நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சேமிப்பு, செலவு, கடன்... சரியான பட்ஜெட் பிளான் செய்ய ஃபைனான்ஷியல் டிப்ஸ்!

பட்ஜெட் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
News
பட்ஜெட் பிளான்

நம் பட்ஜெட்டில் அவசிய செலவுகளுக்கு முதன்மையான முக்கியத்துவம் தர வேண்டும். கையில் காசிருந்தால் மட்டுமே தேவைக்கு செலவழிக்கலாம்!

அரசாங்கம் என்றாலும், வீடு என்றாலும் பட்ஜெட் என்பது ஒரு முக்கியமான மற்றும் சவாலான காரியம்தான். நம் கைக்கு சம்பளம் வந்தவுடன் அதைக் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்துவிட முடியாது. வீட்டுச் செலவுகள், இ.எம்.ஐ-கள், பள்ளி அல்லது கல்லூரிக் கட்டணம் என்று என்னென்ன செலவுகள் நமக்கு இந்த மாதம் இருக்கின்றன என்று கணக்கிட்டு, எண்ணி எண்ணிதான் பணத்தைச் செலவு செய்ய முடியும். உங்களுடைய குடும்ப பட்ஜெட்டை சரியாக பிளான் செய்ய சில டிப்ஸ்களைத் தருகிறார் நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்...

சித்ரா நாகப்பன்
சித்ரா நாகப்பன்

‘‘குடும்ப பட்ஜெட்டைத் தயார் செய்ய முதல் விதி, நமது சம்பளத்தை சரியாகக் கணக் கிடுவதுதான். ‘என்னுடைய சம்பளம் பற்றி எனக்குத் தெரியாதா’ என்று நீங்கள் நினைக்கலாம். அங்கேதான் தப்பு நடக்கிறது. பலரும் தங்களது மொத்த சம்பளத்தை வைத்து பட்ஜெட்டை பிளான் செய்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. நாம் எப்போதும் நம்முடைய சம்பளத்திலிருந்து பிடித்தங்கள்போக, நமது கைக்கு வந்து சேரும் தொகையை வைத்துதான் வீட்டுக்கான பட்ஜெட்டைத் தயார் செய்ய வேண்டும்.

சேமிப்பு, செலவு, கடன்... சரியான பட்ஜெட் பிளான் செய்ய ஃபைனான்ஷியல் டிப்ஸ்!

சம்பளம் கைக்கு வந்தவுடன் செலவுகளை ‘அவசியம் மற்றும் தேவை’ என்று பிரித்துக்கொள்ளலாம். அவசியம் என்பது உடனடித் தேவை. உதாரணமாக, மளிகைப் பொருள்கள், வீட்டு வாடகை, இ.எம்.ஐ போன்ற செலவுகள். தேவை என்பது அடுத்த மாதம்கூட வாங்கிக்கொள்ளலாம் அல்லது செலவு செய்துகொள்ளலாம் என்ற பொருள் அல்லது நிலை. ஆக, நம்முடைய பட்ஜெட்டில் அவசிய செலவுகளுக்குதான் முதன்மையான, அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இந்தச் செலவுகள் போக கையில் காசு இருந்தால் நம் தேவைக்காக செலவுகள் செய்யலாம்.

சம்பளத்தில் ‘எமர்ஜென்சி ஃபண்ட்’ என்று குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்குவது மிக மிக முக்கியமாகும். வாழ்க்கை நமக்காக எப்போது என்ன வைத்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த மாதிரியான தருணங்களின் இந்த எமர்ஜென்சி ஃபண்ட் நமக்கு ஓடிவந்து கைகொடுக்கும். அடுத்ததாக, பட்ஜெட்டில் இ.எம்.ஐ-யைக் கருத்தில்கொள்வது அவசியம். சில நேரங்களில் பட்ஜெட் பிளானிங் என்பது ஒரு பொருளை வாங்கும்போதே தொடங்கிவிடும். அதனால், புதிதாக இ.எம்.ஐ-யில் வீடோ, காரோ வாங்கும்போது நமது சம்பளத்தில் இந்தச் செலவை சமாளிக்க முடியுமா என்பதைப் பார்ப்பது முக்கியம்.

கிரெடிட் கார்டுக்கு பட்ஜெட்டில் துண்டுவிழ வைக்கும் சக்தி உள்ளது. ஒவ்வொரு கிரெடிட் கார்டு பயன்பாட்டின் போதும் கணக்கில்லாமல் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்துவிடுவோம். பின்னர், அதற்கான கட்டணத்தைக் கட்டும்போது விழிபிதுங்கிவிடும். அதனால் கிரெடிட் கார்டை எப்போதும் ஜாக்கிரதை யாகப் பயன்படுத்த வேண்டும்.

பட்ஜெட்டில் சேமிப்புக்காக சிறு தொகையை எடுத்து வைக்க வேண்டும். எமர்ஜென்சி ஃபண்ட், சேமிப்பு என இரண்டுக்கும் தனித்தனியாகப் பணம் ஒதுக்க முடியாது எனில், எமர்ஜென்சி ஃபண்டுக்கு மட்டுமாவது ஒதுக்குவது நல்லது.ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டை சரியாகப் பின்பற்று கிறோமா என்று சுய பரிசோதனை செய்துகொள்வதும் அவசியம். அப்போதுதான் பட்ஜெட்டைப் பின்பற்றுவதில் ஏதாவது தவறு நடந்திருந்தால், சரிசெய்து கொள்ள முடியும்.

பட்ஜெட்டில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும்விட முக்கியமானது ஒழுக்கம். ஒரு பட்ஜெட்டை பிளான் செய்வதைவிட, அதைப் பின்பற்றுவதுதான் மிக மிக அவசியம். அப்படிப் பின்பற்றாமல் மனம் போன போக்கில் செலவு செய்தால் பட்ஜெட்டில் மட்டுமல்ல, நம் தலையிலும் துண்டுவிழும்” என்று முடித்தார் சித்ரா நாகப்பன்.

வரவுக்குள் வளமாக வாழ பட்ஜெட் முக்கியம் எனப் புரிந்துகொண்டு பின்பற்றுவோம்.

பட்ஜெட் - சில டெக்னிக்குகள்!

Envelope System: சம்பளம் வந்தவுடன் ‘என்வலப்’ கவர்களை வாங்கி, நம்முடைய தேவைகளுக்கேற்ப தனித்தனியாக தொகையைப் பிரித்து வைத்து செலவு செய்வதுதான் ‘என்வலப் சிஸ்டம்.’ தேவைகள் வரும்போது அந்தந்த கவர்களை எடுத்துச் செலவு செய்தால், தேவை இல்லாமல் செலவு செய்வதைத் தவிர்க்கலாம். இது பத்து இருபது வருடங்களுக்கு முன் பலரும் பின்பற்றிய முறை. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலும் பணத்தை எடுத்துச் செலவு செய்வது குறைந்துவிட்டது. ஆனாலும் மாதாந்தர தேவைகளுக்கான தொகையை மட்டும் ஏ.டி.எம்மிலிருந்து பணமாக எடுத்து, என்வலப் சிஸ்டத்தை குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது பின்பற்றலாம். உதாரணமாக, மளிகைச் செலவு, இ.எம்.ஐ, பள்ளி அல்லது கல்லூரிக் கட்டணம் என பிரித்துக்கொள்ளலாம். இது கட்டுப்பாடான செலவுப் பழக்கத்தை ஏற்படுத்த நிச்சயம் உதவும்.

No-Spend Day: மாதம்தோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் எந்தச் செலவும் செய்யாமல் இருக்கலாம். என்ன செலவே செய்யக் கூடாதா... அது எப்படி முடியும் என்று நினைக்கிறீர்களா? செலவே செய்யக் கூடாது எனில், அத்தியாவசிய செலவுகளைத் தவிர, வேற எந்தவொரு செலவும் செய்யக் கூடாது என்று பொருள். இப்படி செலவு செய்யாமல் இருக்கும்போது பணத்தையும் சேமிக்கலாம்; பணத்தைச் செலவு செய்வதில் கட்டுப்பாட்டையும் வளர்த்துக்கொள்ளலாம்.

Zero-based Budgeting: பட்ஜெட் போடும்போது சில தேவைகளுக்குப் பணம் பற்றவில்லை எனில், வேறு ஏதாவது அத்தியாவசியம் இல்லாத தேவைகளில் இருந்து, இந்தத் தேவைக்காக பணம் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, இந்த மாதம் எமர்ஜென்சி ஃபண்டுக்குப் பணம் இல்லை எனில், பொழுதுபோக்குக்காக ஒதுக்கியுள்ள பணத்தில் இருந்து, இந்தத் தொகையை எடுத்துக்கொள்ளலாம்.