
பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்...
பணவீக்க விகிதம் (Inflation) என்கிற விலைவாசி உயர்வை நம் முதலீட்டை விழுங்கும் பூதம் என்று சொல்லலாம். இது பணத்தின் மதிப்பை மிகவும் குறைத்து விடுகிறது. 25 ஆண்டுகளுக்குமுன் சென்னை புறநகரில் ரூ.1 கோடிக்கு கிட்டத்தட்ட 50 சென்ட் வீட்டு மனைக்கான இடம் வாங்கி இருக்க முடியும். இன்றைக்கு 2023–ம் ஆண்டில் ரூ.1 கோடியை கொண்டு 5 - 8 சென்ட் இடம்தான் வாங்க முடியாது. அந்த அளவுக்கு நிலத்தின் விலை உயர்ந்திருக்கிறது. நிலம் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்குமுன் ஒருவர் ரூ.1 கோடியை அவரின் வீட்டு பீரோவில் பூட்டி வைத்திருந்தால், இப்போது அதை எடுத்து அவரால் 5 -8 சென்ட் இடம்தான் வாங்க முடியும். அதே நேரத்தில், அவர் அந்தப் பணத்தை ஆண்டுக்கு 10% வருமானம் தரும் நிதித் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அது இப்போது ரூ.10.83 கோடியாக அதிகரித்திருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு இன்று அவரால் தாராளமாக 50 சென்ட் இடம் வாங்க முடியும். இதிலிருந்து நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பணவீக்க விகித பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில், பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே.

பணவீக்க விகித பாதிப்பு...
ஆண்டுக்கு சராசரி பணவீக்க விகிதம் 5% என்கிற நிலையில், இன்றைய 30,000 ரூபாயின் உண்மையான மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து சுமார் 11,000 ரூபாயாகத்தான் இருக்கும். அதே நேரத்தில், இன்றைக்கு ரூ.30,000-க்கு வாங்கும் பொருள்களை 20 ஆண்டுகள் கழித்து வாங்க கிட்டத்தட்ட ரூ.80,000 தேவைப்படும். (பார்க்க அட்டவணை)
இன்றைக்கு ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.50,000 என வைத்துக்கொள்வோம். இதில் வீட்டு வாடகை, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளும் அடங்கும். ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 5% என்கிற நிலையில் 15 ஆண்டுகள் கழித்து, மாதம் ரூ.1,03,950 இருந்தால்தான் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியும். இது ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 7% எனில், ரூ.1,37,950 இருந்தால்தான் செலவுகளை சமாளிக்க முடியும். அந்த அளவுக்கு ஒரு குடும்பத்தின் வருமானம் அதிகரிக்க வேண்டும். கூடவே, முதலீட்டின் மூலமான வருமானமும் அதிகமாக இருக்க வேண்டும். இல்லை எனில், கடன் வாங்கிதான் செலவு செய்ய வேண்டும்.
பணவீக்க விகித பாதிப்பிலிருந்து விடுபட, பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில் எந்த மாதிரியான நிதி விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பார்ப்போம்.
1. பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்...
பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் நிலையில், பொருள்களின் விலையும் அதிகமாக இருக்கும். எனவே, பட்ஜெட் போட்டு அவசியமான தேவைக்கு மட்டுமே செலவு செய்வது மிகவும் அத்தியாவசியம் ஆகும். குடும்ப பட்ஜெட் மட்டுமே குடும்பத்தின் வருமானம் சரியாக எங்கே செல்கிறது என்பதைச் சுட்டுக் காட்டுகிறது. இதன் மூலம் தேவை இல்லாத செலவுகள் எவ்வளவு செய்யப் படுகின்றன எனப் பளிச் என்று தெரியும். அது போன்ற வீண் செலவுகளைத் தவிர்ப்பது மூலம் சேமிப்பை நிச்சயம் அதிகரிக்க முடியும்; நிதி இலக்குகளை சரியாக நிறைவேற்ற முடியும்.
2. செலவு குறைப்பு நடவடிக்கை...
விலைவாசி மிகவும் உயர்ந்து காணப்படும் காலத்தில் செலவுகளைக் குறைப்பதன் மூலம் பணப்பற்றாக்குறை நிலையை சுலபமாகச் சமாளிக்க முடியும். செலவுகளைக் குறைக்க அந்தந்தப் பருவத்தில் அதிகம் விளையும் விலை மலிவான காய்கறிகள், பழங்களை அதிகம் பயன்படுத்தலாம். மேலும், பட்ஜெட்டில் அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் பணத்தை சரியாக ஒதுக்கிவிட்டு, அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுவது, வாரம்தோறும் சினிமாவுக்குச் செல்வது போன்ற செலவுகளைக் குறைக் கலாம். மேலும், ஆட்டோ, சொந்த காரை அதிகம் பயன் படுத்துவதைத் தவிர்த்து, பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்தலாம். இப்படி மிச்சமாகும் பணத்தை முதலீடு செய்வது மிக முக்கியமாகும்.
3. கடன்களைக் கட்டாயம் தவிர்க்கவும்…
அதிக பணவீக்கம் நிலவும் காலத்தில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். நம் நாட்டில் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்ததால், அதைக் கட்டுக்குள் கொண்டு வர ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்தது. இதனால், சுமார் 7 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன் வட்டி, கிட்டத்தட்ட 9.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே போல, கார் கடன், தனிநபர் கடனுக்கான வட்டியும் அதிகரித்துள்ளது. அதனால், பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில், தேவை இல்லாத கடனை வாங்குவதை குறிப்பாக, கிரெடிட் கார்டு கடன் (ஆண்டு வட்டி 35% - 45%), தனிநபர் கடன் (ஆண்டு வட்டி 16% - 22%) வாங்குவதைத் தவிர்க்கவும்.
ஏற்கெனவே மாறுபடும் வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்து இப்போது அதிகமாக இருந்தால், வாய்ப்பு வசதி இருக்கும்பட்சத்தில் மாதத் தவணை தவிர, கூடுதல் தொகை யைக் கட்டி கடன் சுமையைக் குறைப்பது நல்லது. அதுவும் அதிக வட்டியிலான கிரெடிட் கார்டு, தனிநபர் கடன்களை விரைந்து அடைப்பது வட்டிச் செலவைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், புதிய கடன் வாங்குவதை முடிந்த வரை தவிர்ப்பது அவசியம்.
4. பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் முதலீடுகள்...
பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். பணவீக்க விகிதத்தால் அதாவது, விலைவாசி உயர்வால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. பணவீக்க விகிதம் 7% எனில், ஒரு பொருளின் விலை இந்த ஆண்டு ரூ.100 என்றால், அடுத்து ஆண்டு அது ரூ.107-க்கு விற்கப்படும். இந்த நிலையில், முதலீட்டின் மூலமான வருமானம், வருமான வரிக்குப்பின் பணவீக்க விகித்தைவிட 3% - 4% அதிகமாக இருப்பது லாபகரமாக இருக்கும். அந்த வகையில், ரிஸ்க் பரவலாக்கப் பட்ட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீடாகச் செய்து வர வேண்டும்.

5. நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்...
உங்கள் வாழ்க்கையின் குறுகிய கால, நடுத்தரக் கால மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது உங்கள் வசம் இருக்கும் பணம் எல்லாம் முதலீட்டுக்குச் சென்றுவிடும். இப்படி செய்வதன் மூலம் விலைவாசி அதிகம் இருக்கும் காலத்தில் வீண்செலவுகள் கணிச மாகத் தவிர்க்கப்படும். குறுகிய கால இலக்குகளில் அதிக வட்டி யிலான கடன்களை முதலில் அடைக்கத் திட்டம் தீட்டுங்கள்.
6. வருமானத்தை அதிகரிக்க முயலுங்கள்...
செலவுகளை ஓரளவுக்குதான் கட்டுப்படுத்த முடியும். விலைவாசி மிகவும் அதிகரித்திருக்கிறது என்பதற்காக மிக அத்தியாவசிய செலவுகளான சாப்பாடு, மருந்து மாத்திரை செலவுகளைக் குறைக்க முடியாது. எனவே, வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியை எடுக்கலாம். தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் மூலமே கூடுதல் வருமானத்துக்கு வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். மேலும், சில சிறப்புத் தகுதிகளை அதிகரிப் பதன் மூலம் தற்போது பார்க்கும் நிறுவனத்திலேயே சம்பளத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக் கின்றன.
அப்படி இல்லையெனில், பணி நேரம் போக தினசரி சில மணி நேரங்கள் பகுதி நேர வேலை மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடியுமா என்று பாருங்கள். இந்த வருமானத்தை ஈட்டுவது எப்படி என்று கொஞ்சம் யோசித்தால், உங்களுக்கே பல நூறு வழிகள் புலப்படும்.
7. முதலீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும்...
பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தால், முதலீடு செய்யும் தொகையை அதிகரித்தால்தான் நிதி நிலையை சரியாக சமாளிக்க முடியும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். வேலை பார்க்கும் 30 வயதான கணவன் - மனைவிக்கு இன்றைக்கு வீட்டு வாடகையும் சேர்த்து மாதச் செலவு ரூ.50,000-ஆக உள்ளது. 60 வயதில் பணி ஓய்வு. தம்பதியர் 80 வயது வரை வாழ்வார்கள் என எடுத்துக்கொள்வோம். பணவீக்க விகிதம் ஆண்டுக்குச் சராசரியாக 5% எனில், இன்றைய மாதக் குடும்பச் செலவு ரூ.50,000 என்பது இன்னும் 30 ஆண்டுகள் கழித்து ரூ.2.16 லட்சமாக அதிகரித்திருக்கும். பணிபுரியும் காலத்தில் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைப்பதாகவும், பணி ஓய்வுக் காலத்தில் தொகுப்பு நிதிக்கு ஆண்டுக்கு 8% வருமானம் கிடைப்பதாகவும் வைத்துக்கொண்டால், அவர்களுக்கு ரூ.3.9 கோடி தொகுப்பு நிதி இருந்தால்தான் நிலைமையைச் சமாளிக்க முடியும். இந்தத் தொகையை சேர்க்க மாதம் ரூ.11,100 வீதம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வர வேண்டும். ஒரு முறை முதலீடு செய்வதாக இருந்தால் ரூ.13 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
இதுவே பணவீக்க விகிதம் 7 சதவிகிதமாக இருந்தால், 60 வயதில் மாதச் செலவு ரூ.3.8 லட்சமாக அதிகரிக்கும். இந்தத் தொகையைப் பெற ரூ.6.89 கோடி தொகுப்பு நிதி தேவை. இந்தத் தொகையைப் பெற மாதம் ரூ.19,510 முதலீடு செய்து வர வேண்டும். ஒருமுறை முதலீடு செய்வதாக இருந்தால், ரூ.23 லட்சம் தேவை. எனவே, பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் நிதி இலக்குகளை சரியாக நிறைவேற்ற அதற்கேற்ப அதிகமாக முதலீடு செய்து வருவது அவசியமாகும்.
பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் காலத்தில் சரியாக பட்ஜெட் போடுவது, கடனைத் தவிர்ப்பது, அவசரக் கால நிதியை உருவாக்குவது, நிதி இலக்குகளை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட உத்திகளைப் பின்பற்றுவது லாபகரமாக இருக்கும்.