பகுதி என மூன்று விதமாகப் பிரித்திருப்பார்கள்.

இங்கே, மூன்று அடியை கடன் ஃபண்டு களுக்கும் 5 அடியை கலப்பின ஹைபிரிட் ஃபண்டுகளுக்கும் 10 அடியை ஈக்விட்டி ஃபண்டுகள் மற்றும் நிறுவனப் பங்குகளுக்கும் ஒப்பிடலாம்.

ஒருவர் முதலீட்டுக்குப் புதியவர், அவருக்கு முதலீட்டைப் பற்றி எதுவும் தெரியாது எனில், அவரை மூன்று அடி ஆழ நீச்சல் குளத்துக்கு ஒப்பிடலாம். ஓரளவுக்கு உங்களுக்கு முதலீட்டில் அனுபவம் பெறும் வரை அவர் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். முதலீட்டுக்குப் புதியவர் என்றாலும், முதலீடு பற்றி அவருக்கு ஓரளவு நன்றாகத் தெரியும் எனில், அவர் ஐந்து அடி ஆழ நீச்சல் குளத்துக்கு ஒப்பிடப்படும் கலப்பின ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

நேரடி நிறுவனப் பங்கு முதலீட்டுடன் ஒப்பிடும்போது ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு மிகவும் ரிஸ்க் குறைவானது. காரணம், பங்கு முதலீட்டில் ஒருவரால் ஆரம்பத்தில் அதிக தொகை முதலீடு செய்வது கடினம்; இதனால், ஓரிரு நிறுவனப் பங்குகளில்தான் முதலீடு செய்ய முடியும் என்பதால், ரிஸ்க் அதிகம். அதுவே மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் செய்யும் ரூ.500 அல்லது ரூ.1,000 என்பதை சுமார் 30 முதல் 50 நிறுவனப் பங்குகளில் ஃபண்ட் மேனேஜேர் பிரித்து முதலீடு செய்வார் என்பதால், ரிஸ்க் வெகுவாகக் குறைகிறது. மேலும், முதலீட்டாளரை விட ஃபண்ட் மேனேஜர் பங்குச் சந்தையை சரியாகக் கவனிக்கக்கூடியவராக, சூழ்நிலையை அனுசரித்து முதலீடு செய்வதில் வல்லவராக இருப்பார்.

முதலீடு பற்றிய அறிவும் இருக்கிறது, முதலீட்டு அனுபவமும் இருக்கிறது என்றால், ஒருவர் 10 அடி நீச்சல் குளத்துக்கு ஒப்பிடப்படும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டு அனுபவம்...

முதலீட்டுக்குப் புதியவர்கள், முதலில் ஈக்விட்டி ஃபண்டுகளில் சில காலம் முதலீடு செய்து வரலாம். ஓரளவுக்கு அனுபவம் பெற்ற பிறகு, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இப்படிச் செய்யும்போது பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளின் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) ஏற்ற, இறக்கம் தெரிய மற்றும் புரிய வரும். கூடவே, முதலீட்டில் மூலதனம் எந்தளவுக்கு ரிஸ்குக்கு உள்ளாகும் என்பது தெளிவாகும். கூடவே, நேரடிப் பங்கு முதலீட்டில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது, ஈக்விட்டி ஃபண்டில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது, எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்யும்போது மூலதனம் மீதான ரிஸ்க் குறைகிறது என்பது போன்ற விவரங்கள் தெளிவாகும்.

எடுத்த எடுப்பிலேயே நேரடியாக 10 அடி ஆழத்துக்கு நீச்சல் அடிக்கச் செல்வதற்குப் பதில், முதலில் தண்ணீரில் மெதுவாகக் காலை வையுங்கள். மூன்று அடி ஆழத்தில் ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்பாக (கடன் ஃபண்ட் முதலீடு) நீச்சல் அடியுங்கள். அதன் பிறகு 5 அடி (கலப்பின ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்ட்), அதன்பிறகு 10 அடி (நேரடிப் பங்கு முதலீடு) என நீச்சல் அடிப்பது போல் படிப்படியாக ரிஸ்க் அதிகமான முதலீட்டுக்கு வாருங்கள். இல்லை, எனக்கு ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு மூலமான வருமானமே போதும் என்றால் அதிலேயே தொடரலாம்.

பலரும் எடுத்தவுடனே 10 அடி ஆழத்தைவிட அதிக ரிஸ்க் கொண்ட டெரிவேட்டிவ் (ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்) முதலீட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். இது மிகவும் தவறான முதலீட்டு அணுகுமுறை ஆகும். ஓரிரு நாள்களில் 20%, 30% என வருமானம் வரும். எஸ்.எம்.எஸ், சோஷியல் மீடியா ஃபார்வேர்டுகளை நம்பி தைரிய மாகக் களமிறங்கிவிடுகிறார்கள். குறுகிய காலத்திலேயே மூலதனத்தை மொத்தமாக இழந்துவிடுகிறார்கள். சுமார் 96% பேர் இது போன்ற அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களில் பணத்தை இழப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விளைவு, பங்குச் சந்தை முதலீடு ஆபத் தானது என அதை வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள்.

இதைத் தவிர்க்க, நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் 3 அல்லது 5 ஆண்டுகள் முதலீடு செய்து நல்ல அனுபவம் பெற்ற பிறகு, நேரடிப் பங்கு முதலீட்டுக்கு வருவது நல்லது. நிறுவனப் பங்குகளை ரொக்கச் சந்தையில் (கேஷ் மார்க்கெட்) வாங்கி அதன் மூலம் லாபம் ஈட்டி நன்கு அனுபவம் பெற்ற பிறகு, பங்கு வர்த்தகம் சார்ந்த டெரிவேட்டிங் பக்கம் செல்லலாம்.

பங்கு Vs பங்கு சார்ந்த ஃபண்ட் முதலீடு... உங்களுக்கு ஏற்றது எது?

வருமானம் எவ்வளவு?

நிறுவனப் பங்குகளைவிட ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக வருமானம் தரக்கூடியதா எனில், ஆம் என்றே சொல்ல வேண்டும். 1995-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் தனியார் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வந்தன. ஹெச்.டி.எஃப்.சி, ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் களமிறங்கின. ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட் (இப்போது நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட்), 1995-ம் ஆண்டு முதல் இது வரைக்கும் ஆண்டுக்கு சராசரியாக 22 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் ரூ.1 லட்சம் நீங்கள் முதலீடு செய் திருந்தால், அதன் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2 கோடி யாக அதிகரித்திருக்கிறது. உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட்கூட அவரின் போர்ட் ஃபோலியோ மூலம் நீண்ட காலத்தில் சுமார் 21% வருமானம் தான் ஈட்டி வருகிறார். அந்த வகையில், நிறுவனப் பங்குகள் கொடுக்கும் வருமானம் அளவுக்கு, சில திட்டங்கள் அதைவிட அதிகமாககூட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் வருமானம் தந்து வருகின்றன; எதிர்காலத்திலும் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏராளமாக உள்ளன. அதில் நல்ல வருமானம் தந்துவரும் மற்றும் எதிர்காலத்திலும் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு வந்தால், நிச்சயம் நீண்ட காலத்தில் நேரடிப் பங்கு முதலீட்டைவிட நல்ல வருமானம் பார்க்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்டில் ஒரு ஃபண்ட் மேனேஜர் மற்றும் அவரின் ஆராய்ச்சிக் குழு நமக்காக முதலீடு செய்து வருகிறது. நம்மிடம் கார் இருந்து, அதை நாம் ஓட்டுவதற்குப் பதிலாக, ஒரு டிரைவரை வைத்து, பாதுகாப்பாக கார் ஓட்டுவதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு. இதுவே கார் நல்ல நிலையில் இருக்கிறது; எனக்கு நன்கு வாகனம் ஓட்டத் தெரியும், வழியும் தெரியும் எனில், நீங்களே வண்டி ஓட்டிச் செல்வது போன்றதுதான் நேரடிப் பங்கு முதலீடாகும்.

ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட 4-5% அதிக வருமானம், குறைவான வருமான வரி எதிர்ப்பார்ப்பவர்களுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நிச்சயம் கைகொடுக்கும். இதைவிட அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள் போதிய அனுபவம் பெற்றபிறகு நேரடிப் பங்கு முதலீட்டில் ஈடுபடலாம்.

அப்படி ஈடுபடும்போது பங்கு முதலீட்டை ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து கவனித்து வருவது அவசியம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஃபண்ட் மேனேஜர் இந்த வேலையைச் செய்து வருகிறார் என்பதால், நேரடி முதலீட்டைவிட ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு ரிஸ்க் குறைவானதாக இருக்கிறது!