
இன்றைக்கு நிதி சுதந்திரத்தை அடைந்தவர்கள் அனைவருமே அதிகம் செலவு செய்தவர்கள் அல்லர்; அதிகம் சேமித்தவர்கள்தான்..!
ஐம்பது வயதில் ஓய்வு பெற்று, மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால், அந்த ஆசை பலருக் கும் நிறைவேறுவதில்லை. காரணம், 50 வயதில் அவர்களால் நிதி சுதந்திரம் அடைய முடிவதில்லை. நிதி சுதந்திரம் (Financial Freedom) என்றால் என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. கடன்கள் வேண்டாம்...
ஒருவர் நிதி சுதந்திரம் அடையாமல் போவதற்கு முக்கியமான தடையாக இருப்பது கடன்களாகும். கடன்களை சமாளிக்கும் வழிகள்தான் என்ன? ஒருவர் தனக்குள்ள அனைத்துக் கடன்களையும் முதலில் பட்டியலிட வேண்டும். இந்தக் கடன்களை இரு விதமாக அடைக்கலாம். அதிக வட்டியிலான கடன் களை முதலில் அடைப்பது ஒருமுறையாகும். ஒருவருக்கு கிரெடிட் கார்டு கடன் (ஆண்டு வட்டி 36% - 45%), தனிநபர் கடன் (15% - 22%), தங்க நகை அடமானக் கடன் (9%) ஆகிய கடன்கள் இருக் கின்றன என்று வைத்துக் கொள்வோம். கிரெடிட் கார்டு கடனை முதலில் அடைப்பதன் மூலம் வட்டிக் குச் செல்லும் தொகை கணிச மாகக் குறையும். இதற்கு அடுத்து, தனிநபர் கடன், கடைசியாக, தங்க அடமானக் கடனை அடைக்க வேண்டும்.
ஒருவேளை, நம்மிடம் போதுமான பணமில்லாத பட்சத்தில் குறைந்த மதிப்புள்ள கடன்களை முதலில் அடைக்க வேண்டும். ஒருவருக்கு ரூ.2 லட்சம் கிரெடிட் கார்டு கடன், ரூ.50,000 தங்க நகை கடன், ரூ.1 லட்சம் தனிநபர் கடன் இருந்தால், முதலில் குறை வான தொகையைக்கொண்ட தங்க நகைக் கடன், அடுத்து தனிநபர் கடனை அடைத்து விட்டு, இறுதியாக கிரெடிட் கார்டு கடனை அடைக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது பாக்கியிருக்கும் கடன் களின் எண்ணிக்கை வேக மாகக் குறையும். அப்போது ஓர் உத்வேகம் ஏற்பட்டு மற்ற கடன்களையும் விரைவில் அடைக்க வேண்டும் என்கிற நம்பிக்கை அதிகரிக்கும்.

2. குடும்ப பட்ஜெட் அவசியம்...
உங்கள் பணம் எங்கே செல்கிறது என்பதை மிகச் சரியாகத் தெரிந்துகொள்ள குடும்ப பட்ஜெட் போட்டு செலவு செய்வது தவிர, வேறு வழியில்லை. பட்ஜெட் போட்டு செலவு செய்யும் போது தேவை இல்லாத செலவுகள் தனியாகத் தெரியும். அந்தச் செலவு களைத் தவிர்த்துவிட்டாலே ஒருவர் வேகமாக செல்வந்த ராகி நிதி சுதந்திரம் அடைந்து விட முடியும்.
3. மோசமான பணப் பழக்கங்களைக் கைவிட வேண்டும்...
கண்டபடி செலவு செய்தல், கணக்குப் பார்க்காமல் செலவு செய்தல் உள்ளிட்ட மோசமான பணப் பழக்கங்களைக் கண்டறிந்து அவற்றைக் கைவிட வேண்டும். முக்கியமாக, செலவுகள் போக சேமிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிட்டு, சேமிப்பு போக செலவு செய்யும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். சம்பளத்தில் குறைந்தபட்சம் 30% சேமிக்க முயற்சி செய்யவும். அடுத்து, சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க செலவை அதிகரிக்காமல், சேமிப்பை அதிகரிக்கப் பழகுங்கள். இப்படிச் செய்யும்போது நிறைய பணம் மிச்சமாகி, எதிர்காலத் தேவைக்கு சேமிக்கவும், முதலீடு செய்யவும் பயன்படும்.
4. சிக்கனமாக இருங்கள்...
சிக்கனமாகச் செலவு செய்து, எங்கேயெல்லாம் பணத்தைச் சேமிக்கலாம் என்று பாருங்கள். பட்ஜெட் போட்டு செலவு செய்யும்போது, அதற்குள் செலவுகளை அடக்க முயற்சி செய்யுங்கள். காரணம், செலவு செய்வதால், ஒருவர் நிதி சுதந்திரம் அடைவது தள்ளிப்போகும். ஆனால், சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்வதால், எதிர்கால இலக்குகளை அடைந்து, நிதி சுதந்திரத்தை நிச்சயம் அடைய முடியும். இன்றைக்கு நிதி சுதந்திரத்தை அடைந்தவர்கள் அனைவருமே அதிகம் செலவு செய்தவர்கள் அல்லர்; அதிகம் சேமித்தவர்கள்தான்.
5. அவசரகால நிதி அவசியம்...
நிதி சுதந்திரம் அடைய வேண்டும் எனில், ஒருவர் கட்டாயம் அவசரகால நிதியைச் சேர்ப்பது அவசியம். அப்போதுதான் ஏதாவது திடீர் செலவு ஏற்பட்டால், நிலைமையை சுலபமாகச் சமாளிக்க முடியும். குடும்பத்தின் மாதச் செலவைப்போல குறைந்தது 6 - 9 மடங்கு தொகையை அவசரகால நிதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதை எளிதில் எடுத்துச் செலவு செய்வதுபோல் ஆன்லைன் வசதி மற்றும் ஏ.டி.எம் கார்டு வசதிகொண்ட வங்கி சேமிப்புக் கணக்கு, ரிஸ்க் இல்லாத மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மற்றும் விரைந்து பணமாக்கக்கூடிய லிக்விட் ஃபண்டு களில் முதலீடு செய்து வைப்பது அவசியம். இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

6. லாபகரமாக முதலீடு செய்யவும்...
நிதி சுதந்திரம் அடைய வேண்டும் எனில், செய்யும் முதலீடுகள் லாபகரமாக இருக்க வேண்டும். அதற்கு பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக வருமானம் தரும் மற்றும் குறைவான வருமான வரி கட்டும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்.
இந்தியாவில் பணவீக்க விகிதம் நீண்ட காலத்தில் சராசரியாக 5 - 6 சதவிகிதமாக உள்ளது. அண்மைக் காலத்தில் அது 7 - 8 சதவிகிதமாக அதிகரித்தது. இதைவிட அதிக வருமானம் தரும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் பணத்தைப் முதலீடு செய்து வந்தால்தான் நிதி சுதந்திரம் அடைய முடியும்.
பங்கு சார்ந்த முதலீடுகள் என்கிறபோது, நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கு நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட 3% - 4% அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பெரிய நிறுவனப் பங்குகளான பி.எஸ்.இ பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டில் இடம் பெற்றிருக்கும் 50 நிறுவனப் பங்குகள் அல்லது என்.எஸ்.இ பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம். உங்களால் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஐந்து துறை சார்ந்த ஐந்து நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், முதலீட்டுக் காலம் பத்து ஆண்டுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம். அடுத்து, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.
முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் லார்ஜ்கேப் ஃபண்டுகள், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள், மல்ட்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள், மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.
இந்தப் பங்குகள் மற்றும் ஃபண்ட் முதலீட்டில் ஓராண்டுக்கு மேற்பட்ட நிலை யில், நீண்ட கால லாபத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்படும் லாபத்துக்கு 10% வருமான வரி கட்டினால் போதும். முதலீடு மூலமான லாபம் அதிகமாகவும் வருமான வரி குறைவாகவும் இருக்கும்பட்சத்தில் ஒருவர் விரைவிலேயே பணக்காரர் ஆகி நிதி சுதந்திரம் அடைய முடியும்.
7. பிள்ளைகளுக்குப் பணப் பழக்கத் தைச் சொல்லிக் கொடுக்கவும்...
ஒருவர் நிதி சுதந்திரம் அடைய வேண்டும் எனில், அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மேலே கண்ட நல்ல நிதிப் பழக்கங்களைக் கற்றுத் தருவது அவசியம். அவர்களும் நிதி சார்ந்த நல்ல பழக்கங்களைக் கொண்டிருந்தால் மட்டுமே நீங்கள் நிதி சுதந்திரம் அடைய முடியும்!